By 12 May 2019 0 Comments

துபாய் நாட்டில் பாலைவனத்தில் வசித்தேன்! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் வெளியான டூலெட் படத்தில் வீட்டு உரிமையாளராக வந்து அனைவரின் வெறுப்பையும் நிறையவே சம்பாதித்தவர் ஆதிரா பாண்டிலெட்சுமி. அந்த வீட்டின் கதவுகள் தட்டப்படும் போதெல்லாம் அவரின் முகம் அனைவருக்கும் கோபத்தை வரவழைத்தது. அதுதான் என் நடிப்பின் வெற்றி எனச் சிரித்தபடி, தன்னைப் பற்றிய அறிமுகத்தை கொடுக்கத் தொடங்கினார் ஆதிரா. உண்மையில் நான் அப்படியான கேரக்டரே இல்லை. ரொம்பவே கூல். தைரியமாக இருந்தாலும், நிறைய ஏமாறுவேன் என்றார்.

நடிப்பு குறித்து…

நடிப்பு என்பது நமது உடல்வாகை மாற்றி நடிப்பதுதானே. அடிப்படையில் நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். எந்த கேரக்டரைக் கொடுத்தாலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும். கிளிசரின் போடாமலே நான் அழுவேன். என் முதல் படம் கணிதன். தொடர்ந்து மருது, பகிரி, அப்பா, ஆறாது சினம், பாம்புச் சட்டை, ஒரு குப்பைக் கதை, அச்சமில்லை அச்சமில்லை, ஆந்திரா மெஸ், திமிறு பிடிச்சவன், சர்வம் தாளமயம், தற்போது டூலெட் என ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான கேரக்டராக அமைந்தது. மருது படத்தில் சிலம்பம் செய்யும் அம்மாவாக வித்தியாசமான கேரக்டரில் நடித்தேன்.

ஒரு குப்பைக் கதையில் சாராயம் குடிக்கும் 70 வயது பெண் கேரக்டர். இயக்குநரிடம் அந்த கேரக்டர்தான் வேண்டுமெனக் கேட்டு வாங்கி நடித்தேன். அந்தப் படத்திற்காக ஸ்லம் ஸ்லாங்கை நானே டப்பிங் பேசினேன். ஏ.ஆர். ரகுமான் இசையில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சர்வம் தாளமயம் வேற லெவல் படம். அந்த படத்தில் டப்பிங் கிடையாது. பாடல் தவிர, படம் முழுவதுமே லைவ் ரெக்கார்டிங். அதில் நடித்தது எனக்கு தியேட்டர் ஃபீலைக் கொடுத்தது. இன்னும் திரைக்கு வராத ஜடா, குதிரைவால் படங்களில் நடித்திருக்கிறேன்.

உங்களைப் பற்றி…

என் அம்மா பழனி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். அதனால் என் பள்ளிப் பருவம் பழனியில் தொடங்கியது. பழனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து முருகனை வழிபட, அவரவருக்குத் தெரிந்த இசையினை இசைத்துக்கொண்டே பக்தர்கள் வருவார்கள். காவடி சிந்து, துடும்பு, பறை என எப்போதும் ஏதாவது ஒரு இசை என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சத்தம் கேட்டதும் வெளியில் ஓடிவந்து தெருவில் நின்று இசையினை ரசிப்பேன். என்னை அறியாமல் என் கைகளும், கால்களும் அசையும். கலை தாகம் அப்போதே எனக்குள் ஊறியது.

அத்துடன் புத்தகம் படிப்பது, எழுதுவது என ஆர்வம் இருந்தது. சில வார மாத இதழ்களுக்கு கதை, கவிதை, துணுக்குகளை எழுதிக் கொண்டிருந்தேன். எனக்குள் ஒரு ஓவியரும் இருக்கிறார். ஆனால் என் குடும்பம் பயங்கரக் கட்டுப்பாடுகள் நிறைந்தது. சினிமா பார்க்கக்கூட அனுமதித்ததில்லை. படம் பார்த்த தோழிகள் சொல்லும் கதைகளை மட்டுமே கேட்பேன். நான் பத்தாவது படிக்கும்போதே எனக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். திருமணத்திற்குப் பிறகான என் வாழ்க்கை துபாய் நாட்டில் தொடங்கியது. திருமண வாழ்க்கை எனக்கு அத்தனை மகிழ்ச்சியாய் அமையவில்லை.

துபாயில் என் வீடு பாலைவனத்திற்குள் இருந்தது. மரத்தால் செய்யப்பட்ட ஒரு கேரவன்தான் என் வீடு. கதவைத் திறந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பாலைவனம்தான். என்னோடு ஒரு நாய் குட்டி மட்டுமே அப்போது துணை. அதன் பிறகே என் குழந்தைகள் பிறந்தனர். என் பொழுதுகள் அந்த பாலைவன மண்ணுக்குள் புதைந்துகொண்டிருந்தது. அங்கே நான் கவலைப்பட்டாலும், அழுதாலும் ஏனென்று கேட்க ஆளில்லை. பத்து ஆண்டுகள் இப்படியே கழிந்தது. அப்போது தொலைக்காட்சிகளில் ப்யூட்டி பார்லர் நிகழ்ச்சிகள் தினமும் ஒளிபரப்பாகும்.

விடாமல் அதைப் பார்த்து நானாகவே அதை செய்ய கற்றுக்கொண்டேன். அங்கிருக்கும் அரபிப் பெண்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை அழகுப்படுத்திவிடத் தொடங்கினேன். அதில் எனக்கு கொஞ்சம் பணம் கிடைத்தது. பணத்தை சேர்த்து அழகு நிலையம் ஒன்றைத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அரபியப் பெண்கள் திருமணத்திற்கு பயன்படுத்தும் பிரத்யேக ஆடைகளை வாடகைக்கு விடத் தொடங்கினேன். பிறகு அந்த ஆடைகளை நானே வடிவமைக்கும் டெய்லரிங் யூனிட்டைத் தொடங்கினேன். அவர்களுக்கான அணிகலன்கள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் என என் தொழில் விரிவடைந்தது.

கடைகள் ஐந்தாக மாறியது. வீடு, கார் என என் வாழ்க்கை வசதியாக மாறியது. எனது 3 குழந்தைகளையும் சென்னையில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளி விடுதியில் சேர்த்து படிக்க வைத்தேன். அந்நிய மண்ணில் எத்தனை வசதியோடு வாழ்ந்தாலும், எதையோ இழந்த உணர்வு எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. என் தோழி ஒருத்தி என்னிடத்தில் பேசும்போது, ஹோண்டா அக்கார்டு, கேம்ரி, நிசான், அடுத்தது லெக்ஷஸ் கார்கள் என வீடு, தொழில், வசதி என அத்தனையும் உன்னிடம் இருந்தாலும், மொழி தெரியாத, உன்னையே தெரியாத நாட்டில் நீ எதை செய்தும் என்ன பயன்?

இதுவே நாம் பிறந்த ஊராக இருந்தால்?

நம் நாடு, நம் ஊர் என வாழ்வதுதானே வாழ்க்கை என்றாள். எனக்குள் சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது. இந்த சூழலில் என் அம்மா திடீர் என இறந்துவிட, அம்மாவின் இறுதி மரியாதைக்காக பழனிக்கு வந்தேன். அம்மாவின் இறுதி நிகழ்வில் சுத்துபட்டு கிராமத்தில் இருந்து வண்டி கட்டிக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். ஒரு செவிலியராக அம்மா எல்லோரிடத்திலும் அன்பான மனுஷியாக வாழ்ந்திருக்கிறார். என்னை ஒரு நிமிடம் நினைத்தேன்.

நான் இத்தனை சம்பாதித்து வசதியாக வாழ்ந்து என்ன பயன்?

நம் ஊரில் நம் மண்ணில் பத்து பேருக்கு பிரயோஜனமாக வாழ்வதுதானே வாழ்க்கை என நினைக்கத் தோன்றியது. என்னையே நான் தேடத் தொடங்கினேன். நீ பார்க்கும் வேலை இது கிடையாது என உள் மனம் சொல்லத் தொடங்கியது. ‘நான் யார்’ என்ற கேள்வியால் துரத்தப்பட்டு விடை தேடி அலைந்த நிலையில், துபாய் வாழ்க்கை பிடிக்காமல் போனது. மனம் அங்கு ஒட்டவில்லை. 2008ல் சென்னைக்கு நிரந்தரமாகத் திரும்பினேன். சின்ன வயதில் என் மனதுக்குள் இருந்த கலைத் தாகம் வெளிப்படத் தொடங்கியது.

நானாகத் தேடி அலைந்து, கூத்துப்பட்டறையில் முத்துச்சாமி ஐயாவிடம் என்னை இணைத்துக் கொண்டேன். அங்கு 3 மாதம் நடிப்பு பயிற்சி எடுத்துவிட்டு, பயிற்சியாளராக அங்கேயே 6 வருடம் பணியில் இருந்தேன். அங்கிருந்த சில அரசியல் நகர்வுகள் எனக்கு பிடிக்காமல் போகவே அங்கிருந்து வெளியேறினேன். தொடர்ந்து சிலம்பம், பறை, துடும்பு, களறி போன்றவற்றை தனித்தனியாகக் கற்றேன். செய்யாற்றில் உள்ள புரசை கிராமத்தில் கண்ணப்ப தம்பிரான் பயிற்சி பள்ளியில் இணைந்து, அவரது மகன் சம்பந்தத்திடம் இரண்டு ஆண்டுகள் தெருக்கூத்து கலையை முழுமையாகக் கற்றேன். அங்குதான் இயல், இசை, நாடகம் இணைந்த அடவு கலை எனக்கு வசப்பட்டது.

வசனத்தைப் பேசி, நடித்து, நடனம் ஆடி என மூன்றையும் ஒரே நேரத்தில் செய்யும் பயிற்சி அங்குதான் வழங்கப்படுகிறது. அதில் கிறுக்கி என்கிற செயல்முறை ஒன்று உண்டு. கிறுகிறுவென்று சுற்றி வர வேண்டும். அதையும் செய்வேன். தெருக்கூத்தை யார் முழுமையாகக் கற்றுக் கொள்கிறார்களோ அவர்களே முழுமையான நடிகராக மிளிர முடியும். அதன் பிறகே நம்பிக்கையோடு சோலோ நாடகங்களை மேடை ஏற்ற வும், வீதி நாடகங்களாகப் போடவும் தொடங்கினேன். சில நாடகங்களை நானே எழுதி இயக்கினேன். நிறைய விழிப்புணர்வு நாடகங்களை மேடையேற்றி இருக்கிறேன். படத்தில் தொடர்ந்து நடிக்கும் ஆர்வமெல்லாம் எனக்கு கிடையாது. ஆனால் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் அதை மிஸ் பண்ண விருப்பமில்லை.

உங்களின் நவீன கூத்துப்பட்டறை குறித்து…

எனக்கு தாயுமானவராக இருந்து பல உதவிகளைச் செய்தார் என் மாமா பிரபு. இன்று நான் நவீன கூத்துப்பட்டறை என்ற பள்ளியை இயக்குகிறேன் என்றால் அது இவரின் வழிகாட்டுதலால்தான். சென்னையில் 2014ல் நவீன கூத்துப்பட்டறை என்கிற பயிற்சி பள்ளியை தொடங்கி, மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சியினை வழங்கி வருகிறேன். இங்கு சிலம்பம், பறை, துடும்பு, களறி, கூத்து போன்ற கலைகளுக்கு பயிற்சி தரப்படுகிறது. இங்கு வரும் பிற பயிற்சியாளர்களும் பரம்பரை பரம்பரையாக கலையில் ஊறிப்போனவர்கள்தான்.

கலையை உயிர் மூச்சென நினைப்பவர்கள். மேலும் மேக்கப், காஸ்டியூம், செட் பிராப்ஸ் என எல்லாவற்றையும் நானே செய்தும் தருகிறேன். சினிமாவில் சில பேக்கேஜ் நடிப்பு பயிற்சிகளையும் நாங்கள் வழங்குகிறோம். ஸ்கிரிப்ட்டை வாங்கி, நடிகர்களுக்குத் தேவையான நடிப்பு பயிற்சியினை கொடுத்து படத்தில் அவர்களை நடிக்க வைக்கிறோம். திமிறு பிடித்தவன், கனா போன்ற படங்களில் நடித்த நடிகர், நடிகைகளை பயிற்சி கொடுத்து நடிக்க அனுப்பினோம். சில படங்களுக்கு ஸ்பாட் டிரெயினிங் தருகிறோம்.

டூலெட் படத்தின் வாய்ப்பு குறித்து…

நான் செழியன் சாரின் ஏகலைவன். ஏற்கனவே அவரை உலக சினிமா தொடர் வழியாக நிறையவே அறிந்திருக்கிறேன். டூலெட் படத்தில் ஹவுஸ் ஓனர் கேரக்டருக்கு புது முகம் தேடித்தான் அவரின் உதவி யாளர்கள் என்னுடைய நவீன கூத்துப் பட்டறைக்கு வந்தனர். செழியன் சார் அந்தப் படத்தின் இயக்குநர் எனத் தெரிந்ததும், அந்த கேரக்டரில் நானே நடிக்கிறேன் என அவர்களிடம் கூறினேன். தொடர்ந்து விடாமல் தொலைபேசி வழியாகவும் அந்த வாய்ப்பைக் கேட்கத் தொடங்கினேன். செழியன் சாரையும் நேரில் சென்று சந்தித்து பேசினேன். சொல்கிறேன் என்று மட்டுமே சொன்னார்.

அவர் படத்தில், நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற தயக்கம் நிறையவே இருந்தது. ஆனால் வாய்ப்பை தவறவிடக்கூடாது எனத் தீர்க்கமாக யோசித்தேன். பகரி படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், செழியன் சாரின் நெருங்கிய நண்பர். செழியன் சார் இயக்கும் டூலெட் படத்தில் எனக்கு எதாவது ஒரு கேரக்டர் வேண்டும் நீங்கள் அவரிடத்தில் சொல்லுங்கள் என சிபாரிசு கேட்டேன். கொஞ்சநாள் இடைவெளிக்குப் பிறகு ரவி சுப்ரமணியன் சாரோடு நிற்க வைத்து என்னை படம் எடுத்தார்கள். இது எனக்கு கிடைத்த விலை மதிக்க முடியாத விசயம்.

டூலெட் படத்தின் அனுபவம்…

படப்பிடிப்பு என்றால் கேமரா, லைட்டிங், யூனிட் என எப்போதும் பரபரப்பு இருக்கும். குறைந்தது 200 பேராவது யூனிட்டில் இருப்பார்கள். அரை கிலோ மீட்டருக்கு முன்பே ஸ்பாட் தெரிந்து விடும். டூலெட் படப்பிடிப்பு எந்த ஆரவாரமும் இல்லாமல் மிக அமைதியாக நடந்தது. மிகக் குறைந்த ஆட்களே படப்பிடிப்பில் இருந்தார்கள். ஒரு இயக்குநராக தன்னை எந்த இடத்திலும் செழியன் சார் காட்டிக்கொள்ளாமல் குடும்ப நண்பராகவே நடந்து கொண்டார். எங் களை இயல்பாக இருக்க வைத்து அப்படியே படம் பிடித்தார். நான் பார்த்தவரை சூட்டிங் ஸ்பாட்டில், சாப்பாட்டைக்கூட கேட்டகிரி வைத்து பிரித்துக் கொடுத்து வித்தியாசப்படுத்துவார்கள்.

முதல் முறையாக டூலெட் படப்பிடிப்பில் தான் இயக்குநர், கேமராமேன், உதவியாளர்கள், நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள் என அனைவரும் சமமாக அமர்ந்து பகிர்ந்து சாப்பிட்டோம். ஒரு வீடு மாதிரி யான உணர்வே எனக்கு இருந்தது. டூலெட் படத்தில் டயலாக்கே இல்லா மலே என் பார்வையிலே எல்லோரும் என்னை வெறுக்கிற மாதிரியான உடல் மொழியைக் கொண்டு வந்தேன். தியேட்ட ரில் படம் பார்த்துவிட்டு வெளியில் வருபவர்கள் உண்மையான வீட்டு ஓனராக என்னை நினைத்து கோபத்தோடு பார்த்தார்கள். ஷீலா விடம் செல்ஃபி எடுக்க முயற்சித்தவர்கள், என்னை கோபத்தோடும் வெறுப் போடும் பார்த்தார்கள்.

சிலர் என்னிடம் முகம் கொடுத்துக்கூட பேச மறுத்தார்கள். ஒருவர் என்னை முகவரி தேடி வந்து அடிக்க வேண்டும் என்றார். இதுதான் என் வெற்றி அதிர்ந்து சிரிக்கிறார் ஆதிரா. நவரசம் என்பதே மனித உடலில் உள்ள 9 வகையான உணர்வுகள் தானே. நமது உடலுக்குள் அடங்கிக் கிடக்கும் அந்த உணர்வை எங்கே? எப்படி? எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பதே நடிப்பு. இப்போதுதான் அதற்கான சரியான வாய்ப்புகள் கிடைக்கிறது என்றவர், டூலெட் படத்தில் நடித்ததற்காக எனக்கு பெஸ்ட் சப்போர்டிங் ஆர்டிஸ்ட் அவார்டு கிடைத்தது. இது எனக்கு செழியன் சார் மூலமாகக் கிடைத்த ‘அங்கீகாரமற்றவளின் அடையாளம்’ என முடித்தார்.Post a Comment

Protected by WP Anti Spam