By 9 May 2019 0 Comments

பள்ளிக்கூடம் போகலாமா..? (மகளிர் பக்கம்)

214 நாடுகளின் கல்வித்தரம் மற்றும் ஆசிரியர்களின் வேலைத் திறன் அடிப்படையில் உலகப் பொருளாதார மன்றம் மனித மூலதன அறிக்கையை வெளியிட்டது. அதில் தர வரிசைப் பட்டியலில் பின்லாந்து நாட்டிற்குத்தான் முதலிடம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது நம் ஊர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போல மிகுந்த கௌரவம் உடையது. அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆசிரியராவது என்பது கனவு. ஆசிரியர்களின் சராசரி மாத வருமானம் டாக்டர்கள், என்ஜினீயர்களுக்கு நிகரானது. பின்லாந்து அரசின் கொள்கை முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாளின் லட்சியமாக இருக்கிறது. அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபமும் அல்ல. முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி.

ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட். தொடர்ந்து குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது. தேசிய அமைப்புகளிடம் இருந்து நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்குவதில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ளது. அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசால் நிதியுதவி தரப்படுகிறது.

ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுக்கும் அரசினால் நிதியுதவி செய்யப்படுகிறது. பணிபுரியும் ஆசிரியர்களுக்குத் தொடர் பயிற்சி மற்றும் அவர்களது தகுதி மேம்பாட்டுக்காக வாரத்தில் இரண்டு மணி நேரம் செலவிடுகிறார்கள். அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியமும், உயர்ந்த சமூக அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. சூழலுக்கேற்பப் பாடத்திட்டத்தையும், கற்பிக்கும் முறையையும் தீர்மானிக்கும் சுதந்திரம் ஆசிரியர்களுக்கு உண்டு. பின்லாந்து ஆசிரியர்களின் வேலைத் திறன் இதுவென்றால், குழந்தைகளின் கல்வித் தரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். அனைவருக்குமே சமமான தரமான கல்வி என்ற உத்தரவாதம் இருக்கிறது. தன்னுடைய ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. அதுவரை குழந்தைகள், குழந்தைகளாகவே இருக்கின்றனர்.

அங்கே 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். கல்வி ஓர் எளிமையான விளையாட்டுபோல அவர்களுக்குள் புகுத்தப்படுகிறது. முக்கியமாக நாம் பின்பற்றும் மனப்பாட முறை கல்வி அங்கு கிடையாது. தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூட நாட்கள். மீதி நாட்கள் விடுமுறை. அதிலும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் கலை, இசை, ஓவியம், விளையாட்டு, சமையல், தச்சு வேலை, உலோக வேலை மற்றும் நெசவு போன்றவையும் கற்பிக்கப்படுகின்றன.

அத்துடன் பிற கலைகளுக்கும் உண்டு. வாசித்தல், கணிதம் போன்றவற்றுக்குப் பதிலாக இயற்கை, விலங்குகள், வாழ்க்கைச் சக்கரம் போன்றவைதான் பாடங்களாக உள்ளன. குழந்தைகளின் படைப்புத்திறன், சிந்தனை சக்தி போன்றவை வளர்க்கப்படுகின்றன. தாய்மொழி தவிர கூடுதலாக மற்றொரு மொழியையும் கற்கலாம். பள்ளியில் மாணவர்களுக்குக் கல்வி, உணவு, மருத்துவம், சுற்றுலா போன்ற அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. ஒரு வகுப்பில் 20 – 25 மாணவர்களே இருப்பார்கள். ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்.

ஏழு வயதிலிருந்து, பதினைந்து வயது வரை ஒன்பது ஆண்டுகள் ஆரம்பக்கல்வி கட்டாயமாகிறது. வகுப்பறை மற்றும் பள்ளியில் நல்ல இதமான, எந்த வித அழுத்தமும் அற்ற மகிழ்ச்சியான சூழலே நிலவுகிறது. குழந்தைகள் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மிகவும் உற்சாகப்படுத்தப்படுகிறது. உலகிலேயே குழந்தைகளுக்கான புத்தகங்களை அதிகம் பதிப்பிக்கிற நாடு பின்லாந்துதான். ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்காத அல்லது சோர்வாக இருக்கிற மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

13 வயது வரை ரேங்கிங் எனும் தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது. இதனால் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல், உடன் படிக்கும் மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் எண்ணம் போன்றவை இல்லை. மாணவர்களுக்கு எந்தப் பாடத்தில் விருப்பமோ அதில் இருந்து அவர்களே வீட்டுப் பாடம் செய்து வரலாம். மாணவர்களின் உடல் நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்க ஒரு மருத்துவர் இருப்பார். ஆரம்பக் கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வியில் கிடைக்கும் வெற்றி அல்ல என்று பின்லாந்து கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

மாணவர்கள் தங்கள் திறன்களை உணர்ந்துகொள்வது, வாழ்க்கை பற்றிய புரிதலை இயல்பாகவே கற்றுக்கொள்வது என அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான விஷயங்களையே அந்நாட்டின் ஆரம்பக் கல்வி தருகிறது. மாணவர்கள் தொழிற் கல்வி அல்லது பொதுக்கல்வி என ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.பின்லாந்தில் 94 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்வி படிக்கச் செல்கின்றனர். உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்.

சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் திட்டம் எனும் அமைப்பு, வாசித்தல், கணிதம், அறிவியல், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் மற்றும் நிதி பற்றிய கல்வியறிவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தேர்வு ஒன்றினை, ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளைச் சேர்ந்த பதினைந்து வயது அடைந்த மாணவர்களைக் கொண்டு நடத்தி, உலகத் தர வரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. இந்தப் பட்டியலில் பத்தாண்டுகளுக்கு மேலாக முன்னணியில் இருப்பது பின்லாந்துதான்.

கல்வியாளர்களைக் காப்பது அரசின் கடமை கல்வியைக் காப்பது கல்வியாளர்களின் கடமை என மிகச் சமீபத்தில் தொடர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் நமது கல்வி நிலையங்களின் நிலை இதுதான்…

* 5000 அரசுப் பள்ளிகளை மூடுகிற முடிவை எதிர்த்தும், 3500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கிற முடிவை எதிர்த்தும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதையும் போராட்டத்தில் கவனத்தில் கொண்டுவரப்பட்டது.
* 2011ம் ஆண்டில் கட்டாயக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து (Right of Children to Free and Compulsory Education Act) ஏறக்குறைய 3 லட்சம் மாணவர்கள் அரசின் நிதி உதவி மூலமாக தனியார் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
* அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கொடுப்பது என்பது அரசின் கடமை. இங்கு பல அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆசிரியர்களின் பற்றாக்குறை வேறு.* அரசுப் பள்ளிகள் தரமற்றதாக மாறிய காரணத்தால் பெற்றோர்கள், அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலை உருவானது.* இதனால் குறைந்த மாணவர் சேர்க்கை என்ற காரணத்தை காட்டி அரசுப் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுகிற முயற்சியும் நடைபெற்று வருகிறது.
* 15 மாணவர்களுக்கு குறைவாக மாணவர் வருகை உள்ள பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி உதவியை இந்த வருடம் ஆரம்பத்தில் நிறுத்தியும் இருக்கிறது.
* குறைந்த மாணவர் வருகை உள்ள பள்ளிகளை உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகளோடு இணைக்கவும் அல்லது மூடி விடவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
* இதே காரணத்திற்காக, சத்துணவு கூடங்களையும் மூட முடிவு செய்யப் பட்டு இருக்கிறது.
* 15-100 வரை வருகைப் பதிவு உள்ள 25,000 பள்ளிகளும் எதிர்காலத்தில் நிதி உதவி மறுக்கப்படுகிற சூழல் வரலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
* ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சரியான கல்விமுறைதான் சிறந்த கருவி என்று 1963-ல் பின்லாந்து நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்தது.
* பின்லாந்து கல்வி முறையின் சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்.
* உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்.
* நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே பின்லாந்து நாட்டிற்கு வருகிறது…Post a Comment

Protected by WP Anti Spam