By 7 May 2019 0 Comments

அன்பை வெளிப்படுத்துங்கள்!! (மகளிர் பக்கம்)

பிப்ரவரி 14, உலகம் முழுதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காதலன் தன் காதலியிடம் தன் அன்பை பலவித பரிசுகள் கொடுத்து திக்குமுக்காட செய்வான். இப்படி உலகம் முழுதும் எங்கும் காதல் வயப்பட்டு இருக்கும் அதே நாளில் சென்னையில் அமைதியாக அன்பை பரப்பி வருகிறார் எக்ஸ்பிரசிவ் ஆர்ட் தெரபிஸ்ட், மகிமா போடர். இவர் பிப்ரவரி 14 முதல் 21ம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும் அன்பையும் கருணையையும் ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு செலுத்தி வருகிறார்.

அதற்காகவே ‘த கைண்ட்னெஸ் பிராஜக்ட்’ (The Kindness Project) என்ற அமைப்பை 2018ம் ஆண்டு துவங்கினார் மகிமா. ‘‘சென்னை மக்கள் பெருந்தன்மை உள்ளம் கொண்டவர்கள். உதவி வேண்டும் என்று சொன்னால் போதும், பலர் கரங்களை நீட்ட தயாராக உள்ளனர். அதனால் தான் என்னால் கடந்த ஆண்டு கைண்ட்னெஸ் பிராஜக்டை வெற்றிகரமா செய்ய முடிந்தது’’ என்றார் மகிமா. இவர் ஆர்கிடெக்ட் துறையில் பொறியியல் பட்டதாரி. அதன் பிறகு நியுயார்க் பல்கலைக் கழகத்தில் டிசைன் ஃபார் ஸ்டேஜ் அண்ட் பிலிம் குறித்து படித்தவர்.

திருமணத்திற்கு பிறகு வாஷிங்டன்னில் செட்டிலானார். ஆனால் இவர் படிச்ச படிப்புக்கு அங்கு வேலை இல்லை என்பதால் டாக்ஸ் அக்கவுண்டென்டாக வேலை பார்த்துள்ளார். 2011ல் சென்னைக்கு வந்தவர் எக்ஸ்பிரசிவ் ஆர்ட் தெரபி குறித்து கேள்விப்பட்டு அது தான் எதிர் காலம் என்று முடிவெடுத்தவர், முதுகலைப்பட்டமும் பெற்றார். ‘‘நான் நிறைய பேருடன் வேலைப் பார்த்திருக்கேன். அதில் எனக்கு புலப்பட்டது… நம்மை சுற்றி நிலவும் பல பிரச்னைகளின் அடி வேர். நம்மில் பலருக்கு சுயமரியாதை மற்றும் அனுதாபம் இல்லாதது தான் காரணம்.

ஒருவருக்கு சுயமரியாதை இல்லை என்றால், அவர் எப்போதும் தான் தவறு செய்துவிட்டதாகவே உணர்வார். ஒருவரின் சுயமரியாதையை உயர்த்த வேண்டும் என்றால் அதற்கு கருணை அவசியம். இதை வளர்ந்தவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் வருகிற தலைமுறையினருக்கு புரிய வைக்க முடியும் என்று நினைத்தேன். அதன் விதை தான் ‘கைண்ட்னெஸ் பிராஜக்ட். எனக்கு சின்ன வயசில் இருந்தே ஆதர வற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. காரணம் என் அம்மா.

வீட்டில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் ஏதாவது ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று சாப்பாடு, இனிப்பு அல்லது உடைகளை கொடுப்பது வழக்கம். அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. கடந்த ஆண்டு என்ன கொடுக்கலாம் என்று என் மகளிடம் கேட்ட போது. அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை என் மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. இவ்வளவு காலம் எனக்கு அந்த யோசனை இல்லையே என்று தோன்றியது. குழந்தைகளுக்கு சாப்பாடு, உடைகளைவிட விளையாடத்தான் பிடிக்கும் என்றாள். உதவின்னா சாப்பாடு, துணிமணி தான் யோசிக்கிறோம். யாரும் அவர்களுக்கு பிடித்ததை பற்றி யோசிப்பதில்லை.

அந்த குழந்தைகளுக்கு சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை அவர்கள் அனுபவபூர்வமாக உணர வேண்டும். அந்த அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்க நினைச்சேன். ஒரு நாள் இல்லாமல் ஒரு வாரம் கொடுக்க முடிவு செய்து கடந்த ஆண்டு சிறிய அளவில் துவங்கினேன்’’ என்றவர் 500 குழந்தைகளின் முகத்தில் புன்சிரிப்பை கடந்த ஆண்டு கொண்டு வந்துள்ளார்.‘‘முதலில் என் குடும்பம்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. கிண்டல் செய்வார் கள் என்று தான் நினைச்சேன். நான் விவரம் சொன்னதும் எல்லாரும் உதவ முன் வந்தனர்.

உதவி செய்யும் மனம் பலருக்கு உண்டு. ஆனால் எப்படி செய்வதுன்னு தெரியல. அதை நான் இந்த குழந்தைகளுக்காக பயன்படுத்திக் கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 முதல் 22ம் தேதி வரை ஒரு வாரம் கைண்ட்னெஸ் வாரமாக கொண்டாடி வருகிறோம். பிப்ரவரி 14 காதலன், காதலி மேல் அன்பு செலுத்தும் தினம். அந்த காதலை நான் விரிவுப்படுத்த நினைச்சேன். அனைத்து மக்கள் மீது அன்பு செலுத்தும் வாரமாக மாற்ற நினைச்சேன்’’ என்றவர் இந்த ஒரு வாரம் குழந்தைகளை அன்பு மழையில் நனைய வைக்கிறார்.‘‘ஆதரவற்ற இல்லங்கள் பல சென்னையில் உள்ளன.

அதில் சில நல்ல பெயர் பெற்றுள்ளது. ஆனால் இன்றும் அடிமட்ட அளவில் பல இல்லங்கள் இயங்கி வருகிறது. அந்த இல்லங்களை தேர்வு செய்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கு இந்த ஒரு வாரம் அவர்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாதபடி சந்தோஷத்தை கொடுக்கிறேன்’’ என்றவர் அது பற்றி விளக்கமளித்தார். ‘‘பொதுவாக இந்த குழந்தைகளுக்கு வெளியே செல்ல வாய்ப்பு இருக்காது. சத்யம் போன்ற திரையரங்கினை அவர்கள் பார்த்து இருக்க மாட்டார்கள். அதே போல் பியூட்டி பார்லருக்கும் சென்று இருக்க மாட்டாங்க.

கடந்த ஆண்டு சத்யம் திரையரங்குகளில் 300 குழந்தைகளுக்கு சூர்யா நடித்த படம் ஒன்றை ஸ்பெஷலாக திரையிட்டோம். படம் பார்க்கும் போது அவர்களின் சந்தோஷத்தை கைத்தட்டல், டான்ஸ் மூலம் வெளிப்படுத்தியதை பார்க்கும் போது நம்முடைய மனமும் குதூகலமானது. இது மட்டும் இல்லை. நாச்சுரல் சலூனுக்கு சுமார் 20 குழந்தைகளை அழைத்து சென்று அவர்களுக்கு ஹேர்கட், மெனிக்யூர், பெடிக்யூர், ஹேர்வாஷ் எல்லாம் செய்தோம். இது தவிர டான்ஸ், பாட்டு, குதிரை சவாரி, பெயின்டிங்… என பல அம்சங்கள் இருந்தது. என்னதான் இவர்கள் மூன்று வேளையும் இல்லத்தில் சாப்பிட்டாலும்,

உணவகத்தில் விரும்பும் உணவினை சாப்பிடுவது போல் இருக்காது. சில குழந்தைகள் மருத்துவமனையில் இருந்ததால் அங்கு கிடார் குழுவை அழைத்து சென்று மகிழ்வித்தோம். இது தவிர யோகாசன பயிற்சி, மோடிவேஷனல் நிகழ்ச்சி எல்லாம் இருந்தது. இந்த வருடம் ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், சேரிகளில் வசிக்கும் குழந்தைகளையும் டார்கெட் செய்துள்ளோம். சேரிகளில் நாம் பேசினால் அவர்களுக்கு புரியாது.

அதனால் அங்கு மாலை நேர பயிற்சியாளர் மூலம் அவர்களுக்கும் இந்த அனுபவங்களை கொடுக்க திட்டமிட்டு இருக்கோம். இந்த வருடம் 1200 பேர் எங்க கைண்ட்னெஸ் பிராஜக்டில் இணைந்துள்ளனர். கைண்ட்னெஸ் வாரம் சென்னைக்கு இரண்டாவது ஆண்டு. அடுத்த ஆண்டு பெங்களூர், மும்பை, தில்லி… என முக்கிய நகரங்களுக்கு எடுத்து செல்லும் எண்ணம் உள்ளது. முதலில் இதனை தேசியமயமாக்க வேண்டும். அதன் பிறகு சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்பது தான் என் விருப்பம்’’ என்றார் மகிமா போடர்.Post a Comment

Protected by WP Anti Spam