உண்மையும், கடின உழைப்பும் தான் நிலைத்து இருக்கும் !! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 59 Second

கடாயில் வெங்காயம் வதக்கும் போதோ அல்லது வடை எண்ணையில் பொரியும் போதோ அது என்ன சாப்பாடுன்னு நம்முடைய மூளையில் மணி அடித்துவிடும். அதே போல் தொலைக்காட்சியிலோ, யுடியூப் அல்லது ஃபேஸ்புக்கில் சமையல் வீடியோக்களை பார்க்கும் போதே அந்த உணவை நாமும் சமைத்து சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டும். அந்த உணர்வினை சென்னையை சேர்ந்த ஹேமா சுப்பிரமணியன் ஃபேஸ்புக் மூலம் நம் அனைவரின் சுவையுணர்வுகளை தூண்டி வருகிறார். இவர் ஒவ்வொரு நாளும் என்ன சமையல் வீடியோவை அப்லோட் செய்ய போகிறார் என்று பலர் காத்துக் கொண்டு இருக்கின்றனர். நம் சமையல் அறையில் இருக்கும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு இவர் சமையல் செய்யும் நளினத்திற்கு ஃபேஸ்புக்கில் மட்டுமே உலகம் முழுதும் 4.7 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர்.

சமையல் மேல் ஆர்வம் ஏற்படக் காரணம்?

உண்மைய சொல்லணும்ன்னா எனக்கு கல்யாணத்திற்கு முன்பு வரை சமைக்க தெரியாது. கல்லூரி முடிச்ச கையோடு கல்யாணம். என் கணவருக்கு அமெரிக்காவில் வேலை. அதனால் நானும் அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. கல்யாணத்திற்கு முன்பு வரை சமைக்கணும்ன்னு எனக்கு துளி கூட விருப்பம் இருந்தது இல்லை. அம்மா நல்லா சூப்பரா சமைப்பாங்க. அதனால் நல்லா சாப்பிடுவேன். எனக்கு சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும். எல்லாமே அம்மாவே பார்த்துக்கிட்டாங்க. அதனால எனக்கு சமைக்கணும்ன்னு எண்ணம் வரல. அமெரிக்கா போன போது, அங்க எல்லாமே நாம தான் செய்யணும். சமையல் மட்டும் இல்லை வீட்டு வேலை முதற்கொண்டு. அங்க நான் தான் சமைக்கணும். வேற யாரும் செய்ய மாட்டாங்க.

நான் இங்கிருந்து அமெரிக்கா போன போது எதை கொண்டு போனேனோ இல்லையோ, அம்மாவிடம் எல்லா ரெசிப்பிகளும் ஒரு புத்தகத்தில் எழுதி எடுத்துக் கொண்டு போயிட்டேன். சில சமயம் இணையத்தை பார்த்து சமைப்பேன். இல்லைன்னா அம்மாவிடம் தொலைபேசியில் கேட்பேன். இப்படித்தான் ஒவ்வொரு உணவா சமைக்க கத்துக்கிட்டேன். அமெரிக்காவில் நிறைய சமையல் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உண்டு. ஒவ்வொன்றிலும் பல விதமான உணவுகள் சமைப்பது செய்முறை வீடியோவில் வரும். பார்க்க சுவாரஸ்யமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். சில சமயம் அந்த உணவுகளையும் நான் சமைத்து பார்த்து இருக்கேன்.

சமையல் வீடியோ ஆரம்பித்தது எப்போது?

அமெரிக்காவில் இருந்து நாங்க இந்தியாவிற்கு வந்து செட்டிலாயிட் டோம். அவர் ஐ.டி துறை என்ப தால், இங்கு ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். அவர் நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு பகுதி தான் கன்டென்ட் பகுதி. அதாவது இதில் அலுவலகம் சம் பந்தமா இல்லாமல், யோகா, பிட்னெஸ், அழகு குறிப்புகள், சமையல்… என எல்லாம் இருக்கும். அனைத்தும் வீடியோக்கள் முறையில் அப்லோட் செய்யப்படும். அந்த சமயத்தில்தான் என் கணவர் என்னை இதில் சமையல் பகுதியை செய்ய சொன்னார். எனக்கும் ஆர்வமா இருந்தது. அமெரிக்காவில் இதுபோன்ற சமையல் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து இருக்கேன். ஆனால் அப்போது அதை எப்படி நடைமுறைப்படுத்தணும்னு தெரியல. என் கணவர் மூலமா வாய்ப்பு வந்தது. யோசிக்காமல் ஓ.கேன்னு சொல்லிட்டேன்.

ஹோம் குக்கிங்?

2008ம் வருடம் தான் என் கணவரின் அலுவலக இணையத்தில் சமையல் நிகழ்ச்சியை துவங்கினேன். அந்த காலக்கட்டத்தில் சமையல் குறித்து வீடியோக்கள் எல்லாம் கிடையாது. இப்ப ஐந்து வருஷமா தான் நிறைய பேர் தனித்தனியா செய்றாங்க. ஆன்லைனில் முதல் முறையா குக்கிங் நிகழ்ச்சி நான் தான் ஆரம்பிச்சேன்னு பெருமையா சொல்லலாம். அப்ப சாதாரணமாதான் செய்தேன். பிரத்யேக செட் எல்லாம் கிடையாது. அவுட்டோரில் தான் சமைப்பேன். அதைத் தான் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவோம். ஒரு வாரத்திற்கு ஒரு சமையல் தான் செய்வேன். கொஞ்சம் கொஞ்சமா அது மக்கள் மத்தியில் பாப்புலர் ஆச்சு. அதனால் அடுத்த கட்டமாக யுடியூப்பில் செய்ய ஆரம்பிச்சேன். அந்த சமயத்தில் தான் ஃபேஸ்புக்கில் வீடியோக்களை அப்லோட் செய்யும் வசதி வந்தது. அதனால் அதில் ஒரு தனி பக்கத்தை ஆரம்பித்து அதில் ஒவ்வொரு வாரமும் புதுப் புது உணவுகளை அப்லோட் செய்ய ஆரம்பிச்சேன். இப்போது இன்ஸ்டாகிராமிலும் என்னுடைய சமையல் வீடியோக்கள் உலா வருகிறது. எல்லா சோஷியல் மீடியாக்களிலும் ஹோம் குக்கிங் உள்ளது.

உங்க சமையல் ரொம்ப சிம்பிளா இருக்கே?

இந்த காலத்தில் பெண்களும் வேலைக்கு போறாங்க. காலையில் அவசர அவசரமா சமையல் செய்திட்டு வேலைக்கு போகணும். அதே போல் மாலை வீட்டுக்கு வந்து சமையல் செய்யணும். பொதுவாகவே சமையல் ரொம்ப கஷ்டம்ன்னு பலர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கேன். அதுவும் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பெரிய காம்பிளிகேஷன் சமையல்னு சொன்னாலே அவங்களுக்கு சமையல் மேல் வெறுப்பு தான் வரும். அதனால தான் நம்ம வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் உணவுப் பொருட்களை வைத்து சிம்பிளாகவும், சுவையாகவும் அதே சமயம் எளிமையாகவும் இருக்கணும்.

பொதுவாகவே நிறைய ரெசிப்பிக்கள் இருக்கு. எல்லா உணவுகளை யும் நம் விருப்பம் போல் சமைக்க முடியாது. சில உணவுகளை இப்படித்தான் சமைக்கணும்ன்னு ஒரு வரைமுறை இருக்கும். அதன் படி தான் சமைக்கணும். உதாரணத்திற்கு சிக்கன் பட்டர் மசாலா, ஓட்டலில் சாப்பிடுவது போன்ற அதே சுவை வேண்டும் என்றால் அதற்காக சில விதிமுறைகளை பின்பற்றித்தான் ஆகணும். இல்லைன்னா சரியா வராது. ஆனால் மற்ற உணவுகளில் நமக்கு பிடிச்ச மாதிரி சின்னச் சின்ன மாற்றம் செய்து கொள்ளலாம். சில சமயம் நானே புது ரெசிப்பிகளை உருவாக்கி இருக்கேன். அதில் என்னுடைய சிக்னேச்சர் உணவுன்னு சொன்னா சிக்கன் சாண்ட்விச், சிக்கன் கட்லெட், பிரியாணி, பிரட் பாதாம் கேக்…இவை எல்லாம் என்னுடைய ஆல் டைம் பேவரிட் டிஷ்ன்னு சொல்லலாம்.

தினமும் என்ன குழம்பு வைப்பதுன்னு சிக்கலா இருக்கு… இதில் நீங்க தினமும் ஒரு ரெசிபி..?

இது தான் தொழில்ன்னு ஆயிடுச்ச. அப்ப தேடல்களும் நிறைய இருக்கும் தானே. நாங்க ஏதாவது ஓட்டலுக்கோ, கல்யாணத்திற்கோ செல்லும் போது அங்கு ஏதாவது ஒரு உணவு எனக்கு பிடித்து இருந்தா, உடனே வீட்டில் வந்து செய்து பார்ப்பேன். நான் எல்லா விதமான உணவுகளையும் செய்வதால் நிறைய ஆய்வு செய்வேன். ஒவ்வொரு மாநிலத்தின் உணவும் மாறுபடும். ஆந்திரா உணவுன்னா அவங்க ஸ்டைல் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் வித்தியாசமா இருக்கும். அவங்க பயன்படுத்தும் காய்ந்த மிளகாயும் நாம பயன்படுத்துவதிலும் நிறைய வித்தியாசம் உண்டு. அதில் நாம கொஞ்சம் வித்தியாசம் செய்யலாமே தவிர சுவையோ அல்லது செய்முறையோ மாத்த முடியாது. இது வரை ஃபேஸ்புக்கில் மட்டுமே 1500 ரெசிப்பிக்களை அப்லோட் செய்து இருக்கேன். ஒவ்வொரு ரெசிப்பியும் நான் முதலில் செய்து பார்த்துவிட்டு அதன் பிறகு தான் வீடியோவில் ஷூட் செய்வேன். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு ரெசிப்பிக்களை அப்லோட் செய்வோம். நாங்க மொத்தம் ஐந்து பேர் குழு. இரண்டு கேமரா மேன், இரண்டு பேர் எடிட் செய்வாங்க.

உங்கள் உணவில் இந்தியன் டச் இருக்கே..?

எனக்கு உலகம் முழுக்க பார்வை யாளர்கள் இருக்காங்க. அதில் எல்லாரும் இந்தியர்கள். சொந்த ஊரை விட்டு வெளி நாட்டில் இருக்கும் இவர்கள் பெரும்பாலும் நம்முடைய உணவினை தான் விரும்புறாங்க. அவங்கள திருப்திப்படுத்துவது தான் என் நோக்கம். மேலும் மேலைநாடு உணவுகளை நாம் ஓட்டலில் சாப்பிடுவோம். அந்த உணவினை நாம் அவர்கள் போல் சாப்பிட முடியாது. நமக்கு கொஞ்சம் காரம் தேவை. அதனால் தான் வெளிநாட்டு உணவினை செய்தாலும் நம்ம இந்தியன் சுவை இருக்க வேண்டும் என்பதில் கவனமா இருப்பேன். ஏன் என்னுடைய பாஸ்தா நமக்கு ஏற்பத்தான் இருக்கும்.

இவ்வளவு சமைக்கிறீங்க இதில் உங்களுக்கு பிடிச்ச உணவு..?

எல்லாரையும் போல தான் எனக்கும் அம்மா சமையல் தான் பிடிக்கும். அவங்களின் கீரை பருப்பு கடைசல், நாட்டுக் கோழி குழம்பு, மீன் குழம்பும் சொல்லவே வேணாம்.. அப்படி இருக்கும்… ஆனா எனக்கு என்னமோ அவங்களின் கைப்பக்குவம் வராது. நான் சமைப்பதில் எங்க வீட்டில் இருப்பவங்க விரும்பி சாப்பிடுவது பிரியாணி தான். என் மகனுக்கு நான் செய்யும் பிரியாணின்னா உயிர். இன்னும் சொல்லப்போனா நான் இவ்வளவு பிரபலமாக காரணமே என்னுடைய தம் பிரியாணி வீடியோ தான். என்னதான் என் ரெசிப்பிக்கள் பிரபலம் என்றாலும், என்னையும் சில ரெசிப்பிக்கள் ஆட்டம் காண வச்சது. டிரைஃப்ரூட் ரோல் ரெசிப்பிய மட்டுமே சுமார் ஐந்து முறையாவது செய்து பார்த்து இருப்பேன். அதே போல் ப்ளூபெரி பேனகோட்டா, கேராமெல் கஸ்டர்ட்… ரொம்பவே நான் சிரமப்பட்டு செய்த உணவுகள்.

எதிர்கால திட்டம்..?

யுட்யூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் எல்லாவற்றிலும் என்னுடைய சமையல் வீடியோக்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அதனால் நம்ம ஊரு மக்களுக்காக தமிழ் மற்றும் தெலுங்கிலும் செய்து வருகிறேன். என்னுடைய சமையல் குறித்து ஷோம் குக்கிங் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு இருக்கேன். அதன் இரண்டாவது பிரதியை வெளியிடணும். தமிழ் மற்றும் தெலுங்கிலும் உள்ள இணையத்தை மேலும் பல பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லணும். மதுரை, திருநெல்வேலி உணவுகளையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

உங்களின் சமையலை மற்றவர்கள் இணைய திருட்டு மூலம் பயன் படுத்தலாமே?

செய்யலாம்தான். காரணம் சமூக வலைத்தளங்கள் நம் கன்ட்ரோலில் இல்லை. ஆனா ஒண்ணு மட்டும் உறுதியா சொல்றேன். எப்போதுமே ஒரிஜினலுக்கு தான் மதிப்பு அதிகம். என்னதான் நம்முடைய ரெசிபியை திருடினாலும், அவங்க இதில் குறிப்பிட்டு இருப்பது போல் செய்தாலும், அதே சுவை மற்றும் தரத்துடன் இருக்குமா? எல்லாவற்றையும் விட பார்வையாளர்களுக்கு நம்முடைய உணவு பிடிச்சதுன்னா, அவங்க நம்மை விட்டு போகமாட்டாங்க. அதன் பிறகு எத்தனை பேர் வந்தாலும் உண்மை மற்றும் கடின உழைப்பு தான் நிலைத்து இருக்கும் என்றார் ஹேமா சுப்பிரமணியன்.

-ப்ரியா

ஹேமாவின் கைப்பக்குவத்தில் நாட்டுக்கோழி குழம்பு

தேவையானவை

நாட்டுக் கோழி – 1
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1 மேசைக்கரண்டி
உப்பு – சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணை – 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கு ஏற்ப
தக்காளி – 2
தண்ணீர் – 1 1/2 கப்
சிகப்பு மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
மசாலா செய்ய தேவையானவை
தனியா – 2 மேசைக்கரண்டி
கசகசா – 1/2 மேசைக்கரண்டி
பட்டை – 1
லவங்கம் – 5
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவியது – 1/2 மேசைக்கரண்டி.

செய்முறை

மசாலா பொருட்களை எண்ணை சேர்காமல் வறுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தனியே வைக்கவும். கோழி இறைச்சியை நன்கு கழுவி அதில் மிளகாய் தூள், கல்உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதில் சிகப்பு மிளகாய் தூள் சேர்த்து மசாலா தடவிய சிக்கனையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாக்களை சேர்த்து நன்கு கொதித்ததும், கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்யாண தேன் நிலா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பாலைவனத்தில் ஒரு தங்க வேட்டை!! (வீடியோ)