By 5 May 2019 0 Comments

திரும்பிப் பார்ப்போம்; திருந்தி விடுவோம் !! (கட்டுரை)

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் தீவிரவாதிகளான முஸ்லிம் குழுக்களால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, பொதுவாக முழு நாடும், குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம்களும் எதிர்நோக்கியிருக்கும் பிரதான பிரச்சினை, ‘தலைதூக்கிய தீவிரவாதத்தை முற்றாக அடக்குவது எவ்வாறு?’ என்பதும், ‘இனிமேல் இது போன்ற அனர்த்தங்களைத் தவிர்ப்பது எவ்வாறு?’ என்பதுமாகும்.

மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் இடம்பெற்ற தாக்குதல்களால் ஏற்பட்ட, இந்த அர்த்தமற்ற கோரப் படுகொலைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும் போது, நாடும் முஸ்லிம்களும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையின் பாரதூரம் தெரிகிறது.

இருபது நிமிடங்களில், சுமார் 300 உயிர்களைப் தீவிரவாதிகள் குடித்துவிட்டார்கள். அதற்கும் அதிக எண்ணிக்கையானோரை, மரணத்தின் விளிம்புக்கே இட்டுச் சென்றார்கள்.

இனக்கலவரமொன்றால், நாடு பற்றி எரியும் நிலையை அவர்கள் உருவாக்கினார்கள். கிறிஸ்தவ சமயத் தலைவர்களின் பொறுப்புணர்ச்சியினதும் முதிர்ச்சியினதும் காரணமாக, அவ்வாறு கலவரம் ஏதும் இடம்பெறவில்லை.

இலங்கை கத்தோலிக்க சமூகத்தின் பேராயரான கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பாதிக்கப்பட்ட மக்கள் முன் சென்று, இந்தப் பயங்கரவாதத்துக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை என்றார். அதுதான் உண்மையாக இருந்தாலும், சாதாரண மக்கள், சாதாரணமாகச் சிந்திக்கும் போக்கைக் கருத்திற் கொள்ளும் போது, இவ்வாறு கூறுவதற்குப் பெரும் தைரியமும் பக்குவமும் ஆளுமையும் இருக்க வேண்டும்.

தலைதூக்கிய பயங்கரவாதத்தை அடக்கும் விடயத்தில், அரசாங்கத்துக்கே கூடுதலான பொறுப்பு இருக்கிறது. ஆனால், அது போலவே முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் பொறுப்புகள் இருக்கின்றன.

சமூகத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்று நினைத்து, சமூகத்தின் அழிவுக்கு வழிவகுக்காமல் சிந்தித்துச் செயலாற்றுவது முஸ்லிம்களின் கடமையாகும். இப்போது என்ன நடந்தது என, நிலை தடுமாறியிருக்கும் முஸ்லிம்கள், தம்மை அந்தப் பயங்கரவாதக் கும்பலோடு அடையாளப்படுத்திக் கொள்ளத் தயாரில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஊடகங்களில் வரும் முஸ்லிம் சமய மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துகளும் முஸ்லிம் பொது மக்களின் கருத்துகளும் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஊடகச் சந்திப்புகளும் அறிக்கைகளும் அதையே சுட்டிக்காட்டுகின்றன. அந்த முஸ்லிம் சமூகத்தை, பயங்கரவாதிகளின் பக்கம் தள்ளிவிடாமல் பாதுகாப்பதும் ஏனைய சமூகங்களின் பொறுப்பாகும்.

அதைவிட, இனிமேல் இது போன்றதொரு நிலைமை உருவாகாமல் இருக்க, நடவடிக்கை எடுப்பதிலும் இந்த மூன்று சாராருக்கும் பெரும் பொறுப்புகள் இருக்கின்றன. அதில் முஸ்லிம்களின் பொறுப்பே மிகப் பெரிய பொறுப்பாகும். அதாவது, முஸ்லிம் சமூகம் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதனை ஏனைய சமூகங்களாலோ அரசாங்கத்தாலோ செய்ய முடியாது.

ஏனைய சமயத்தவர்களோ, அரச அதிகாரிகளோ முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் தீவிரவாதத்தை, உண்மையான இஸ்லாத்திலிருந்து பிரித்தறிவது பெரிதும் கஷ்டமான காரியமாகும். உதாரணமாக, இஸ்லாம் சமயத்தைப் போதிக்கும் மத்ராஸாக்களைத் தடை செய்ய வேண்டும் எனச் சில பெரும்பான்மை சமூகத்தவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், மத்ரஸாக்களில் கல்வி கற்ற ஓரிருவர் தீவிரவாதிகளாக மாறியது போலவே, 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களும் வன்செயல்களும் பரவலாக இருந்த காலத்தில், சமூகத்தை அமைதியாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்தவர்களுள் மத்ரஸாக்களில் கல்வி கற்ற நூற்றுக் கணக்கான மௌலவிகளும் அடங்கினர். இந்த வேறுபாட்டை அடையாளம் காண, முஸ்லிம்களாலேயே முடியும்.

சந்தேக நபர்களின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்டதாகத் தொலைக் காட்சியில் காட்டப்பட்ட சில புத்தகங்கள், பொதுவாகச் சாதாரண முஸ்லிம் வீடுகளிலும் இருக்கும்; கடைகளில் விலைக்கு வாங்கக் கூடியவையாகும். ஆனால், அவை தீவிரவாத நூல்களா, இல்லையா என்பதை அடையாளம் காண, பாதுகாப்புத் துறையினரால் முடியாமல் இருப்பதை, இது காட்டுகிறது. எனவே முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் தீவிரவாதத்தை அடையாளம் காண்பது முஸ்லிம்களாலேயே முடியும்.

தம்மை மாற்றிக் கொள்வதாக இருந்தால், முஸ்லிம் சமூகம் தமது கடந்த காலத்தை நேர்மையாகவும் பாரதூரமாகவும் மீளாய்வு செய்து பார்க்க வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இதுபோன்றதொரு பயங்கரவாத அமைப்பு உருவாவதற்கு வெளிக்காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அந்த வெளிக் காரணங்களுக்கு இரையாகும் வகையில் நடந்து கொண்டமை, முஸ்லிம்களின் தவறாகும்.

இற்றைக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர், முஸ்லிம்கள் கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அக்காலத்தில் ‘லெப்பை’ என்றழைக்கப்பட்ட கிராமிய மட்ட சமயத் தலைவர்களே, சமய ரீதியாக முஸ்லிம்களை வழிநடத்தினர். அவர்களுக்கு வேறு நோக்கங்களோ, குறிக்கோள்களோ இருக்கவில்லை.

பின்னர், முஸ்லிம்களும் கல்வியில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஓரளவுக்கு கல்வியறிவுள்ள ஒரு சமூகம் வளர்ந்தது. அத்தோடு, 1978ஆம் ஆண்டு இலங்கையில் தாராள பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேவேளை, 1970களில் எண்ணெய் வளத்தின் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பொருளாதாரமும் திடீரென வானளாவ உயர்ந்தது. இந்த உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகளின் விளைவாக, வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு முஸ்லிம்களும் செல்லலாயினர்.

படித்த முஸ்லிம்களும் முஸ்லிம் செல்வந்தர்களும் மத்திய கிழக்கு நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன் விளைவாக அபாயா, புர்கா, நிக்காப், ஜூப்பா போன்ற உடைகள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அறிமுகமாயின.

மத்திய கிழக்கு நாடுகள், ஏனைய நாடுகளில் இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்கு, எண்ணெய் வளம் மூலம் தாம் புதிதாகப் பெற்ற செல்வத்திலிருந்து, செலவழிக்க ஆரம்பித்தன. அந்த உதவிகளைப் பெற்று, இஸ்லாமிய கல்வித்துறையிலும் சமூக சேவைகளிலும் ஈடுபடும் முஸ்லிம் இயக்கங்கள், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் உருவாகின.

அந்த அரபு நாடுகளில் உள்ள இஸ்லாமிய சமயக் கொள்கை வேறுபாடுகளும் அந்தப் பணத்தோடு, இலங்கை, இந்தியா, வங்காளதேசம் போன்ற நாடுகளுக்குள் புகுந்தன.

சமயப் பெரியார்களின் கல்லறைகளைத் தரிசித்தல், இறந்தவர்கள் பெயரில் அன்னதானம் வழங்குதல் போன்றவற்றின் மீதே, இலங்கையில் ஆரம்பத்தில் கருத்து முரண்பாடுகள் உருவாகின. இலங்கையில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஏற்பட்ட இந்த முரண்பாடுகள், ஆராய்ச்சியோடு கலந்த அறிவுபூர்வமான சமயக் கலந்துரையாடலுக்குப் பதிலாக, விட்டுக் கொடுக்கும் தன்மையற்ற, மற்றவருடைய கருத்தை மதிக்காத, முரட்டுத்தனமான சண்டைகளையே தோற்றுவித்தன.

இதனிடையே 1970களில், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிக் கொண்டிருந்த ரஷ்யாவை அங்கிருந்து விரட்ட, அமெரிக்கா அந்நாட்டில் ‘முஜாஹிதீன்கள்’ என்ற பெயரில் பல கிளர்ச்சிக் குழுக்களை உருவாக்கியது.

இஸ்லாமிய சமயத்தைப் பாவித்தே, அமெரிக்கா அவர்களைத் தூண்டியது. சவூதி அரேபியா போன்ற நாடுகளும் அக்குழுக்களுக்கு உதவி வழங்கின. பிற்காலத்தில், இதேபோன்று, மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றில், சமயத்தின் பேரால் போராடும் ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அக்குழுக்களோடு இலங்கை அமைப்புகளுக்கு நேரடித் தொடர்பு இல்லாவிடினும், தத்தமது கொள்கைக்கு ஏற்பவும் தமக்குத் தொடர்புள்ள நாடுகளின் கொள்கைக்கு ஏற்பவும் இந்த ஆயுதக் குழுக்களை ஏற்றும் எதிர்த்தும் வந்தன.

மாற்றுக் கருத்துடையோர் வாழக் கூடாது என்றதொரு வெறித்தனமான கொள்கையை, மத்திய கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகள் உருவாக்கின. மற்றவரின் கருத்தை மதிக்காதவர் இறுதியில சென்றடையும் இடமே அதுவாகும். அக்கொள்கை இலங்கைக்குள் கசிந்ததன் விளைவையே நாம் உயிர்த்த ஞாயிறன்று பார்த்தோம்.

இந்த நிலைமையை முஸ்லிம் சமய மற்றும் அரசியல் தலைவர்களே சீர் செய்ய வேண்டும். பிறரின் கருத்தை மதிக்கும் ஓர் அறிவுபூர்வமான சமூகத்தை உருவாக்காவிட்டால் இந்த வெறித்தனம் மிக விரைவில் அத்தலைவர்களின் வீட்டுக் கதவையும் தட்டுவது திண்ணம்.

பேரினவாதமும் முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்க்க உதவலாம்

இன்றைய நிலையில், இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகிறார்கள். கடந்த 21ஆம் திகதி, முஸ்லிம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள், அவர்களைத் தலைக்குனிய வைத்துவிட்டன. அவர்களோடு பல தலைமுறைகளாக, நண்பர்களாக வாழ்ந்த அயலவர்களே, அவர்களைச் சந்தேகிக்கும் நிலைக்கு, அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மறுபுறம், தமது பாதுகாப்பைப் பற்றிய பாரியதோர் பிரச்சினையை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை அடுத்து, கிறிஸ்தவர்கள் தம்மைத் தாக்கக்கூடும் என்று ஆரம்பத்தில் இருந்த பயத்தை, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தணித்துவிட்டார். ஆனால் வேறு வகையிலான பயம், இப்போது அவர்களைச் சூழ்ந்து கொண்டுள்ளது.

பொதுவாக, முஸ்லிம்கள் பின்பற்றும் இஸ்லாம் எது, முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் சமயத் தீவிரவாதம் எது என்று, பிரித்தறியத் தெரியாத பாதுகாப்புத் துறையினரே பாதுகாப்பு பணிகளிலும் விசாரணைகளிலும் சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, அநாவசியமாகச் சந்தேகத்துக்குள்ளாகி கைது செய்யப்படுவோமோ என்ற பயம் பலரிடம் தோன்றி இருக்கிறது. அது நியாயமானதொரு பயமாகும்.

அதேவேளை, கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பல்வேறு பிரசாரங்களில் ஈடுபட்ட பேரினவாதக் குழுக்களும் தற்போதைய நிலைமையைப் பாவித்து, தமது பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். புர்கா, நிக்காப் ஆகிய முகத்திரைகள் மீதான தடைக்கு, அவர்களது தூண்டுதலே காரணமாகும்.

இம்முகத்திரைகள் அநாவசியமானவை என்பது உண்மை. இது முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களோடு இரண்ட‌றக் கலந்து வாழ்வதற்கு ஒரு வித தடையாக இருக்கின்றன. அதேவேளை முஸ்லிம்கள் மத்தியிலும் தீவிரவாதிகள் உருவாகியிருக்கும் நிலையிலும், சந்தேக நபர்கள் மத்தியில் பெண்களும் இருப்பதாலும் நாட்டில் வாழும் சகலரும் அடையாளம் காணக்கூடியவாறு வாழ வேண்டும் என்பதை எவரும் ஏற்கத் தான் வேண்டும்.

ஆனால், தேவாலயங்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்ட்ட கிறிஸ்தவர்களாவது, அவற்றைத் தடை செய்ய வேண்டும் எனக் கேட்கவில்லை. தமிழீழ விடுதலை புலிகளுடனான போர் நடைபெற்ற காலத்திலாவது, தடைசெய்யப்படாத இம் முகத்திரைகளைத் தடைசெய்யுமாறு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு முன்னரே, பேரினவாத அமைப்புகள் கோரி வந்தன.

அந்தக் கோரிக்கையே சந்தர்ப்பம் பார்த்து இத்தாக்குதலுக்குப் பின்னர் எழுந்தது. அரசாங்கம் அவர்களின் நெருக்குதலுக்கு எவ்வளவு பணிந்தது என்றால் முகத்திரைகளை அகற்றுமாறு ஜம்இய்யத்துல் உலமாச் சபை முஸ்லிம்களுக்கு அறிவித்திருந்த நிலையிலேயே அரசாங்கம் முகத்திரைத் தடையை கொண்டு வந்துள்ளது.

சில சிங்கள ஊடகங்கள், இத் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. சில பத்திரிகைகள் ஏற்கெனவே இஸ்லாமிய நம்பிக்கைகளை இழிவுபடுத்தியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஒரு சில முஸ்லிம்கள் செய்த குற்றத்துக்காக, சகல முஸ்லிம்களையும் சந்தேகிக்காதீர்கள் எனப் பலமுறை கூறி வரும் நிலையில், சகல முஸ்லிம்களும் அவர்களது சமயத்தால் வன்முறைக்குத் தூண்டப்பட்டுள்ளார்கள் என, இந்த ஊடகங்கள் கூறுகின்றன.

1970ஆம் ஆண்டுகளில் மத்திய கிழக்கில் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பதற்காக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகள், அப்பிராந்திய நாடுகளை மோதவைத்து, பல குழுக்களை உருவாக்கி, அவற்றையும் மோதவைத்து, பிராந்தியத்தை யுத்தகளமாக மாற்றும் முன்னரும், உலகில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். உலக முஸ்லிம்கள் வரலாற்றுக் காலம் முதல், போர் வெறியர்களாகவோ வன்முறையைப் போதிப்பவர்களாகவோ சித்திரிக்கப்படவில்லை.

இவ்வாறு முஸ்லிம்கள் தொடர்ந்து இம்சிக்கப்படுவது மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதாவது, இவர்கள் தீவிரவாத போக்குகளுக்கு இரையாகலாம். இலங்கை மக்கள் மறந்துவிட்டாலும் இது போன்றதோர் அனுபவம் நாட்டுக்கு இருக்கிறது.

தனித் தமிழ் நாட்டைக் கேட்டுத் தேர்தலில் போட்டியிட்ட சுந்தரலிங்கத்தை கட்டுப் பணத்தையும் இழக்கச் செய்த தமிழ் மக்களை, பேரினவாதிகளே தமிழீழத்தின் பக்கம் தள்ளினார்கள்.

தமிழ் ஆயுதக் குழுக்கள் ஊருவாகிய ஆரம்ப காலத்தில், தமிழ் மக்களும் இவ்வாறே சந்தேகத்துக்கு உள்ளானார்கள். அந்தச் சந்தேகம் இறுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான இம்சைகளாக மாறியது. 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் அதன் விளைவாகும்.

அதைத் தடுக்காததன் மூலமும் அழிவைக் கட்டுப்படுத்தாததன் மூலமும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையுமே ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் நிலைக்கு அரசாங்கம் தள்ளிவிட்டது. அதன் விளைவு என்ன என்பதை நாடே அறியும். இந்த வரலாற்றிலிருந்து நாடு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam