By 5 May 2019 0 Comments

இது பாற்சோறு பொங்கி மகிழும் நேரமல்ல !! (கட்டுரை)

முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்த நாள்களில், தென் இலங்கை, போர் வெற்றிவாதம் எனும் பெரும் போதையால் தள்ளாடியது. வீதிகளிலும் விகாரைகளிலும் பாற்சோறு பொங்கி பகிர்ந்துண்டு கொண்டாட்டத்தின் எல்லை தாறுமாறாக எகிறியது. ஆனால், அன்றைக்கு தமிழ் மக்களின் மனங்கள், பெருங்கவலையிலும் அலைக்கழிப்பினாலும் நிரம்பியிருந்தது. எந்தவொரு தரப்புக்கும், அப்படியான நிலையொன்று வரக்கூடாது என்பது, தமிழ் மக்களின் நினைப்பாக இருந்தது. அந்த நினைப்பில், இன்றைக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை.

ஆனால், ‘கும்பல் மனநிலை’யோ, நிதானமாகச் செயற்படக் கோரும் தருணங்களையும், சிந்திக்க வலியுறுத்தும் கட்டங்களையும் புறந்தள்ளிக் கொண்டு, பழிதீர்க்கும் எண்ணத்தைத் தூண்டிவிடுகின்றது. அப்படியான சம்பவங்களை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னரான கடந்த 10 நாள்கள், பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

பயங்கரவாதம், அடிப்படைவாதத்தின் வேர்களில் வளர்வது. அதற்கு தனி அடையாளங்கள் இல்லை. அது, எந்த அடிப்படைவாத- மூர்க்க- தூய வாதங்களிலும் எழலாம்.

சஹ்ரான் என்கிற தீவிரவாதியின் தோற்றம் தூய மார்க்கப் போதனைகளில் மாத்திரம் எழுந்தது அல்ல. அது, தூய மார்க்கம் பேசிக் கொண்டு, மற்றவர்களை அடக்கி ஒடுக்கலாம், ஆளலாம் என்கிற மனநிலையில் இருந்தும் எழுந்தது. அது, அவனை 2008, 2009ஆம் ஆண்டுகளில் காத்தான்குடி பகுதிகளில் எழுந்த வன்முறைகளின் வழி காட்டியும் கொடுத்தது.

ஆனால், அவற்றைத் தேசியப் பாதுகாப்புத் தரப்பு, அன்றைக்கு கவனத்தில் எடுக்கவில்லை. அது, பத்து வருடங்கள் கழித்து, 250 பேருக்கும் அதிகமான அப்பாவிகளைப் பலியெடுக்க வைத்திருக்கின்றது.

மற்றவர்களின் உரிமைகளை அனுமதிக்க மறுக்கின்ற, அடிப்படைவாத சிந்தனைகள் இலங்கைக்குப் புதிதில்லை. பௌத்தம் முதன்மையானது என்கிற அரசமைப்பைக் கொண்டிருக்கின்ற நாடு இது.

அப்படியான நாட்டில், அடிப்படைவாத சிந்தனைகளுக்கும், செயற்பாடுகளுக்கும் எதிராக மனித உரிமைகள், சுதந்திரம் பேசுவதாக எழுப்பப்படும் குரல்கள் இலகுவாக நசுக்கப்படும். அதற்கு ‘கும்பல் மனநிலை’யை ஒரு கருவியாகப் பாவிப்பார்கள். அப்படியான சில சந்தர்ப்பங்களை இந்தப் பத்தி சுட்டிக்காட்ட விளைகிறது.

1. பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல்கள் நடந்து, சில மணிநேரங்களிலேயே அது பற்றிய பி.பி.சி தொலைக்காட்சி உரையாடல் ஒன்றின் போது, ‘தமிழ் கார்டியன்’ செய்தி இணையத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் ஒருவர், இலங்கையின் மத அடிப்படைவாதம் குறித்து, நெறியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது பேசினார்.

குறிப்பாக, புத்தாண்டு காலப்பகுதியில், அநுராதபுரத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்று தாக்கப்பட்ட விடயம் பற்றியும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அவர், பேசிய தருணத்தில், இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியது யார் என்கிற விவரம் வெளியாகியிருக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில், கடந்தகால அனுபவங்களைக் கொண்டு, அந்த ஊடகவியலாளர் பேசியிருக்கிறார்.

ஆனால், அதற்கான எதிர்வினை என்பது, தென் இலங்கை சமூக ஊடகவெளியிலும், சமத்துவம் பற்றிப் பேசிக்கொள்வதாகக் காட்டிக் கொள்ளும் கொழும்பு லிபரல்வாதிகள் வட்டத்திலும் காட்டமாக இருந்தது.

சில தென் இலங்கை இனவாதிகள், குறித்த ஊடகவியலாளரின் குடும்ப உறுப்பினர்கள் வரை சென்று, கொலை- பாலியல் துஷ்பிரயோக அச்சுறுத்தல்களை விடுத்தனர். அந்தக் ‘கும்பல் மனநிலை’ இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. கருத்தொன்றை எதிர்கொள்வதிலும், அதற்குப் பதிலளிப்பதிலுள்ள உளவியல் சிக்கலை, அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2. தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து, நீர்கொழுப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பால் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளை அந்தப் பகுதி மக்கள் விரட்டியடித்தனர். அகதிகள் தமது உயிருக்கு உத்தரவாதம் கோரி அல்லாடினர்.

அப்படியான தருணத்தில், அவர்களை, வவுனியாவில் தற்காலிகமாகத் தங்க வைப்பது சார்ந்து உரையாடலொன்று எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டவர்களால் எழுப்பப்பட்டது. ஆனால், அடுத்த கணமே, தீவிரவாதிகளை வடக்கில் கொண்டுவந்து சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, தமிழ்த் தேசியவாதிகளாகத் தங்களை அடையாளப்படுத்தும் சிலர் பேசத் தொடங்கினர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்து, எந்தவித அடிப்படைகளையும் அறியாத இந்தத் தரப்புக்கு, கிடைக்கிற சந்தர்ப்பத்தில், தங்களை நிரூபித்துவிட வேண்டும் என்கிற நினைப்பு மாத்திரமே எஞ்சியிருந்தது.

குறித்த அகதிகளில் அதிகமானோர் கிறிஸ்தவர்கள்; மற்றும் அந்த நாடுகளில் அடக்குமுறையைச் சந்தித்த சிறுபான்மை முஸ்லிம்கள். அவர்களின் அகதிக் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு, மேற்குநாடுகளிடம் அவர்கள் வதிவதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. அதற்கான அனுமதி கிடைக்கும் போது, அவர்கள் படிப்படியாக, இலங்கையை விட்டே வெளியேறிவிடுவார்கள். அவர்கள் எங்கு தங்கினாலும் அது தற்காலிகமானதே.

பாகிஸ்தானில் இருந்து வந்தால், அவர்கள் ‘இஸ்லாமியத் தீவிரவாதிகள்’ என்கிற அடையாளப்படுத்தலும், எதையும் பகுத்து ஆய்ந்து அறியாத, ‘கும்பல் மனநிலை’யும் சேர்ந்து தார்மீகங்களைப் புறந்தள்ளியது.

அகதிகளுக்கான உரிமைகள் குறித்து, இலண்டன் வீதிகளிலும், ஊடகங்களிலும் வாய்கிழியப் பேசிய பலரும், இந்த விடயத்தைச் சுமந்திரனுக்கு எதிரான ஒரு விடயமாக மாத்திரமே கையாண்டார்கள். சாதாரண மக்களைத் தெளிவுபடுத்த வேண்டிய தரப்புகள், அதைச் செய்யாமல் வெட்கப்பட வைத்தார்கள்.

3. கடந்த காலங்களில், பொது பல சேனா உள்ளிட்ட அடிப்படைவாத பௌத்த அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக, வெறுப்பு மனநிலையைத் தோற்றுவித்து, சில இலக்குகளை அடைய நினைத்தன.

குறிப்பாக, முஸ்லிம்களின் வர்த்தகத்தை வலுவிழக்கச் செய்வது; இஸ்லாமிய மார்க்கத்தின் மீது அச்சுறுத்தலை விடுத்துப் பிரிவினைகளைத் தோற்றுவிப்பது; அதன்போக்கில், ஹலால் எதிர்ப்பு, புர்க்கா, அபாயா உள்ளிட்ட ஆடைகள் மீதான எதிர்ப்பு என்பன தோற்றுவிக்கப்பட்டன.

அப்போதே, புர்க்கா, அபாயா ஆடைகளைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்தன. ஆனால், அது சாத்தியமாகாத நிலையில், தற்போதையை சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யக் கடும்போக்கு தரப்புகள் நினைக்கின்றன.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதும், சமூகங்களுக்கிடையிலான சந்தேகங்கள் களையப்பட வேண்டியதும் அவசரமான தேவை.

யாரோ சில மனநிலை பிறழ்வானவர்களின் செயற்பாடுகளுக்காக, முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாகக் கூனிக்குறுக வேண்டும் என்கிற நிலை தோற்றுவிக்கப்படுகிறது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது பல் சமூகங்கள் வாழும் நாடு. ஒரு சமூகத்தின் பாரம்பரியம், உரிமைகள் குறித்து, மரியாதை செலுத்த வேண்டியது அடிப்படை. அதையெல்லாம் தாண்டி, சந்தேகங்கள் இன்றி, வாழும் சூழல் உருவாக வேண்டும். இல்லையென்றால், தீவிரவாதிகளினதும் சந்தர்ப்பவாதிகளினதும் தீய சிந்தனைகள் மாத்திரமே வெற்றி பெறும்.

அவசரகாலச் சட்ட விதிகளுக்கு அமைவாக முகத்தை மாத்திரமல்ல, காதுகளையும் மூடாது, ஆடைகள் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது, புர்க்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு எதிரானது மாத்திரமல்ல. கிறிஸ்தவ அருட்சகோரிகள் அணியும் தலையை மூடும் ஆடைக்கும் எதிரானது. அப்படியான நிலையில், அவசர கால விதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, ஆடைக் கட்டுப்பாடொன்றைச் சமூகங்களுக்கு எதிராக நிரந்தரமாக்கிவிட வேண்டும் என்கிற சிந்தனை மேலோங்கியிருக்கின்றது. அது, அடிப்படை மனித உரிமைகளைப் புறந்தள்ளுவதாகும்.

4. இஸ்லாமிய உலமாக்களும், மார்க்க நிறுவனங்களும், தூய இஸ்லாம் போதனையாளர்களாக அண்மைக்காலத்தில் எழுந்த தஜ்ஹீத் அமைப்புகளும் முஸ்லிம் பெண்களைச் சக மனுசிகளாக மதிக்கும் கட்டங்களைப் பதிவு செய்ததே இல்லை.

அரேபிய ஆடைக்கலாசாரத்தை, இலங்கை முஸ்லிம் பெண்களின் அனுமதியின்றியே, அவர்களின் ஆடைகளாகத் திணித்தவை இந்த அமைப்புகளே. முகத்தை மூடும் ஆடைகளே இஸ்லாமியப் பெண்களின் ஆடைகள் என்று, புனித குர்ஆனில் கூறப்பட்டதாகப் பயங்கரவாத் தாக்குதல்களுக்கு முன்னைய காலம் வரையில், இந்த அமைப்புகள் வாதம் செய்தன. ஆனால், தாக்குதலுக்குப் பின்னரான நெருக்கடிகளை அடுத்து, ஒரே நாளில் தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு நர்த்தனமாடுகின்றன. முகத்தை மூடும் ஆடைகள் குறித்து இஸ்லாம் போதிக்கவில்லை என்கின்றன.

முதலில், இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் பெண்களுக்கான தனி உரிமைகள் குறித்த உரையாடல் நிகழ வேண்டும். தாங்கள் என்ன ஆடைகளைத் தேர்வுசெய்ய வேண்டும் என்கிற தீர்மானத்தைப் பெண்களே எடுக்க வேண்டும்.

எப்போதாவது, இவைபற்றிய உரையாடல்களைச் சில முஸ்லிம் பெண்கள் தொடங்கினாலும், அவற்றுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, ‘கும்பல் மனநிலை’யைாக இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

முதலில், எதுசரி எது பிழை என்கிற தீர்மானங்களை, ஆண்கள் மாத்திரமே அமர்ந்து எடுக்கும் அடிப்படை நிலையை, முஸ்லிம் சமூகம் மாற்ற வேண்டும். இல்லையென்றால், முஸ்லிம் பெண்களின் உரிமைகள், நாளுக்குநாள் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தாற்போல, ஆண்களால் மாற்றப்படும். அது, அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் தனிச்சுதந்திரத்துக்கும் எதிரானது.

இறுதியாக, மற்றவர்கள் நெருக்கடியொன்றைச் சந்திக்கும் போது, அதில் புளகாங்கிதம் அடைந்து, பாற்சோறு பொங்கிப் பகிரும் குறு மனநிலையை எந்தவொரு தருணத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாடு எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடியை, சுயநலம், பழிதீர்க்கும் கட்டங்களைத் தாண்டி நின்று சந்திக்க வேண்டும். அதுதான், அனைவருக்கும் நல்லது.Post a Comment

Protected by WP Anti Spam