யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது: தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய இடம் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 49 Second

கரும்புச் சாறு எடுக்கும் இயந்திரத்தில் அகப்பட்ட கரும்பின் நிலையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நிலையும் ஒன்றுதான்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தால், வாழ்க்கையின் பெரும்பகுதியை வழக்கு விசாரணைகள் ஏதுவுமின்றி, சிறைகளில் தொலைத்தவர்களின் கண்ணீர்க் கதைகள், தமிழ் மக்களிடம் ஏராளம் உண்டு. இன்னமும் அந்தக் கதைகள் தொடரவும் செய்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிசாலை உரிமையாளர் ஆகியோரது கைதுகளும் அதனையே உறுதி செய்கின்றன.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது படங்களும், தொலைநோக்கிக் கருவி உள்ளிட்ட சில பொருள்களும் மீட்கப்பட்டதாகப் பாதுகாப்புத் தரப்பால் சொல்லப்படுகின்றது. அதன் அடிப்படையிலேயே, மாணவர்களினதும், மற்றவரினதும் கைது நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

தொலைநோக்கிக் கருவி உள்ளிட்ட பொருள்கள், கற்றல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுபவை என்று பல்கலைக்கழகம் கூறுகின்றது. அப்படியான நிலையில், புலிகளின் தலைவரது படங்களை முன்னிறுத்திக் கைது செய்ய முடியும் என்கிற நிலை, எப்படியான அதிகாரத்தை பாதுகாப்புத் தரப்புக்கு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழங்கியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பல்கலைக்கழக மாணவர்களின் கைதுக்கு எதிராக, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மற்றும் தேர்தல்களை இலக்கு வைத்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் நின்று, தமிழ்ச் சமூகம் இயங்க வேண்டும்.

ஏனெனில், பயங்கரவாதத் தடைச் சட்டமும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னரான மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற அவசரகாலச் சட்டமும் தமிழ் மக்களைச் சக்கையாகப் பிழிவதற்கான ஏதுகைகளை அதிகப்படுத்தி இருக்கின்றன.

குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த ஜனநாயக(!) சிறுவெளியைக் கொண்டு, தமிழ்த் தரப்பு தம்மை நிலைப்படுத்த எடுத்த முயற்சிகள் சார்ந்து, தென் இலங்கைக்கு பெரும் எரிச்சல் உண்டு. (தமிழ்த் தரப்பு தன்னை நிலைப்படுத்த எடுத்த முயற்சிகள் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை என்பதுவும், அது குறித்து தயவு தாட்சண்யம் இன்றி சுயவிமர்சனம் செய்ய வேண்டியதும் அவசியமானது. அது குறித்து, தமிழ்த் தரப்பு பெரும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அது வேறு விடயம்.)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், எழுக தமிழும், மாவீரர் நாளுக்கான எழுச்சியும் தென் இலங்கையால் என்றைக்குமே ஜீரணிக்க முடியாத காட்சிகள். அதுவும், எந்தத் தரப்புக்கு எதிராகப் போர் வெற்றிவாதத்தை, தென் இலங்கை முன்வைக்கிறதோ, அந்தத் தரப்பு, அழிவிலிருந்தும் அடங்குமுறையிலிருந்தும் மீளெழும் தரப்பாகத் தன்னை முன்னிறுத்தும் போது, போர் வெற்றிவாதம் வலுவிழக்க ஆரம்பிக்கும். அதனை, சிங்கள பெருந்தேசியவாதமோ, பாதுகாப்புத்தரப்போ என்றைக்கும் இரசிக்காது.

சிங்களப் பெருந்தேசியவாதம் என்றைக்குமே எதிர்பார்ப்பது, தங்களின் கீழ் அடங்கி, ஒடுங்கி ஒற்றைத் தேசியத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட தமிழ் இனத்தையே. அப்படியான நிலையில், ஒன்றைத் தேசியத்தைப் புறந்தள்ளும் தமிழ் மக்கள் உள்ளிட்ட எந்தத் தரப்புகள் மீதும், அடக்குமுறைகளைப் பிரயோகிப்பது சார்ந்து, சந்தர்ப்பங்களுக்காக சிங்களப் பெருந்தேசியவாதம் காத்திருக்கும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னரான நிலைமை, அவர்களுக்கான சாதகமான பக்கத்தைத் திறந்துவிட்டிருக்கின்றது. அப்படியான நிலையில், தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து விடயங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் கடப்பாடும் ஏற்படுகின்றது.

பதில் சட்டமா அதிபருக்கும், யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையில், கடந்த திங்கட்கிழமை இரு சந்திப்புகள் இடம்பெற்றன. இந்தச் சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களைப் பார்க்கும் போது, கைதான மாணவர்களும், சிற்றுண்டிசாலை உரிமையாளரும் இன்று புதன்கிழமை பெரும்பாலும் விடுவிக்கப்படுவார்கள் என்கிற நிலை காணப்படுகின்றது.

குற்றச்சாட்டுகள் மீளப்பெறப்பட்டு மாணவர்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்; அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற ஒற்றைக்கோரிக்கையின் பக்கத்தில் தமிழ்ச் சமூகம் நிற்கின்றது.

ஆனால், மாணவர்கள் மீதான கைது நடவடிக்கையை, அரசியல் நிகழ்ச்சி நிரலின் போக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகள் கையாள முயன்றதான காட்சிகளைக் கடந்த நாள்களில் காணக்கூடியதாக இருந்தது.

மாணவர்களுக்காக ஆஜராகும் சட்டத்தரணிகளை முன்னிறுத்திக் கொண்டு, நிகழ்த்தப்பட்ட கட்சிசார் அடையாள சமூக ஊடகச் சண்டைகளும் ஊடக உரையாடல்களும் தமிழ் மக்களிடம் பெரும்பாலும் எரிச்சலையே ஏற்படுத்தி இருக்கின்றன.

மாணவர்கள் கைது என்பது, தமிழ்த் தரப்பின் ஒட்டுமொத்தப் பிரச்சினை. அது, எந்தவொரு தரப்பினதும் தனிப்பட்ட பிரச்சினை அல்ல.

அவ்வாறான நிலையில், அதனை என்ன தோரணையில் கையாள வேண்டும் என்கிற தெளிவு, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும், அந்தக் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட வேண்டும். அது இல்லாமற்போனால், தமிழ் மக்கள், தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் அனைத்துத் தரப்புகளின் மீதும் நம்பிக்கை இழக்க ஆரம்பிப்பார்கள்.

ஏற்கெனவே, அரசியல் தலைமைகளும், புலமைத் தரப்பும் பெரியளவில் தம்மை நிரூபிக்காத நிலையில், அவர்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கின்றார்கள். அப்படியான நிலையில், மாணவர்கள் கைது விடயத்தை வைத்துக் கொண்டு, செய்ய எத்தனிக்கப்படும் தேர்தல் அரசியல் காட்சிகள், இன்னும் மோசமான நிலையையே ஏற்படுத்தும். அது, எதிர்கால நம்பிக்கை நடவடிக்கைகளையும் தகர்க்கும்.

சிங்களப் பெருந்தேசியவாதத்தின் போர் வெற்றிவாதத்தையும் அது சார்ந்த சிந்தனைகளையும் அரசியல் இராஜதந்திர ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது. எந்தவொரு காரணத்துக்காகவும் அதனை விட்டுக்கொடுக்க முடியாது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகவும், அது கடந்த காலத்தில் நிகழ்த்திய அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மேற்சொன்ன இரு வழிகளிலும் போராட வேண்டும்.

சிங்களப் பெருந்தேசியவாதத்தின் அடிப்படைகளைக் கொண்டிருக்கின்ற தென் இலங்கையின் ஆட்சியாளர்கள், ஜனநாயக மாண்புகளின் அடிப்படையில் அரசியல் தீர்மானங்களை எடுக்கமாட்டார்கள். அப்படியான துணிவை எந்தவொரு பெரும்பான்மையினத் தலைவரும் வளர்த்துக் கொள்வதில்லை. சிங்கள பெருந்தேசியவாத சிந்தனையின் தயவில் அல்லது, அதனைத் தூக்கிச் சுமந்துகொண்டே அவர்கள் அதிகாரத்துக்கு வருகிறார்கள்.

அப்படியான நிலையில், அவர்களை அரசியல் – இராஜதந்திர கட்டத்தில் எதிர்கொள்ளும் ஆளுமையைத் தமிழ்த் தரப்பு வெளிப்படுத்த வேண்டும். அது, கட்சி நிலைப்பாடுகளுக்கு அப்பால் நின்று நிகழ்த்தப்பட வேண்டியது. அது, தாயகத்திலுள்ளவர்களும், புலம்பெயர் தரப்புகளும் இணங்கிச் செயற்பட வேண்டிய இடம்.

ஆனால், அதற்கான கட்டங்களைக் கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ்த் தரப்பு பெரியளவில் பதிவு செய்யவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பல தடவைகள் இலங்கையிடம் வலியுறுத்திவிட்டது; தீர்மானங்களையும் நிறைவேற்றிவிட்டது.

ஆனால், அவற்றின் கனதியை, தமிழ்த் தரப்பின் இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலமே இன்னும் இன்னும் அதிகப்படுத்த முடியும். ஆனால், யாழ்ப்பாணத்துக்குள்ளும், புலம்பெயர் தேசங்களிலும் தனித்தனிக் குழுக்களாக நின்று செயற்படவே தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும், புலமைத்தரப்புகளும் முயலுகின்றன.

அப்படியான நிலையில், தமிழ்த் தரப்புகள் சர்வதேச அரங்கிலேயே, ஒன்றையொன்று வெட்டியோடவே முயற்சிக்கின்றன. அதன்மூலம், தங்களை நிரூபிக்க முடியும் என்று நம்புகின்றன.

ஆனால், தங்களைத் தனிப்பட்ட ரீதியில் நிரூபிப்பதற்கான காலம் இதுவல்ல. ஏனெனில், பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் போது, அதனை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்; அதில், வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால், தனித்தனியாக நின்று, அனைவரும் வலுவிழக்க வேண்டி வரும்.

தேர்தல் நிகழ்ச்சி நிரலை, தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்கக்கூடாது என்று எந்தவொரு தருணத்திலும் இந்தப் பத்தியாளர் கூறவில்லை. ஆனால், எந்த விடயத்தை தேர்தல் அரசியலின் போக்கில் கையாள வேண்டும் என்கிற தெளிவை வளர்த்துக் கொள்ளுமாறே கோருகிறார்.

தேர்தல் அரசியலுக்குள்ளும் கடும் போட்டி ஏற்படும் போதுதான், ஏக நிலைக்கு (ஒற்றை வாதத்துக்கு) எதிரான நிலை உருவாகும். அதுதான், ஜனநாயக அடிப்படைகளைக் கொண்ட அரசியலை தமிழ் மக்களிடம் வலுப்படுத்தவும் உதவும்.

நிகழ்வுகளின் – விடயங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுவதும், தங்களது ஆதரவாளர்களிடம் அதனைத் தெளிவுபடுத்துவதும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அவசர தேவை.

இல்லையென்றால், மாணவர்களுக்காக எந்தக் கட்சியின் சட்டத்தரணிகள் ஆஜராகினார்கள் என்று பேசிக் கொண்டிருப்பதற்கே நேரம் செலவாகும். நாம் எதிர்கொண்டிருக்கின்ற பயங்கரத்தின் உண்மையை அறியாமலேயே அலைக்கழிய வேண்டியேற்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை !! (உலக செய்தி)
Next post காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)