பொது எதிரியை மறந்துவிடும் அரசியல்வாதிகள் !! (கட்டுரை)

Read Time:20 Minute, 8 Second

தமிழீழ விடுதலைப் புலிகளை, இராணுவ ரீதியாகத் தோற்கடித்து, அவ்வமைப்பின் தலைவர்களை அழித்ததன் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விரும்பியிருந்தால், உலகிலேயே நல்லிணக்கத்துக்குச் சிறந்த உதாரணமான, இந்த நாட்டை வளர்த்தெடுத்திருக்கலாம்.

உடனடியாகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அப்பகுதிகளில் தொழில்களை ஆரம்பிக்க, அவசரமாக நடவடிக்கை எடுப்பதோடு, முறையான அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றையும் அமுல் செய்திருந்தால், தமிழ் மக்கள் இதை விட அதிகளவு நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்திருப்பார்கள்.

அக்காலத்தில், மஹிந்தவுக்குச் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த ‘பக்தி’யின் காரணமாக, எவரும் அதை எதிர்த்து இருக்க மாட்டார்கள். ஆனால், அக்காலத்தல் மஹிந்தவும் ஏனைய பிரதான அரசியல் கட்சித் தலைவர்களும் இனப் பிரச்சினையைப் பந்தாகப் பாவித்து வந்ததால், அந்த நல்ல நிலைமை உருவாகவில்லை.

அதேபோல், தற்போது மத்திய கிழக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவுடனான பயங்கரவாத முஸ்லிம் குழுவின் ‘உயிர்த்த ஞாயிறு’ தாக்குதலை அடுத்து, அப்பயங்கரவாதிகளை, அரச படைகள் பெரும்பாலும் கட்டுப்படுத்தியிருக்கும் நிலையில், நாட்டில் நல்லிணக்கத்தை வளர்க்க நல்லதொரு வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆயினும், நாட்டிலுள்ள ஏறத்தாழ சகல அரசியல்வாதிகளும் மிகமோசமான சுயநலவாத கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை அணுகுவதால், மீண்டும் சந்தர்ப்பம் கைநழுவிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமது சமூகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள், மிகவும் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டும், மேலும் 500க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தும் இருக்கும் நிலையில், இந்நாட்டுக் கத்தோலிக்கர்களின் தலைவரான கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, மிகச் சாதுரியமாக நிலைமைகளைச் சமாதானப்படுத்தினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றாலும், அவை பரவவில்லை.

அதேபோல், குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இந்நாட்டு முஸ்லிம்கள், ஒட்டுமொத்தமாகப் பயங்கரவாதத்தையும் மதத் தீவிரவாதத்தையும் எதிர்த்துக் குரல் எழுப்பி வருகிறார்கள்.

பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு சமூகங்களும் இவ்வாறு நடந்து கொள்வதால், வேறு சமூகங்களைச் சேர்ந்த சில தீவிரவாதிகள், முஸ்லிம்களுக்கு எதிராகத் தமது பழைய பிரசாரங்களை முடுக்கிவிட்டு, குழப்பங்களை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அல்லது இப்போதைக்கு தோல்வியடைந்துள்ளன.

ஆனால், நாட்டில் சகலரும் குறிப்பாக சகல அரசியல்வாதிகளும், தலைதூக்கியிருக்கும் மதத் தீவிரவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிராக ஓரணியில் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், பலர் புதிதாகத் தோன்றியிருக்கும் நிலைமையைப் பாவித்து, தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பது, தெளிவாகத் தெரிகிறது.

குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற நாள் முதல், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள், “உளவுத்துறை பலவீனமடைந்ததன் காரணமாகவே, இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றது” என்று கூறி வருகிறார்கள். அவ்வாறு கூறுவதோடு நின்றுவிடாமல், தற்போது பல்வேறு குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள உளவுத்துறை அதிகாரிகளை, விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

உண்மை என்னவென்றால், நாட்டின் உளவுத்துறை பலவீனமடையவில்லை. தாக்குதல் இடம்பெறுவதற்கு 12 நாள்களுக்கு முன்னதாகவே, உளவுத்துறையினர் நடத்தப்படவிருக்கும் தாக்குதலின் சுபாவம், தாக்குதலை நடத்தவிருக்கும் நபர்களின் பெயர், விவரங்கள் போன்ற சகல தகவல்களையும் மிகத் துல்லியமாகப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தனர். வெளிநாடுகளிலிருந்து தகவல்களைப் பெறுவதற்கான பொறிமுறையையும் அவர்கள் தயார்படுத்தி வைத்திருந்தனர்.

அதன் காரணமாகவே, அவர்களால் இவ்வாறு பொலிஸ் மா அதிபரை உஷார்படுத்த முடிந்தது. அந்தத் தகவல்களின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமையே, தாக்குதல் வெற்றி பெறுவதற்குக் காரணமாகும்.

மேற்படி உளவுத்துறை அதிகாரிகள், மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கப்பம் பெறுவதற்காக, ஆட்களை கடத்திக் கொலை செய்தல் போன்ற சில குற்றச் செயல்கள் தொடர்பாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து, அந்த உளவுத்துறை அதிகாரிகளை விடுதலை செய்வித்துக் கொள்ள, மஹிந்த அணியினர் முயற்சிக்கின்றனர்.

இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குச் சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சி கோரி வந்தது. பொன்சேகாவும் அதனை எதிர்பார்த்தார். ஆனால் தற்போது, மஹிந்தவைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனை வழங்குவதற்குத் தயாரில்லை. இப்போது நிலைமையைப் பாவித்து, ஐ.தே.க தலைவர்கள், பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்க வேண்டும் என, மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று மூன்று வாரங்கள் செல்லும் முன்னரே, புதிய பயங்கரவாத குழுவின் முதுகெழும்பு முறிக்கப்பட்டு, அவர்களது தொடர்புகள் பெரும்பாலும் துண்டிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தப் பயங்கரவாதத்தை முறியடிக்க, இரண்டு வருடங்கள் தேவைப்படும் எனப் பொன்சேகா கூறிவருகிறார்.

புலிகளைத் தோற்கடித்த தம்மாலேயே, இந்தப் பயங்கரவாதத்தையும் அடக்க முடியும் என்பதே அவர் கூற வரும் கதையாகும். எனவே, இந்தப் பயங்கரவாதம் இலகுவில் தோற்கடிக்கப்படுவதை பொன்சேகா தாங்கிக் கொள்வாரா என்ற சந்தேகமும் எழுகிறது. இதனாலாயே தம்மைப் பற்றியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ பற்றியும் கூற முற்பட்டுள்ளார்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா” என்று ஊடகவியலாளர்கள் கேட்கும் போதெல்லாம், நேரடி பதிலை வழங்காது, நழுவிச் சென்ற கோட்டாபய, தாம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் முஸ்லிம் பயங்கரவாதத்தை அடக்குவதே தமது முதன்மையான பணியாகும் என்றும், தாக்குதலை அடுத்துக் கூறியிருந்தார். இவரும் நிலைமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதையே இது காட்டுகிறது.

இதேவேளை, சில அரசியல் கட்சிகள், எவ்வித உறுதியான ஆதாரமுமின்றி, பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக, மற்றைய சில கட்சிகளைக் குற்றஞ்சாட்டுகின்றன. இதன் மூலம் அவை, அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றன என்பது தெளிவாகிறது.

நாடே ஓரணியில் நின்று, பொது எதிரியை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைமை உருவாகியிருக்கும் போது, இவ்வாறு அரசியல்வாதிகள் நிலைமையைப் பாவித்து, அரசியல் இலாபம் தேடுவது பெரும் சாபக்கேடாகும்.

அரசியல்வாதிகள் பொறுப்புடன் பேச வேண்டும்

இது, நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் நேரமாகும். பாரியதோர் அழிவுக்குப் பின்னர், நாடு தன்னைச் சுதாகரித்துக் கொள்ள முயற்சிக்கும் நேரமிது. உயிர்த்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) சுமார் 300 அப்பாவிகளைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளின் முதுகெழும்பு முறிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அவர்களது உள்ளகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால், இனி அபாயம் இல்லை என்று திருப்தியடைய முடியாது. மூளைச் சலவை செய்யப்பட்ட தனி ஒருவன் மீதமாக இருந்தாலும், அவனால் பாரியதோர் அழிவை மீண்டும் ஏற்படுத்த முடியும். ஆனால், அந்த ஒருவனைக் கண்டுபிடிப்பது இலகுவான காரியமல்ல.

இந்த நிலையில், பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் என்பதால் ஏனைய சமூகத்தவர்கள் சகல முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாகக் கருதி, அவர்களைப் பயங்கரவாதிகளின் பக்கம் தள்ளிவிடக் கூடாது.

அதேவேளை, தாமும் தமது சமயமும் இந்தப் பயங்கரவாதத்துக்குக் காரணமல்ல என்பதைத் தெளிவுபடுத்தும் பொருட்டு, பயங்கரவாதிகளை அடையாளம் காண உதவுவது முஸ்லிம்களின் கடமையாகும். அது, தமது பாதுகாப்புக்கு மட்டுமன்றி, பொதுவாகச் சமூகத்தின் பாதுகாப்புக்கும் அத்தியாவசியமான அம்சமாகும்.

இந்த நிலையில், அரசியல்வாதிகள் பொறுப்புடன் பேசுவது மிகவும் முக்கியமாகும். அநாவசியமாக அரசியல் இலாபத்தைக் கருத்திற் கொண்டு, எவ்வித ஆதாரமுமின்றி மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதும் பொறுப்பற்ற முறையில் பேசி, அநாவசியமான சந்தேகங்களுக்கு வழிவகுப்பதும் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள அழிவு தொடர்டபாக, நடத்தப்பட்டு வரும் விசாரணைகளைத் திசை திருப்பக் கூடும்.

சில உதாரணங்களைப் பார்ப்போம். தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சில பள்ளிவாசல்களிலிருந்து வாள்கள் மீட்கப்பட்டன. ஓரிடத்தில் 49 வாள்கள் மீட்கப்பட்டன.

இதைப் பற்றி அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாடொன்றின் போது, முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் ஏ.எச்.ஏ ஹலீமிடம் கேட்கப்பட்டது. “பள்ளிவாசல்களைச் சுற்றி வளர்ந்திருக்கும் பற்றைகளை வெட்டித் துப்புரவு செய்வதற்காக, அவற்றை வைத்திருந்திருக்கலாம்” என அமைச்சர் பதிலளித்ததாகச் செய்திகள் கூறின.

ஒரு சில பள்ளிவாசல்களில், வாள்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட போது, ஏற்கெனவே குண்டு வெடிப்புகளால் வெட்கித் தலை குனிந்திருந்த முஸ்லிம்கள், மேலும் வெட்கமடைவதை எவராலும் விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த நிலையில், எவ்வாறோ அதனை நியாயப்படுத்த முடியும் என்றால், அது முஸ்லிம்களுக்கு ஆறுதலாகவே இருக்கும். அந்த ஆறுதலை நாடியே, அமைச்சர் இந்த நகைப்புக்குரிய பதிலை அளித்திருக்கிறார் என யூகிக்க முடியும். ஆனால், ஏற்கெனவே நடந்தவற்றால் கோபமுற்றிருக்கும் மக்கள், பள்ளிவாசல்களில் வாள்கள் வைத்திருந்தமையை, அமைச்சர் நியாயப்படுத்த எடுத்த முயற்சியைக் கண்டு, மேலும் கோபமடைந்திருப்பார்கள். ஏற்கெனவே குண்டு வெடிப்புகளாலும் பள்ளிவாசல்களில் வாள்கள் கண்டெடுக்கப்பட்டதாலும் வெட்கித் தலை குனிந்திருக்கும் முஸ்லிம்கள், மேலும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருப்பார்கள்.

இலங்கையைச் சேர்ந்த நிலாம் என்றதொரு நபர், ஐ.எஸ் அமைப்புடன் சேர்ந்து 2016 ஆம் ஆண்டு, சிரியாவில் இடம்பெற்ற போரின் போது கொல்லப்பட்டார். அதனை அடுத்து, மேலும் 36 இலங்கையர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக அப்போது அமைச்சராகவிருந்த விஜயதாச ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆனால், அவர் அந்த 36 பேரின் பெயர்களையோ ஏனைய விவரங்களையோ தெரிவிக்கவில்லை. எனவே, முஸ்லிம்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் அவரது அக்கூற்றை முஸ்லிம்கள் எதிர்த்தனர்.

இப்போது, இலங்கையர்கள் சிலருக்கு ஐ.எஸ்ஸுடன் தொடர்பு இருந்துள்ளதாகத் தெளிவாகியிருக்கும் நிலையில், அன்று தமது கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், அசாத் சாலி போன்றோர்களைக் கைது செய்ய வேண்டும் என, இப்போது விஜயதாச ராஜபக்‌ஷ கூறுகிறார்.

ஆனால் அன்று, தான் கூறியது உண்மை என, விஜயதாச இன்னமும் நிரூபிக்கவில்லை. அன்று தான் கூறிய அந்த 36 பேர் யார் என்று, அவர் இன்னமும் கூறவில்லை. பயங்கரவாதிகள் பற்றிய தகவல்கள், அவரிடம் இருந்தால் அவர் அன்றும் இன்றும் செய்திருக்க வேண்டியது, அவற்றைப் பாதுகாப்புத் துறையினரிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க, அவர்களைத் தூண்டுவதே ஆகும்.

ஐ.எஸ் பயங்கரவாதம், இலங்கைக்குள் நுழைந்துள்ள நிலையில், அதனை அவர் இப்போதாவது செய்வாரேயானால் அதனை முஜிபுர் ரஹ்மானோ அஸாத் சாலியோ எதிர்க்க எவ்வித காரணமும் இல்லை. அதேவேளை, அவர் வழங்கும் அந்தத் தகவல்கள், தற்போதைய விசாரணைகளுக்கும் உதவியாக அமையும்.

இதேபோல், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டு சகோதரர்களின் தந்தையான இப்ராஹீம் என்பவர், கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களில் ஒருவராக இருந்துள்ளார்.

அதைச் சுட்டிக் காட்டி, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, மக்கள் விடுதலை முன்னணியும் இந்தக் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டுள்ளதைப் போல் கருத்து வெளியிட்டு இருந்தார். மக்கள் விடுதலை முன்னணி, ஐ.எஸ்ஸுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறுவதை எவராவது நம்புவாரா?

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக, சில பெரும்பான்மையின அமைப்புகள் நாட்டில் வெறுப்பை வளர்த்து வந்தன. அக்காலத்தில் அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் போன்றோர்கள், அவர்களுக்கு எதிராக, மிகக் காரசாரமாகக் கருத்து வெளியிட்டு வந்தார்கள்.

எனவே, அக்காலத்தில் அவர்களோடு மோதியவர்கள் இப்போது, அவர்களையும் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

மறுபுறத்தில், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த அப்துல் ராசிக், ரம்சீன் போன்றவர்களையும் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்ய வேண்டும் என, அசாத் சாலி கூறியதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

தாம் குறிப்பிடுவோர் கைது செய்யப்பட வேண்டிய அளவில், குற்றம் செய்திருப்பதாகத் தம்மிடம் ஆதாரம் இருந்தால், அவர்கள் அவற்றை ஊடகவியலாளர்களிடம் கூறுவதை விடுத்து, அந்த ஆதாரங்களைப் பாதுகாப்புத் துறையினரிடமே தெரிவிக்க வேண்டும்.

நாடே ஓரணியில் இருக்க வேண்டிய தருணத்தில், இவர்கள் அனைவரும் நிலைமையைக் குழப்புகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பெயர் வாங்க வேண்டும்!! (மகளிர் பக்கம்)
Next post பெண்ணின் பெருங்கனவு!! (அவ்வப்போது கிளாமர்)