By 14 May 2019 0 Comments

ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கு மீண்டும் விசாரணை? (உலக செய்தி)

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்க இராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை தன் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இதன் மூலம் ஜூலியன் அசாஞ்சே சர்வதேச அளவில் பிரபலமான அதேவேளையில், பல நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.

அதே சமயம் உலக அளவில் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. அவர் அடுத்து எந்த நாடு குறித்த ரகசிய தகவல்களை வெளியிடுவார் என உன்னிப்பாக கவனிக்க தொடங்கினர். ஜூலியன் அசாஞ்சே மீது கடும் கோபம் கொண்டிருந்த அமெரிக்கா அவரை பலமுறை கைது செய்ய முயற்சித்தது. ஆனால் முடியவில்லை.

இதற்கிடையில், ஸ்வீடனில் 2 பெண்களை ஜூலியன் அசாஞ்சே கற்பழித்ததாக 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

எனினும் அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்வீடனில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். ஸ்வீடன் கேட்டுக்கொண்டதன் பேரில் இங்கிலாந்து பொலிஸார் அவரை கைது செய்தனர். எனினும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு பிணை வழங்கியது.

இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் ஜூலியன் அசாஞ்சேவை ஸ்வீடனுக்கு நாடு கடத்த இங்கிலாந்து முடிவு செய்தது. அப்படி தான் சுவீடனிடம் ஒப்படைக்கப்பட்டால், ஸ்வீடன் அரசு தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்றும், அமெரிக்கா தனக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம் என்றும் அவர் அஞ்சினார்.

இதனால் அவர் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். தனக்கு அடைக்கலம் கொடுக்கும்படி ஜூலியன் அசாஞ்சே முன்வைத்த கோரிக்கையை ஈக்குவடார் அரசு ஏற்றுக்கொண்டது.

இதனால் அங்கு அவர் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். எனினும் ஜூலியன் அசாஞ்சே தூதரகத்தை விட்டு எப்போது வெளியே வந்தாலும் உடனடியாக கைது செய்யப்படுவார் என இங்கிலாந்து பொலிஸார் எச்சரித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஜூலியன் அசாஞ்சே சர்வதேச நெறிமுறைகளை தொடர்ந்து மீறிவருவதால் அவருக்கு அளித்து வந்த அடைக்கலத்தை திரும்பப்பெறுவதாக ஈக்குவடார் ஜனாதிபதி லெனின் மேரேனோ திடீரென அறிவித்தார்.

இதனால் அவரை கைது செய்வதற்கு இருந்த தடை நீங்கியது. இதை அடுத்து, இங்கிலாந்து பொலிஸார் ஈக்குவடார் தூதரகத்துக்குள் அதிரடியாக நுழைந்து ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் பிணை நிபந்தனைகளை மீறியதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டின் கீழ் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ததாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்தனர்.

தூதரகத்தில் தஞ்சம் புகுந்த 7 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்சே பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்துக்காக லண்டன் நகரில் உள்ள சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றில் 1-5-2019 அன்று ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் பிணை பெற்று, ஈக்வேடார் தூதரகத்துக்குள் பதுங்கி கொண்டு யாராலும் தொடர்புகொள்ள முடியாதபடி பிணை நிபந்தனைகளை நீங்கள் மீறி வந்திருக்கிறீர்கள் என அசாஞ்சே மீது நீதிபதி டெபோரா டெய்லர் குற்றம்சாட்டினார்.

இதற்கு கடிதம் மூலமாக பதிலளித்த அசாஞ்சே, ‘பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளுக்குள் சிக்கி சிரம்படும் நான் இந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக யாராவது கருதினால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தற்போது அவர் சிறையில் அடைக்கப்படுள்ள நிலையில் ஸ்வீடனில் அசாஞ்சேவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கை தூசிதட்டி மீண்டும் விசாரணை நடத்த ஸ்வீடன் அரசு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்வீடன் அரசின் அரசு தரப்பு வழக்குகள் இயக்குனரகத்தின் துணை இயக்குனர் ஈவா-மரீ பெர்ஸன், ‘அசாஞ்சே கற்பழித்திருப்பார் என்று சந்தேகிப்பதற்கான காரணம் இருப்பதால் இவ்வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க இன்று தீர்மானித்திருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.Post a Comment

Protected by WP Anti Spam