By 17 May 2019 0 Comments

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திக்கான சுற்றுலாத்துறை !! (கட்டுரை)

இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, சர்வதேச தரத்திலான தொழிற்றுறையாக மாற்றியமைத்து, வளர்ச்சிபெறச் செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுற்றுலாத்துறையின் வேலைத்தளம், சூழலை சுகாதாரமானதாக பாதுபாப்பாக பராமரித்தல், விடுதிகள் குறித்து நல்லதொரு அபிப்பிராயத்தை வாடிக்கையாளர் மனதில் ஏற்படுத்தல், விருந்தோம்பற் குழுவின் அங்கத்தவராக வினைத்திறனுடன் பணியாற்றல், உணவு சம்பந்தப்பட்ட விடயங்களுடன் பணியாற்றுவதாயின் பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு வகைகளில் இத்துறை வளர்ச்சியடையும் என்று அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் வழங்கபபடுகின்றன.

நாட்டின் பொருளாதாரத்ைத மேலும் வளர்ச்சியடையச் செய்யக்கூடிய சுற்றுலா, விருந்தோம்பல் துறை தொடர்பாக மக்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவத் திணைக்களத்தின் விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.அஸ்லமைச் சந்தித்தோம்.

அவருடைய சுற்றுலாத் துறைசார் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் வருமாறு,

கே: இலங்கையில் சுற்றுலா, விருந்தோம்பல் துறை பற்றி உங்களது பார்வை என்ன?

இப்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரசித்தமைடைந்த தலைப்பாக இருப்பது இலங்கையின் உல்லாசப் பிரயாணத்துறை ஆகும். நீங்கள் உல்லாசப்பிரயாணத்தை உற்று நோக்கும் போது இது புதுவகையான தலைப்புகளில் பேசப்பட்டாலும் கூட நமது நாட்டைப் பொறுத்தவரை, தேசத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு புதுமையான விடயமல்ல.

நமது வரலாற்றை அல்லது வரலாற்றுக்கு முன்னைய காலங்களை உற்று நோக்குவோமாக இருந்தால், இந்த உல்லாசப் பிரயாணம் என்பது நமது முன்னோர்களுக்கு மிகவும், அண்மித்த ஒரு விடயமாக இருந்தது. அன்று வெளிநாட்டவர்கள் இலங்கையை அடையும் போது அவர்களை மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்று அவர்களுக்கு அவசியமான தேவைப்பட்ட அனைத்து விடயங்களையும் செய்து கொடுத்து வரவேற்ற ஒரு சமூகமாக நமது சமூகத்தை நாம் காண்கின்றோம். இன்று உல்லாசப் பிரயாணத் துறையை புதுத் தலைப்பாகப் பேசினாலும் அது மிகவும் பழமை வாய்ந்ததொரு விடயமாக இருக்கின்றது.

கே: சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் வளர்ச்சியால் எமது சமூக கலாசார விழுமியங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

எமது சமூக விழுமியங்களையும் கலாச்சாரங்களையும் அடித்துத் தகர்த்துவிட்டு அதனை இல்லாமல் செய்து இந்த உல்லாசப் பிரயாணத்துறையை வளர்க்க முடியாது. காரணம் இந்த உல்லாசப் பிரயாணத்துறையாக அமைவது எமது சமூக விழுமியங்கள், சமூக அடிப்படைகள், போன்றன எம்மிடம் காணப்படுகின்றவற்றைப் பொறுத்தே அமைகின்றன.

ஆகவே, எந்த வகையில் இதனை உற்று நோக்குகிறீர்கள் என்பது தான் முக்கியமானது. இதனைப் பண ரீதியாக பொருளாதார ரீதியாக மாத்திரம் உற்று நோக்கி தலைகளின் எண்ணிக்கையை மட்டும் உற்று நோக்கி உல்லாசப் பிரயாணத்தைத் தெரிவு செய்தீர்கள் என்றால் பிழையாகவே தென்படும்.

நகர்ப்புறத்தில் அவ்வாறில்லையென்றால் முக்கியமானதொரு, உதாரணமாக பாசிக்குடா போன்ற நகரமாக அமையுமென்றால் இவ்வாறான பிரதிகூலங்களை அனுபவிக்க நேரிடும். எமது கலாசாரத்துடனும் எமது சுற்றுச் சூழலுடனும் பாரம்பரியங்களுடனும், சமூக விழுமியங்களுடனும், உல்லாசப் பிரயாணத்துறையை ஏற்றுக் கொள்வோமானால், நிச்சயமாக உங்களுக்கு ஒரு நிலைக்கத்தக்க அபிவிருத்தித்திட்டமாக அமையும். அதனைத்தான் நாங்கள் நிலைக்கக்கூடிய சுற்றுலாத்துறை என்று கூறுவோம்.

ஆகவே, எமது கலாசாரத்தைப் பற்றி நாங்கள் நிச்சயமாக கரிசனை கொள்ள வேண்டும். சமூக விழுமியங்கள் பற்றிக் கரிசினை கொள்ள வேண்டும். அத்துடன் எமது சூழலைப்பற்றி கரிசனை கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உல்லாசப் பிரயாணத்துறையை அமைத்தால், அது அந்தப்பிரதேசத்துக்கு, கிராமத்துக்கு உகந்த வகையில் பொருத்தமான சமூக அபிவிருத்தியை உச்ச நிலையில் ஏற்படுத்தி ஒரு நிலைக்கத்தக்க அபிவிருத்தித்திட்டமாக மாற்றியமைக்கும்.

கே: சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் அபிவிருத்தியினால் பாரம்பரிய வாழ்வாதாரம், விவசாயம் பாதிக்கப்படுமா?

பாரம்பரியமாக வருகின்ற உழைப்புத்திறன்கள் அவ்வாறில்லையென்றாலும், பொருளாதாரத்திறன்களில் தாக்கம் காணப்படும். உதாரணமாக நீங்கள் விவசாயத்துடன் இணைந்த ஒரு சமூகமாக இருக்கின்றீர்கள்.

பொதுவாக கிழக்குப் பகுதியை எடுத்தால் ஒருகாலத்தில் தானியங்களின் களஞ்சியம் என்று கூறிவந்திருக்கிறோம். அந்த வகையில் விவசாயத்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த பிரதேசமாக இருக்கின்றது.

ஆகவே, இன்று உல்லாசப் பிரயாணத்துறையின் அபிவிருத்தி நமது பாரம்பரியமான வாழ்வாதார வசதிகளை அழித்துவிடும் என்று நினைப்பது தவறாகும். உல்லாசப் பிரயாணத்துறையைப் பொறுத்தவரையில் இதன் அடிப்படை மூலதனமாக, உங்களது பாரம்பரிய வாழ்வாதார வசதிகள் அமைய முடியும். உதாரணமாக உங்களது விவசாயம் இதன் அடிப்படை மூலதனமாக அமையும்.

கே: சுற்றுலாப் பிரயாணிகளின் வருகையினால் உள்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுமா?

கிராமப்புறங்களில் காணப்படுகின்ற கலை அம்சங்கள், அவ்வாறில்லையென்றால் உங்கள் கிராமப்பகுதிகளில் சிறியளவில் நடக்கின்ற கைத்தொழில் முயற்சிகள், இவை அனைத்தும் இந்த உல்லாசப் பயணத்துறையின் அடிப்படை மூலதனமாகக் கருதமுடியும்.

ஏனெனில் இங்கு வருகின்ற உல்லாசப் பிரயாணிகள் முக்கியத்துவமளிப்பது வெறுமனே பிரதேசங்களில் காணப்படுகின்ற பிரச்சித்தங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் அடிப்படைக் கலாசாரம், அடிப்படைக் கலை அம்சங்கள், அடிப்படையிலான வாழ்வாதார வசதிகள், கால்நடை விலங்காண்மை வசதிகள் போன்ற பல்வேறு வகையில் அனுபவிக்கக்கூடியவற்றை அவர்கள் முக்கியமானவையாக எடுத்துக் கொள்வார்கள்.

இவ்வாறான உல்லாசப்பிரயாணிகள் உங்கள் பிரதேசத்தை அடையும் போது உங்கள் மத்தியில் காணப்படுகின்ற பாரம்பரியமான அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், உதாரணமாக உங்கள் மத்தியில் சாதாரணமாகச் சாப்பிடுகின்ற பால் அப்பம். இதற்கு உங்கள் மத்தியிலேயே ஒரு பெறுமதியிழந்திருக்கிறது.

ஆனால் உல்லாசப்பிரயாணிகள் வருகின்ற போது இந்தப்பாலப்பத்தை மிகவும் அரிதான மிகவும் முக்கியமான சாப்பாடாக உட்கொண்டு அதற்குப் பெறுமதியை இட்டுத்தருவார்கள். அவ்வாறு பல்வேறுபட்ட கலை அம்சங்கள், பல்வேறுபட்ட சுற்றுச் சூழல் விடயங்கள் பலவற்றுக்கும் உங்கள் மத்தியில் காணப்படாத முக்கியமான விலைப்பெறுமதியை இதற்கு அவர்கள் பெற்றுத்தருவார்கள்.

முக்கியமாக இங்கு காணப்படும் சித்தர், ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவத்துறைகளுக்கும் உல்லாசப்பிரயாணிகள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இவ்வாறான சுற்றுலாத்துறை உங்கள் மத்தியல் உங்கள் கிராமப்புறங்களில் உங்கள் பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்படும் போது அந்த அபிவிருத்தி உங்கள் பாரம்பரிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு நிலைக்கத்தக்க அபிவிருத்தித்திட்டமாக அமையும்.

கே: உள்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுமா?

நீங்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்ற ஐயத்தோடு இருக்கின்ற விடயம் தான் உங்களது சுதந்திரத்தைப் பாதிக்கும் உங்களுக்குத் தகாத நோயை ஏற்படுத்தும் அத்தோடு உங்கள் மத்தியில் இருக்கின்ற ஒற்றுமையை வீழ்த்தும் என்றொரு அச்சம் ஐயம் உங்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது. நகர்ப்புறங்களில் தான் இந்த வகையான பிரச்சினைகளைச் சந்திக்க முடியும்.

ஆனால் இன்று நாங்கள் பேசுகின்ற உங்களுக்காக அறிமுகப்படுத்தக்கூடிய உல்லாசப்பிரயாணத்துறை அவ்வாறான எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்தக் கூடியதல்ல. இது உங்களது சுதந்திரத்தைப் பாதிக்காது.

இங்கு வருகின்ற உல்லாசப்பிரயாணிகள் உங்கள் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு உங்கள் கலாசாரத்துக்குப் பெறுமதியளித்து, உங்களது அன்றாட வாழ்க்கைக்குப் பெறுமதியளித்து, உங்கள் அன்றாட வாழ்க்கையையும் பெறுமதியாகக்கழித்து உங்களோடு சேர்ந்ததொரு உல்லாசப் பிரயாணத்துறையாக அது அமையும். ஆகவே அது உங்களது சுதந்திரத்துக்கோ அன்றாட வாழ்க்கைக்கோ எந்த விதமான பங்கத்தையும் ஏற்படுத்தாது.

கே: உல்லாசப்பயணிகளின் வருகையினால் ஏதேனும் நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பிருக்கிறதா?

உண்மையாக உல்லாசப்பிரயாணிகளை எங்களது விருந்தாளிகளாகக் கருதவேண்டும். ஆகவே அந்த விருந்தாளிகளோடு எவ்வாறு நடக்க வேண்டுமோ அவ்வாறு அந்தக் கோட்பாடுகளுக்கமைய அந்த வட்டத்தினுள் நடக்கின்ற பொழுது, அவர்களுக்கும் நமக்கும் இருக்கின்ற உறவு வரையறுக்கப்படும் போது தகாத நோய்கள் பரவும் என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கான அவசியமில்லை.

நமது நாட்டில் நீங்கள் உண்மையாகக் காண்பது. வெவ்வேறுபட்ட இனங்களைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட சமூகம், வெவ்வேறுபட்ட மதங்கள். வெவ்வேறுபட்ட கலாசாரங்களோடு ஒன்றிய சமூகம். இதே போன்று பல நாடுகள் இருக்கின்றன அங்கும் இவ்வாறான உல்லாசப்பிரயாணத்துறை மிகவும் விறுவிறுப்பாக வெற்றிகரமாக அமைந்துள்ளதை காண முடிகின்றது.

அதனால் அவர்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லாமல் அந்தப் பன்முகப்படுத்தப்பட்ட சூழலை மிகவும் விரும்பும் வகையில் அமைகின்றது. ஆகவே நம்மிடையே காணப்படுகின்ற பன்முகப்பட்ட இன, கலாசார, சுற்றாடல் பன்முகத்தன்மைகளுக்கும் எந்தப்பாதிப்பும் ஏற்படாது. இந்த உல்லாசப் பிரயாணத்துறையினால் இவை அனைத்தும் மேலும் மெருகூட்டப்பட்டு உண்மையான நிலைக்கத்தக்க அபிவிருத்தி நடைபெறும்.

ஆகவே உங்கள் பிரதேசத்திற்கு உங்கள் கிராமத்திற்கு, சமூக கலாசாரத்துக்கு உங்கள் சுற்றுச் சூழல்களுக்கு, உங்களது நடைமுறைகளுக்குப் பொருத்தமான வகையில் திட்டமிட்டுச் செயற்படுவீர்களாக இருந்தால் உங்களுக்கும் நாட்டுக்கும் வெற்றியளிக்கும். ஆகவே முயற்சிப்போம்.Post a Comment

Protected by WP Anti Spam