By 19 May 2019 0 Comments

கேதார்நாத் பனிக்குகையில் மோடி 17 மணி நேரம் தியானம்!! (உலக செய்தி)

இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலில் வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள பனிக்குகையில் 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. இதற்கான பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதன் பின்னர் சனிக்கிழமை காலை பிரதமர் மோடி உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத்துக்கு 2 நாட்கள் யாத்திரை சென்றார். அங்கு உத்தரகாண்ட் பாரம்பரிய உடையான பஹாரி, தடியுடன் சிவனை வழிபட்ட மோடி, கோயில் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதன் பிறகு அங்குள்ள பனிக்குகைக்கு சென்ற பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். அந்த பனிக்குகையானது, பாறையை குடைந்து 10 அடி உயரம் உடையதாக உருவாக்கப்பட்டது.

அக்குகையினுள் படுக்கை வசதி, மின்சாரம், தண்ணீர், பாத்ரூம், ஜன்னல், சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் கொண்டது. இந்த சிசிடிவிகள் பாதுகாப்பு அதிகாரிகளால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு கொண்டிருந்தன. அங்கிருந்த ஜன்னல் வழியாக கோயிலை பார்க்க முடியும். சனிக்கிழமை மாலை அதனுள் சென்ற பிரதமர் நேற்று காலை வரை, ஏறக்குறைய 17 மணி நேரம் தியானம் செய்தார். தியானம் முடிந்து வெளிய வந்த பிரதமர் மோடி அங்கு கூடியிருந்த நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னுடைய தியானத்தில், கடவுள் என்னை கொடுக்கும் நிலையில் வைத்திருப்பதால் எதையும் வேண்டிக் கேட்கவில்லை. உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி, வளத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டும் பிரார்த்தித்தேன். பல சந்தர்ப்பங்களில் இங்கு வரும் வாய்ப்பை பெற்ற நான் அதிர்ஷ்டசாலி.

இறுதிக்கட்டத் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில் நான் இங்கு செல்ல அனுமதி கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புனித நகரான கேதார்நாத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இயற்கை, சுற்றுச்சூழல், சுற்றுலா பாதிக்கப்படக் கூடாது. அங்கு நடைபெறும் மறுகட்டமைப்பு பணிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமும் ஆய்வு செய்தேன்’’ என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை அங்குள்ள மற்றொரு புனித தலமான பத்ரிநாத் சென்றார். அங்கு ராணுவ ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்கிய அவர், கார் மூலம் சார்தாமில் உள்ள விஷ்ணு கோயிலுக்கு சென்றார். வழி நெடுகிலும் அவரைக் காண மக்கள் கூட்டம் காத்திருந்தது. கோயிலுக்கு சென்ற மோடி, மூல கருவறையில் உள்ள மூலவரை தரிசித்தார். அங்கு மோடி கிட்டத்தட்ட 20 நிமிடம் வழிபட்டார். இது பற்றி கேதார்நாத்-பத்ரிநாத் கோயில்களின் கமிட்டித் தலைவர் மோகன் பிரசாத் தாப்லியால் பேசிய போது, “பிரதமர் 20 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் பூச்ச மரத்தின் இலைகளாலான வாழ்த்து அட்டையையும் மானா கிராம மக்கள் சால்வையையும் அவருக்கு பரிசளித்தனர்.

பின்னர் கோயிலின் உள்பிரகாரங்களை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி அங்கிருந்த பக்தர்கள், உள்ளூர்வாசிகளை சந்தித்து கைக்குலுக்கினார். கோயிலில் உள்ள தங்கும் விடுதியை பார்வையிட்ட அவரிடம் கமிட்டி உறுப்பினர்கள், பத்ரிநாத் கோயிலை விரிவுப்படுத்தவும் தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்தவும் கோரி மனு அளித்தனர். அங்கு வரும் பக்தர்களுக்கு நல்ல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து நன்கு கவனித்து கொள்ளும்படி பிரதமர் கேட்டுக் கொண்டார்’’ எனக் கூறினார்.

கேதார்நாத்தில் நாடகம்: பிரதமர் மோடியின் புனித பயணம் குறித்து ராகுல் டிவிட்டரில் கூறுகையில், ‘‘பிரதமர் மோடியின் பயணம் கேதார்நாத்தில் நடத்தப்பட்ட நாடகம். மோடி கும்பலிடம் தேர்தல் ஆணையம் சரணாகதி அடைந்துள்ளது, நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிகிறது. அவர்களிடம் தேர்தல் ஆணையம் பயத்துடனும், மரியாதையுடன் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்யாமல் தூங்கி கொண்டிருக்கிறது என நாங்கள் குற்றம்சாட்டி வருகிறோம். தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முற்றிலும் சரணடைய செய்துவிட்டது. இது வெட்கக்கேடு. வாக்குகளை கவர்வதற்காக தேர்தலின் கடைசி இரண்டு நாளில் மதத்தையும், மத அடையாளத்தையும் பயன்படுத்தி பிரதமர் புனிதப் பயணம் மேற்கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது’’ என்றார்.

₹990 வாடகைக்கு குகை

கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கிய குகை போன்று சொகுசு வசதிகள் கொண்ட குகைகளை கர்வால் மண்டல் விகாஸ் நிகாம் அமைப்பினர் உருவாக்கியுள்ளனர். இதில் மெத்தை, போர்வை, குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள், போன், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கு ஒருவர் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார். இரண்டு வேளை டீயும் மூன்று வேளை சாப்பாடும் குகைக்கே வந்து விடும். அவசர உதவிக்கு பெல் அடித்தால் 24 மணி நேரமும் உதவ உதவியாளர் இருப்பார். முதலில் ₹3,000ம் வாடகையில் மூன்று நாள் புக் செய்ய வேண்டும் என்று இருந்த விதி தற்போது தளர்த்தப்பட்டு ₹990க்கு ஒருநாள் மட்டும் வாடகைக்கு விடப்படுகிறது.

கேமராவை மறைத்த காவலரால் கோபம்

பத்ரிநாத் வழிபாட்டிற்கு பின்னர் பிரதமர் மோடி மக்களை சந்தித்தார். இந்த சந்திப்பை வீடியோ எடுக்க மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மோடியை சுற்றி பல கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது பிரதமரின் பாதுகாப்பு கருதி கேமராவை மறைத்த வண்ணம் அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மோடியின் அருகில் நின்றிருந்தார். இதனால் கோபமடைந்த பிரதமர் மோடி, கேமராவைவிட்டு சற்று தள்ளி நிற்கும்படி அவரிடம் சற்று கோபமாக திட்டினார். இதையடுத்து பாதுகாவலர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். பிரதமர் மோடி கோபப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Post a Comment

Protected by WP Anti Spam