By 22 July 2019 0 Comments

வாழ்வென்பது பெருங்கனவு! (மகளிர் பக்கம்)

இருள் இல்லாமல் நட்சத்திரங்கள் ஒருபோதும் ஒளிர்வதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல கஷ்டங்கள் இல்லாமல் வெற்றியை சுவைத்துவிட முடியாது. சாதித்துவிட வேண்டும் என முயற்சிப்பது ஒரு வகை என்றால், அதை தொடர்ச்சியாக முயற்சித்தவர்களால் மட்டுமே வெற்றியை சுவைக்க முடியும். அவ்வாறு, சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து, படித்து, வேலையில் அமர்ந்ததோடு மட்டுமல்லாமல் புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஓர் உயரிய பதவியில் இருக்கிறார் காயத்ரி வளையாபதி. காயத்ரி தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

எப்படியாவது, படித்து சம்பாதித்து ஒரு நல்ல வீடு வாங்கிவிட வேண்டும் என நினைத்தேன். இன்றைக்கு அந்தக் கனவு நிறைவேறியிருக்கிறது. இருள் என்ற கஷ்டங்களை அனுபவித்தவர்களால் மட்டுமே வெற்றியாளர் என்ற நட்சத்திரமாக ஒளிவீசி பிரகாசிக்க முடியும். ஒருவரின் சிறந்த இலக்கு எதுவாக இருக்க முடியும் என்று என்னிடம் கேட்டால், தன்னை வளர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், தனது குடும்பத்தையும், தன்னை சார்ந்தவர்களையும் வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு வளர்ச்சிக்கு உயர்த்துவதுதான் என்னுடைய பதிலாக இருக்கும். எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற நெருப்பு உள்ளத்தில் அணையாமல் கனன்று கொண்டே இருக்க வேண்டும். சிந்தனையும், செயலும், உழைப்பும் அதைப் பற்றியதாகவே எப்போதும் இருக்க வேண்டும். இதற்கு உதாரணமாக எண்ணற்றோரை பட்டியலிட முடியும்.அப்படிப்பட்டவர்கள் நம் கண்முன்னேயும், நமக்கு அருகிலேயும் பலர் இருக்கிறார்கள்.

அதற்கு எனது வாழ்க்கை பயணம் ஓர் எடுத்துக்காட்டு. என்னுடைய ஆரம்பகால வாழ்க்கை அப்படி சிறப்பானதாகவும், சொல்லிக்கொள்ளும்படியும் இருந்து விடவில்லை.

‘‘சிறுவயதில் இருந்தே வெற்றி எனக்கு நிச்சயமாக கொண்டு வந்து சேர்க்கக்கூடிய முக்கியமான கொடையாக கல்வி மட்டுமே இருக்கமுடியும் என்று நான் நம்பினேன். எந்த அளவிற்கு அதிக அறிவை நான் பெறுகிறேனோ அந்த அளவுக்கு சிறந்த வாய்ப்புகளுக்கான கதவுகள் தன்னால் திறக்கும் என்பது எனக்கு தெரியும். எனது கேரியரில் (வாழ்க்கைப் பணி) சிறப்பான வாய்ப்புகளை பெறவும், தனிப்பட்ட வளர்ச்சியை எட்டவும் இது எனக்கு நிச்சயம் உதவும் என்பதை நான் நன்றாகவே உணர்ந்திருந்தேன்.

எப்படியாவது என் குடும்பத்தின் நிலைமையை நான் மாற்றி அமைக்க வேண்டும். அந்த சிந்தனை தான் என் மனதில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்ேட இருந்தது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் எனக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கினேன். வாழ்க்கையில் முன்னேற கல்வி மிக மிக அவசியம் என்பதால், எனக்கு கிடைக்கப் பெற்ற கல்வியையும் நான் முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன். அதனால் மிகவும் உறுதியுடன் படித்தேன்.

அந்த படிப்புதான் எனக்கு மிகச்சிறந்த, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்தது.படிப்பில் காட்டிய ஆர்வமும், பள்ளியில் நான் பெற்றிருந்த மதிப்பெண்ணும் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. கல்லூரி தானே என்று அலட்சியம் காட்டாமல், சிறந்த மாணவி என்ற பெயரோடு கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தேன்.

அது என்னால் என் குடும்பத்தின் நிலைமையை போக்கவல்லதான ஒரு கருவியாக இருக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. மேலும் என்னை நான் சீரமைத்துக் கொள்ள நினைச்சேன். என் சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் உதவியோட அடுத்து என்னுடைய கேரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆய்வு செய்தேன்.

அது எனக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தியது. 2010ம் ஆண்டு ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தில் “எக்ஸிகியூட்டிவ் ஏ.ஆர்” என்ற பொறுப்பில் பணியில் சேர்ந்தேன். நிர்வாகமும் எனது குழுவும் வழங்கிய அங்கீகாரம், ஆதரவு மற்றும் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக மெடிக்கல் பில்லிங் தொழில்பிரிவில் ஆர்வம் ஏற்பட்டது.

படிப்படியாக நிறுவனத்துடன் நானும் என் வளர்ச்சியை நோக்கி பயணிக்க துவங்கினேன். இன்று அதே நிறுவனத்தின் செயல்முறை தலைவர் (process lead) பதவியில் அமர்ந்து பலரை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். எந்த ஒரு சூழலையும் மாற்றியமைக்கும் திறமை நம்மிடம்தான் உள்ளது. அதை நாம் தான் வளர்த்துக்ெகாள்ள வேண்டும்.

அதற்கு கடினமாக உழைக்கணும். தடைகள் வந்தாலும் அதை ஏறி மிதித்து வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். எந்த ஒரு வெற்றிக்குப் பின்னேயும் வலியும் வேதனையும் கண்டிப்பாக இருக்கும். ஆனாலும், சாதிக்க வேண்டும் என்ற நம் மனமே நம்மை வெற்றியாளராக மாற்றும்’’ என்றார் காயத்ரி. காயத்ரி ஒரு தொழில்முறை வெற்றியாளர் மட்டுமல்ல… இவரது வாழ்க்கை பயணம் இந்த சமூகத்துக்கும், இளம் தலைமுறையினருக்கும் மிகச் சிறந்த செய்தியை உணர்த்தும்.

‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்ற வள்ளுவன் வாக்குப்படி, தனது வெற்றியால் அவர் தனது பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளார். மேலும் எந்தநிலையில் இருந்தாலும், உழைப்பு, முயற்சி, அர்ப்பணிப்பு, கல்வி ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிக்காட்ட முடியும் என்று சாதாரண நிலையில் இருக்கு பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.

ஒரு குடும்பத்தில் பெண் கல்வி கற்றால் அந்த குடும்பம் எப்படி செழித்தோங்கி தழைக்க முடியும் என்பதற்கு காயத்ரி ஓர் அடையாளம். ஒருவர் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், முயற்சியால் தடைகளை தகர்த்து முன்னேற முடியும். இலக்குகளை எட்டிபிடிக்க குடும்பத்தின் பின்புலம் என்பது ஒரு பொருட்டே அல்ல.

லட்சியத்தை நோக்கி மனம் தளராமல், கடின உழைப்பால் சாதித்துக்காட்டலாம் என்பதை காயத்ரியின் வாழ்க்கை பயணம் உணர்த்துகிறது. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்ற பழமொழி எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பதை இவரது வாழ்க்கை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.Post a Comment

Protected by WP Anti Spam