By 21 July 2019 0 Comments

நோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா!! (மகளிர் பக்கம்)

இன்றைய பரபர வாழ்க்கை முறையால் மிகக் குறுகிய காலத்திலேயே நோய்கள் நம்மோடு நட்புக் கொள்கிறது. நோய்க்கும், நமக்குமான நட்பை பலப்படுத்தும் சூழலை மாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் நாம் கவலை கொள்வதில்லை. நோயை மிக நெருங்கிய நண்பனாக மாற்றிக் கொண்டு, வாழ்க்கையை பிரச்னைகள் நிரம்பியதாக மாற்றிக் கொள்கிறோம். ஒவ்வொரு பிரச்னையில் இருந்தும் வெளிவர முயற்சிப்பதற்குள் ஆயுளின் அந்தியை அடைந்து விடுகிறோம்.

இப்படி நோயால் அவதியுறும் நபர்களுக்கு, யோகா கலையின் மூலம் மகிழ்வைத் தருகிறார், மாற்று முறை மருத்துவர் யுவராணி. நோயாளிகள் இதற்கென நேரம் ஒதுக்கி பயணம் செய்து வருவது கடினம் என்பதால் அவர்களின் வீடு தேடிச் சென்று பயிற்சி அளிக்கிறார். நோயாளிகளின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பதற்காக யோகா கலையை பயன்படுத்துவதாகச் சொல்கிறார் யுவராணி.

இனி மனம் திறக்கிறார் யுவராணி, “வாழ்வில் சுமக்கும் பரபரப்பு, மன அழுத்தம் ஆழமாக வேரூன்றுவதற்கான சூழலை மனதில் ஏற்படுத்துகிறது. மனக்குழப்பமும் நெருக்கடியான எண்ணங்களும் சேர்ந்து வாள் வீசும் போது, உடல் சோர்வடைந்து விடும். இந்த சோர்வு தொடரும் பட்சத்தில் அது நோயாக உடலில் உருவெடுக்கும். நமது வாழ்வில் சில விஷயங்களை வழக்கப்படுத்திக் கொண்டு தீர்வு காண முடியும். உடலுக்கும், மனதுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில் தெளிவாக இருந்தாலே பாதிப் பிரச்னைகளுக்கு வழி பிறந்து விடும். ஒரு சராசரி மனிதன் எப்போதும் இயல்பான அமைதியான மனநிலையிலும், நோயற்ற உடலைப் பெறுவதற்கும் யோகக் கலையும், தியானமும் கை கொடுக்கிறது.

யோகாசனம் உடலுக்கு மட்டும் பயிற்சி அளிப்பதில்லை…அது மனதையும் விடுபட்டு பறக்க வைக்கிறது. மனநிம்மதியை இழந்து விடாமல் வாழ்க்கையில் சீரான மகிழ்ச்சியுடன் பயணிக்க யோகா பயிற்சிகள் உற்சாகம் அளிக்கிறது. யோகம் என்ற சொல்லுக்கு தமிழில் சரியான பொருள் ஒருங்கிணைத்தல் என்பது. ஆசனம் என்றால் உடலை அமர்த்தும் நிலை. மனிதன் தன்னுள் நிறைந்து கிடக்கும் சக்தியை ஆற்றலை திறனுடன் கண்டு கொள்வதும் தான், யோகப் பயிற்சிகளின் அடிப்படை நோக்கம் ஆகும். பயிற்சிகளை செய்யும் போது மனதையும் ஒரு நிலைப்படுத்த முடியும். இந்தப் பயிற்சிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய்கள் வராமல் தடுக்கும் பணியினை செய்கின்றன.

இவ்வளவு அற்புதம் மிக்க யோகக்கலை இந்தியாவில் தோன்றியது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றினைக் கொண்டுள்ளது. இது உடற்பயிற்சி, தியானமுறை, யோகக் கலை, யோகாசனம் என்றும் அழைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த யோகிகள் காட்டில் உள்ள மிருகங்கள், பறவைகள் உட்பட பல்வேறு உயிரினங்களின் செயல்களை பார்த்து, யோகக் கலையை வடிவமைத்தார்கள் என்று வரலாற்றுத் தகவல்கள் நமக்கு உணர்த்துகிறது.

பதஞ்சலி முனிவர் இந்த பொக்கிஷத்தை முதன்முதலில் எழுத்து வடிவத்தில் இந்த உலகுக்கு அளித்தார். தமிழர் மருத்துவமான சித்தமருத்துவத்தின் அடிப்படையாக யோகக்கலை இருக்கிறது. சித்தர்கள் தமிழ் மருத்துவத்துக்கு பெரும் பங்கை அளித்துள்ளனர். இவர்கள் யோகாசனம் மற்றும் நாடிசுத்தி, பிராணயாமம் ஆகியவற்றின் மனித உடலில் தோன்றும் நோயைப் போக்கவும், நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்று கண்டறிந்து மனித குலத்துக்கு அதற்கான சூட்சுமத்தையும் சொல்லியும் வைத்தார்கள். யோகாசனங்கள் உடலை நோயின் பிடியில் விழாமல் தடுத்து நிறுத்துகின்றன.

உலக அளவில் யோகாசனத்தைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. எளிய யோகாசனங்களையும் அந்தக் காலகட்டத்தில் யோகிகள் கொடுத்துள்ளனர். யோகாசனத்துக்கு போகும் முன்பாக மனதை ஒழுங்குபடுத்துவது முக்கியம். உடலில் காணப்படும் நோய்களுக்கு ஏற்ப யோகாசனங்களை தேர்வு செய்து பயிற்சி செய்து குணம் காணலாம். பெண்கள் அதிகளவில் சந்திக்கும் மாதவிடாய் பிரச்னைகள், தைராய்டு, கருப்பைக் கோளாறுகள் மற்றும் ஹார்மோன் பிரச்�னைகளுக்கும் எளிய தீர்வுகளை யோகா பயிற்சியின் மூலம் காணலாம். மூட்டு வலி, இடுப்பு வலி என உடல் சந்திக்கும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதற்கான மாற்று முறை மருத்துவ வழிகளைப் பின்பற்றி தீர்வு காண முடியும்.

இந்தப் பயிற்சிகளை சிறு வயதில் இருந்தே ஆண், பெண் இருவரும் வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ளலாம். தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது என்கிறார் யுவராணி… உளவியல், யோகா, யோகா தெரபி மற்றும் மாற்று முறை மருத்துவத்தில் எம்.டி. பட்டம் என பல துறைகளிலும் பயிற்சி பெற்று பட்டங்கள் பெற்றிருக்கும் யுவராணியின் லட்சியம், இந்த மண்ணில் நோயின் பிடியில் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதே. பிறர் வலியை தன் வலி போல் எண்ணி அதற்கான தீர்வுக்காக உழைக்கும் யுவராணி போன்றவர்களால் தான் இன்றளவும் இந்த மண்ணில் பலரும் வலிகள் தாண்டி சிரிக்க முடிகிறது.Post a Comment

Protected by WP Anti Spam