By 21 July 2019 0 Comments

வெல்கம் யோகா! (மகளிர் பக்கம்)

புற்றுநோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல பிரச்னைகளை வராமல் தடுக்கும் ஆற்றல் யோகாவுக்கு உண்டு’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியிருக்கிறார். ‘தியானத்தின் மூலம் பலாத்காரம் போன்ற பாலியல் குற்றங்களைக் குறைக்க முடியும்’ என்று முரளி மனோகர் ஜோஷி கூறியிருக்கிறார். சமூகத்தைத் தீர்மானிக்கும் தலைவர்கள் யோகா, தியானம் பற்றிப் பேச ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. ‘யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாத சுற்றுப் பயணத்தின்போது ஐ.நா.வில் பேசியிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐ.நா., ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக இப்போது அறிவித்துள்ளது. ஐ.நா.வின் இந்த தீர்மானத்துக்கு வரலாறு காணாத வகையில் 177 நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றன.

பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், யோகாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து அறக்கட்டளைக்கான வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘‘எந்த நோய்க்கும் 4 முக்கிய நிலைகள் இருக்கின்றன. நோய் வந்துவிட்டால் அதன் தீவிரம் அதிகம் ஆகாமல் கட்டுப்படுத்த வேண்டும், வீரியத்தைக் குறைக்க வேண்டும், குணமாக்க வேண்டும், எதிர்காலத்தில் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்… முறையான யோகாசனப் பயிற்சியின் மூலம் இந்த நான்கையும் சாதிக்க முடியும்’’ என்று உறுதியான குரலில் பேசுகிறார் யோகா ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தி. சிவக்குமார், சூர்யா, ராதிகா போன்ற நட்சத்திரங்களின் யோகா மாஸ்டர்… பிரபல யோகா குருவான ஆண்டியப்பனின் சகோதரி மகன்.

இன்றைய வாழ்வில் மனிதர்களுக்குப் பெரும் சவாலாக விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் முக்கியமான 6 பிரச்னைகளுக்கான யோகாசனங்களைக் கேட்டோம்… ‘‘மருத்துவரிடம் சென்றவுடனேயே அவர் சிகிச்சையை ஆரம்பித்துவிட மாட்டார். நோயின் தன்மை, அவரது வயது, வேறு பிரச்னைகள், வாழ்க்கை முறை, உடலின் சக்தி போன்ற பல விஷயங்களையும் ஆராய்ந்தபிறகுதான் சிகிச்சை தருவார். அதுபோலவே, யோகாசனம் கற்றுக்கொள்ள வருகிறவர்களுக்கும் கூட்டமாக அமர வைத்து ஆசனம் சொல்லிக் கொடுப்பது சரியான முறை அல்ல. அதனால், ஒவ்வொரு வருக்கும் பிரத்யேகமான பயிற்சிகளும் வழிமுறைகளும் இருக்கின்றன.

நீரிழிவுக்கு உண்டு நல்ல பலன்!

முன்பு பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் நோயாக இருந்த நீரிழிவு, இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட வருவதைப் பார்க்கிறோம். மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தி யாவில்தான் நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்கின்றன ஆய்வுகள். இந்த நீரிழிவுக்கு யோகாசனம் மூலம் நல்ல பலனைப் பெற முடியும். வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் சரியாக செயல்படாதபோது இன்சுலின் சுரப்பு குறைந்து, நீரிழிவு உருவாகிறது. யோகாசனத்தின் மூலம் கணையத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைத்து இன்சுலின் சுரப்பை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வர முடியும். பஸ்சிமோத்தாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், ஹாலாசனம் ஆகிய பயிற்சி களை தொடர்ந்து மேற்கொண்டால் நீரிழி வுக்காரர்களுக்கு நீடித்த பலன் அளிக்கும்.

மன அழுத்தமா… அப்படின்னா?

உடல் அழுத்தம், மன அழுத்தம் என இரண்டு அழுத்தங்கள் இருக்கின்றன. காலையில் தூங்கி எழும்போது உடல் புத்துணர்வோடு இருக்க வேண்டும். அதற்கு மாறாக களைப்படைந்ததுபோல இருந்தால் உடலில் அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். யாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும் என்ற அர்த்தத்தில் சொன்னார்கள். இன்றோ உடல்நலக்குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் மன அழுத்தமே அதிகம். குழந்தைகள் கூட ‘ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த மன அழுத்தத்துக்கு பிராணா யாமமும் தியானமும் நல்ல நிவாரணி. காரணம், மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கோபமாக இருக்கும்போது நம் மூச்சு வேகமாக இருப்பதையும் அமைதியாக இருக்கும்போது மூச்சு சீராக இருப்பதையும் கவனித்துப் பாருங்கள். ஆகவே, மூச்சு சீராக இருக்கப் பயிற்சி எடுத்தால் மன அழுத்தம் தானாகவே குறைந்து, மனம் அமைதியடையும். செய்யும் வேலைகளில் கவனமும் இருக்கும். பல எண்ணங்கள் மனதுக்குள் அலைமோதுவதால்தான் மன அழுத்தம் வருகிறது. அதனால் எந்த எண்ணமும் இல்லாத வகையில் உங்களைத் தூங்க வைக்கும் மாத்திரைகளையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மூச்சுப்பயிற்சி செய்யச்செய்ய, தேவையற்ற எண்ணங்கள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடுவதை நீங்களே அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

முதுகுவலிக்கு முடிவு கட்டுவோம்!

கம்ப்யூட்டர் வேலைகள், வாகனம் ஓட்டுவது, டி.வி. பார்ப்பது என்று இன்றைய வாழ்க்கைமுறையால் முதுகுவலிக்கு எளிதாக ஆளாகிவிடுகிறோம். கழுத்திலிருந்து கீழ்பாகம் வரை நம் உடலின் எல்லா பகுதிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இறுக்கமாக இருக்கும்போதுதான் முதுகுவலி வருகிறது. மார்ஜாரி ஆசனத்தின் மூலம் முதுகெலும்பின் இறுக்கத்தைக் குறைத்து, முதுகுவலியை விரட்ட முடியும். முதுகில் இருக்கும் தசைகளின் தளர்வுக்காக சிறிய பயிற்சிகள் கூட நிறைய இருக்கின்றன.

மூச்சுப்பயிற்சி செய்தால் ரத்தக்கொதிப்பு இல்லை!

சில மருத்துவ காரணங்களால் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டாலும் மனநிலை, சுற்றுப்புற சூழ்நிலை சார்ந்தே பெரும்பாலும் உயர் ரத்தஅழுத்தம் உண்டாகிறது. ரத்தப் பரிசோதனை செய்யும்போதுகூட நிற்க வைத்துப் பரிசோதித்தால் ஓர் அளவிலும், படுக்கையில் நோயாளி யைப் பரிசோதனை செய்தால் வேறு அளவிலும் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ரத்த அழுத்தம் இன்னும் வேறு அளவிலும் இருக்கலாம். அதனால் ரத்த அழுத்தம் என்பது நிலையானது அல்ல.தியானம், பிராணாயாமத்தின் ஒரு பகுதியான நாடிசுத்தி ஆகிய பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலையும், மனதையும் சீராக வைத்துக் கொண்டு ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் கட்டுக்குள் வைக்க முடியும்.

இதயத்துக்கு சர்வாங்காசனம்!

விலங்குகளுக்கு இதய நோய் வருவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். 4 கால்களில் நிற்பதால் முதுகு மேலேயும் அதற்குக் கீழே இதயமும் இருக்கிறது. ஆனால், நாம் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதால் கீழிருந்து அதிக அழுத்தத்துடன் ரத்தம் மேலே ஏறுகிறது. இதனால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகிறது. முதுகுத்தண்டு மேலேயும், இதயம் கீழேயும் வரும் சர்வாங்காசனம், விபரீத கரணி ஆகிய பயிற்சிகள் இதய நோய்களிலிருந்து காக்கும் ஆற்றல் கொண்டவை.

சிறுநீரகமும் தனுராசனமும்

நீரிழிவு உட்பட பல நோய்களின் காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படும். உணவில் உப்பைக் குறைப்பது, தண்ணீர் நிறைய குடிப்பது போன்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில எளிய மாற்றங்களுடன் சலபாசனம், தனுராசனம் போன்ற ஆசனங்களை செய்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உட்டியாணா என்ற வயிற்றுக்காக செய்யப்படும் பயிற்சியும் அரைமணிநேரம் தவறாமல் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.யோகிகள், முனிவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் யோகாசனம் செய்யும்போது, உடலில் நடக்கிற மாற்றங்களை வைத்து வெளிநாட்டவர் பல்வேறு ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆசனத்தின் பின்னும் பல மருத்துவப் பலன்கள் இருப்பதை உறுதிபடுத்திய பிறகே மேற்கத்திய நாடுகள் யோகாசனத்தைக் கொண்டாட ஆரம்பித்தன.இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரமே அறுசுவை என்று முன்னோர் சொன்னார்கள். இன்றோ உப்பு, காரம், இனிப்பு ஆகிய சுவைகளை மட்டுமே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வருகிறோம். நோய்கள் உருவாக இதுவும் முக்கியமான காரணம். இதை மாற்ற முறையான யோகப் பயிற்சிகளோடு, சரியான உணவுப் பழக்கத்தையும் பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை நமக்கும் சாத்தியம்தான்!

யோகா கற்றுக் கொள்ளும் முன்…

ஊடகங்களின் வழியாக யோகாசனம் பற்றி அறிந்து கொள்ளலாம். முறைப்படி ஒரு குருவிடம் கற்றுக் கொள்ளும்போதுதான் நாம் எதிர்பார்க்கிற பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். அதிலும் நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஒரு குருவின் வழிகாட்டுதலின் படியே பயிற்சிகளில் இறங்க வேண்டும். அதனால்தான், இந்தக் கட்டுரையில் பயிற்சிகளின் செய்முறையை விளக்கவில்லை.

யோகாசனங்களை உடனடியாக செய்துவிட முடியாது. படிப்படியான பயிற்சிகள் அவசியம். அளவுக்கு அதிக நேரம் யோகாசனம் செய்துவிட்டு, இடையே 2 நாட்கள் பயிற்சிகளை செய்யாமல் விட்டால் அதனால் பலன் இல்லை. அதனால், இதில் இடைவிடாத பயிற்சி அவசியம்.

எந்த வயதிலும் யோகாசனம் செய்யலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது. இன்றைய அவசர வாழ்வில் யோகாசனத்துக்கு மணிக்கணக்காக நேரம் ஒதுக்க முடியாது. அதனால் மூச்சுப்பயிற்சி, தியானம், ஆசனம் என்று அரை மணிநேரத்துக்குள் இந்தப் பயிற்சிகளை தலா 10 நிமிடங்கள் செய்வதே போதுமானது.Post a Comment

Protected by WP Anti Spam