By 16 July 2019 0 Comments

அழகின் ரகசியம்!! (மகளிர் பக்கம்)

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருது, தேசிய விருது என தொடர்ந்து விருதுகள் வாங்கி எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும் ‘டூ லெட்’ படத்தின் நாயகி. மேலும் குறும் படங்கள், சீரியலிலும் கலக்கிக்கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நடிகை ஷீலா ராஜ்குமார் தன் அழகை பாதுகாக்கும் முறைகள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

“நான் அடிப்படையில் ஒரு பரத நாட்டிய டான்ஸர். நாட்டியத்திற்கு முக்கிய தேவையான மேக்கப் குறித்து தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அதற்காக ப்யூட்டிஷியன் கோர்ஸ் படித்தேன். தெரிந்தவர்களுக்கு ஃபேஷியல், ப்ளீச்சிங் பண்ணிவிட்டிருக்கேன். தவிர எனக்காக நான் இதெல்லாம் செய்து கொள்வதில்லை. எனக்குப் பொதுவாக ப்யூட்டி ப்ராடெக்ட்ஸ் பிடிக்காது. கிரீம்ஸ் போடுவதிலெல்லாம் உடன்பாடில்லை. இயற்கையாக இறைவன் கொடுத்த இந்த அழகை இயற்கை முறையில் பாதுகாப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன். ஃப்ரெண்ட்ஸ் வற்புறுத்தினாலும் நடிக்கும் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் புருவம் கூட திருத்திக்கொள்வதில்லை. அழகுக்காக எந்த மெனக்கெடலும் இல்லை. ஒரு வேளை என் வாழ்க்கை முறை வேண்டுமானால் என் அழகுக்குக் காரணமாய் இருக்கலாம்.நான் நிறைய தண்ணீர் குடிப்பேன். நல்லா சாப்பிடுவேன். ஆனால் நல்ல சாப்பாடாக சாப்பிடுவேன். பொதுவாக வெள்ளை அரிசி சாப்பிடுவதில்லை. சிவப்பரிசி, கைகுத்தல் அரிசி, வரகு, குதிரை வாலி, கம்பு போன்ற ஆர்கானிக் உணவு வகைகளை சாப்பிடுகிறேன்.

நிறைய காய்கறி, பழங்கள் சாப்பிடுவேன்.தினமும் மூச்சுப்பயிற்சி, தியானம் இதெல்லாம் செய்கிறேன். தேவையான உடற்பயிற்சி செய்வேன். தேவையான அளவு தூங்குகிறேன். இரவு சூட்டிங்கினால் தூக்கம் கெட்டாலும் நேரம் கிடைக்கும் போது தூங்கி அதனை சரி செய்து கொள்வேன்.வாரம் ஒரு முறை ஆயில் பாத் எடுப்பேன். முகம் டல்லா இருக்குன்னு உணர்ந்தால் ஆவி பிடிப்பேன். முகம் ஃப்ரஷ்ஷாயிடும். வெளியில் வாங்கும் கிரீம்கள், லோஷன்கள் எதனால் செய்யப்படுகிறது? எப்படி செய்யப்படுகிறது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. நம் கண்ணெதிரே சுலபமாக கிடைக்கும் பொருட்களினால் நம் அழகை பாதுகாக்க முடியும் எனும் போது எதற்கு மற்றப்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என நினைப்பேன். அதனால் பழங்களை கொண்டு செய்யும் ஃபேஷியல், ஸ்கரப்பிங் இவற்றை தான் செய்து கொள்ள விரும்புவேன். பொதுவாக எப்போதாவது வெயிலினால் நிறம் டர்ன் ஆனது போல் தெரிந்தால் பப்பாளி பழத்தினால் முகத்தை மசாஜ் செய்து கொள்வேன். மேக்கப்பை கூட தேங்காய் எண்ணெயினால்தான் துடைத்தெடுப்பேன்.

எப்போ தாவது முகம் டல்லாக இருப்பதாக உணர்ந்தால் கடலை மாவோடு, புளித்த தயிர், எலுமிச்சைச் சாறு எல்லாவற்றையும் கலந்து பேக் போடுவேன். சிறிது நேரம் வைத்திருந்து பின் கழுவி விடுவேன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். இவைதான் என் அழகுக்குக் காரணமா இருக்கலாம் என நினைக்கிறேன். மேக்கப்பில் நிறைய வகைகள் இருக்கின்றன. எல்லாம் தெரிந்தாலும் யதார்த்தமாக இருக்கவே விரும்பு வேன். படங்களிலும் யதார்த்தமான பாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். உடம்பு ஆரோக்கியமாக இருந்தால் உடல் அழகு தானாக வரும். அதற்கு நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். அதிலும் குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த புடலங்காய், பூசணிக்காய், முள்ளங்கி, சுரைக்காய், குடை மிளகாய் போன்ற காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். தர்பூசணி, கிர்ணி போன்ற சீசனல் பழங்கள் சாப்பிட வேண்டும். முறையான உடற்பயிற்சி இருந்தால் போதும். வாழ்க்கை ஆரோக்கியமாக நன்றாக இருக்கும். ஆரோக்கியமாக இருந்தால் அழகும் கூடும்.‘டூ லெட்’ படம் விரைவில் வெளிவரப் போகிறது. தற்போது மலையாளப் படம் ஒன்றில் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறேன்’’ என்னும் ஷீலா ராஜ்குமார் அழகில் மட்டுமல்ல படங்களில் யதார்த்த கேரக்டர்களிலும் ஜொலிக்க வாழ்த்துகள்.Post a Comment

Protected by WP Anti Spam