அன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 45 Second

‘‘எனக்கு ஏழு வயசிருக்கும். விடுமுறை நாட்களில் அம்மா எங்களை நெல்லூரில் இருந்து சென்னையில் இருக்கும் என்னோட கொள்ளு தாத்தா வீட்டுக்கு அழைச்சிட்டு வருவாங்க. தாத்தா வீடுன்னாலே குதூகலம் தானே. எனக்கும் அப்படித்தான். காரணம் என் கொள்ளு தாத்தா சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்’’ என்று பேசத் துவங்கினார் சித்ரா வீரராகவன். இவர் பள்ளி குழந்தைகளுக்கான பாடப்புத்தகம் எழுத்தாளர், ஆசிரியர், நாவலாசிரியர் மற்றும் இந்தியாவின் இரண்டாம் ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் கொள்ளு பேத்தி. இவர் தற்போது தன் கொள்ளு தாத்தாவின் சுயசரிதையை ‘தில்லி தாத்தா – எ கிரேட் கிராண்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

‘‘எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் அவரை பார்த்து இருக்கேன். அப்ப அவருக்கு 80 வயசிருக்கும். அவரின் உடல் நிலையும் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. எப்போதும் அவருடைய அறையில் தான் இருப்பார். படுக்கையில் தான் அமர்ந்திருப்பார். அவரை சுற்றி படுக்கையில் புத்தகங்கள் பரப்பப்பட்டு இருக்கும். எங்களுடன் ஓடி ஆடி விளையாட அவரின் உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும், நாங்க வீட்டுக்கு வந்துட்டா, மிகவும் பாசமாக பேசுவார். ரொம்ப அன்பானவர். எனக்கு பத்து வயசு இருக்கும் போது அவர் தவறிட்டார். அவர் இருந்த போதும் சரி அவரின் மறைவுக்கு பிறகும் பாட்டி, அம்மா எல்லாரும் அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் கூற கேள்விப்பட்டு இருக்கேன். அந்த விஷயங்கள் எல்லாம் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து இருந்தது. அது தான் கடந்த ஆண்டு புத்தகமாக வெளியானது’’ என்ற சித்ரா எழுதி இருக்கும் ‘தில்லி தாத்தா’ குழந்தைகளுக்கான நாவல்.

‘‘இந்த நாவல் ஏழு வயது சிறுமியின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. அவரை பற்றி நான் கேட்ட கதைகள், என் குழந்தை பருவத்தில் அவருடன் ஏற்பட்ட அனுபவம் என எல்லாவற்றின் கலவை தான் இந்த புத்தகம். அவர் பற்றிய தெளிவான சிந்தனை இன்றும் என் நினைவில் பசுமை யாக இருக்கு. இது ஏழு வயது சிறுமியின் பார்வையில் எழுதப்பட்ட சுயசரிதை என்பதால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அவரின் புகைப்படங்கள் இருந்தாலும் சிறுவர்களுக்கான நாவல் என்பதால், சித்திரங்கள் மூலமாகவும் அவரை வெளிப்படுத்தி இருக்கேன். அவரின் புகைப்படங்கள் நிறைய இருந்தாலும், அதில் மிகவும் பிரபலமான புகைப்படம் அவர் படுக்கையில் அமர்ந்து புத்தகம் படிப்பது போல் இருக்கும். அதை சத்யன் என்பவர் படம் பிடித்து இருக்கார்.

தாத்தா பற்றி எழுத வேண்டும் என்று ஒரு நாள் திடீரென்று தான் தோன்றியது. அப்ப நாங்க விடுமுறைக்காக கோவா சென்று வந்திருந்தோம். வந்தவுடன் என் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். இரண்டே நாள் இந்த புத்தகத்தை எழுதி முடிச்சேன். கொல்கத்தாவில் உள்ள சுனந்தினி பேனர்ஜி என்பவர் தான் இந்த புத்தகத்தை வடிவமைத்துக் கொடுத்தார். குழந்தைகளுக்கான புத்தகம் என்பதால் அதற்கான சித்திரங்களை பாலசுப்பிரமணியம் என்பவர் வரைந்து கொடுத்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து தான் என் புத்தகத்திற்கு ஒரு அழகான வடிவம் அமைச்சிருக்காங்கன்னு சொல்லனும்’’ என்றவர் தாத்தாவை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘தாத்தா பத்தி சொல்லணும்ன்னா நிறைய கதைகள் இருக்கு. திருத்தணி தான் அவர் சொந்த ஊர். அப்ப பேருந்து வசதி எல்லாம் கிடையாது. பள்ளிக்கு பல மைல்கள் நடந்து தான் செல்லணும். ஒரு நாள் அப்படி ேபாகும் போது, திருடன் அவரை வழிமறித்து இருக்கான். பள்ளிக்கு செல்லும் சிறுவனான அவரிடம் பணம் எல்லாம் இல்லை. மாறாக மதிய உணவுக்காக அவர் அம்மா கொடுத்த ஒரு கைப்பிடி வேர்க்கடலை தான் இருந்தது. பாவம் திருடனுக்கு பசியோ என்னவோ, அந்த வேர்க் கடலையை பறிச்சிட்டு போயிட்டான். தாத்தாவுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. அப்போது மைசூரில் பேராசிரியரா வேலைப்பார்த்து வந்தார். கொல்கத்தா ரயில் நிலையத்திற்கு குதிரை வண்டியில் சென்றவரின் வண்டியை மறித்து அவரின் மாணவர்கள், குதிரைகளை கழட்டிவிட்டு அவர்களே அந்த வண்டியை இழுத்து ரயில்நிலையம் வரை வந்துள்ளனர். அவர் மேல் மாணவர்கள் ரொம்பவே மரியாதை மற்றும் அன்பு வைத்திருந்தனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.

தாத்தா மனிதநேயம் மிக்கவர். அவர் சோவியத் ஒன்றியத்திற்கு இந்திய தூதராக இருந்தார். அப்போது சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலின் இருந்தார். மிகவும் கண்டிப்பானவர். அவர் அருகில் நின்று பேசவே பலர் தயங்குவார்கள். அவர் உடல் நலம் குன்றி இருந்ததால் தாத்தா அவரை பார்க்க சென்றார். ஸ்டாலின் தோளைத் தட்டிக் கொடுத்து, ‘சீக்கிரம் நலம் பெற வேண்டும்’ என்று தாத்தா கூறியுள்ளார். அதற்கு ஸ்டாலின், ‘என்னை இவர் தான் மனிதனாக நடத்தியுள்ளார்’ என்று கூறியுள்ளார். இது போன்ற பல செய்திகளை நான் அந்த புத்தகத்தில் குழந்தைகள் புரிந்துகொள்ளும் முறையில் வெளியிட்டு இருக்கேன். தாத்தா அத்வைதா நெறிகளை பின்பற்றுபவர். அதையும் குழந்தைகளுக்கு புரியும் படி கூறியிருக்கிறேன்’’ என்றவர் ‘தில்லி தாத்தா’ தவிர வேறு இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார்.

‘‘என்னுடைய முதல் நாவல் ‘த அமெரிக்கன்ஸ்’. மத்திய அமெரிக்கர்கள் பற்றிய கதை. 2014ம் ஆண்டு வெளியானது. 11 வித்தியாசமான கதைகள் ஒரு மையப்புள்ளியில் இணையும். என் கணவரும் எழுத்தாளர் என்பதால் நாங்க இருவரும் இணைந்து வெளியிட்ட அடுத்த புத்தகம், ‘மெட்ராஸ் ஆண்ட் மை மைண்ட்’’. இது ஆன்தாலஜி புத்தகம். அதாவது 20 எழுத்தாளர்களின் கருத்துகளை கொண்ட தொகுப்பு. இப்போது மூன்றாவதாக வரலாற்று நாவல் எழுதி வருகிறேன். என்னுடைய கெரியர் எழுத்தாளராகத்தான் துவங்கியது. குறிப்பாக பாடப் புத்தகங்கள். பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஆக்ஸ்வர்ட் பிரசுரத்தில் ஐந்தாண்டு காலம் ஆசிரியராக வேலைப்பார்த்தேன். பிறகு அமெரிக்காவில் ஆங்கிலத்தில் பி.எச்.டி முடிச்சேன். சென்னைக்கு வந்ததும் குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் எழுதும் வாய்ப்பு கிடைச்சது.

ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரையிலான ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களை எழுதி வருகிறேன். என்னதான் பாடப் புத்தகங்கள் எழுதி வந்தாலும் நமக்கான ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். அதுதான் என்னை நாவல் எழுத தூண்டியது’’ என்றவர் தற்பொழுது எழுதி வரும் வரலாற்று நாவலை பற்றி குறிப்பிட்டார்.‘‘1000 வருடங்களுக்கு முன் நடைபெற்ற வரலாற்று கதை மற்றும் தற்போது நடைபெறும் கதை இரண்டையும் மையப்பட்ட த்ரில்லர் நாவல்.

வரலாற்றை கூறும் போது சிறிய தவறு கூட இருக்கக் கூடாது என்பதால், அது குறித்து பல ஆய்வுகள் செய்து வருகிறேன். அந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் உடை, உணவு, வசித்த இடம் எல்லாமே நாம் எழுத்து மூலம் கூற வேண்டும். இதற்காக எவ்வளவு புத்தகங்களை படிச்சு குறிப்பெடுத்து இருக்கேன்னு எனக்கே தெரியல. நாவல் என்பதால், சுவாரஸ்யமும் குறையாமல் இருக்கணும். அதனால் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்கிறேன். ஒரு பெண் கொல்லப்பட்ட தன் அப்பாவை தேடிச் செல்லும் கதை தான் இது. அந்த கொலையின் பின்னணியை பண்டைய காலத்துடன் இணைத்து இருக்கிறேன்’’ என்றார் சித்ரா வீரராகவன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூடானில் தொடரும் நிழல் யுத்தம் !! (கட்டுரை)
Next post மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..? (மருத்துவம்)