By 24 June 2019 0 Comments

குண்டாக இருந்தால் தான் அழகு! (மகளிர் பக்கம்)

இங்கு குழந்தைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட நிலாவைக் காட்டி, பூச்சாண்டியை விரட்டி, யானையாக பூனையாக மாறி பல வித்தைகள் செய்து சாப்பிட வைப்பதற்குள் தலை சுற்றி விடுகிறது. ஆனால் ஆப்ரிக்காவின் Mauritania என்ற இடத்தில் வசிக்கும் சிறுமிகள் தினம் 12,000 முதல் 16,000 கலோரிகள் உணவை பக்கெட் கணக்கில் உட்கொள்கின்றனர்.

இது சராசரியான ஆண் பாடி பில்டரின் ஒரு நாள் கலோரி உட்திறனைவிட(4000 கலோரிகள்) நான்கு மடங்கு அதிகமாகும். சராசரியாக ஒரு நாளைக்கு பெண்கள் 2000 கலோரிகளும், ஆண்கள் 2500 கலோரிகளும் எடுத்துக்கொள்வது தான் சிறந்தது. ஆப்ரிக்கா நாட்டில் வசிக்கும் இந்த பழங்குடி மக்களை பொறுத்தவரையில், குண்டாக இருக்கும் பெண்களே அழகானவர்கள். எடையைக் குறைக்க வேண்டும் என கடுமையாக முயற்சிக்கும் பெண்கள் இந்தச் செய்தியைக் கேட்டால், வியப்பில் அவர்களது கண்கள் இரு மடங்காக பெருத்துவிடும்தான்.

உலகம் முழுக்க எடையை குறைக்க பட்டினி கிடந்து, ஆயிரக்கணக்கில் செலவு செய்து, டயட், ஜிம் என இருக்கும் போது, இந்த பகுதி பெண்கள், அதற்கெல்லாம் மாறாக, எடையை அதிகரிக்க போராடும் கலாச்சாரம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Mauritania பகுதி மக்களை பொறுத்தவரை, அதிக எடையுடன் இருக்கும் பெண்கள் தான் செழிப்பாக பெரும் பொருட் செல்வத்துடன், பல வாரிசுகளை சுமக்க சிறந்தவர்கள். அவர்கள்தான் அழகானவர்களும் கூட. எடை கூடிய பெண்கள் ஆண்களின் கண்களுக்கு கவர்ச்சியாக தெரிந்து, விரைவில் திருமணமாகும் என்றும் நம்பிக்கை இருக்கிறது. இதனால்தான், சிறு வயது முதலே, குழந்தைகளுக்கு அதிகமாக உணவு திணிக்கப்படுகிறது.

நாம் கோடை விடுமுறையில் டூர் செல்வது போல், அங்கு 11 வயது சிறுமிகளில் தொடங்கி திருமணமாகாத அனைத்து பெண்களும், சுமார் இரண்டு மாதம்வரை, உடல் எடையை அதிகரிக்க ‘fat farm’ செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு வினோதமான முறையில் அளவுக்கு அதிகமான உணவுகள் கொடுக்கப்படுகிறது. குழந்தைகள் உண்ண முடியாமல் வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை என்று அவர்களுக்கு உணவுகளை திணிக்கிறார்கள்.

இரண்டு மாதத்திற்காக பிரத்யேகமாக கூடாரம் அமைக்கப்பட்டு, தாய்மார்கள் சேர்ந்து உணவு தயாரித்துக்கொண்டே இருக்க, சிறுமிகள் அதை சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சிறுமிகளுக்கு உணவாக, கிலோ கணக்கில் தயாரிக்கப்பட்ட கஞ்சி, Couscous எனப்படும் ஆவியில் வேகவைத்துக் கறி கலந்த கஞ்சி, லிட்டர் கணக்கில் ஒட்டகப் பால், மேலும் பலவகையான காய்கறிகள் கொடுக்கப்படுகின்றன. தொடர்ந்து மதியமும் இரவும் இதே உணவு முறை பின்பற்றப்படும். காலை உணவை முடிக்கவே இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகும். அடுத்து போதிய இடைவெளி இல்லாமல் மதிய உணவு பந்தி ஆரம்பித்துவிடும். அங்கு குழந்தையை அழைத்து வரும் ஒவ்வொரு அம்மாவின் கையிலும் ஒரு பெரிய தடி இருக்கும். சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளை பயமுறுத்தி சாப்பிட வைக்கத்தான் அது.

இவர்களின் இந்த வினோத பழக்கம் நமக்கு வியப்பாக இருந்தாலும், இது விளைவிக்கும் விபரீதங்கள் அதிகம்தான். இப்படி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, உணவு ஆலோசகர் டாக்டர் வினிதா கிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசிய போது, ‘‘கலோரி உட்கொள் திறன் ஒவ்வொருவரிடமும் மாறுபட்டிருக்கும். இது, ஒருவரின் எடை, உயரம், வயது, பாலினம், அவர்கள் தினமும் செய்யும் வேலையைப் பொருத்து மாறுபடும்.

உடல் எடையை இயற்கையாக அதிகரிப்பதுதான் சிறந்தது. அதற்கு நாம் தினமும் கரைக்கும் கலோரிகளை விட, 500 கலோரிகள் அதிகம் எடுக்க வேண்டும். அதாவது, 1500 கலோரிகள் தினமும் நாம் இழக்கிறோம் என்றால், அதை ஈடுகட்ட 2000 கலோரிகள் உணவு சாப்பிட வேண்டும். அதே போல, உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்க, 500 கலோரிகள் கம்மியாக உட்கொள்ள வேண்டும். இது தான் நம் உடலுக்கும் மனதுக்கும் சிறந்தது.

ஆனால், அளவுக்கு மீறிச் சாப்பிடுவது, உடல் எடையை அதிகரிப்பதுடன், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற வியாதிகளையும் பாதிப்புகளையும்தான் அதிகரிக்கும். சிறு வயதில் அதிகம் எடையுடன் இருந்தால், பிற்காலத்தில் அதற்கேற்ற உழைப்பு இல்லாத போது, அவர்களால் நகரக்கூட முடியாமல் படுத்த படுக்கையாகும் நிலைமை ஏற்படும். மாரடைப்பு, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கீழ்வாதம், பக்க வாதம், அதிக கொழுப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பல வியாதிகள் வரும்” என்றார்.

அளவுக்கு அதிகமான உணவு சாப்பிட்டு வந்ததால், Mauritaniaவில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் அங்குள்ள பெண்கள் உணவுக்கு பதில், உடல் எடையை அதிகரிக்க மருந்துகள் எடுக்கின்றனர். இந்த மருந்துகள் மிருகங்கள் உட்கொள்ளும் மருந்து. மேலும் அரசாங்கம் ஆபத்தானது என்று தடை செய்யப்பட்ட மருந்துகள். இதன் மூலம் உயிரிழந்தவர்களும் உள்ளனர் என்று ‘டெய்லி மெயில்’ பத்திரிகை அறிவித்துள்ளனர். Mauritaniaவின் இந்த வித்தியாசமான கலாச்சாரம் சமூக ஆர்வலர்களின் கவனத்திற்கு வர, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இழைக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக குரல்கள் எழுந்தன.

நேரடியாக ஆப்ரிக்கா பெண்களையும் ஆண்களையும் சந்தித்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேவைக்கு அதிகமான எடையும், தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும், உடலுக்கு எந்தமாதிரியான தீங்கை விளைவிக்கும் என்று எடுத்துக்கூறி இந்த கலாச்சாரத்தை மாற்றி வருகின்றனர். அங்கு வாழும் சில வயதான பெண்களும், இதை எதிர்த்து, தங்கள் பெண் குழந்தைகளை இந்த வழக்கத்திலிருந்து காத்து வருகின்றனர்.Post a Comment

Protected by WP Anti Spam