By 21 June 2019 0 Comments

நான் என்னை நம்புகிறேன்!! (மகளிர் பக்கம்)

பகல் 12 மணி… உச்சி வெயிலில் அந்த தள்ளுவண்டி கடையில் சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருந்தார் ஒரு இளம் பெண். அவருக்கு உதவியாக அவரின் மகன் சாப்பிடுபவர்களுக்கு தண்ணீர் பரிமாறிக் கொண்டு இருந்தான். இந்த காட்சியை பூந்தமல்லி நெடுஞ்சாலை கோவூர் செல்லும் வழியில் பார்க்கலாம். சாப்பாடு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, சம்பார், கூட்டு பொரியல், ரசம், மோர் என நாம் வீட்டில் சாப்பிடும் சுவையில் புன்சிரிப்புடன் பரிமாறிக்கொண்டு இருந்தார் ராஜேஷ்வரி. பகல் 12 மணிக்கு துவங்கும் போஜன விருந்து பகல் மூன்று மணி வரை தொடர்கிறது.

கொண்டு வந்த சாப்பாடு எல்லாம் தீர்ந்து போக அந்த பாத்திரங்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு இருந்த ராஜி, தான் கடந்து வந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டார்.
‘‘நான் பிறந்தது திருநெல்வேலி. நான்காம் வகுப்பு படிக்கும் போது அப்பா வேலைக் காரணமா சென்னைக்கு வந்துட்டார். நான் மட்டும் ஐந்தாம் வகுப்பு வரை பாட்டி வீட்டில் தங்கி படிச்சேன். அதன் பிறகு நானும் சென்னைக்கு வந்துட்டேன். ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரை சென்னையில் தான் படிச்சேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்த போது எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.

அதனால் சில காலம் கல்லூரிக்கு போக முடியாம போனது. எங்க வீட்டில கிராமத்து ஆளுங்க. அதனால சொந்தக்காரங்க எல்லாரும், பொம்பள பிள்ளைக்கு எதுக்கு படிப்பு, கல்யாணம் செய்து வச்சுடுன்னு அப்பாகிட்ட சொல்ல. அவரும் அது தான் சரின்னு எனக்கு வரன் பார்த்து கல்யாணம் பேசி முடிச்சிட்டார். என் கணவரும் சென்னைவாசி தான். அவருக்கு அம்மா, அப்பா கிடையாது. தாத்தா, பாட்டி தான் அவரை வளர்த்தாங்க. ஒன்பதாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கார். அவர் ஒரு கார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலைப் பார்த்து வந்தார். அவருக்கு ஒரு அண்ணன்.

அவர் திருமணமாகி தனியாக உள்ளார். கல்யாணமாகி மூணு மாசம் வாழ்க்கை எந்தப் பிரச்னையும் இல்லாம நகர்ந்தது. அதன் பிறகு தான் மெல்ல மெல்ல என் வாழ்க்கையில் சரிவுகள் ஏற்பட ஆரம்பிச்சது. இவர் வேலைப் பார்த்து வந்த நிறுவனத்தை மூடிட்டாங்க. அதனால் இவருக்கு வேலை இல்லாம போயிடுச்சு. என்னாலும் வேலைக்கு போக முடியல. எங்க வீட்டில் அனுமதிக்கல. மேலும் ஒரு டிகிரி முடிச்சு இருந்தா கூட ஏதாவது ஒரு வேலைக்கு போய் இருக்கலாம். ஆனா, அதற்கும் வழியில்லை. சரி சொந்தமா தொழில் செய்யலாம்னு முடிவு செய்தோம்.

தண்ணீர் கேன் பிசினஸ் ஆரம்பிச்சோம். என்னிடம் இருந்த நகைகளை பாதி அடமானம் வச்சு தான் அவருக்கு இந்த தொழில் ஆரம்பிச்சு கொடுத்தேன். ஆனா அவர் சரியா கவனிக்காம விட்டுட்டார். நஷ்டமானது. அதனால் தொடர்ந்து அந்த தொழிலில் ஈடுபட முடியல. இதற்கிடையில் எனக்கு மகன் பிறந்தான். இவரும் கிடைக்கிற வேலைக்கு சென்று வந்தார். நிரந்தர வருமானம் வேண்டும்னு நினைச்சேன்’’ என்றவர் மறுபடியும் சொந்தமாக தொழில் துவங்க திட்டமிட்டார் ‘‘மகன் பிறந்துவிட்டான். அவனுக்கும் நான்கு வயசாகிவிட்டது. அவனுக்கு நல்ல எதிர்காலம் அமைச்சு தரணும்னு நினைச்சேன். அதனால் எஞ்சி இருந்த நகைகளை கொண்டு ஒரு மளிகை கடையை ஆரம்பிச்சேன்.

ஏற்கனவே ஒரு தொழிலை இவருக்கு அமைச்சு கொடுத்து அது சரியாக போகலை என்பதால், இதில் நான் முழுமூச்சாக இறங்கினேன். நான் லிஸ்ட் போட்டு தருவேன். என் கணவர் வாங்கி வந்திடுவார். கடையின் முழு பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். நான்கு வருடம் கடை நல்லாவே போச்சு. ஓரளவுக்கு என்னாலும் மூச்சு விட முடிந்தது. இதற்கிடையில் நான் இரண்டாவது முறை கருவுற்றேன். உடல் நிலை காரணமாக தொடர்ந்து என்னால் கடைக்கு வரமுடியல. அதனால் ஒரு நான்கு மாசம் என் கணவரின் பொறுப்பில் விட்டேன். அது தான் நான் என் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தப்புன்னு இப்ப உணர்றேன்’’ என்று ஒரு நிமிட மவுனத்திற்கு பிறகு மீண்டும் பேசத் துவங்கினார்.

‘‘குழந்தை பிறந்து நான் மறுபடியும் வருவதற்குள், நன்றாக போய்க் கொண்டு இருந்த கடையும் நஷ்டத்திற்கு கொண்டு வந்துட்டார். கடையில் பொறுப்பாக இல்லாமல், கடையை பூட்டிவிட்டு வெளியே நண்பர்களுடன் சேர்ந்து தகாத பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். லாபம் இருந்தால் தானே மேற்படி கடையை தொடர்ந்து நடத்த முடியும். அந்த கடையும் கைவிட்டு போச்சு. கையில் இருந்த நகை எல்லாம் போச்சு. ஒன்னுமே இல்லாம நிர்கதியா நின்னேன். குழந்தைக்கு பால் பாக்கெட் வாங்குவதற்கு கூட கையில் காசு இல்லாம கஷ்டப்பட்டேன். அந்த சமயத்தில் ரோட்டில் வெங்காயம் கூட வித்து இருக்கேன். இரண்டு குழந்தைங்க ஆயிடுச்சு.

அவங்கள பார்க்கணும். கையில் எந்த பொருளும் இல்லை. இவர் மாதம் 10 ஆயிரம் சம்பாதிச்சு கொண்டு வந்தாலே பெரிய விஷயமா இருந்தது. நான் வேலைக்கு போகலாம்ன்னு பார்த்தா, பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகள பார்த்துக் கொள்ள ஆள் இல்லை. என்ன செய்றதுன்னு புரியல. இவருக்கும் என்னால் இதற்கு மேல் சொல்லி புரியவைக்க முடியாதுன்னு தோணுச்சு. நான் தான் இறங்கணும்ன்னு முடிவு செய்தேன். மற்றவர்களை நம்புவதை விட நான் என்னை நம்ப ஆரம்பிச்சேன்’’ என்ற ராஜி சுவையான சாப்பாட்டுக்கு நல்ல மதிப்பு உள்ளதுன்னு புரிந்து வைத்திருக்கார்.

‘‘எனக்கு சமைக்க பிடிக்கும். வீட்டில் நான் சமைச்சு யார் சாப்பிட்டாலும் நல்லா இருக்குன்னு சொல்வாங்க. கையில் ஒரு தொழில் இருக்கும் போது, நாம ஏன் பயப்படணும். சமையலையே கையில் எடுக்கலாம்ன்னு முடிவு செய்தேன். என் பக்கத்து வீட்டில் ஒரு அண்ணா மாலையில் சிக்கன் கபாப் தள்ளு வண்டியில் போடுவாங்க. அவங்களிடம் வண்டியை வாடகைக்கு கேட்டேன். அவர் காலையில் வண்டி சும்மா தான் இருக்கு. நீ பயன்படுத்திக்கோன்னு சொல்லிட்டார். எனக்கு ரொம்பவே சந்தோஷமாயிடுச்சு. ஆனா என்ன கையில் காசு கிடையாது. என்னால் பெரிய அளவில் இன்வெஸ்ட் செய்ய முடியாது.

எனக்கு கல்யாண சீராக வந்த பாத்திரத்தை எல்லாம் எடுத்தேன். கையில் இருந்த காசை வச்சு கொஞ்சம் மளிகை பொருள் வாங்கினேன். வீட்டில் இருந்த அரிசி பருப்பை கொண்டு சமைச்சேன். 12 மணிக்கு எல்லாம் சாப்பாடு ரெடியாயிடுச்சு. 12.30க்கு கடை போட்டால் நாலு மணிக்குள்ள எல்லா விற்றுடும். நான் கடையை ஆரம்பிச்சு ஒரு மாசம்தான் ஆகுது. முதல் நாள் எவ்வளவு சமைக்கணும்ன்னு தெரியல. வீட்டில் எங்களுக்கு ஒரு டம்ளர் சாதம் தான் வைப்பேன். இங்க எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியல. இரண்டு கிலோ அரிசி போட்டு வடிச்சிட்டேன். அதில் 14 பேர் சாப்பிடலாம்.

ஆனா அன்னிக்கு மூணு பேர் தான் சாப்பிட வந்தாங்க. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. அழுகையே வந்துடுச்சு. மீதம் இருக்கிற சாப்பாட்டை கீழே கொட்டவும் மனசு வரல. அதனால் பக்கத்தில் கட்டிட வேலை செய்பவர்களிடம் கொடுத்திட்டேன். ஆனாலும் நான் மனசு தளரல. மறுநாள் பத்து பேருக்கு சமைச்சு கொண்டு போனேன். முதல் நாள் சாப்பிட்டு பிடிச்ச போக மறுநாளும் சாப்பிட வந்தாங்க. இப்ப ஓரளவுக்கு குறைந்த பட்சம் பத்து சாப்பாடாவது போகுது. பக்கத்துல தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் பார்சல் வாங்க வராங்க. சில சமயம் அந்த வழியா போறவங்களும் சாப்பிட்டு போறாங்க.

எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். ஒரு சாப்பாட்டின் விலை ரூ.50. பார்சல்னா ரூ.60ன்னு வாங்குறேன். குன்றத்தூர் பக்கத்தில் கோவூர், போரூர் மெயின் ரோட்டில் தான் கடை போட்டு இருக்கேன். கடைக்கு ஒரு பெயர் வைக்கணும்’’ என்றவர் தன் மகன்களின் எதிர்காலத்துக்காக வெயில் என்று கூட பார்க்காமல் கஷ்டப்பட துணிந்து விட்டார். ‘‘எனக்கு எல்லாமே என் பசங்க தான். அதனால நான் எதை பத்தியும் யோசிக்கல. கடை போடணும்ன்னு முடிவு செய்தேன். ஏற்கனவே இரண்டு தொழில் இவரால நஷ்டத்தில் போயிடுச்சு. அந்த தப்பை நான் மறுபடியும் செய்ய விரும்பல.

என் பசங்க நல்ல வேலைக்கு போகும் அளவுக்கு படிக்க வைக்கணும். அது தான் என்னுடைய முக்கிய குறிக்கோள். வெயில்காலம் என்றாலும் சாப்பாடு நல்லா இருந்தா கண்டிப்பா வருவாங்க. என் கடைக்கு முதன் முதலில் சாப்பிட்டவர் வீட்டு சாப்பாடு மாதிரி இருக்குன்னு சொன்னார். அதை நான் என்றைக்கும் மாற்ற விரும்பல. மேலும் அந்த ஒரு காரணத்துக்காகவே அவர் என்னுடைய ரெகுலர் கஸ்டமராயிட்டார். இதை படிப்படியா கொண்டு வரணும். இப்ப பத்து சாப்பாடு போகுது. 30 சாப்பாடு வரை போச்சுன்னா நல்லா இருக்கும். இது தவிர சின்னச் சின்ன விசேஷங்களுக்கும் 30 பேருக்கு சமைச்சு தர தயாரா இருக்கேன்’’ என்றார் தன்னம்பிக்கையோடு ராஜேஷ்வரி.Post a Comment

Protected by WP Anti Spam