குழந்தையும் நேரமும்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 29 Second

அது இது எது முக்கியம்? பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமானகாமராஜ்

‘குழந்தைகள்தான் திருமண வாழ்க்கையை முழுமையடையச் செய்கிறார்கள்… பலப்படுத்துகிறார்கள்’ என்பது பரவலாக நம்பப்படுகிற கருத்து. உண்மையில் திருமண வாழ்க்கையை பலவீனமாக்குவதே குழந்தைகள்தான். அதற்காக குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. குழந்தைகள் வருவதற்கு முன், கணவன்-மனைவியின் நெருக்கம் அதிகமாக இருக்கும்.

குழந்தைகள் பிறந்ததும், அவர்கள் மீதான கவனிப்புக்கும் பராமரிப்புக்குமே நேரம் சரியாக இருக்கும். ஏற்கனவே ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்காத தம்பதியருக்கு இது இன்னும் சிக்கலைத் தரும். குறிப்பாக பெண்களே இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பிறந்த குழந்தையைக் கவனிக்கும்போது தூக்கமில்லா இரவுகள் பிரச்னை தரும். பிள்ளைகள் வளர்ந்து டீன் ஏஜை அடைகிற போது, அவர்களது நடத்தையில் ஏற்படுகிற மாறுபாடுகளை சமாளிப்பது சவாலாக இருக்கும். வாழ்க்கையில் குழந்தைகள் முக்கியம்தான். அவர்களை விடவும் முக்கியமானது திருமண உறவு.

உங்களுக்குள் ஒரு பிரிவை எப்போது உணர்ந்தீர்கள் என்கிற கேள்விக்கு பல தம்பதியரின் பதில் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு என்பது. அம்மாவுக்கும் குழந்தைக்குமான பந்தம் என்பது கணவன் – மனைவி பந்தத்தைவிட 10 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருப்பதே காரணம். குழந்தை பிறந்ததும் பெண்ணின் மொத்த கவனமும் குழந்தையின் மீதே குவிகிறது. அதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையிலான நெருக்கம் குறைகிறது.

திருமணமான புதிதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முக்கியமானவர்களாகத் தெரிகிறார்கள். இதை கபுள்ஹுட் (couplehood) என்கிறோம். ஒரு குழந்தை பிறந்ததும் இந்த நெருக்கத்தில் ஒரு பெரிய இடைவெளி விழுகிறது. அத்துடன் இன்னொரு பிரச்னையும் தலைதூக்குகிறது. குழந்தையை எப்படிப் பார்ப்பது என்கிற கேள்வி எழுகிறது. குழந்தை வளர்ப்பில் கணவரின் பங்கும் இருந்தாலுமே அது மனைவியின் பிரதான வேலையாகவே பார்க்கப்படுகிறது.

குழந்தை பெற்ற புதிதில் பெண்ணின் உடலில் உண்டாகிற ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக, இயல்பிலேயே அவளது செக்ஸ் ஆர்வமும் குறையும். குழந்தையுடன் கரைந்து போகிற பொழுதுகளில், கணவருக்காக ஒதுக்க நேரமே இருக்காது. கணவன்-மனைவிக்கான அந்தரங்கம் என்பதே காணாமல் போகும். பிறந்த குழந்தையாக இருக்கும்போதுகூட கணவன்-மனைவிக்கு இடையில் இது பெரிய பிரச்னையை ஏற்படுத்துவதில்லை.

குழந்தை வைத்த இடத்தில் இருக்கும் என்பதால் அதைக் கையாள்வது சற்றே சுலபமாக இருக்கும். அதுவே குழந்தை நகர ஆரம்பித்ததும் சிக்கல்கள் கூடும். அதன் பின்னாலேயே ஓடுவதில் இன்னும் அதிக நேரமும் சக்தியும் போகும். 1 முதல் 7 வயது வரையிலான குழந்தையின் பருவம் மிக மிக ஜாக்கிரதையாக கவனிக்கப்பட வேண்டியது. எனவே, குழந்தை தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரம் தாயின் எனர்ஜி நிமிடத்துக்கு நிமிடம் குறையும்.

சரி… 7 வயதுக்குப் பிறகு இது சரியாகிறதா என்றால் இல்லை. 7 வயது வரை உடல் ரீதியாக தாயின் அருகாமை தேவைப்படும். 7 வயதுக்குப் பிறகு உளவியல் ரீதியாக குழந்தையின் தேவைகள் அதிகமாகும். பல நேரங்களில் பல தம்பதியரும் தங்களது திருமண பந்தம் வேறு, குழந்தை பிறப்பு என்பது வேறு என்று பார்க்காமல் இரண்டும் ஒன்று என நினைத்துக் குழப்பிக் கொள்வார்கள்.அதனாலும் அவர்களுக்கிடையிலான அன்பும் நெருக்கமும் குறையும். இந்த நிலை குறித்து நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

குழந்தை பிறப்பதற்கு முன்பு நீங்கள் எப்போது தன்னம்பிக்கையாக உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு, `நான் மிக அழகாக இருந்த போது’ என பதிலளித்திருக்கிறார்கள் பலரும். அதே கேள்வி குழந்தை பிறப்புக்குப் பிறகு கேட்கப்பட்டிருக்கிறது.நான் ஒரு நல்ல தாயாக இருக்கும் போது’ என்றிருக்கிறார்கள்.பெரும்பாலான பெண்களுக்கும் குழந்தை வளர்ப்பில் அதிகபட்ச கவனம் இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘நீங்கள் உங்கள் கணவரைத்தான் திருமணம் செய்திருக்கிறீர்களே தவிர குழந்தைகளை அல்ல’ என்றும் இந்த ஆய்வு சொல்கிறது.

எந்நேரமும் தன் மனைவி குழந்தையின் மீதான கவனிப்பில் நேரம் ஒதுக்குவதால்தான் நிராகரிக்கப்படுவதாக ஒதுக்கப்படுவதாக கணவர்கள் உணர்கிறார்கள். குழந்தையின் தேவைகளுக்கு முன் தன் தேவைகளோ, விருப்பங்களோ முக்கியத்துவம் இழப்பதாக நினைப்பார்கள். குழந்தை வளர்ப்பில் பங்கெடுத்துக் கொள்கிற ஆண்களுக்குமே இந்த விஷயம் சந்தோஷமின்மையையே தருகிறது.

தனக்கான மரியாதை அளிக்கப்படாததாக உணர்கிறார்கள். இப்படிப்பட்ட மனநிலையில் உழலும் ஆண்களுக்கு, வேலையிடத்தில் அன்பாக, அக்கறையாக, இரக்கத்துடன் பேசுகிற பெண் ஊழியர் அமைந்தால் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டு நெருக்கமாகும் வாய்ப்புகள் அதிகம். ரொம்பவும் அன்யோன்யமான ஆணுக்குக்கூட குழந்தை பிறப்புக்குப் பிறகு தான்சந்திக்கிற இந்த புறக்கணிப்பு, ஏமாற்றம் போன்றவை பிடிப்பதில்லை.

இதற்கு அடிப்படையான காரணம் பெண்ணின் வேலையை ஆண்கள் மிகக்குறைவாக மதிப்பிடுவதே. குழந்தை வளர்ப்பு என்பது சாமான்ய காரியமல்ல. ஆனால், பல ஆண்களும், இதென்ன பெரிய வேலை… எங்கம்மா பண்ணாததா’ என்கிற மாதிரியான பார்வையையே கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்துப் பெண்களுக்கு வெளி வேலைகள் கிடையாது. குழந்தை வளர்ப்பையே முழுநேர வேலையாகச் செய்தார்கள். இன்றைய நவீன அம்மாக்களுக்கோ அப்படியில்லை. வேலை, வீடு என இரட்டைச் சுமை சுமக்கிறார்கள். ஆனால், அதைக் கணவர்கள் புரிந்து கொள்வதில்லை. இருவருக்குமே இந்தப் பிரச்னையில் சில மனவருத்தங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

24 மணி நேரமும் தான் வேலை பார்த்துக் கொண்டே இருப்பதாகப் பெண் நினைக்கிறாள். வேலை பார்த்தே களைத்துப் போகிற தனக்கு கணவரிடமிருந்து எந்த உதவியும் வருவதில்லை என வருந்துகிறாள். கணவருக்கோ `இது உன் வேலை… அதை ஏன் என்மேல சுமத்தறே’ என்கிற மாதிரியான பார்வை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தங்களுக்குள் நெருக்கம் இல்லை என்பது கணவர்களின் குற்றச்சாட்டு.

குழந்தை வளர்ப்பு என்கிற மாபெரும் பொறுப்பை பொறுமையாக ஏற்றுச் செய்கிற தன்னை கணவர் பாராட்டுவதே இல்லை என நினைக்கிறாள் பெண். இருவரும் மாறி மாறி இப்படி வருத்தப்பட்டுக் கொள்வதால் இருவருக்கும் இடையிலான காதலும் அந்தரங்க நெருக்கமும் மெல்ல மெல்ல செத்துப் போகும். குழந்தை வளர்ப்பு முறையிலும் இருவருக்கும் முரண்பாடுகள் இருக்கின்றன.

ஒருவர் குழந்தையிடம் அதீத கண்டிப்புடனும் இன்னொருவர் அதிக செல்லத்துடனும் இருக்கலாம். கண்டிப்பாக இருப்பவருக்கோ `அடியாத மாடு படியாது’ என்கிற எண்ணம். செல்லம் கொடுத்து வளர்ப்பவருக்கு அதில் எதிர்மறை கருத்து இருக்கும். கண்டிப்பு என்கிற பெயரில் குழந்தையை அடிக்கிறபோது, எதிராளிக்கு அது இன்னும் அதிக வலியைத் தரும். 24 மணி நேரமும் குழந்தையைப் பற்றிய சிந்தனையிலேயே தீவிரமாக இருப்பதும் தம்பதியருக்கு இடையில் பிரச்னைகளைத் தரும். குழந்தைகளை வளர்ப்பதற்கென ஆட்கள் இருந்தாலுமே சிலர் அதில் அதிக தீவிரம் காட்டுவதைப் பார்க்கலாம்.

உடல் அல்லது மன வளர்ச்சியின்றி பிறக்கும் குழந்தை என்றால் இன்னும் சிக்கல். அந்தக் குழந்தையை வளர்ப்பதில் இருவருக்கும் பெரிய மன அழுத்தம் ஏற்படும். மாற்றுத் திறனாளியாகவோ, மனநலக் கோளாறுடனோ குழந்தை பிறக்கும் போது சமாளிக்க முடியாமல் பிரிந்து போகிற தம்பதிகள் ஏராளம். குழந்தைகள் ஓரளவு வளர்ந்ததும் அவர்களை சமூகத்தின் மோசமான பாதிப்புகள் மற்றும் தாக்கங்களில் இருந்து காக்க வேண்டுமே என்கிற மன அழுத்தமும் பெற்றோருக்கு சேர்ந்து கொள்ளும்.

இன்று குழந்தைகளுக்கு முன் விரிந்து பரந்து கிடக்கிற சமூக வலைத்தளங்கள், இன்டர்நெட், டி.வி. போன்றவற்றில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது பெற்றோருக்கு மிகவும் சவால் நிறைந்த போராட்டமும்கூட. இது எல்லாமே தம்பதியருக்கு இடையிலான நெருக்கத்தைச் சிதைக்கும். சரி… இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? குழந்தை பிறப்பதற்கு முன்பே என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம் என யூகித்து, அவற்றை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் என்கிற முனைப்பில் நல்ல திரு மணத்தை பலி கொடுத்துவிட வேண்டாம். குழந்தையைக் காரணம் காட்டிப் பிரிகிற பல தம்பதியருக்கும், இருவரும் சேர்ந்து வாழ்வதுதான் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்தது என்பது புரிவதில்லை. குழந்தை பிறந்ததும் யார் என்ன வேலையைச் செய்வது என்கிற கேள்வி வரும். இருவரும் சரி பாதியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டுமா? எப்படிச் செய்யலாம் என எழுதி வைத்துக் கொண்டு, அவ்வப்போது பரிசீலனை செய்யலாம்.

குழந்தைக்கு திடீரென உடம்புக்கு முடியாவிட்டால் யார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வது? இது போன்ற பிரச்னைகளை முன்கூட்டியே பேசிவைத்துக் கொள்ளலாம். வெளியில் இருந்து உதவிக்கு ஆட்கள் எடுக்க வசதியிருந்தால் அதையும் செய்யலாம். குழந்தை ஓரளவு வளர்ந்து, சுமுக நிலை வந்ததும் கணவனும் மனைவியும் மீண்டும் தங்கள் காதல் வாழ்க்கையைத் தொடங்கலாம். எப்போதும் நண்பர்கள், குடும்பம், குழந்தைகள் என்றே இல்லாமல் இருவருக்குமான அந்தரங்க நேரத்தை அவசியமானதாக்கிக் கொள்ள வேண்டும்.

இதை நடைமுறையில் எந்த தம்பதியருமே செய்வதில்லை என்கின்றன ஆய்வுகள். காணாமல் போன அந்தரங்க உறவை மெல்ல மெல்லப் புதுப்பித்துக் கொள்ள முயற்சிகள் எடுக்கலாம். இருவரும் மட்டும் சேர்ந்து சில இடங்களுக்குச் செல்லலாம். குழந்தை பிறப்புக்குப் பிறகும் மிச்சமிருக்கிற காதலையும் வாழ்க்கையையும் காப்பாற்ற இவை எல்லாம் மிக மிக முக்கியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நினைத்தாலே போதும்…!!! (மருத்துவம்)
Next post இதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!! (மருத்துவம்)