கூட்டு ஒப்பந்தக் கொள்கை!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 50 Second

மீண்டும் மீண்டும் காதல் : பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்

புதிய விதி செய்வோம்…அதென்ன புதிய விதி? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே உற்சாகமான ஒப்பந்தம் இல்லாமல் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள் என்பதே அது. இந்த விதியில் இரண்டு வேறு வேறு எதிர் செயல்கள் அடங்கியிருப்பதைப் பார்க்கலாம்.

தம்பதியர் இருவரும் இதைப் பின்பற்றும் போது ஒருவர் எதைச் செய்தாலும் அதற்குத் தன் துணையின் உற்சாகமான ஒப்புதல் தேவை என்பதால் உங்களுக்குள் இருக்கும் கொடுப்பவர் அதை விரும்புவார். அதே போல இன்னொருவர் எதைச் செய்தாலும் அதற்கு துணையின் உற்சாகமான ஒப்புதல் தேவை என்பதால், உங்களுக்குள் இருக்கும் கொடுப்பவரால் தன்னிச்சையாக எதுவும் நடைபெறாது. இது நமக்கு நன்மை தரும் என்று பெறுகிறவரும் நம்புவார்… விரும்புவார்.

ஒப்பந்தம் இல்லாமலும் ஒப்புதல் இல்லாமலும் எதையும் செய்ய முடியாத நிலையில் கொடுப்பவராலும் பெறுபவராலும் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. இந்த விதியைத் தொடர்ந்து பின்பற்றினால் உங்கள் பாதிப்பில் மற்றவருக்கு நிறைவு கிடைக்காது. அடுத்தவரைக் காயப்படுத்தி நீங்கள் சந்தோஷமாக இருக்கவும் முடியாது. பிடிக்காத ஒரு விஷயத்தில் அக்கறை காட்டாவிட்டாலும் இருவருமே ஒவ்வொருவரின் உணர்வுகளை மதிக்கிறவர்களாக, அவற்றுக்கு முக்கியத் துவம் தருகிறவர்களாக மாற உதவுவதுதான் கூட்டு ஒப்பந்தக் கொள்கையின் நோக்கம்.

எந்த ஒன்றையும் செய்வதற்கு முன் துணையின் உற்சாகமான ஒப்புதல் தேவை என்பதால் அவரிடம், நான் செய்ய நினைக்கிற இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்கலாம். துணையின் பதிலை வைத்தே உங்களுடைய அடுத்தக்கட்ட செயல்பாடு இருக்கும். இந்தக் கேள்வியின் மூலம் துணையின் உணர்வை வெளிப்படுத்த அவருக்கு நீங்கள் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் முன் யோசனையில்லாமல் உங்கள் விருப்பத்துக்கு ஒரு செயலில் ஈடுபடும் மனநிலையில் இருந்தாலும் கூட்டு ஒப்பந்தக் கொள்கையைப் பின்பற்றும் நிலையில் உங்கள் விருப்பம் துணையின் விருப்பமின்றி நிறைவேறாது.

இதற்கு என்ன காரணம்? நீங்கள் இருவரும் தனித்தனியானவர்கள் அல்ல. ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் நன்மை தரக்கூடிய இலக்கை ஒரே நேரத்தில் அடைய இருவரும் இணைந்து செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம். துணையை வருத்தப்படுத்தி அதன் மூலம் கிடைக்கிற ஆதாயத்தை முக்கியமாக நினைக்கக்கூடாது என்கிற எண்ணம் இல்லாததால்தான், பல திருமணங்களில் பிரச்னைகள் வருகின்றன. முன்யோசனையற்ற பழக்கங்களுக்கு பதிலாக ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை காட்டுகிற இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்திப் பழகிக் கொண்டால் அதைப் பின்பற்றுவது சுலபமாக இருப்பதோடு,

தம்பதியரின் ஒற்றுமையும் கூடும். சுயமாக முடிவெடுக்கும் நிலையை கூட்டு ஒப்பந்தக் கொள்கை தடை செய்வதால் ஒவ்வொரு தீர்மானமும் எடுத்துச் செயல்படுத்தும் முன்பும் தம்பதியர் இருவரும் கலந்து பேச வேண்டியது கட்டாயமாகிறது. ஒருவரது முடிவை இன்னொருவர் உற்சாகமாக ஒப்புக் கொண்டால் அதைத் தொடரலாம். இல்லாவிட்டால் அதற்கான மாற்றுவழி பற்றி யோசிக்கலாம். இந்தக் கொள்கையை சரியாகப் புரிந்து கொண்டு வாழ்க்கை முறையாக்கிக் கொண்டால் மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.

உற்சாகமான ஒப்புதல் என்ற இலக்கோடு வாழப் பழகியதும், இருவரிடமும் உள்ள தீய தந்திரங்களும் முன்
யோசனையற்ற செயல்களும் கைவிடப்படும். தன் நலனுக்காக அடுத்தவரை பாதிப்புக்கு உள்ளாக்குவது என்ற பேச்சே இல்லாமல் போகும். துணையிடம் எதையும் கட்டளையாகச் சொல்லாமல் வேண்டுகோள் வைப்பது, கருத்து கேட்பது, துணைவரின் வார்த்தைகளுக்கும் அபிப்ராயங்களுக்கும் மதிப்பளித்து செயல்படுவது போன்றவற்றால் காதலைக் குலைக்கிற விஷயங்கள் தானாக மரித்துப் போகும். மூன்று தம்பதியரின் உதாரணங்களுடன் இந்த விஷயத்தை அணுகுவோம்.

1. அனுவும் சேகரும் ஒருவர் விஷயத்தில் ஒருவர் தலையிடாத தம்பதியர். அனு நினைத்தபோது நினைத்த இடத்துக்குக் கிளம்பிச் செல்வாள். சேகருக்குத் தெரியப்படுத்த மாட்டாள். சேகர் தினமும் குடித்துவிட்டு தாமதமாக வீடு திரும்புவார். தனது குடிப்பழக்கம் மனைவியை எப்படிப் பாதிக்கும் என்பதை சேகர் நினைத்துப் பார்த்ததே இல்லை. இருவருக்குமே அடுத்தவர் மனநிலை மற்றும் உணர்வுகளைப் பற்றிக் கவலை இல்லை. தனித்தனி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். விரைவில் பிரிவை சந்திக்கப் போகிறவர்கள்.

2. ஷோபாவும் ஷங்கரும் பெரும்பாலும் எல்லா விஷயங்களையும் விவாதிப்பார்கள். தான் எடுக்கும் முடிவு தன் துணையை எப்படி பாதிக்கும், நல்லது செய்யுமா, கெடுதல் தருமா என்பது வரை யோசிப்பார்கள். ஆனாலும், அவ்வப்போது ஒருவர் விரும்பாத முடிவை இன்னொருவர் எடுத்து நடைமுறைப்படுத்துவார்கள். ஒருசில விஷயங்களில் இருவரும் அடுத்தவரின் உணர்வுக்கு மதிப்பு தருவார்கள். இன்னொரு விஷயத்தில் அதைப் புறக்கணித்து அடுத்தவரின் மனம் நோகுமாறு நடந்துகொள்வார்கள். முக்கியமான விஷயங்களில் இந்தக் கருத்து வேறுபாடு தொடர்ந்தால் அது பிரிவை நோக்கி அழைத்துச் செல்லும்.

3. மித்ராவும் ரகுவும் இருவரின் ஒப்புதல் இன்றி எதையும் செய்ய மாட்டார்கள். அது பிடிக்காவிட்டாலும் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொள்வார்களே தவிர, ஒருவர் மற்றவரின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்ல மாட்டார்கள். சுயநலம் சார்ந்து பரஸ்பரம் ஒப்புக் கொள்ளும் இந்தப் போக்கும் அவர்களுக்குள் வேற்றுமையைக் கொண்டு வரும். முதலாவது தம்பதியர் தன் நலத்தை மட்டும் மையமாக வைத்துச் செயல்படுகிறார்கள். இது திருமண உறவில் பலன் தராது. அவர்களை விவாகரத்தில் தள்ளிவிடும்.

இரண்டாவது தம்பதியர் சரியான கோணத்தில் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், முன்யோசனை இல்லாமல் செயல்படுவதால் அவர்களுக்குள் பிரச்னைகள் தொடர்கின்றன. இதே நிலை நீடிக்கிற பட்சத்தில் அவர்களுக்குள் நெருக்கம் மறைந்து கருத்து வேறுபாடுகள் தோன்றும் அளவுக்கு உறவு பாதிக்கும். மூன்றாவது தம்பதியர் தன் துணைக்காக தியாகம் செய்வதாக நினைத்துக் கொண்டு, அதற்காக விருப்பமில்லாதவற்றையும் ஒப்புக் கொள்கிறார்கள். இவர்களது உறவு முறை நீடிக்கும்.

ஆனால், விருப்பமின்றி ஒப்புக்கொள்ளும் அவர்களது பழக்கத்தால் ஒற்றுமையின்மை என்கிற மூடத்தனம் தொடரும். விட்டுக் கொடுப்பதாக நினைப்பவர் தான் தனித்துவிடப்பட்டதாக உணர்வார். இவர்கள் இருவரும் சேர்ந்து உற்சாகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பேரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையின்மை விலகிவிடும், அதன் பிறகு இருவருக்கும் இடையில் பரஸ்பரம் நன்மை தரும் செயல்கள் நடக்கும். ஒற்றுமை கூடும்.

கூட்டு ஒப்பந்தக் கொள்கையைப் பின்பற்றுவதால் திருமண உறவை முறிக்கும் பல பிரச்னைகளில் இருந்தும் விடுபடுவதற்கான வழிகள் கிடைப்பதை உணர்வீர்கள். ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சி தரும் ஒருவருக்கொருவர் விரும்புகிற வகையில் உணர்வுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வழிகளைத் தெரிந்து கொள்வதற்கு அது உதவும். இந்தக் கொள்கையைப் பின்பற்றும் தம்பதியர் போனஸாக மீண்டும் மீண்டும் காதலில் விழுந்து காதலிலேயே திளைத்திருப்பார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸில் பிரச்சினையா ? (அவ்வப்போது கிளாமர்)
Next post கோவையில் தொடரும் தேடுதல் – நேற்று இரவும் முவர் கைது!! (உலக செய்தி)