By 28 May 2019 0 Comments

அமோக வெற்றி பெற்றார் நரேந்திர மோடி !! (கட்டுரை)

இந்தியத் தேர்தல் களம் பாரதீய ஜனதாக் கட்சியின் களமாக, பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு மட்டுமே சொந்தமான களமாக மாறியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 543க்கு 302 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக பிரதமராகிறார் நரேந்திர மோடி.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக எதிர்க்கட்சியாகும் வாய்ப்பை இழந்திருக்கிறது. 543 தொகுதிகளில் பத்து சதவீத உறுப்பினர்களைப் பெறும் கட்சிதான் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பெற முடியும்.

காங்கிரஸுக்கு 52 எம்.பிக்கள் மட்டுமே கிடைத்திருப்பதால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பு, காங்கிரஸுக்குப் பறிபோயிருக்கிறது. இப்படியொரு படு தோல்விக்கும் பா.ஜ.கவின் பிரமாண்டமான வெற்றிக்கும் வித்திட்ட காரணங்கள் என்ன?

ஆட்சிக்கு எதிரான அம்சங்கள் இருந்தும், அவை பற்றி எந்த விவாதமும் வாக்காளர்களிடம் செய்யாமல் ‘புல்வாமா தாக்குதல்’, ‘பாகிஸ்தான் மீதான தாக்குதல்’, ‘இந்துத்துவா’ ஆகிய பிரசாரங்களையும் ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்குப் பத்து சதவீத இட ஒதுக்கீடு’, ‘விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் நிதியுதவி’ என்ற இரு முக்கிய திட்டங்களையும் வைத்து, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தனக்கு அரசியல் வியூகம் வகுப்பதே, முழு நேரப்பணி என்பதை நிரூபித்துள்ளார் மோடி.

ராகுல் காந்திக்கோ, அது பகுதி நேரப் பணி. இந்தியத் தேர்தல் களத்தில், காங்கிரஸுக்கும் பா.ஜ.கவுமான போட்டி இதைத்தான் நிரூபித்தது. தெற்கிலிருந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் “ராகுல்தான் அடுத்த பிரதமர்” என அறிவித்தாலும், ‘ராகுலைப் பிரதமர்’ என்று கூறவே, காங்கிரஸ் கட்சி வெட்கப்பட்டு ஒதுங்கி நின்றது.

‘துணிச்சலான பிரதமர்’, ‘முடிவு எடுக்கும் பிரதமர்’, ‘பாகிஸ்தான் மீது தைரியமாகத் தாக்குதல் நடத்தும் பிரதமர்’ என்று நரேந்திர மோடியை, பா.ஜ.க முன்னிறுத்தியது.

காங்கிரஸ் கட்சியோ, கடைசி நேரத்தில் கையிலெடுத்த ‘ரபேல் பேரத்தை’ மட்டும், தேர்தல் வெற்றிக்கு நம்பியிருந்தது. ஏழைகளுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் வழங்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை, காங்கிரஸ் காரர்களே இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை. ஆகவே மோடிக்கும் ராகுலுக்குமான மோதலில் ‘தராசு ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்றது’ போல்தான் முதலிலேயே தொடங்கியது.

கூட்டணி விவகாரம், காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருந்துள்ளது. ராகுல் காந்தியும் விதிவிலக்கல்ல. டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பைக் கோட்டை விட்டார். பீஹாரில் ‘வம்படி’யாக மிரட்டல் விடுத்து, இராஷ்ட்ரிய ஜனதாத் தளத்துடன் வைத்த கூட்டணி, லாலு பிரசாத்தும் சிறையில் இருப்பதால் வீணாகிப் போனது. மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சட்டிஷ்கர் போன்ற மாநிலங்களில் மாயாவதி- அகிலேஷ் யாதவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கத் தவறினார். மேற்கு வங்கத்தில் கொம்யூனிஸ்டுகளை எதிர்ப்பதா அல்லது மம்தா பானர்ஜியை எதிர்ப்பதா என்ற குழப்பம் நிலவியது.

மஹாராஷ்டிராவில் சரத்பவாருடனான கூட்டணிக்கு புத்துயிர் கிடையாது. கர்நாடகத்தில் இருக்கின்ற கூட்டணியையும் குழப்பி, அது வெற்றிபெறாமல் காங்கிரஸாரே பார்த்துக் கொண்டனர். ஆந்திராவில் கடைசி நிமிடத்தில் சந்திரபாபு நாயுடுவுடனான கூட்டணியை நிராகரித்து, அங்கும் தோற்றார். மோடியைத் ‘திருடன்’ என்று வசை பாடி, குஜராத் வாக்காளர்களின் ஆதரவை இழந்தார்.

ஐந்து வருடத்தில் எவ்வித ஊழல் புகாரையும் பா.ஜ.க அரசாங்கத்துக்கு எதிராக நிரூபிக்க முடியாத ராகுல் காந்தி, திடீரென்று ‘மோடி திருடன்’ என்று பேசியது வடமாநிலங்களில் உள்ள மக்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. விளைவு, அவரே அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்தார்.

இதுவரை காங்கிரஸ் தலைவர்கள், ‘இந்துத்துவாவை’ எதிர்க்க மாட்டார்கள். அவர்களின் மய்யக்கருத்து, ‘மதச்சார்பற்ற இந்தியா’ என்ற அடிப்படையிலும் இந்துத்துவாவுக்கு மறைமுக ஆதரவு என்ற ரீதியிலுமே இருக்கும்.

ஆனால், ராகுல் காந்தி நேரடியாக இந்துத்துவாவை எதிர்த்தார். அதில் மோடியிடம் தோற்று விட்டார். பாகிஸ்தான் மீதான ‘சேர்ஜிக்கல் தாக்குதல்’, ‘ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல்’, ‘ சேர்ஜிக்கல் தாக்குதலில் எத்தனை பேர் செத்தார்கள்’ என்ற ராகுல் காந்தியின் கேள்வி, வடமாநில மக்களுக்குக் கோபத்தை அதிகரிக்கவே செய்தது.

இதன் விளைவு, வடமாநிலங்களில் ‘புல் இருந்த இடம் காணாமல் போவது’ போல், காங்கிரஸ் கட்சி காணாமல்ப்போய் விட்டது. ராகுல் காந்தியின் தலைமை இன்னும் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவும் இல்லை. “என் தலைமையை, ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர் தன்னை முன்னிலைப்படுத்தவும் இல்லை.

வயநாடு தொகுதியில், ராகுல் வெற்றி பெற்றாலும், ‘காந்தி குடும்பத்தின் தலைமைக்கு’ அப்பாற்பட்டு ஒரு புதிய தலைமையை நோக்கி, காங்கிரஸ் கட்சி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

பா.ஜ.கவின் அசைக்கமுடியாத, அமோக வெற்றிக்குச் சொந்தமான பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். கடந்த ஐந்தாண்டு, ஆட்சிக்கு மாற்றாக புதுவிதமாகத் தனக்கு 200 தொகுதிகளில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு, ஆட்சியைத் தொடருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பதைப் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா இருவரும் சாதித்து விட்டனர். வடமாநிலங்களில் முழு ஆதிக்கம் பெற்ற கட்சியாக, பாரதீய ஜனதாக் கட்சியை மாற்றி விட்டனர்.

தென் மாநிலங்களில், கர்நாடக மாநிலத்தில் வியக்கத்தக்க அளவிலும் தெலுங்கானாவில் விதை போடும் வகையிலும் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.கவுக்குத் தெற்கில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களும் வடக்கில் ஒடிசா மாநிலமும் மட்டுமே சவாலாக இருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஸ்டாலின் இரு வருடங்களுக்கு முன்பே உருவாக்கிய கூட்டணி, தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37இல் வெற்றி பெற்றிருக்கிறது. ‘மோடி எதிர்ப்பு அலை’ என்பது ஒரு புறம், ‘விட்டுக் கொடுக்கும்’ ஸ்டாலினின் தலைமைப் பண்பு இன்னொரு புறம் உதவியிருக்கிறது.

கடந்த முறை நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க மூன்றாவது கட்சியாக இருந்தது. இந்த முறை நாடாளுமன்றத்தில் தி.மு.க மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளது.

தேசிய அரசியலில், தமிழகத்தைச் சேர்ந்த கட்சி மூன்றாவது கட்சியாக வந்திருக்கிறது. ஆனால், இரண்டாவது முறையாகத் தமிழகத்தில் கிடைத்த வெற்றி, தேசிய அரசியலை நிர்ணயிக்கப் பயன்படாமல் போயிருக்கிறது. கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க முதல் வெற்றியைச் சுவைத்துள்ளது; அதுவும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. இது ஸ்டாலினின் தலைமைப் பண்புக்கு கிடைத்த வெற்றி.

இக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரண்டு எம்.பிக்களைப் பெற்று, அரசியல் அங்கிகாரத்தைப் பெறுகிறது. இரண்டு கொம்யூனிஸ்ட் கட்சிகளும் மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மாநிலங்களில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிதான் ‘அகில இந்திய’ அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல்களில் ஒன்பது இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைத் ‘தற்சமயம்’ தக்க வைத்துள்ளது. 101 சட்டமன்ற உறுப்பினர்களுடன் உள்ள தி.மு.கவை எதிர்கொள்ளத் திணறும் என்பது உறுதி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க படு தோல்வி அடைந்திருப்பதும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகனின் வெற்றியும் அ.தி.மு.கவின் ‘இரட்டை தலைமை’ மீது கேள்வி எழுப்பி நிற்கின்றது. ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் ஓபிஎஸ்ஸின் தென் மண்டலங்களில் இருந்துதான் வெற்றி கிடைத்திருக்கிறது.

கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகமும் படுதோல்வி அடைந்துள்ளன. ‘மோடி ஆதரவு’ நிலை எடுத்ததன் விளைவு அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

புதிய சக்திகளாக உருவான டி.டி.வி தினகரன், 21 இலட்சம் வாக்குகளைப் பெற்று, மூன்றாவது சக்தியாக வந்திருக்கிறார். ‘நாம் தமிழர்’ கட்சியின் சீமான் 15 இலட்சம் வாக்குகளைப் பெற்று, நான்காவது சக்தியாகவும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 14 இலட்சம் வாக்குகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது.மூன்று பேரும் சேர்ந்து 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருப்பது சாதனை.

ஆனால், இதில் தினகரன் வாக்குகள் தவிர மற்றவர்களின் வாக்கு ‘பற்றுதலான வாக்குகளா’ என்ற கேள்வி பிறந்திருக்கிறது. தி.மு.க கூட்டணி 37 இடங்களும் அ.தி.மு.க கூட்டணி ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருப்பது நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு ஆகும்.

இந்த முடிவால் தி.மு.கவுக்கு மத்திய அரசாங்கத்தில் ஆட்சி அதிகாரம் வரவில்லை. அதேபோல் தமிழகத்தில் அ.தி.மு.கவின் ஆட்சிக்கும் முழு சுதந்திரமாகவும் நடக்கப் போவதில்லை. பெரும்பான்மைக்குத் தேவையான 117க்குப் பதில் 123 சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.கவிடம் இருந்தாலும் அக்கட்சிக்குள் உள்ள ஏழு ‘எதிர்ப்பு எம்.எல்.ஏக்களும்’ என்றைக்கும் தலைவலியாகவே இருப்பார்கள்.

தேர்தல் முடிந்து விட்டது. ஆனால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அ.தி.மு.கவின் போராட்டமும் எப்படியாவது சட்டமன்றத் தேர்தலை விரைவில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற தி.மு.கவின் போராட்டமும் தொடருகிறது.Post a Comment

Protected by WP Anti Spam