ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகள் !! (கட்டுரை)

Read Time:15 Minute, 44 Second

ஒக்டோபரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரால் உருவாக்கப்பட்ட அரசமைப்பு நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, மிகநீண்ட காலத்தின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு பெரும் எழுச்சி கிடைத்திருந்தது.

அந்த 52 நாள்களில், வீதிக்கு இறங்கிய மக்களில் சிலர், “நாம் ரணிலுக்காகவோ, ஐக்கிய தேசியக் கட்சிக்காகவோ வீதிக்கு இறங்கவில்லை; மாறாக, எமது நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கவும் எமது அரசமைப்பாட்சியைக் காக்கவுமே களம் கண்டோம்” என்று சொல்லியிருந்தாலும், அவர்களின் எழுச்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சாதகமாகவே இருந்தது என்பதுடன், அந்த எழுச்சியின் பலனையும் அவர்களே அறுவடை செய்தார்கள்.

மிக நீண்ட காலத்தின் பின், ஐக்கிய தேசியக் கட்சி, தமக்குள் ஒன்றுபட்டு நின்ற ஒரு சந்தர்ப்பம் இது எனலாம். தலைமைப் போட்டியால் பிரிந்து நின்ற ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் கூட, ஒரே மேடையில், ஒரே குரலாக ஒலித்தார்கள். கட்சியினரிடையே புது உற்சாகம் உருவாகியிருந்தது.

உடனடியாகத் தேர்தல் ஒன்று வந்தால், தாம் வெல்வோம் என்று மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இருந்த நம்பிக்கை கூட, 52 நாள்கள் கூத்தின் இறுதி வாரங்களில், இல்லாமல் போயிருந்தது என்றால் அது மிகையல்ல.

பக்கம்சாரா வாக்காளர்கள் கூட, மைத்திரியும் மஹிந்தவும் செய்த அரசமைப்புக்கு விரோதமான காரியத்தைக் கண்டிப்புப் பார்வையுடனேயே நோக்கினார்கள். சில மஹிந்த ஆதரவாளர்கள்கூட, “மஹிந்த ஏன் இந்தக் கூத்தில் பங்காளியானார்” என்று குழம்பிக் கொண்டார்கள்.

மைத்திரி தன் பிரபல்யத்தையும் செல்வாக்கையும் முற்றிலும் இழந்திருந்த சூழலில், மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயர் 52 நாள்கள் கூத்தில் களங்கப்பட்டிருந்த நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தை முழுமையாக ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால், தம்முடைய பதவிப் பிரச்சினை முடிவடைந்து, தாமே அரசாங்கமாகப் பதவியேற்றதும் சீறிப்பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாம்பு, மீண்டும் சத்தமில்லாது தன்னுடைய புற்றுக்குள் சென்று ஒளிந்துகொண்டதைப் போலவே, அந்த எழுச்சியை ஐக்கிய தேசியக் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவும் சரி வரப் பயன்படுத்தாது, அருமையானதோர் அரசியல் வாய்ப்பை, வீணாக்கிக் கொண்டார்கள்.

மிகத் திறமையான அரசியல்வாதிகள், தமக்கான அரசியல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வார்கள். எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோர் இந்த ரகம் எனலாம்.

திறமையான அரசியல்வாதிகள், அரசியல் சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது, அதனை இறுகப் பற்றித் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வார்கள். ரணசிங்க பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இந்த ரகம் எனலாம்.

மூன்றாவதாக, வாய்ப்புகள் அமைந்தும், அதனைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாத அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். இந்த மூன்றாவது ரகத்தைப் போலத்தான், 52 நாள்கள் கூத்தின் பின்னரான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலையும் ஆகும்.

52 நாள்கள் கூத்தின் பின்னரான தம்முடைய நடவடிக்கைகள் ஊடாக, ஜனநாயகத்துக்கான, அரசமைப்புக்கான மக்கள் எழுச்சியாக, உருப்பெற்றதொரு பெரும் மக்கள் சக்தியை, கடைசியில் தமது பதவிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கானதோர் எழுச்சியாக, சுருக்கிவிட்டிருந்த சிறுமைத்தனமானதொரு விடயமாக மாற்றிவிட்டிருந்தார்கள்.

குறைந்தபட்சம் அரசமைப்புக்கு விரோதமான செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கெதிரான நடவடிக்கைகளையாவது முன்னெடுத்திருந்திருக்க வேண்டும். அரசமைப்பை வௌிப்படையாக மீறிய ஜனாதிபதிக்கெதிராக, ‘பழிமாட்டறைதல்’ பிரேரணை இல்லாவிட்டாலும், ஆகக் குறைந்தது நம்பிக்கையில்லாப் பிரேரணையை என்றாலும் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தை இயங்கவிடாது செய்தவர்களின், நாடாளுமன்றப் பதவிகளை இரத்துச் செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். சட்டவிரோத அரசாங்கத்தைச் சட்டவிரோதமாக ஏற்றுக்கொண்ட பொதுச் சேவை அதிகாரிகளை, பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களில் தவறுள்ள பட்சத்தில், அவர்களைப் பதவி நீக்கியிருக்க வேண்டும். இதனைச் செய்வதே 52 நாள்கள் காலப்பகுதியில் வீதிக்கிறங்கி ஜனநாயகத்தையும் அரசமைப்பையும் பாதுகாக்கப் போரடிய மக்களுக்குச் செய்யும் நியாயமான பிரதியுபகாரமாகவும் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உபகாரமாகவும் அமைந்திருக்கும்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இதில் எதையும் செய்யவில்லை. தமது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டதுடன் அவர்கள் அமைதியாகிவிட்டார்கள். இந்த நிலையில்தான், 2019இன் முதல் நான்கு மாதங்களும் கழிந்தன.

2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்தெழுந்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், இலங்கையைப் புரட்டிப் போட்டது. அச்சமும் பீதியும் நிறைந்த சூழலில், இலங்கை மக்கள் சிக்கிக்கொண்டார்கள். நாட்டு மக்களின் அதிர்ச்சியும் அச்சமும் துன்பமும் துயரமும் தொடரும் போதே, 2019இல் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது முதற்படியை, மக்களின் அச்சத்தையும் துன்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு நபர் ஆரம்பித்திருந்தார்.

அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதம் இது என்றால், அது மிகையல்ல. 2019 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிட முடியாத நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு கடந்த இரண்டு வருடங்களில் மஹிந்தவின் தம்பியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவார் என்ற கருத்து, பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

அதற்கேற்றாற் போல 2018 மே மாதத்தில், தன்னுடைய ‘வியத்மக’ என்ற செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்திய கோட்டாபய, அதனூடாக 2030க்கான இலங்கைக்கான தனது தூரநோக்குத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்போதும் சரி, அதன் பின்னரும் சரி, ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்று அவர் வௌிப்படையாக அறிவிக்கவில்லை.

‘வியத்மக’ அமைப்பை நாட்டுக்கான புத்திஜீவிகள் அமைப்பைப் போலவே, அவர் உருவகப்படுத்த முனைந்தார். ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் அவர் ஈடுபட்டிருப்பதை அனைவரும் உணரவே செய்தார்கள். ஆனால் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலும் சரி, ஜனாதிபதியாவதிலும் சரி, ஒரு பெரிய சிக்கல் அவருக்கு இருந்தது (இருக்கிறது!?), அதுதான் அவரது அமெரிக்கக் குடியுரிமை.

கோட்டாபய தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்கும் வரை, அவரால் இலங்கை ஜனாதிபதியாகவோ, ஏன் நாடாளுமன்ற உறுப்பினராகவோ கூட ஆக முடியாது. ஒரு சிங்கப்பூர் குடிமகன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக எவ்வாறு இருந்தார் என்று கேள்வியெழுப்பும் ‘தேசபக்தர்கள்’, ஓர் அமெரிக்கக் குடிமகன் எவ்வாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார் என்று கேள்வியெழுப்பாதது மட்டுமல்ல, அவரை ஆதரிப்பதும் பெரும் நகைமுரண்.

இந்த அமெரிக்கக் குடியுரிமைச் சிக்கல் கோட்டாவுக்குப் பெரும் தடையாக வந்து நின்றது (நிற்கிறது!?). இதனால்தான், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அடித்தளத்தை அவர் ‘வியத்மக’ ஊடாகப் போட்டுக் கொண்டாலும், போட்டியிடுவதுபற்றி அடக்கியே வாசித்தார்.

ஆனால், 2019 ஜனவரியில் கோட்டாவின் ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் தீவிரப்படுத்தப்பட்டதாக அப்போது வௌிவந்த செய்திகள் குறிப்பிடுவதை நாம் அவதானிக்கலாம். ஜனவரியில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்த கோட்டா, தமது ‘வியத்கம’ அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து, அனைவரும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை இலக்கு வைத்துப் பயணிக்க வேண்டும் எனவும், கூட்டணியாகவோ அல்லது தமது அணியாகவோ களமிறங்கி அதிகாரங்களைக் கைப்பற்றும் முயற்சிகளைக் கையாள வேண்டும் என கருத்துகளை முன்வைத்துள்ளதுடன், மக்கள் மத்தியில் தம் மீதான அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொண்டு, அதில் சாதகமான தன்மைகள் காணப்படும் பட்சத்தில், அடுத்த கட்ட அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியும் எனவும் தமது தலைமையில் முன்னோக்கிச் செல்லக்கூடிய சாதகமான காரணிகளை அமைத்துக் கொண்டால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ அதற்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தாம் இருவரும் கலந்துரையாடி உள்ளதாகவும் அந்தச் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளதாக, 2019 ஜனவரியில் வந்த செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒரு கூட்டத்தில், “மக்கள் தயார் என்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு நான் தயார்” என்று கோட்டா பேசியதாகவும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கோட்டாவுக்குத் தன்னுடைய மக்கள் செல்வாக்கை, தன்னுடைய தமையனாருக்கும் நிரூபிக்க வேண்டியதொரு தேவையேற்பட்டிருந்தது என்பது உண்மை. தன் தரப்பாக யாரை நிறுத்துவது என்று மஹிந்த ராஜபக்‌ஷ முடிவெடுக்கும் போது, அதில் தவிர்க்க முடியாத தெரிவாக, தான் அமைவதற்கான முஸ்தீபுகளைக் கோட்டா செய்யத் தொடங்கியிருந்தார் என்பது இந்தச் செய்திகளிலிருந்து தௌிவாகிறது. ஆனால் அதன்பின்னர் இந்தப் பேச்சுகள் அடங்கியே இருந்தன.

பெரும் அறிவிப்புகளோ, பரபரப்போ இடம்பெறவில்லை. ஆனால் தனக்கான ஆதரவாளர்களை, குறிப்பாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களின் ஆதரவை கோட்டா திரட்டிக் கொண்டிருந்தார். கோட்டாதான், மஹிந்த சார்பில் அடுத்ததாகப் போட்டியிடப் போகிறார் என்பது, பரவலாக அனைவராலும் உணரப்பட்டது.

2018 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மக்கள் பெரும் அச்சத்திலும், பீதியிலும் ஆழ்ந்திருந்த சந்தர்ப்பத்தில், தாக்குதல் நடந்து சில நாள்களிலேயே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கோட்டா அறிவித்தார்.

இது மிகப் பெரும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், கோட்டாவின் அறிவிப்பின் பின்னர் நடந்த கூட்டமொன்றில் பேசும்போது குறிப்பிட்டிருந்தார். நாடே சோகத்திலும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்திருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதை அறிவிப்பதற்கு கோட்டா பயன்படுத்த என்ன காரணம்? கோட்டா ஒரு பலமான ஜனாதிபதி வேட்பாளரா? கோட்டாவை தேர்தலில் எதிர்க்கப்போவது யார்?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா? (அவ்வப்போது கிளாமர்)
Next post மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..? (அவ்வப்போது கிளாமர்)