By 8 June 2019 0 Comments

அத்துரலிய தேரரின் போராட்டம் அடக்குமுறையின் தொடர்ச்சியே… !! (கட்டுரை)

பேரினவாத சிந்தனைகளால் சீரழிந்து போயிருக்கிற நாடு, அந்தச் சிந்தனைகளைத் திரும்பத் திரும்ப காவிச் சுமப்பது என்பது, பெரும் அச்சுறுத்தலானது. இலங்கை அப்படியானதொரு கட்டத்திலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

தென் இலங்கையின் அதிகார பீடங்கள் நினைக்கின்ற அனைத்தையும் காவி தரித்த பிக்குகளை முன்னிறுத்திக் கொண்டு, செய்துவிட முடியும் என்கிற கட்டம், பண்டா- செல்வா ஒப்பந்தக் கிழிப்போடு, அனைத்துச் சிறுபான்மையின மக்களுக்கும் உணர்த்தப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியையே, தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம்(!) நடத்தி, அத்துரலிய ரத்ன தேரரும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்கள் அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மீது, உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைச் சம்பந்தப்படுத்தி, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை ஆராய்வதும், அதன்போக்கில் அவர்களை விசாரிப்பதும் பிரச்சினைக்குரிய விடயங்கள் அல்ல. ஏனெனில், ஓர் அசாதாரண சூழ்நிலையில் சந்தேகங்களைக் களைவது அவசியமானது. ஆனால், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதும், அதற்குத் தேசபக்தி அடையாளம் சூட்டுவதும் அபத்தமானது.

கடந்த சில நாள்களாக, அத்துரலிய தேரருக்குப் பின்னாலும், ஞானசார தேரருக்குப் பின்னாலும் திரண்ட அனைத்துச் சக்திகளும் அதனையே பிரதிபலித்திருக்கின்றன.

ரிஷாட்டோ, அசாத் சாலியோ, ஹிஸ்புல்லாவோ உண்மையிலேயே கொள்கைகளின் வழி, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வழி நின்று, கடந்த காலத்தில் அரசியல் செய்திருக்கிறார்களா என்றால் ‘இல்லை’ என்பதே, பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், அவர்களை எதிர்கொள்வது என்பது, இன்னோர் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதிலிருந்து ஆரம்பிக்க முடியாது. அத்துரலிய தேரர், ரிஷாட்டையும் அசாத் சாலியையும் ஹிஸ்புல்லாஹ்வையும் பதவி நீக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த போது, அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் போராட்டங்கள் சில வடக்கு, கிழக்கிலும் முளைத்தன. அதில், வியாழேந்திரன் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் குறிப்பிடத்தக்கது.

மைத்திரியின் ஒக்டோபர் சதிப்புரட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அவர், எப்படியாவது தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை மீட்டுவிடத் துடிக்கிறார். அதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனைக் கையாண்டார். வியாழேந்திரன் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்த போது, அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மட்டக்களப்பு விகாரையின் சுமணரட்ன தேரர், தமிழ் மக்களுக்கு எதிராக, எவ்வாறான குரோதங்களைக் கடந்த காலங்களில் பேசியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். குறித்த தேரரும், அவரது குழுவும் தமிழ் மக்களின் காணிகளைச் சட்டத்துக்கு முரணாகக் கையகப்படுத்த முயன்ற சந்தர்ப்பங்களில், அந்தத் தேரரின் இனவாத முகத்தை, வியாழேந்திரனும் நேரடியாகப் பார்த்திருக்கிறார்.

அப்படிப்பட்ட நிலையில், பௌத்த சிங்களப் பேரினவாத சிந்தனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் கட்டத்தை, வியாழேந்திரன் அடைந்திருப்பது அவரின் பரிதாபத்துக்குரிய கட்டத்தையே வெளிப்படுத்துகிறது. அதற்குத் தமிழ் மக்களின் ஆதரவுச் சாயம் பூசுவது அயோக்கியத்தனமானது.

இலங்கை என்பது பௌத்த நாடு; பௌத்தத்தின் நிழலிலேயே மற்ற மதங்களும், அதனைப் பின்பற்றுபவர்களும் இருக்க வேண்டும் என்று போதித்துக் கொண்டிருக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர், நல்லிணக்கத்தின் குறியீடாகத் தென் இலங்கையால் முன்னிறுத்தப்பட்டார்.

தென்இலங்கை எப்போதுமே, தனக்கு அடிமைச் சேவகம் செய்பவர்களைத் தேடிக் கொண்டிருக்கும். அப்படியான ஒருவராகக் கர்தினால் மல்கம் ரஞ்சித் தன்னை திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அத்துரலிய தேரரின் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு வழங்கும் அளவுக்கான நியாயப்பாடுகளை, அந்தப் போராட்டம் கொண்டிருந்ததா என்பதை, ஞாயிறு திருப்பலிப் போதனைகளின் போது அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

அடக்குமுறைக்கும், அநியாயத்துக்கும் எதிராகப் போராடுவதற்குத் தைரியம் இல்லாவிட்டாலும், அவற்றை ஆதரிக்காமல் இருப்பதிலிருந்துகூடத் தங்களை மனிதர்களாக நிரூபிக்க முடியும். ஆனால், அவர் ஒரினத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு வலுச்சேர்க்கும் கட்டத்துக்குச் சென்றிருக்கிறார்.

ரிஷாட், அசாத் சாலி உள்ளிட்டவர்களுக்கு எதிரான போராட்டங்கள், அவர்களுக்கு எதிரான ஒன்றாக மட்டுப்படுத்தப்படவில்லை. அது, முஸ்லிம்களுக்கும் அவர்களின் மார்க்கத்துக்கும் எதிரான கட்டமாகவே தென் இலங்கையால் முன்னிறுத்தப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைபெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர்களில் அசாத் சாலியும் ஹிஸ்புல்லாஹ்வும் முக்கியமானவர்கள். தாங்கள், தென் இலங்கையின் விசுவாசமான அடிமைகள் என்று அதனூடாக நிரூபிக்க முனைந்தார்கள். ஆனால், தென் இலங்கையின் அதிகார பீடங்களுக்கு, தனக்குத் தேவையென்றால் அடிமைகளை வைத்துக் கொள்ளவும் தேவையில்லாத நேரத்தில் தூக்கியெறிந்துவிட்டு, புதிய அடிமைகளைச் சேர்க்கவும் தெரியும். இனியாவது, அடிமைச் சேவகத்துக்கு அப்பாலான அரசியல் உண்டு என்பதை அசாத் சாலிகளும் ஹிஸ்புல்லாஹ்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இயற்கை நீதிக்குப் புறம்பாக, இனவாத அரசியலை முன்னெடுக்கும் தென் இலங்கைக்கு எதிராக, முதன்முறையாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து, தீர்க்கமான முடிவை எடுத்திருக்கின்றன. அரசாங்கத்திலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமாச் செய்திருக்கிறார்கள்.

ரிஷாட் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், அவரைப் பதவி விலகக் கோருவது என்பது, ஒட்டுமொத்தச் சமூகத்தின் மீதான தாக்குதலின் ஒரு வடிவமே என்று, இராஜினாமாச் செய்த பின்னர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் தெரிவித்தார். எப்போதுமே, முதிர்ந்த அரசியல்வாதியாக மிக நிதானமாக செயற்படும் ஹக்கீம், தென் இலங்கையின் அடாவடித்தனங்கள் குறித்து வெளிப்படையாகவும் ஆத்திரத்தோடும் பேசிய காட்சிகளைக் காண முடிந்தது.

(இன்னொரு கட்டத்தில், தென் இலங்கையின் அச்சுறுத்தல்களால் ரிஷாட் பதவி நீக்கப்பட்டால், அது அவருக்கு முஸ்லிம்களிடம் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தும். அதனால், அவர் எதிர்காலத்தில் ஏகநிலைத் தலைமையை அடையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தலாம் என்கிற உணர்நிலை ஒன்று, ஏனைய முஸ்லிம் தலைமைகளிடம் இருந்தது. அதன்போக்கிலும், தங்களைத் தக்க வைப்பதற்காகப் பதவிகளை இராஜினாமாச் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இதனை, நிராகரிக்கவும் வேண்டியதில்லை. ஏனெனில், தேர்தல் வெற்றிகளே இங்கு அரசியல் தலைமைகளைத் தீர்மானிக்கின்றன.)

ஞானசார தேரரின் விடுதலையும் அத்துரலிய தேரரின் உண்ணாவிரதப் போராட்டமும் மைத்திரியின் ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்த நிகழ்ச்சி நிரலே என்கிற சந்தேகம், பல தரப்புகளிடமும் உண்டு. ஏனெனில், ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்துவது என்பது, சுதந்திரக் கட்சியில் எஞ்சியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் நம்பிச் செய்ய முடியாது. அப்படிச் செய்தாலும், ராஜபக்‌ஷக்கள் இல்லாத நிலையில் அவரால் ஐ.தே.கவை எதிர்கொண்டு வெற்றியும் பெற முடியாது.

அப்படியான நிலையிலேயே, குறித்த தேரர்களை முன்னிறுத்திக் கொண்டு, தன்னை நோக்கி பௌத்த பீடங்களை அரவணைத்துக் கொள்ளும் கட்டங்களை மைத்திரி செய்கிறார். அத்தோடு, தொடர் நெருக்கடிகளை வழங்குவதன் மூலம், முஸ்லிம்களை ஐ.தே.க அரசாங்கத்திடம் இருந்து பிரித்து, தனிமைப்படுத்தலாம் அல்லது வாக்குகளைச் சிதறடிக்கலாம் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். மக்களின் ஆணைக்கு எதிராகவும், நாட்டின் அரசமைப்புக்கு முரணாகவும் செயற்பட்டு, நம்பிக்கையை இழந்து நிற்கின்ற மைத்திரி, இன்றைக்கு பௌத்த சிங்களப் பேரினவாதம் என்கிற ஒற்றைப் புள்ளியைப் பிடித்துக் கொண்டு வெற்றிபெற நினைக்கிறார். இப்படியான அச்சுறுத்தல்களைப் பேரினவாத சிந்தனைகளுக்கு எதிராக ஒன்றிணைவதன் மூலம், சிறுபான்மை மக்கள் தடுக்க முடியும்.

இன்றைக்கு முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரினவாத அடக்குமுறை, கடந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. இங்கு பேரினவாதிகளுக்கு அடக்குமுறை புரிவதற்கு இழைத்தவர்கள் வேண்டும். அப்படியான கட்டத்தில்தான், அடம்பன் கொடிகளாக இருக்கின்ற சிறுபான்மை மக்கள், ஒன்றாகத் திரள வேண்டும். அது, தமக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்து கொண்டு, ஆரம்பிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனைவிடுத்து, மற்றவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, உள்ளுக்குள் பூரிக்க முடியாது. ஏனெனில், அந்தத் தாக்குதல்கள் இன்னொருமுறை எம்மீது நடத்தப்படலாம்.Post a Comment

Protected by WP Anti Spam