திடீர் திருப்பம்: அதிமுக கூட்டணி உடைந்தது; திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்

Read Time:3 Minute, 24 Second

thiruma-karunanithi.jpgதமிழக அரசியலில் திடீர் திருப்பமாக தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அக் கட்சி புதன்கிழமை இணைந்தது. இந்த இணைப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியின் தலைவர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் மற்றும் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து கூட்டணியில் இணைத்துக் கொண்டதாக அறிவித்தனர்.

“அதிமுகவில் பெரும் அவமதிப்பு ஏற்பட்டது. குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்டதோடு, வெற்றி வாய்ப்பே இல்லாத இடங்களே எங்களுக்குத் தரப்பட்டன. மேலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிமுகவினரையும் மனுச் செய்யுமாறு அக் கட்சித் தலைமை ரகசிய உத்தரவிட்டுள்ளது. இந்த துரோகத்துக்காக அதிமுக கூட்டணியிலிருந்து விலக நேரிட்டது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

“உழைப்பைப் பகிர்ந்து கொள்ளும்போது வெற்றியைப் பகிர்ந்து கொள்ள அதிமுக தயாராக இல்லை. உழைப்பை சுரண்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுச் செயல்பட்டனர்” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அதேவேளையில் திமுக கூட்டணியில் உரிய மதிப்பும் அதற்கேற்ப உள்ளாட்சித் தேர்தலில் இடங்களும் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இணைந்ததை வரவேற்றுப் பேசிய முதல்வர் கருணாநிதி. “வர வேண்டிய இடத்துக்கு வந்திருக்கிறார். முன்பே வந்திருக்கவேண்டும். இனம் இனத்தோடு சேரும். அந்த வகையில் திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ஒதுக்கீடாக விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். 2 நகரசபைத் தலைவர் பதவிகள் அவர்களுக்கு வழங்கப்படும்’ என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

செவ்வாய்க்கிழமை வரை அதிமுக கூட்டணியை ஆதரித்துப்பேசி வந்த திருமாவளவன் ஒரே நாளில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

thiruma-karunanithi.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சமரச பேச்சை தொடங்க பிரபாகரன் சம்மதம்
Next post கிர்கிஸ்தான் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ விமானம் மீது பயணிகள் விமானம் மோதியது