இந்தியாவும் கஜேந்திரகுமாரும் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 0 Second

குண்டுவெடிப்புகள், அதனைச் சார்ந்த அரசியல் பரபரப்புகளுக்குள், அமுங்கிப் போய்க் கிடந்த வடக்கு, கிழக்கு அரசியல் விவகாரங்கள், தேர்தல்கள் நெருங்கி வரத் தொடங்கியுள்ளதால், மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்றன.

தமிழ் மக்கள் பேரவையின் அண்மைய செயற்குழுக் கூட்டத்தில், பேசிய அதன் இணைத் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், “மாற்று அணி ஒன்றை வலுப்படுத்துவதற்கான, அவசியமும் சூழலும் எழுந்துள்ளது. அதற்குத் தமிழ் மக்கள் பேரவை, காத்திரமான பங்களிப்பைச் செய்ய வேண்டும்” என்று அழைப்பு விடுத்திருந்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை, தமது அணிக்குள் கொண்டு வருவதற்கு, பேரவை உதவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவரது அந்த அழைப்பு, அமைந்திருந்தது.

ஆனால், கஜேந்திரகுமார் அணியோ, அதற்குப் பிடிகொடுக்கத் தயாராக இல்லை. பேரவைக் கூட்டங்களிலும் அவர்கள் இப்போது பங்கேற்பதில்லை.

“சைக்கிள் சின்னத்தில் போட்டியிடத் தயார்” என்று, விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பையும் கூட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்து விட்டது. யாழ்ப்பாண நாதளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், கஜேந்திரகுமார் இதனைக் கூறியிருக்கிறார்.

விக்னேஸ்வரனைத் தமது கூட்டுக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்னமும் தயாராகவே இருக்கிறது. ஆனால், , விக்னேஸ்வரனின் அணிக்குள், தம்மை இணைத்துக் கொள்ள, முன்னணி தயாராக இல்லை. இந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

விக்னேஸ்வரனின் அணியில், ஈ.பி.ஆர்.எல்.எவ் இருக்கிறது. அந்த அணியுடன் சக கட்சியாக இணைந்து கொள்வதில், முன்னணிக்கு உடன்பாடு இல்லை.

ஆனால், விக்னேஸ்வரனின் கட்சியுடன் தனித்துக் கூட்டணி வைப்பதில் பிரச்சினை இல்லை என்பதே முன்னணியின் நிலைப்பாடு.

எனினும், அவருக்காகத் தொடர்ந்து காத்திருக்க முடியாது என்ற செய்தியை, கடந்த திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் கூறியிருக்கிறார்.

விக்னேஸ்வரன் – கஜேந்திரகுமார் அணிகளின் இணைப்பில், பிரச்சினைக்குரிய தரப்பாக இருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ் தான். ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும், முன்னணிக்கும் இடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் தான், விரிசல் ஏற்பட்டது.

அதற்கு முன்னர், இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடும் இருக்கவில்லை; கொள்கை ரீதியான விரிசலும் இருக்கவில்லை.

உள்ளூராட்சித் தேர்தலில், தம்முடன் கூட்டணி அமைப்பதாகக் கூறிவிட்டு, கடைசி நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் ‘காலைவாரி விட்டது’ என்பதே, முன்னணிக்கு இருக்கின்ற கோபம்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் தான், ஈ.பி.ஆர்.எல்.எவ் அங்கம் வகிக்கும் அணியில் இடம்பெறுவதில்லை என்ற உறுதியான முடிவை எடுத்திருக்கிறது முன்னணி.

ஈ.பி.ஆர்.எல்.எவ் மீது, தாம் சுமத்திய குற்றச்சாட்டு, அப்படியே தம் மீதும் விழுந்து விடும் என்ற அச்சம் தான், முன்னணி இந்த முடிவை எடுப்பதற்குக் காரணம் ஆகும்.

“உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஒரு கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு இணங்கி விட்டு, இந்தியா சென்ற சுரேஸ் பிரேமசந்திரன், அதற்குப் பின்னர் தனது முடிவை மாற்றினார், ஆனந்தசங்கரியுடன் கூட்டு வைத்துக் கொண்டார்” என கஜேந்திரகுமார் குற்றம் சாட்டியிருந்தார்.

இதன் மூலம், இந்தக் கூட்டை உருவாகவிடாமல் தடுத்தது இந்தியா தான்; இந்தியாவின் தாளத்துக்கே சுரேஸ் ஆடுகிறார் என்ற கற்பிதத்தை உருவாக்க முயன்றிருந்தார் கஜேந்திரகுமார்.

அந்த விடயத்தில் மாத்திரமன்றி, தமிழ் மக்கள் கூட்டணியை விக்னேஸ்வரன் அறிவிப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர், அவருடன், முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார்.

அந்தச் சந்திப்பின் போதும், ஈ.பி.ஆர்.எல்.எவ் இல்லாத கூட்டணியை அமைக்க முன்னணி வலியுறுத்தியது. அதற்கு விக்னேஸ்வரன் இணங்கவில்லை. “முன்னணியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை, இந்தியா விரும்பவில்லை என்று, விக்னேஸ்வரன் கூறினார்” என்பதையும் கஜேந்திரகுமார் வெளிப்படுத்தியிருந்தார். கடந்த வாரமும், இந்தக் கருத்தை, அவர் புதுப்பித்துக் கொண்டார்.

இவ்வாறாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இந்தியா வெறுக்கிறது; அதனுடன், ஏனைய தமிழ்க் கட்சிகள் கூட்டுச் சேருவதை, இந்தியா விரும்பவில்லை என்ற கருத்தை, அந்தக் கட்சியே வெளிப்படுத்தி வந்திருக்கிறது.

இந்தியாவின் எடுபிடியாகத் தாம் இருக்கமாட்டோம் என்று, தம்மை, இந்திய விரோதக் கட்சியாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்கள் மத்தியில் அனுதாப நிலையை அடைய முனைந்தது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இது கடந்த கால நிலைமை.

கடந்த திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “இந்தியாவை நாங்கள் எதிரியாகப் பார்க்கவில்லை; ஆனால், இந்தியா தான் எம்மை விரோதிகளாகப் பார்க்கிறது” என்று கஜேந்திரகுமார் கூறியிருக்கிறார். “அது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை” என்றும் அவர் அப்பாவியாகக் கேள்வி எழுப்பி இருந்தார்.

பூகோள அரசியலைத் தம்மை விடப் புரிந்தவர்கள் யாருமில்லை என்று, தமிழ் அரசியலில் பாடம் எடுப்பவர்கள், கஜேந்திரகுமாரும் அவரது அணியினரும் தான்.

பூகோள அரசியலையே கரைத்துக் குடித்தவர்களால், இந்தியாவை ஏன் விளங்கிக் கொள்ள முடியாமல் போனது என்பது தான் கேள்வி.

இந்தியாவை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறிய அதே செய்தியாளர் சந்திப்பில், அதற்கான காரணத்தைக் கண்டறியக் கூடிய ஒரு விடயத்தையும் கஜேந்திரகுமார் கூறியிருக்கிறார்.

“நாங்கள் இந்தியாவின் எடுபிடிகளாக இருக்கத் தயாரில்லை. அ​வர்களது நலன்களுக்கு, நாங்கள் இணங்கப் போவதில்லை; மக்களின் நலன்களை வைத்துப் பேரம் பேசுவோம் என்பதால், அவர்கள் சொல்வதைக் கேட்கக் கூடிய தரப்புகளுடன், இணைந்து செயற்படுமாறு இந்தியா சிலவேளைகளில் சொல்லியிருக்கலாம்” என்று கஜேந்திரகுமார் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இடத்தில், அவர், தாங்கள், இந்தியாவின் சொல்லைக் கேட்கின்ற இடத்தில் அல்லது, அவர்களின் எடுபிடிகளாக இருக்கத் தயாரில்லை என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதைவிட, தம்மைத் தவிர, மற்றவர்கள் அனைவரும், ஒன்றில் இலங்கை அரசாங்கத்தினது அல்லது இந்தியாவினது முகவர்களாகத் தான் இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதன் மூலம், தாமே, தூய்மையானவர்கள் என்று, அடையாளப்படுத்த முனைகிறார்.

அதேவேளை, இந்தியாவினது நோக்கு நிலையைத் தவறானது என்று தெளிவாக அடையாளப்படுத்தவும் அவர் தயங்குகிறார்.

தமிழர் அரசியலை, இந்தியா தனது தேவைக்காகப் பயன்படுத்துகிறது என்று கூறப்படும் கருத்து, இந்தியாவினது தவறு அல்ல எனவும், வல்லரசான இந்தியா, தனது நலன்களைத் தான் முதலில் பார்க்கும் என்றும் அவரே நியாயப்படுத்துகிறார்.

தமிழ்த் தேசம், நாளை தனிநாடானாலும் கூட, தமிழீழமும், தனது நலன்களையே பார்க்கும் என்றும் அவர் சுறியிருக்கிறார்.

ஒரு பக்கத்தில், இந்தியா தனது நலன்களை முன்னிலைப்படுத்துவதை நியாயப்படுத்திக் கொண்டே, இந்தியாவின் நலன்களுக்கு உட்பட்டுச் செயற்படும் முகவர்களாக ஏனைய தமிழ்க் கட்சிகளை அவர் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் நலன்களுக்கு இடமளிக்க முடியாது, என்ற முன்னணியின் நிலைப்பாடு தான், இந்தியா அவர்களை விரோதியாகப் பார்ப்பதற்குக் காரணம்.

இந்தியா மாத்திரமன்றி, உலகின் எந்தவொரு நாடுமே தமது நலன்களைத் தான் முதலில் பார்க்கும்; அதற்கே முக்கியத்துவம் கொடுக்கும். சர்வதேச தலையீட்டை வலியுறுத்தும் முன்னணிக்கு, இந்தப் பூகோள அரசியல் தெரியாதது அல்ல.

இந்தியாவையோ, சர்வதேச சமூகத்தையோ முற்றிலுமாக ஒதுக்கி விட்டு இலங்கைத் தமிழர்களால் தீர்வு ஒன்றை எட்டிவிட முடியாது. இந்தியாவினது நலன்களையும் புறக்கணிக்காமல், தமிழர்களின் நலன்களையும் விட்டுக் கொடுக்காமல், சாணக்கியமான அரசியலை முன்னெடுப்பது தான் முக்கியமானது.
எதிரிகளாகவும் விரோதிகளாகவும் இந்தியாவை அடையாளப்படுத்தி, வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள முற்படுவது, முன்னணியின் விவேகமான செயற்பாடு அல்ல.

அதைவிட, ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் இந்தியாவுக்கும் இடையில், நெடுங்காலத் தொடர்பும் உறவும் இருந்தது. அதனைத் தெரிந்து கொண்டே, அந்தக் கட்சியுடன் கூட்டு வைக்க, கஜேந்திரகுமார் இணங்கியிருந்தார்.

உள்ளூராட்சித் தேர்தலில், காலை வாரிய பின்னர் தான், ஈ.பி.ஆர்.எல்.எவ் இந்தியாவின் தாளத்துக்கு ஆடுகிறது என்று அவர்களுக்குத் தெரிய வந்திருக்கவில்லை.

சுரேஸ் பிரேமசந்திரன், இந்தியாவின் எடுபிடி என்று கூறிவிட்டு, மீண்டும் அவருடன் கூட்டுச் சேர்வது தான் முன்னணிக்கு இப்போது உள்ள பிரச்சினை.

அதுமட்டுமன்றி, முன்னணியுடன் சேருவதை இந்தியா விரும்பவில்லை என்று கூறிய விக்னேஸ்வரனை, இன்னமும் தாங்கள், இந்தியாவின் முகவர் என்று அடையாளப்படுத்தும் முடிவுக்கு வரவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

ஏனென்றால், விக்னேஸ்வரனுக்கான கதவை இன்னமும் அவர்கள் மூடவில்லை. இருவரும் எதிரெதிர் அணியில் இருப்பது உறுதியானால் அவரும் கூட, இந்தியாவின் முகவர் ஆக்கப்பட்டு விடுவார்.

ஆக, தேர்தல் தேவைகளுக்காக, தமது அரசியலுக்காக, தமக்கு எதிராக யாரெல்லாம் இருக்கின்றரோ அவர்களையெல்லாம் இந்தியாவின் முகவராக, அடிவருடியாக, அடையாளப்படுத்தி வந்துள்ள கஜேந்திரகுமார், இந்தியா ஏன் தம்மை எதிரியாகப் பார்க்கிறது என்று, கேள்வி எழுப்புவது வேடிக்கையானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் என்னை நம்புகிறேன்!! (மகளிர் பக்கம்)
Next post ஒரு டாக்டர் ஆக்டரான கதை!! (மருத்துவம்)