சிறுபான்மை வாக்குவங்கிதான் வெற்றியை தீர்மானிக்கிறதா? (கட்டுரை)

Read Time:16 Minute, 47 Second

இலங்கையின் வாக்கு வங்கி அரசியல் கட்டமைப்பு என்பது, நாம் விரும்பியோ, விரும்பாமலோ இன-மத தேசியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு விட்டது.

கொள்கைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறு அமைந்தாலும், வாக்கு வங்கியின் அத்திவாரம் என்பது, இன்றும் இன, மத தேசிய அடிப்படைகளில்தான் இருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் இலங்கையின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாக, நாம் அவதானிக்கக்கூடியதொரு விடயம், கட்சி சார்ந்த வாக்குவங்கியின் வீழ்ச்சியாகும்.

சுதந்திர இலங்கையில், முதன் முதலில் ஆட்சிப்படியேறி, இலங்கையைப் பலமுறை ஆண்ட கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகும். இந்தக் கட்சிக்கு, விசுவாசமான வாக்கு வங்கியைப் பற்றிக் குறிப்பிடும்போது, பொதுவில் “கபுவத் கொள, மறுவத் கொள” (வெட்டினாலும் பச்சை; கொன்றாலும் பச்சை) என்று குறிப்பிடுவார்கள். ஆனால், இன்று இந்த வாக்குவங்கி, கணிசமானளவில் குறைவடைந்துள்ளது. இது ஒரு உதாரணம்தான்.

இந்த நிலை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமல்ல; பாரம்பரியமாக, இது போன்ற வாக்கு வங்கியைக் கொண்டிருந்த அனைத்துக் கட்சிகளினதும் நிலை இதுவாகத்தான் இருக்கிறது.

கட்சி விசுவாச வாக்கு வங்கி, பலமாக இருந்திருக்குமானால், இலங்கையில் கடைசியாக நடைபெற்ற தேர்தலான 2018 உள்ளூராட்சித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் புதிதாகப் பிறந்திருந்த மொட்டுக் கட்சி, (பொதுஜன பெரமுன) பாரம்பரியக் கட்சிகளைவிட, அதிக வாக்குவீதத்தைப் பெற்றிருந்திருக்க முடியாது. சிறுபான்மை இன வாக்கு வங்கிகளிலும் இதையொத்ததொரு போக்கை நாம் அவதானிக்கலாம்.

வடக்கு, கிழக்கு தமிழர்களின், ஏறத்தாழ ‘ஏக’ பிரதிநிதிகள் என்ற நிலையில், உருவாகிய காலம் முதல் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குவங்கி சதவீதத்திலும் சரிவை அவதானிக்கலாம்.

அந்த வாக்குகள், மாற்றுத் தமிழ்க் கட்சிகளையும் தேசியக் கட்சிகளையும் நோக்கிச் செல்வதையும் நாம் அவதானிக்கலாம். ஆகவே, நிச்சயமாக “வெட்டினாலும் கொன்றாலும் நான் இந்தக் கட்சிதான்” என்ற மனநிலையிலான வாக்கு வங்கி, அருகிவரும் விடயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இது நல்ல விடயம்தான்.

குறிப்பாக, ஜனநாயகமொன்றுக்கு இது மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில், கண்மூடித்தனமான விசுவாசம் என்பது, அது தலைமைக்காகட்டும், கட்சிக்காகட்டும், கொள்கைக்காகட்டும், மிகவும் ஆபத்தானதும், பல சந்தர்ப்பங்களில் அழிவைத்தரக் கூடியதுமான விடயமாகும்.

ஆகவே, கண்மூடித்தனமான கட்சி ஆதரவு எதுவுமின்றிய வாக்குவங்கி ஒன்று உருவாவது, நல்ல விடயம்தான். ஆனால், இங்கு கட்சி ஆதரவு மட்டும் என்பதல்லப் பிரச்சினை.

கட்சி ஆதரவு வாக்குவங்கி என்பது, வீழ்ச்சி கண்டுகொண்டு வந்தாலும், இன மய்ய வாக்குவங்கி என்ற அடிப்படைக் கட்டமைப்பு, இன்னும் மாறவில்லை.

பன்மைத்துவ தன்மை வாய்ந்த கொழும்பு நகரில், இனம், மதம் சார்ந்த தேசியவாதத்தைத் தாண்டிய, ஒரு சிறிய வாக்குவங்கியொன்று இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த இலங்கைத் தீவைப் பார்க்கும் போது, புவியியல்சார் குடிப்பரம்பலுக்கும் இனம், மதம் சார் வாக்குவங்கிக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவே இருக்கிறது.

இலங்கையின் குடிப்பரம்பல் என்பது, முழுத் தீவு ரீதியாக ஓரினம், மிகப்பெரும் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், மாகாணம் சார்ந்து, மாவட்டம் சார்ந்து, சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள மாகாணங்களும் மாவட்டங்களும் உண்டு. குறிப்பாக, வடக்கு, கிழக்கின் நிலை இதுதான்.

ஆகவே, வாக்கு வங்கி இனமய்ய ரீதியில் கட்டமைக்கப்பட்டுள்ள காரணத்தால், யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களவரோ, மாத்தறையில் ஒரு தமிழரோ, முஸ்லிமோ அவர்களது இனம், மதம் ஆகிய அடையாளங்களைத் தாண்டி, தேர்தலில் வெற்றிபெறக் கூடிய நிலை என்பது கடினமானதே.

கட்சி ஆதரவு மனப்பான்மையை, இலங்கையின் வாக்கு வங்கி இழந்துகொண்டிருக்கலாம். ஆனால், இனம், மதம் சார் அடையாள அரசியல், இன்னும் வலுவடைந்து கொண்டு வரும் துர்ப்பாக்கிய சூழலைத்தான், நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், குறிப்பாக சிங்கள-பௌத்த வாக்குவங்கியின் பாசமிகு வேட்பாளரான மஹிந்த ராஜபக்‌ஷவின் தோல்வியைத் தொடர்ந்து, இலங்கையின் வாக்குவங்கி பற்றிய ஒரு மாயை உருவானது. அதாவது, சிறுபான்மை வாக்குவங்கியின் பலம் பற்றி, அதீதமான, அடிப்படையற்ற நம்பிக்கைகள் உருவாகத் தொடங்கின.

பெரும்பான்மை வாக்குவங்கியானது, சிறுபான்மை வாக்கு வங்கியின் பலம் பற்றிய அதீதமான யதார்த்தத்துக்கு ஏதுவற்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பது ஒரு புறமிருக்க, சிறுபான்மை வாக்குவங்கி, தன்னுடைய பலத்தைத் தானே உயர்வாக எண்ணத்தொடங்கியது என்பது, அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.

எப்போதும் ஒரு விடயத்தை, நாம் மறந்துவிடக்கூடாது. இலங்கை வாக்குவங்கியின் ஏறத்தாழ 75% ஆன வாக்குவங்கி, சிங்கள வாக்குவங்கி என்பதோடு, ஏறத்தாழ 70% ஆன வாக்குவங்கி, சிங்கள-பௌத்த வாக்குவங்கியாகும். ஆகவே, சிறுபான்மை வாக்குவங்கி என்பதுதான், வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்குவங்கி என்பது, ஒரு மாயை.

ஆனால், இந்த மாயை உருவாகக் காரணம் என்ன? இரண்டு நிலைமைகள் ஒருசேர நிலவும்போது, சிறுபான்மை வாக்குவங்கி தீர்மானிக்கும் பலத்தைக் கொண்டுள்ளதான தோற்றப்பாடு எற்படுகிறது. சிங்கள வாக்குவங்கி, கட்சி ரீதியில் இருகூறாகவோ, அதிகமாகவோ பிரிந்து நிற்கும் போது, எந்தவொரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்க முடியாத நிலை சிங்கள வாக்குவங்கிக்கு ஏற்படுகிறது. அந்தச் சூழ்நிலையில், சிறுபான்மை வாக்குவங்கி என்பது பெருமளவுக்கு ஒன்றுசேர்ந்து நின்று, ஒரு தரப்புக்கு ஆதரவளிக்கும் போது, சிங்கள வாக்குவங்கியால் மட்டும், அறுதிப்பெரும்பான்மையைப் பெறமுடியாத ஒரு தரப்பு, பெருமளவுக்கு ஒன்றுபட்டு நிற்கும் சிறுபான்மை வாக்குவங்கியின் ஆதரவால், அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று, வெற்றி பெறுகிறது. இது, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி, சிறுபான்மையினருக்கே உண்டு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி விடுகிறது.

பெரும்பான்மையின வாக்குவங்கி பிரிந்திருக்கும் போதுதான், சிறுபான்மையின வாக்கு வங்கி, தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதைச் சிறுபான்மையினர் புரிந்துகொள்வது அவசியம்.
ஏனென்றால், சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல்சக்தி, இதனை நன்கே புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான் இன்று, அதன் முயற்சிகள், சிங்கள-பௌத்த வாக்குவங்கியைச் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் கீழ், ஒன்றிணைக்கும் பாதையில், வலுவாகப் பயணித்துக் கொண்டிருப்பதுடன், ஒன்றுபட்டிருக்கும் சிறுபான்மை வாக்குவங்கிகளைச் சிதறடிப்பதிலும் கவனமாக உள்ளது.

ஒரு மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ‘அச்சம்’ என்பது முக்கிய ஆயுதம் என்பது, அரசியல் தந்திரோபாயங்கள் உரைக்கும் நூல்கள் பல, சுட்டிக்காட்டும் முக்கிய விடயமாகும். இந்த அச்ச எண்ணமும் பாதுகாப்பின்மை தொடர்பிலான உணர்வுமே, தேசியவாதங்களின் எழுச்சிக்கு, முக்கியமான காரணம் எனச் சில ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆகவே, மக்களின் துரதிர்ஷ்டமோ, இத்தகைய பேரினவாதிகளின் அதிர்ஷ்டமோ உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள், இந்தப் பேரினவாத சக்திகளுக்குத் தேவையான அரசியல் சந்தர்ப்பத்தை, உருவாக்கிக் கொடுத்துள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சமும் பீதியும், சிறுபான்மையினரை ‘அடுத்தவனாக’ உணரும் நிலையும் பெரும்பான்மையினத்தை ஒன்றுபடுத்தவல்லதொரு சந்தர்ப்பமாகப் பேரினவாதிகள் காண்கிறார்கள்.
தாராளவாதிகளை நிராகரிக்கவும் பெரும்பான்மையினருக்கான பாதுகாப்பு என்ற மாயையை விதைக்கவும் பேரினவாத ஒற்றுமை ஒன்றுதான் வழி என்ற பகீரதப் பிரயத்தனத்தில், பேரினவாத அரசியல் சக்திகள் இயங்குவதைக் காணலாம்.

இதெல்லாம் சிறுபான்மையினரை எதிர்க்கும் செயல் என்பதைவிட, சிறுபான்மையினரை எதிர்ப்பதைக் காரணம் காட்டி, பெரும்பான்மையினரை ஒன்றிணைக்கும் முயற்சி என்ற பார்வையைத் தான், இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

2015 ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர், சிறுபான்மையினர் என்னைத் தோற்கடித்துவிட்டார்கள் என்ற தொனியில் மஹிந்த ராஜபக்‌ஷ பேசியிருந்தார். ஆனால், அதற்குள் ஓர் உட்பொருள் உண்டு. அதாவது, சிங்களவர்கள் ஒன்றுபட்டிருந்தால், சிறுபான்மையினருக்கு அந்தத் தோற்கடிக்கும் பலம் போயிருக்காது என்பதுதான் அது.

ஆகவே, இம்முறை ராஜபக்‌ஷ முகாமைப் பொறுத்தவரையில், அவர்களது தந்திரோபாயமானது, சிங்கள-பௌத்த வாக்கு வங்கியை ஒன்று திரட்டுவதாகத்தான் இருக்கிறது.

இலங்கை, வாக்கு வங்கியின் கட்சி ஆதரவு நிலை, கட்சி விசுவாசம் என்பதெல்லாம் மிகவும் வீழ்ச்சி கண்டிருக்கலாம். ஆனால், இன அடையாளப் பிரக்ஞை, இனம், மதம் சார்ந்த தேசியவாத உணர்வு என்பது, இன்னமும் மங்கவில்லை என்பதை, நாம் இன்று கண்டுகூடாகவே கண்டுகொண்டிருக்கிறோம்.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், சமூக ஊடகங்களெங்கும் நிறைந்து வழியும் இனரீதியான வன்மமும் காழ்ப்புணர்வுமே இதற்குச் சாட்சிகள் ஆகும்.

ஆகவே, எதிர்வரும் தேர்தலுக்கான ராஜபக்‌ஷ முகாமின் தந்திரோபாயம் என்பது, ‘சிங்கள-பௌத்த வாக்கு வங்கியை’ ஒன்றுதிரட்டி, அதன் பலத்தில் மட்டும் வெற்றிகாண்பதில் குறியாக இருக்கிறது.

ராஜபக்‌ஷ முகாம் சார்ந்து போட்டியிடுவது யாராக இருந்தாலும், இந்தத் தந்திரோபாயம் மாறாது. கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற முகம், இந்தத் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதற்கு, மிகப் பொருத்தமானதொரு முகமாகும்.

பயங்கரவாதம் என்ற அச்சத்தின் மீது, கட்டியெழுப்பப்பட்ட ‘சிங்கள-பௌத்த தேசியவாத மீட்சி’ என்ற குரலுக்கு, பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காக்கும் வல்லமை வாய்ந்த இரட்சகன் என்ற பிரசார முகம், கோட்டாவுக்கு மிகப் பொருத்தமானதாகவே அமையும். ஆயினும், அவர்களது துரதிஷ்டம், கோட்டாபய ராஜபக்‌ஷவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகும்.

இந்த ஆரோக்கியப் பின்னடைவிலிருந்து, அவர் முழுமையாக மீண்டுவந்தால், அவர்தான் ராஜபக்‌ஷ முகாமின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்பதில், இன்றைய நிலைமைகளின் கீழ், எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அவ்வாறு, அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டாலும், ராஜபக்‌ஷ முகாமிலிருந்து முன்வரப்போகும் முகம், நிச்சயமாக ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியை ஒன்றுதிரட்டக்கூடியதொரு பிரபல முகமாகவே இருக்கும்.

அப்படியானால், ராஜபக்‌ஷ முகாமின் வேட்பாளரை எதிர்த்து நிற்கப்போகும் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பின், வேட்பாளர் யார் என்ற கேள்விக்கான பதில் முக்கியமானது. இதுவரை, ஐக்கிய தேசியக் கட்சி, இது பற்றி எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வௌியிட்டிருக்கவில்லை.

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேட விளையும் போது, எழுகின்ற முதலாவது கேள்வி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரா? அல்லது, கடந்த இருமுறை செய்ததுபோல, வேறொரு நபரைப் பொது வேட்பாளராக நிறுத்துவாரா? என்பதுதான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுயமாக முடிவெடுங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post ஆப்பிலும் டிரேடிங் செய்யலாம்!! (மகளிர் பக்கம்)