விக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் !!(கட்டுரை)

Read Time:14 Minute, 51 Second

கடந்த வாரம், கொழும்பில் இடம்பெற்ற சமூக சேவையாளர் க.மு.தருமராஜாவின் நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாரை நோக்கி,“…நாம் இணைந்து செயற்பட்டால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை…” என்று கூறினார். அதுவும், “மறைந்த தருமராஜா தற்போது இருந்திருந்தால், தன்னோடு, கஜேந்திரகுமார் இணைய வேண்டிய அவசியத்தை, வலியுறுத்தி வந்திருப்பார்” என்றும் குறிப்பிட்டார்.

குறித்த நினைவுக் கூட்டத்தில் உரையாற்றியவர்களில் அதிகமானவர்கள், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் இணைவு என்பது, காலத்தில் கட்டாயம், தவிர்க்க முடியாதது என்கிற தோரணையிலேயே உரையாற்றினர்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணி பலப்பட வேண்டும் என்றால், இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்தப் பின்னணியிலேயே, விக்னேஸ்வரன் கஜேந்திரகுமாரை நோக்கி, அதிகம் இறங்கி வந்து, கூட்டணிக்கான அழைப்பை விடுத்தார். ஆனால், அதற்கு, அந்தக் கூட்டத்திலேயே, கஜேந்திரகுமார் பதிலை அளித்துவிட்டார். அந்தப் பதில், ஒன்றும் புதிய பதில் அல்ல. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பிப்பதற்கு முதலும், ஆரம்பித்த பின்னும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சொல்லி வந்த அதே பதில்தான் அது. “சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்பை, புதிய கூட்டணிக்குள் இணைத்தால், நாம் இணைய மாட்டோம்” என்பதேயாகும். இந்தப் பதில், விக்னேஸ்வரனுக்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ உவப்பான ஒன்றல்ல.

நினைவுக்கூட்டத்தில், விக்னேஸ்வரன் ஆற்றிய உரைக்கு, முக்கியத்துவம் கொடுத்துச் செய்தியாக்கிய ஊடகங்கள், கஜேந்திரகுமாரின் பதிலை அதிகம் கண்டுகொள்ளவில்லை. அல்லது, முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. இதனால், விக்னேஸ்வரனின் கஜேந்திரகுமாருக்கான அழைப்பு என்கிற விடயம் மேலெழுந்திருந்தது.

அதுவும், கஜேந்திரகுமாரை அதிகமாகப் புகழ்ந்தும், தன்னிலையைத் தாழ்த்திக் கொண்டும் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பாக, அது ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டது. விக்னேஸ்வரனின் முழுமையான உரையும் அப்படித்தான் இருந்தது. இது, கஜேந்திரகுமாருக்கான நெருக்கடியாக, ஊடகங்களால் மாற்றப்பட்ட பின்னணியில், ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி, முன்னணி பதிலளித்திருக்கின்றது. அந்தப் பதில், விக்னேஸ்வரனுக்கும், ஊடகங்களிடமும் முன்னணி தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கும் அதே பழைய பதில்தான்.

சில வாரங்களுக்கு முதல், யாழ்ப்பாணத்தில் ஊடகச் சந்திப்பொன்றில் பேசிய கஜேந்திரகுமார், “தமிழ் மக்கள் பேரவை, விக்னேஸ்வரனின் முகவர்கள் போல செயற்படுகிறது. அதனால்தான், பேரவையின் கூட்டங்களில், தற்போது கலந்து கொள்வதில்லை” என்று சாடியிருந்தார். அத்தோடு, தமிழ் மக்கள் பேரவை, கடந்த காலத்தில் வெளியிட்ட தீர்வுத் திட்ட யோசனைகளை, முன்னணியே தயாரித்தது என்றும் கூறியிருந்தார்.

பேரவை உருவாக்கப்பட்ட காலத்தில், அதனை நம்பிக்கையோடு எதிர்கொண்ட தரப்புகளில், முன்னணியும் அதன் ஆதரவுச் சக்திகளும் முக்கியமானவை. தேர்தல் அரசியலுக்கு அப்பாலான அமைப்பு என்று, ஆரம்பத்தில் பேரவை கதை அளந்தாலும், அது, தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப்படைச் சிந்தனை கொண்ட தரப்புகளின் பங்கெடுப்போடு உருவாக்கப்பட்ட போது, அது, தேர்தல் அரசியலைத் தவிர்த்துவிட்டு, நிலைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை.

அதுவும், கூட்டமைப்பின் ஏக நிலைக்கு எதிரான, அழுத்தக்குழுவாகத் தம்மை முன்னிறுத்தும் போது, பேரவையால் தேர்தல் அரசியலுக்கு அப்பால் நிற்கவே முடியாது. ஆனால், பேரவையின் வைத்தியர்களாலோ, புலமையாளர்களாலோ அதனைத் தைரியமாகச் சொல்ல முடியாது இருந்தது என்பதும்தான், இன்றைக்குப் பேரவை செல்லாக் காசாகி இருப்பதற்குக் காரணமாகும். அதுதான், கஜேந்திரகுமார், பேரவையை நோக்கி, ‘முகவர்கள்’ என்று கூறும் நிலையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆரம்பத்திலேயே, பேரவை தேர்தல் அரசியல் சார்ந்த நிலைப்பாடுகளை, வெளிப்படையாக முன்னெடுத்திருந்தால், அது பலமான கூட்டணியொன்றை, கூட்டமைப்புக்கு எதிராகக் கட்டமைப்பதில், சிலவேளை வெற்றி கண்டிருக்கும்.

ஆனால், பேரவையில் அங்கம் வகித்தவர்களுக்கு, தங்களுக்கிடையிலுள்ள ஒருவரைத் தலைவராக ஏற்பதிலோ, அடையாளப்படுத்துவதிலோ உடன்பாடு இருக்கவில்லை. ஏனெனில், சேர்ந்து கொண்டவர்களில் அதிகமானவர்கள், தோல்வியின் முகங்களாக அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

அதனால்தான், விக்னேஸ்வரன் போன்ற ஒருவரின் தேவை, பேரவைக்கு ஏற்பட்டது. அதனால், விக்னேஸ்வரனை உள்ளீர்ப்பதற்காகத் தேர்தல் அரசியலுக்கு அப்பாலான அமைப்பு என்று, ‘திருகுதாள வேலை’களைப் பேரவை செய்ய வேண்டி வந்தது. அது, பேரவை மீதான மக்களின் நம்பிக்கையைச் சிறிய காலத்துக்குள்ளேயே, கலைப்பதற்கும் காரணமானது.

பேரவை ஒருங்கிணைக்கும் தேர்தல் கூட்டில், விக்னேஸ்வரன் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும், அவர் தலைமையிலான அணியின் அனைத்துப் பிடியும் தம்மிடம் இருக்க வேண்டும் என்பதையே, முன்னணியும் அதன் ஆதரவுச் சக்திகளும் விரும்பின.

கூட்டமைப்போடு விக்னேஸ்வரன் முரண்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், அவரைத் தமிழ்த் தேசியத்தின் அடுத்த தலைவராக, முன்னணியின் முக்கியஸ்தர்கள் பேசித்திருந்ததும், அந்த எதிர்பார்ப்பில்தான்.

அதாவது, விக்னேஸ்வரன் என்கிற ஒற்றை மனிதன், எந்தவித அமைப்புகளின் பின்புலமும் இன்றி, தேர்தல் கூட்டணியை அமைக்க வேண்டும். அதில், தாங்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க வேண்டும். அது, விக்னேஸ்வரன் காலத்துக்குப் பின்னர், தேர்தல் கூட்டு, ஒட்டுமொத்தமாகத் தங்களின் கைகளுக்கு வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலானது.

குறிப்பாக, விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையால், விக்னேஸ்வரனுக்கான ஆதரவு அலையொன்று ஏற்பட்டது. அதனைப் பிடித்துக் கொண்டு, கூட்டமைப்பிலிருந்து அவர் வெளியேறி, தேர்தல் கூட்டணியை அமைந்திருந்தால், அது மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கும். அப்போது, கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேரவையும் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எப்பும் காட்டிய முனைப்பு அதிகமானது.

ஆனால், விக்னேஸ்வரன் வௌிச்சென்றுவிடாதிருக்குச் சம்பந்தன் கையாண்ட விதம், மாகாண சபையின் பதவிக்காலம் முடியும் வரை, அவரை அதற்குள்ளேயே வைத்திருந்தது. அத்தோடு, அவருக்காக எழுந்த ஆதரவு அலையையும் கேள்விக்குறி ஆக்கியது.

இந்த இடைப்பட்ட காலத்தில், முன்னணிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் என்பது, பேரவையைக் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக அலைக்கழித்துவிட்டது.

அது, விக்னேஸ்வரனின் கட்சியை வடிவமைப்பதில் அதிக காலத்தையும் கரிசனையையும் வெளிப்படுத்தி வந்த போதிலும், கஜேந்திரகுமாரையோ, முன்னணியின் அடுத்த நிலைத் தலைவர்களையோ, தங்களோடு இணங்க வைக்க முடியவில்லை. அது, பேரவையில் பெரும் தோல்வியாக முடிந்தது.

இன்றைக்கு, ஒப்புக்கு விக்னேஸ்வரன் தலைமையில் கட்சியொன்று உருவாக்கப்பட்டுவிட்டது; நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டார்கள். அவ்வப்போது, அறிக்கைகளும் வெளிவருகின்றன. அதற்கு அப்பால், ஒரு கட்சியாக, மக்களை நோக்கித் தங்களைக் கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளைத் தமிழ் மக்கள் கூட்டணி செய்திருக்கவில்லை. அதற்கான ஆளணியும் அதனிடம் இல்லை. பேரவைக்குள் இருப்பவர்கள், குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து, வீதிக்கு வருவதற்கே தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களைக் கொண்டு, கட்சியொன்றை நடத்த முடியாது. அப்படிப்பட்ட நிலையில், ஆளணியும் அர்ப்பணிப்பும் உள்ள தொண்டர்களின் தேவை என்பது தவிர்க்க முடியாதது.

அதன்போக்கிலேயே, முன்னணியைத் தம்மோடு இணைத்துக் கொண்டு, தேர்தல் கூட்டணியை அமைக்க வேண்டிய தேவை விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதற்காக அவர், எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்கவும் தயாராக இருக்கிறார்.

கஜேந்திரகுமாரையோ, முன்னணியையோ பொறுத்தளவில், விக்னேஸ்வரனுக்குப் பின்னரான தலைமை என்பது, எந்தவித தலையீடுகளும் இன்றித் தமக்கு வழங்கப்படும் என்கிற நிலை உருவாகும் வரை, விக்னேஸ்வரன் தலைமையிலான தேர்தல் கூட்டில், அங்கம் வகிக்கச் சம்மதம் வெளியிடமாட்டார்கள்.

சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்கள், அடுத்த கட்டத் தலைமைத்துவத்துக்குப் போட்டியாக வருவார்கள் என்கிற நிலையிலேயே, ஈ.பி.ஆர்.எல்.எப்பை நோக்கி, ஒட்டுக்குழு வாதத்தை முன்வைக்கிறார்கள். கூட்டமைப்புக்குள்ளும், பேரவைக்குள்ளும் ஈ.பி.ஆர்.எல்.எப்போடு, கடந்த காலங்களில் இணைந்து இயங்கிய கஜேந்திரகுமாரின் மேற்கண்டவாதம், தர்க்க ரீதியில் சரியானதுதானா என்கிற கேள்வி, அனைத்துத் தரப்புகளாலும் எழுப்படுகின்றது.

தமிழ்த் தேசிய அரசியலில், கூட்டமைப்பின் ஏகநிலைக்கு மாற்றாக, களத்தைச் சமநிலைப்படுத்துவதற்கான அணியொன்றின் தேவை, தவிர்க்க முடியாதது. ஆனால், மாற்று அணியாகத் தங்களை முன்னிறுத்துபவர்கள், ஏகநிலைக்கான ஏக்கத்தோடு வருவது என்பது அபத்தமானது.

பகிரப்பட்ட அதிகாரங்களுடன் தேர்தல் கூட்டணிக்கு செல்லாது, அதிகாரங்களை ஒட்டுமொத்தமாக வைத்துக் கொள்ள நினைக்கும் எவரும், மாற்று அரசியல் குறித்தோ, அதன் அர்த்தப்பாடுகள் குறித்தோ, பேசுவதற்குத் தகுதி இல்லாதவர்கள். அப்படியான நிலையொன்றையே, விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் இடையிலான முரண்பாடுகள், காட்டிக் கொண்டிருக்கின்றன.

அதுவும், ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்’ எனும் சிந்தனையோடு இருக்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது, தமிழ் மக்களைக் காப்பாற்றக் கடவுள் வந்தாலும் முடியாது என்கிற நிலையே இருக்கின்றது.

அப்படியான நிலையொன்றில் நின்றுகொண்டு, மாற்று அணி, மாற்று அரசியல் என்றெல்லாம் பேச, எவ்வளவு ‘வாய்க்கொழுப்பு’ வேண்டும் என்று கேட்கத்தோன்றுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோல்நோயை போக்கும் கருஞ்சீரகம் !! (மருத்துவம்)
Next post உறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…!! (அவ்வப்போது கிளாமர்)