By 17 August 2019 0 Comments

மருத்துவ மூட நம்பிக்கைகள்…!! (மருத்துவம்)

அன்றாட வாழ்க்கையில் மருத்துவரீதியாக பல மூடநம்பிக்கைகள், மருத்துவம் சம்பந்தமான கேள்விகள், சந்தேகங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கான சரியான பதில் தெரியாமலேயே இன்னும் அவற்றை பின்பற்றி வருகிறோம். சில சந்தேகங்களுக்கு அறிவியல் ரீதியான தெளிவு பெற வேண்டியது அவசியம் என்கிற பொது மருத்துவரான விஷால், அது பற்றி இங்கே விளக்குகிறார்.

நம்பிக்கை: மழையில் நனைந்தால், குளிரில் வெளியே சென்றால் சளி பிடிக்கும். ஐஸ்க்ரீம் சாப்பிட்டால், ஐஸ் வாட்டர் குடித்தால் சளி பிடிக்கும்.

நிஜம்: இது தவறான நம்பிக்கை. சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இந்த மாதிரியான காரணங்களால் சளி பிடிக்கலாம். மற்றவர்களுக்கு வைரஸ் கிருமி தொற்றாலும், அருகில் இருப்பவர் தும்மும்போது, இருமும்போது கிருமி பரவுவதால் மட்டுமே சளி பிடிக்கும். அதேபோல ஐஸ்க்ரீம், பழச்சாறு, ஐஸ்வாட்டர் போன்றவை அசுத்தமான, மாசடைந்த நீரினால் தயாரிப்பதால் வேண்டுமானால் கிருமித்தொற்று ஏற்படலாம். சீதோஷ்ண நிலை காரணமாக எல்லோருக்கும் சளி பிடிக்காது.

நம்பிக்கை: பாதாம் சாப்பிட்டால் ஆண்மை விருத்தியாகும்.நிஜம்: இப்போது எல்லோருமே ஜங்க் ஃபுட் எடுத்துக்கொள்வது, தவறான வாழ்க்கைமுறை போன்றவற்றால் மலட்டுத்தன்மைப் பிரச்னைக்கு உள்ளாகிறார்கள். பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் ஆன்ட்டி ஆக்சிடண்ட், வைட்டமின், புரோட்டீன் போன்றவை மிகுந்துள்ளதால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று வேண்டுமானால், சொல்லலாமே தவிர, அது உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவும் என்று சொல்ல முடியாது.

நம்பிக்கை: எந்த நோய் வந்தாலும் ஆன்ட்டிபயாடிக் மாத்திரை பலனளிக்கும்.

நிஜம் : பொதுமக்களின் ஆன்டிபயாட்டிக் பயன்பாடு மருத்துவர்களுக்கு ஒரு சவாலான பிரச்னையாக இருக்கிறது. உடலை துன்புறுத்தக்கூடிய ஆன்ட்டிபயாட்டிக் உபயோகம் என்று சொல்லலாம். இப்படி சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் ஆன்ட்டிபயாடிக் மாத்திரை சாப்பிடும்போது, உடல் ஆன்ட்டிபயாடிக் எதிர்ப்புத்திறனை பெற்று விடும்.

பின்னாளில் அதிக ஆற்றல் உள்ள மாத்திரை கொடுத்தால் கூட உடல் அதை ஏற்றுக்கொள்ளாது. சிறிது நாட்களுக்கு முன் புதுடெல்லியில் ஒரு நோயாளிக்கு New Delhi Metallo-beta lactamase (NDM 1) strain இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகப்படியான ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரை எடுத்துக் கொள்வதால் வரக்கூடிய NDM1 பாக்டீரியா ஒருவருக்கு தாக்கியது என்றால், அவரை எந்த மருத்துவத்தாலும் இறப்பிலிருந்து காப்பாற்ற முடியாது.

நம்பிக்கை: ஒருமுறை மருத்துவர் எழுதித்தரும் மருந்துச்சீட்டை காண்பித்து, மறுமுறை அதே பிரச்னை வந்தால் அதே மருந்தை வாங்கி சாப்பிடலாம்.

நிஜம்: நிறையபேர் இந்த தவறை செய்கிறார்கள். எல்லா காய்ச்சலும் ஒரே பாக்டீரியாவால் வராது. எல்லா பேதியும் ஒரே காரணத்தால் ஏற்படாது. மருத்துவர் எதனால் பிரச்னை வந்திருக்கிறது என்பதை சோதனை செய்து அதற்கேற்ற மருந்து கொடுப்பார்.

எது தேவை, எது தேவையில்லை என்று மருத்துவர் முடிவு செய்வார். எல்லா சளிப்பிரச்னைக்கும் ஒரே ஆன்ட்டிபயாடிக் மருந்து கொடுக்கவும் மாட்டார். அதேபோல ஒரு மாத்திரையை 7 நாட்கள், 5 நாட்கள் என்று ஒரு கோர்ஸாக எடுத்துக் கொள்ளச்சொல்லி மருத்துவர் சொன்னால், முழுவதுமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் சரியாகிவிட்டது என்று தானாகவே 2, 3 நாட்களில் நிறுத்தக் கூடாது. இப்படி செய்தால், அந்த பாக்டீரியா முழுவதுமாக அழிந்து போகாமல் உடலில் தங்கி எதிர்ப்புத்தன்மை பெற்றுவிடும். அடுத்த முறை அதே ஆற்றலுள்ள ஆன்ட்டிபயாடிக் மாத்திரை தரமுடியாது. அதைவிட ஆற்றலுள்ள மாத்திரை கொடுத்தால்தான் நோய் குணமாகும் நிலைக்கு உடல் வந்துவிடும். ஒரு நிலை தாண்டும் போது, மாத்திரைக்கு கட்டுப்படாமல், ஊசி போட்டால்தான் சரியாகும் என்றாகிவிடும்.

நம்பிக்கை : கிரகணத்தின் போது
கர்ப்பிணிப்பெண்கள் வெளியேவந்தால், பிறக்கும் குழந்தை முடமாக பிறக்கும்.

நிஜம்: இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. கிரகணத்தின்போது சூரிய, சந்திரனின் கதிர்வீச்சு அதிக ஆற்றலுடன் இருக்கும். அந்த நேரங்களில் நேரிடையாக பார்க்கக் கூடாது. கூலிங் கிளாஸ் அணிந்து பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். மற்றபடி பக்க விளைவுகளெல்லாம் கிடையாது.

நம்பிக்கை : அடிக்கடி ஷேவிங் செய்தால் மீசை சீக்கிரம் வரும்.

நிஜம்: முடி அடர்த்தியாக வருவதெல்லாம், பரம்பரைத்தன்மையைப் பொறுத்தது. ஒருவருக்கு தலையில் வழுக்கை வருவது, மீசை லேட்டாக முளைப்பது என்பதெல்லாம் அவரவர் மரபணுக்கு தகுந்தவாறு மாறுபடும். ஒரு இடத்தில் முடி கொட்டுகிறது என்றால், தானாக அந்த இடத்தில் வேறு முடி முளைத்துவிடும்.

நம்பிக்கை : வைட்டமின் மாத்திரை சாப்பிட்டால் உடல் ஆற்றல் பெறும்.

நிஜம்: சாதாரணமாக நம் உணவிலேயே போதுமான வைட்டமின் சத்துக்கள் கிடைக்கிறது என்பதால் சமச்சீரான உணவை எடுத்துக் கொண்டாலே போதும். குறிப்பிட்ட வைட்டமின் பற்றாக்குறை ஒருவருக்கு ஏற்பட்டால் மருத்துவரின் அறிவுரையோடு வைட்டமின் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். நாமாகவே கற்பனை செய்து கொண்டு கடைகளில் வைட்டமின் மாத்திரை வாங்கி சாப்பிடக் கூடாது.

நம்பிக்கை : குழந்தைக்கு தடுப்பூசி போட்டால், காய்ச்சல் வந்தால்தான் அது வேலை செய்வதாக அர்த்தம்.

நிஜம்: அந்தந்த குழந்தையின் உடல்நிலைக்குத் தகுந்தவாறு, சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். சிலருக்கு வராது. தடுப்பூசி உடலுக்குள் செலுத்தினாலே அது தானாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும். காய்ச்சல் வரவில்லை என்றால் வேலை செய்யவில்லை என்றெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

நம்பிக்கை : சொடுக்கு எடுப்பதால், நெட்டி முறிப்பதால் ஆர்த்தரைட்டிஸ் வரும்.

நிஜம்: மூட்டு இணைப்புகளுக்கு இடையில் உள்ள திரவமே நெட்டி முறிக்கத் தூ்ண்டுகிறது. அப்படி செய்யும்போது, அந்த இணைப்புகள் உரசும் ஒலிதான் அது. அதனால் ஆர்த்தரைட்டிஸ் வரும் என்று சொல்ல முடியாது.

நம்பிக்கை : காய்ச்சல், சளி என்றால் பழங்கள் சாப்பிடக்கூடாது.

நிஜம்: பழங்களில் வைட்டமின், மினரல் சத்துக்கள் நிறைந்து உள்ளது. பழங்களை சாப்பிடுவதால் காய்ச்சலால் ஏற்படும் பலவீனம் போகும். ஆஸ்துமா, வீசிங் இருப்பவர்கள் கடுமையான சளி இருக்கும்போது வேண்டுமானால் சிட்ரஸ் பழங்களை தவிர்க்கலாம். மற்றபடி எல்லா நேரங்களிலும் பழங்கள் தாராளமாக சாப்பிடலாம்.Post a Comment

Protected by WP Anti Spam