வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். – மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! :த ஜெயபாலன்
ஓகஸ்ட் 4 காலை 10 மணியளவில் கிழக்கு இலண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிழக்கு லண்டனில் தனது வீட்டில் இருந்து சிறு தொலைவில் உள்ள ரெட்பிறிஜ் ஸ்ரேசனில், ரெயினின் முன் பாய்ந்து இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிழக்கு லண்டன் வர்தகப் பிரமுகரும் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் நிறுவனருமான கோபாலகிருஸ்ணன் தம்பதிகளின் ஒரே மகனான அகிலன் கோபாலகிருஸ்ணனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு முன் சிறந்த ஒளிமயமான ஒரு எதிர்காலம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் இவ்விளைஞர் இந்த விபரீத முடிவுக்குச் சென்றுள்ள செய்தி கேட்டு அகிலனுடைய பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இருபது வயது மாணவன், எப்போதும் மகிழ்ச்சியான சுபாவமுடைய அகிலனின் முடிவு அவருடை பெற்றோருக்கு பேரிடியாக அமைந்து உள்ளது. லண்டனில் அகிலனுடைய தற்கொலையுடன் கடந்த மூன்று வாரங்களில் இடம்பெற்ற நான்காவது துயர சம்பவமாக இது அமைந்து உள்ளது. யூலை 30ல் கிழக்கு இலண்டன் வோல்தம்ஸ்ரோ பகுதியில் வாழ்ந்த மூன்று பிள்ளைகளின் தாயார் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னதாக யூலை நடுப்பகுதியில் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். யூலை 19ல் ஒருவரும் அதற்கு ஒருசில தினங்களுக்கு முன்னர் இன்னுமொருவரும் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
அகிலன் கோபாலகிருஸ்ணன் (20):
அகிலன் தனது வாழ்வை முடித்துக் கொள்வதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக முதல் நாள் மாலை தனது நண்பர் வீட்டில் விருந்துண்டு மிகவும் மகிழ்சியுடனேயே இருந்து உள்ளார். காலையில் வழமைபோல் தனது பல்கலைக்கழக விடுமுறை கால வேலைக்குப் புறப்பட்டார். அதற்கு முன்னதாக அவரது பெற்றோர் அவருக்கு புதிய கார் ஒன்றையும் அன்பளிப்பாக ஓடர் செய்திருந்தனர். சிக்கிரம் வீட்டுக்கு வந்தால் அதற்கு இன்சுரன்ஸ் கோட் எடுக்கும்படி தாயார் அகிலனை கேட்டு இருந்தார். வழமையான நாட்கள் போலவே அன்று காலையும் அமைந்தது.
ஆனால் அகிலன் காலை 8:30 மணியளவில் வீட்டை விட்டு நீங்கும் போது ஒரு கடிதத்தை வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அக்கடிதத்தை பெற்றோர் சிறிது நேரத்திலேயே பார்த்தனர். அதில் அவர் பெற்றோர்களுக்கு தனது அன்பைத் தெரிவித்து இருந்ததுடன் தனது நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களை எழுதி அவர்களுக்கும் தனது அன்பைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அதைப் படித்த பெற்றோர் இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும் அவர் வழமையாக பஸ் எடுக்கும் பகுதிகளுக்குச் சென்று தேடி உள்ளனர். அந்த புகையிரத நிலையத்திற்கு வெளியேயும் சென்று தாயார் தேடி உள்ளார். ஆனால் அகிலன் புகையிரதத்தை பயன்படுத்தாததால் அவர் உள்ளே சென்று பார்க்கவில்லை.
சில மணிநேரங்களின் பின்னர் பொலிசார் வீட்டுக்கு வந்து அந்த துயர செய்தியைத் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட அடையாள அட்டையைக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்தனர்.
அகிலனுக்கு சிறிது காலத்திற்கு முன் நிகழ்ந்த ஒரு விபத்தில் காயமேற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. அதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு அதற்கும் சிகிச்சை வழங்கப்பட்டு இருந்தது. அந்த விபத்தின் பின்னர் அவருக்கு மன அழுத்தங்கள் வந்து மறைந்துள்ளது. ஆயினும் எல்லா இளவயதினர் போலவும் அவரும் ஒரு சுதந்திரப் பறவையாகவே இருந்துள்ளார். கல்வியிலும் தனது திறமையைக் காட்டி வந்துள்ளார். பெற்றோருடனும் குறிப்பாக தந்தையுடனும் மிகவும் நெருக்கமானவர். ஆனால் இன்று அவர்கள் முன் கேள்விக்குறியாகிச் சென்றுள்ளார். வழமையான உத்தியோகபூர்வமான அலுவல்கள் தொடர்கிறது. அவற்றின் முடிவிலேயே உடல் இறுதிக் கிரியைகளுக்கு கையளிக்கப்படும்.
சிவாகரன் சுப்பிரமணியம் (33):
சுப்பிரமணியம் சிவாகரன் (சிவா) (33 வயது) யூலை 19ம் திகதியன்று தனது வீட்டில் தூக்குப் போட்டு இறந்துள்ளார். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2001 முதல் வோல்தம்ஸ்ரோவில் வாழ்ந்து வந்தவர். இவரது இறுதிக் கிரியைகள் யூலை 27ல் மனோபார்க்கில் இடம்பெற்றது.
சிவா என்று அறியப்பட்ட சிவாகரன் கட்டிடத் தொழிலாளியாக இருந்த கடின உழைப்பாளி என்றும் மிகவும் நட்புடன் பழகக் கூடியவர் என்றும் அவர் இவ்வாறு ஒரு முடிவுக்கு வருவார் என்பதை நம்ப முடியவில்லை என்றும் இவரை சிறிதுகாலம் அறிந்திருந்த நண்பர் ஒருவர் தெரிவித்தார். சிவாகரனின் இறுதி நிகழ்விலும் கலந்தகொண்ட அந்நண்பர் இப்படியாக மிக இளம்வயதில் ஏன் இப்படி எம்மவர்கள் தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்று வேதனையுடன் வினவினார்.
கடின உழைப்பாளியான சிவாகரன் தனது குடும்பத்தாரையும் நல்ல நிலைக்கு கொண்டுவர உழைத்ததாக தெரிவித்திருந்தார் வோல்தம்ஸ்ரோ வர்த்தகப் பிரமுகர் கோபாலகிருஸ்ணன். அவர் மேலும் குறிப்பிடுகையில் தனது அன்புக்குரிய மணப் பெண்ணையும் மிகுந்த கஸ்டங்களின் மத்தியில் வரவழைத்த சிவா இப்படி இடைநடுவில் எல்லோரையும் பிரிந்து செல்ல முடிவெடுத்தது அதிர்ச்சியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவர் தேசம்நெற் இற்குத் துயரத்தை பகிர்ந்துகொண்ட வேளையில் தனது ஒரே புதல்வனும் இப்படி ஒரு விபரீத முடிவுக்கு வருவார் என்பதை கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை.
வதிவிட உரிமைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த சிவாகரன் தான் விரும்பிய பெண்ணை ஒரு வருடத்திற்கு உள்ளாகவே பிரித்தானியாவுக்கு அழைத்திருந்தார். அவர் தனது திருமணத்திற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.
கட்டிட வேலைகளை விட்டுவிட்டு பிரெய்ற்றனில் உள்ள ஒருவரது கடையில் பணியாற்றி வந்த சிவாகரன் கடைக்கு மேலே உள்ள வீட்டிலேயே தங்கி இருந்தார். சம்பவ தினம் கடையில் வேலை செய்து கொண்டிருந்த அவர் மேலே இருந்த தான் தங்கி இருந்த வீட்டில் வைத்து தூக்குமாட்டி தன்னுயிரை மாய்த்துக் கொண்டு உள்ளார்.
இவரது இந்த முடிவால் இவரை நம்பி வந்த இவருடைய அன்புக்குரிய பெண் அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளார். இறுதி நிகழ்வுகளிலும் இவர் மயங்கி வீழ்ந்து மருத்துவ வண்டியில் அழைத்துச் செல்லும் நிலையேற்பட்டது.
பரராஜசிங்கம் பரமானந்தன்:
சிவகரனுடைய துயர நிகழ்விற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரேயே பரராஜசிங்கம் பரமானந்தன் தற்கொலை செய்து கொண்டார். தனது 40களின் நடுப்பகுதியில் இருந்த இவரும் தூக்குமாட்டி தனது வாழ்வை முடித்துக் கொண்டார். சவுத்தோலில் வாழ்ந்த இவருடைய இறுதிக் கிரியைகள் யூலை 28ல் நடைபெற்றது. பாரமானந்தனும் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தவர். இவருடைய பெற்றோர்கள் இலங்கையில் உள்ளனர்.
மூன்று குழந்தைகளின் தாயார்:
தற்கொலை செய்து கொண்ட பெண் ஜேர்மனியில் இருந்து எட்டு மாதங்களுக்கு முன்பாக தனது குடும்பத்தினருடன் லண்டன் வந்திருந்தார்கள். மூன்று குழந்தைகளின் தாயாரான இவர் தனது வீட்டிலேயே தூக்கு மாட்டி இறந்து உள்ளார்.
குறிப்பாக லண்டன் தமிழ் சமூகத்தில் 20 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களிடையே தற்கொலை வீதம் அதிகமாகக் காணப்படுகிறது. இவர்கள் பல்வேறு காரணங்களாலும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இந்த விபரீதமான முடிவை எடுக்கின்றார்கள். தூக்குப் போட்டுக் கொள்வதும், ஓடும் புகையிரதத்தின் முன் பாய்வதும் இவர்கள் பொதுவாகக் கைக் கொள்ளும் தற்கொலை முறைகளாக உள்ளது.
தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் இருண்ட எதிர்காலம், வாழ்க்கையில் விரக்தி, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், கடன்சுமை போன்றன பொதுவாக மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தள்ளுகின்றது. மேலும் நரம்புத் தொகுதியின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் தாக்கமும் தற்கொலை உணர்வைத் தூண்டுவதும் மருத்துவ காரணங்களாக கூறப்படுகிறது.
Thangsfor… THESAM.NET
Filed Under: செய்திகள்
Comments (4)
tarma
August 8th, 2008 at 0:50
my heartfelt condolance goes to those families
Ravi
August 8th, 2008 at 12:54
They may pressed to pay money to LTTE
selvan
August 8th, 2008 at 20:14
Ravi r u from srilanka or other contry.how do u know about LTTE.they ask u money.then y u comments about LTTE pressed to pay money.do not laying in y r future
selvanayagam
August 9th, 2008 at 19:25
ravi are you ok. I think you better see your GP ASAP.
Leave a reply