By 3 July 2019 0 Comments

45 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த வரலாறு காணாத மழையால் ஒரே நாள் இரவில் 34 பேர் பலி!! (உலக செய்தி)

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தாமதமாக தொடங்கிய பருவமழை நகரை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவும் விடிய, விடிய அடை மழை கொட்டி தீ்ர்த்தது. நேற்று பகலிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக் கிறது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளும், சாலைகளும் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலை, ரெயில், விமான போக்குவரத்தும் முடங்கி விட்டது.

1974-ம் ஆண்டு மும்பையில் இதேபோன்ற பிரளயம் ஏற்பட்டது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே மழை அளவு பதிவாகி உள்ளது. அதாவது, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 375.2 மி.மீ. பதிவாகி வரலாறு காணாத மழை பெய்து உள்ளது.

மும்பையின் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரும் வெள்ளத்தில் மிதக்கின்றன.கொட்டி தீர்க்கும் பேய் மழை உயிர் பலியும் வாங்கி வருகிறது. கடந்த 29 ஆம் திகதி புனேயில் மழையின் போது, அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலியானார்கள்.

இந்தநிலையில், நேற்று ஒரே இரவில் மும்பை, தானே, பால்கர், புனேயில் பெய்த கனமழை கொத்து, கொத்தாக உயிர் பலி வாங்கி விட்டது.

மும்பை மலாடு கிழக்கு குரார் பிம்பிரிபாடா பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் உள்ள குடிசைவாசிகள் அனைவரும் அயர்ந்த தூக்கத்தில் இருந்த போது நேற்று அதிகாலை 2 மணியளவில் மலை தடுப்புச்சுவர் திடீரென இடிந்து குடிசை வீடுகள் மீது விழுந்து அமுக்கியது.

இதில் வீடுகள் தரைமட்டமாகின. உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி புதைந்தனர். பலர் படுகாயம் அடைந்து உதவி கேட்டு கூச்சல் போட்டனர். சுவர் இடிந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொட்டும் மழையில் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

பெரும் சிரமத்துக்கு மத்தியில் இடுபாடுகளுக்குள் சிக்கியிருந்த 21 பேர் பிணமாக மீட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் உள்ள அந்தேரி கூப்பர், காந்திவிலி சதாப்தி, மலாடு எம்.டபிள்யு. தேசாய், ஜோகேஸ்வரி டிராமாகா கேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மும்பை மலாடு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு கார் செல்ல முயன்றது. அப்போது மழை வெள்ளம் காரை இழுத்து சென்றது.

இதில் துரதிருஷ்டவசமாக கார் வெள்ளத்தில் மூழ்கியது. காரில் இருந்த 2 பேர் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே உயிரோடு சமாதி ஆனார்கள். இந்த சம்பவம் பெருந்துயரத்தை ஏற்படுத்தியது.

தானே மாவட்டம் கல்யாணில் மழை பெய்து கொண்டிருந்த போது, அங்குள்ள தேசிய உருது பள்ளி சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வந்த சோகன் காம்ப்ளே (வயது60), கரீனா சந்த் (25), பூசன் சந்த் என்ற 3 வயது சிறுவன் என 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த ஆர்த்தி (வயது16) என்ற சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். மேலும் பால்கர் மாவட்டத்தில் ஜானு உம்பர்சாடா (60), கைலாஷ் நாகடே (29) ஆகிய 2 பேர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

புனே அம்பேகாவ் பகுதியில் உள்ள சின்ஹாட் என்ற கல்லூரியின் சுற்றுச்சுவர் மழையின் போது இடிந்தது. இதில் அந்த சுற்றுச்சுவரை ஒட்டி குடிசை அமைத்து தங்கியிருந்த 6 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

ஒரே இரவில் மழைக்கு 34 பேர் உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மராட்டியம் முழுவதும் கடந்த 5 நாட்களில் மழையின் காரணமாக ஏறத்தாழ 60 பேர் வரை உயிரிழந்து இருக்கிறார்கள்.Post a Comment

Protected by WP Anti Spam