விசாரணைகளால் வெளிவரும் நிதர்சனங்கள் !! (கட்டுரை)

Read Time:23 Minute, 55 Second

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கடும்போக்குச் சக்திகளும் அதிகாரத்துக்காக ஏங்கும் சில பெருந்தேசிய அரசியல்வாதிகளும் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையும் நிதர்சனங்களும் தற்போது மெல்லமெல்ல வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன.

இல்லாததைச் சோடித்து, ஒன்றை ஒன்பதாக்கி, சிறிய விவகாரத்தைப் மிகப்பெரிய பரிமாணங்களாக உருப்பெருப்பித்துக் காட்டியவர்களின் முகத்திரைகள், தற்போது கிழிய ஆரம்பித்திருக்கின்றன.

‘மனிதன் தவறுக்கு மத்தியில் பிறந்தவன்’ என்ற அடிப்படையில் பார்க்கும்போது, முஸ்லிம் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்களின் தரப்பில், பிழைகளே நடக்கவில்லை என்று கூறுவது கடினம். என்றாலும், பல குற்றச்சாட்டுகள், உண்மையிலேயே முஸ்லிம் விரோத மனோநிலையின் அடிப்படையிலான புனைகதைகள் என்பதை, காலம் உணர்த்திக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், அதனோடிணைந்த அசம்பாவிதங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

தெரிவுக்குழு முன்னிலையில், இதுவரையில் எந்த இனவாதிகளும், கடும்போக்குச் செயற்பாட்டாளர்களும் சாட்சியமளிக்க அழைக்கப்படவில்லை. பெருமளவுக்கு, முஸ்லிம் முக்கியஸ்தர்களும் அரச அதிகாரிகளுமே முன்னிலையாகி வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இருப்பினும், தெரிவுக்குழுவில் இதுவரைக்கும் சாட்சியமளித்துள்ள முஸ்லிம் தரப்பு, அரச தரப்பு சாட்சியங்களில் இருந்து, இப்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற விவகாரங்களில், முஸ்லிம்கள் எவ்விதம் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் நிதர்சனம் என்ன என்பதையும் அறிவதற்கான வாய்ப்பு, ஏனைய சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

மறுபுறத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள், சர்ச்சைக்குரிய குருநாகல் வைத்தியர் போன்ற தரப்பினர் தொடர்பில், நீதி விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளும் கருத்துகளும், ‘தேசப்பற்றாளர்கள்’ என்ற முகமூடியை அணிந்துள்ள கடும்போக்கு சக்திகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளை, அடிப்படை அற்றவையாக நிரூபணம் செய்து கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசப் பிரசாரங்கள், கடும்போக்குச் சிந்தனையுள்ள, கீழ்மட்ட சிங்கள, தமிழ் மக்களிடையே பிரசாரக்காரர்கள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றாலும், சமகாலத்தில் பகுத்தறிவோடு சிந்திக்கும் சிங்கள மக்களிடையே, மறுதலையான விளைவையும் ஏற்படுத்தி இருப்பதையும் ஆங்காங்கு அவதானிக்க முடிகின்றது.

முஸ்லிம்களைப் போலல்லாது, வெளிப்படையாகத் துணிந்து பேசும் சிங்களச் செயற்பாட்டாளர்கள், மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்ற விடயத்தைத் தமது சமூகத்துக்கு எடுத்துரைக்கின்றனர். இந்த வரிசையில், அஸ்கிரிய மகாநாயக்க தேரருக்கு எதிராக, முறைப்பாடு செய்யுமளவுக்கு நிலைமைகள் சென்றிருக்கின்றன.

முதலாவதாக, தெரிவுக்குழு முன்னிலையில், முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் முன்வைத்த சாட்சியங்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னராகக் கிடைக்கப் பெற்றிருந்த, உளவுத் தகவல் அலட்சியப்படுத்தப்பட்ட விதம் குறித்த, தெளிவான சந்தேகங்களை ஏற்படுத்தியது.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை என, தெரிவுக்குழு முன்னிலையில் குறிப்பிட்டார்.

இதனைவிட, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றால், தனக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவி தருவதாக, ஜனாதிபதி குறிப்பிட்டதாக பூஜித ஜயசுந்தர கூறியதன் விளைவாக, மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் இன்னும் வலுவடைந்து வருவதையே காண முடிகின்றது.

மேற்சொன்ன பாதுகாப்பு அதிகாரிகளின் சாட்சியங்களுக்கு மேலதிகமாக,’தெரிவுக்குழு என்பது அலரிமாளிகையில் எழுதப்பட்ட நாடகம்’ என்று ஜனாதிபதி கேலிசெய்த பின்னரும், அதன்முன்னிலையில் இராணுவத் தளபதி போன்றோர் வழங்கி வரும் கருத்துகள், பல உண்மைகளை வெளிக்கொணர்வதுடன், வேறுபல நிதர்சனங்களைக் கண்டறிவதற்கான உந்துதலையும் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது
அந்தவகையில், தெரிவுக்குழு முன்னிலையில், முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி போன்ற அரசியல்வாதிகளும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் முக்கியஸ்தர்களும் சாட்சியமளித்துள்ளனர்.

முஸ்லிம்கள் அல்லது சம்பந்தப்பட்ட சாட்சியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, தெரிவுக்குழு நேரிடையாகவே கேள்வி எழுப்புகின்றது. அதற்கு அளிக்கப்படும் பதில்கள், சிங்கள, தமிழ் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ள, முஸ்லிம்கள் பற்றியதான தேவையற்ற பீதியைத் தணிப்பதாக அமையலாம்.

குறிப்பாக, ஹிஸ்புல்லாவிடம் அவரது உரைகள், மட்டக்களப்பு பல்கலைக்கழக (தனியார்) கல்லூரி போன்ற விடயங்களையும் அசாத் சாலியிடம் பயங்கரவாதக் குழுவின் செயற்பாடுகளை மய்யப்படுத்தியதாகவும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தமது நிலைப்பாடுகளைச் சொல்லியுள்ளனர். அதேநேரம், முஸ்லிம் சமூகம், பயங்கரவாதத்துக்கு எதிராக எவ்வாறு செயற்பட்டது என்பதை, ஏனைய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமது சாட்சியங்களில் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் தரப்பு, பயங்கரவாதத்தை ஆரம்பத்திலேயே களைபிடுங்கப் பல முயற்சிகளைச் செய்தும் கூட, ஏன் பொறுப்பு வாய்ந்தவர்கள் அவர்களைக் கைது செய்யவில்லை என்று, சாட்சியாளர்கள் தெரிவுக்குழுவிடம் கேட்ட கேள்விக்கு, பதில் தேட வேண்டியுள்ளது.

தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை, எவ்விதம் இருக்கும் என்பதையும் அது தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதையும் முன்னுணர முடியாவிட்டாலும், அதனை யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சில நிதர்சனங்களை, வெளிக்கொணர்வதற்கான ஒரு களமாக அமைந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் பயங்கரவாதத்துக்கு துணைபோனார்கள் என்ற குற்றச்சாட்டு இவ்வாறிருக்க, குருணாகல் வைத்தியர் ஷாபி, சிங்களப் பெண்கள் நான்காயிரம் பேருக்கு, பிரசவத்தின் போது கருத்தடை செய்தார் என்ற குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மை நிலைவரத்தையும் நீதி விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் அம்பலப்படுத்திக் கொண்டிருப்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்தமையால், ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிட வேண்டி ஏற்பட்டது. இருப்பினும், பொலிஸ் மாஅதிபர் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதைப் போன்று அவர் பயங்கரவாதத்துக்குத் துணை புரியவில்லை என்பதுடன், குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்று தெரியவந்துள்ளதாக, மேற்படி உயர்மட்டப் பொலிஸ் குழு, சபாநாயகருக்கு அறிக்கை கொடுத்திருக்கின்றது.

அத்துடன், கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர் ஒருவரை விடுவிக்கச் சொல்லி, இராணுவத் தளபதிக்கு ரிஷாட் அழுத்தம் கொடுத்தார் என்ற பிரதான குற்றச்சாட்டை, தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜரான இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க மறுத்துரைத்துள்ளார். “முன்னாள் அமைச்சரோ அல்லது வேறு யாருமோ, எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட நபர், கைது செய்யப்பட்டுள்ளாரா என்பதையே, ரிஷாட் கேட்டறிந்து கொண்டார் என்று, இராணுவத் தளபதி தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் எல்லோருமே தூய்மையானவர்கள், குற்றமிழைக்காதவர்கள் என்று வாதிட வரவில்லை. ஆனால், குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் பயங்கரவாதத்துடன் தொடர்பைப் பேணினார்கள் என்ற குற்றச்சாட்டு இதுவரையும் நிரூபணமற்றதாகவே போய்க் கொண்டிருக்கின்றது. ‘எமது கையில் ஆதாரம் இருக்கின்றது’ என்று கூப்பாடு போட்ட ‘நாட்டுப்பற்றாளர்கள்’, எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

இதேபோன்ற ஒரு நிலைமைதான், வைத்தியர் ஷாபி விவகாரத்திலும் ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்களின் சனத்தொகை குறைவடைகின்றது என்றும், முஸ்லிம்கள், சிங்களவர்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க முயற்சிக்கின்றார்கள் என்றும் வாய்க்கும் மூளைக்கும் தொடர்பில்லாத கதைகளைக் கடும்போக்காளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, குருணாகலில் பணிபுரிந்த வைத்தியர் ஷாபி, அங்கு மகப்பேற்றுக்காக வந்த சிங்களப் பெண்கள் நான்காயிரம் பேருக்கு கர்ப்பம் தரிக்காதவாறு (கருத்தடை) செய்தார் என்ற கதைகள், பெரும் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டன.

ஒரு பிரசவ அறையில் ஆகக்குறைந்தது ஆறு மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றிப் பார்த்துக் கொண்டு நிற்கையில், ஒரு வைத்தியரால் மற்றவர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, கருத்தடை செய்ய முடியுமா? அதுவும் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகளுக்குக் கருத்தடை செய்வது, கனவில் கூட சாத்தியமா என்று யோசித்தாலே, இது சோடிக்கப்பட்டது எனத் தெரிந்துவிடும். ஆனால், கடும்போக்கு சக்திகள், இந்தக் கட்டுக்கதையை பூதாகரமாக்கி விட்டன.

ஆனால், ஷாபி ஒரு மகப்பேற்று மருத்துவ நிபுணர் அல்ல என்றபடியால், அங்கு கருத்தடை இடம்பெற்றிருந்தால் அங்குள்ள மகப்பேற்று நிபுணர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அனைவருமே பொறுப்புக் கூற வேண்டும்.

எனவே, விசாரணைகள் ஷாபிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டாலும், அவர் மட்டுமன்றி அனைத்து மருத்துவப் பணியாளர்களும் விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன், கிணறுவெட்டப் பூதம் கிளம்பிய கதையாக, புதுப்புதுச் சிக்கல்களையும் கடும்போக்காளர்கள் சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், டொக்டர் ஷாபியுடன் கடமையாற்றிய 70 தாதிகளில் 69 பேர் விசாரணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளனர். ஒரு தாதி, இப்போது அதே வைத்தியசாலையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் மட்டும் சாட்சியமளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறு சாட்சியமளித்த 69 தாதியரும், ‘ஷாபி அப்படிச் செய்யவில்லை’என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ஏனெனில், உண்மையில் அவ்வாறு கருத்தடை செய்யப்பட்டதாக, ஒரு தாதி பொய்ச்சாட்சியம் அளித்தாலும் கூட, அதனால் பாதிக்கப்படப் போவது ஷாபி மட்டுமல்ல; மாறாக, அங்குள்ள மகப்பேறுசார் சேவையிலுள்ள அனைவருமே குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டும். இந்தப் பின்னணியிலேயே, டொக்டர் ஷாபி அவ்வாறு மோசமான காரியம் ஒன்றைச் செய்யவில்லை என்று எல்லாத் தாதியரும் சொல்லியுள்ளனர்.

அதேநேரத்தில், குறித்த வைத்தியர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார். இதற்கிடையில், நேற்று அவர் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, டொக்டர் ஷாபி மீது, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு, கிட்டத்தட்ட விசாரணைகளை நிறைவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. உத்தியோகபூர்வ இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் கருத்தடையை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை என அக்குழு கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், ஷாபிக்கு எதிராகக் குற்றம் சுமத்தியவர்களால் அவற்றை நிரூபிக்க முடியாத நிலை தொடருமானால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என்ற உண்மை மக்களுக்கு வெளிப்பட்டு, இனவாதிகளின் முகத்திரையைக் கிளித்தெறிவதற்கான நிகழ்தகவுகள் தென்படுகின்றன.

ஆக மொத்தத்தில், முட்டாள்தனமானதும் இஸ்லாத்துக்கு ஒவ்வாததுமான போக்குடைய சஹ்ரான் கும்பல்தான், மிலேச்சத்தனமான இத்தாக்குதல்களை நடத்தியிருக்கின்றது என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

ஆனால், உளவுத் தகவல்களை கண்டுகொள்ளாமல் விட்டதற்கும், தாக்குதல் சம்பவத்தின் பின்னர், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனத்துவ நெருக்குவாரங்களுக்கும் பின்னால் பெரும் அரசியலும் நிகழ்ச்சிநிரலும் இருக்கின்றன என்பதைக் கணிசமான மக்கள் உணர்வதற்கு, இவ்விசாரணைகள் காரணமாகி உள்ளன.

இந்தத் தருணத்தில், மேற்சொன்ன முஸ்லிம் தரப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய்யென நிரூபணமாகினால், அந்த அபாண்டங்களைச் சுமத்திய இனவாதிகளும், கடும்போக்கு அரசியல்வாதிகளும், இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் குழப்பங்களுக்கும் பொறுப்பேற்கத் தயாராக இருக்க வேண்டும்.

இனவாதத்தால் மூடப்பட்ட ‘நோயாளிகளின் உணவகங்கள்’

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மூன்று வைத்தியசாலைகளுக்கு, தூர இடங்களில் இருந்து, சிகிச்சைக்காக மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வருகைதரும் நோயாளர்களுக்கு, இவ்வளவு காலமும் ஒரேயோர் ஆறுதல் இருந்தது. இந்த வைத்தியசாலைகளுக்கு அருகில், முஸ்லிம் தனவந்தர் ஒருவரால் நடத்தப்பட்ட ‘ஜனபோஷ’ உணவகத்தில், காசு கொடுக்காமலேயே இலவசமாகச் சாப்பிடலாம் என்பதுதான் அந்த ஆறுதல்.

ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள மிக அற்பத்தனமான, கீழ்த்தரமான இனவாதத்தின் காரணமாக, இன்று அந்த மக்களுக்கு, இலவசமாக உணவு வழங்கி வந்த ‘ஜனபோஷ பவுண்டேசன்’ என்ற அமைப்பு, மேற்படி மூன்று உணவகங்களையும் மூடிவிட்டது.

நோய்வாய்ப்பட்ட நிலையில் வரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் நோயாளர்களுக்கு இருந்த, ஒரேயோர் ஆறுதலையும் பிடுங்கிக் கொண்டார்கள், இந்தப் பிற்போக்குத்தனமான இனவாதிகள்.

கொழும்பில், பிரபல நிறுவனமொன்றுக்குச் சொந்தக்காரரான முஸ்லிம் தனவந்தர் ஒருவர், மேற்படி ‘ஜனபோஷ பவுண்டேசன்’ ஊடாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை, மகரகம புற்றுநோய் வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கு அருகில், உணவகங்களைப் பல வருடங்களாக நடத்தி வந்தது. இது 100 சதவீத சமூகசேவையாகும்.

உண்மையில், வருடத்தின் 365 நாள்களும் இயங்கிவந்த தானசாலைகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இவ்வைத்தியசாலைகளுக்குத் தூரஇடங்களில் இருந்து வரும் நோயாளர்களுக்கு, காலை, பகல் உணவுகள் இலவசமாக இங்கு வழங்கப்பட்டன. இது, அவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால், ஒப்பீட்டளவில் நன்மை அடைந்தவர்கள் சிங்கள மக்கள்தான்.

உண்மையில், ஒரு ரூபாய் கூட அறவிடாமல், ஒரு நல்லுள்ளம் படைத்த யாரோ, இத்தனை பேருக்கு இலவசமாக உணவு வழங்குகின்றார் என்றால், அது எவ்வளவு பெரிய விடயம். ஆனால், அதற்கு நன்றி பாராட்டத் தவறிய இனவாதிகள், அதன்மீதும் கண்வைத்தனர்.

“இவ்வளவு காலமும், இலவசமாக உணவு வழங்குவது எவ்வாறு சாத்தியம்? இதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கின்றது” எனத் தொடங்கி…… “இங்கு சிங்கள மக்களுக்குக் கருத்தடைச் சாப்பாடுகள் வழங்கப்படுகின்றனவா?” என்பது வரை, வாய்க்கு வந்ததை எல்லாம், கடும்போக்கு அரசியல்வாதிகள், கடந்தவாரம் பேசியிருந்தனர்; இனவாத ஊடகங்களும் ஒத்து ஊதின.

கடைசியில், இத்தனை சேவை செய்தும், மிக மோசமான இனவாதத் தாக்குதலுக்கு உள்ளான இந்த ஒன்றியம்,கனத்த இதயத்துடன், தமது இலவச உணவகங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.

நோயாளிகளை அருவெறுப்பாகவும் அரச வைத்தியசாலைக்கு வரும் அடிமட்ட மக்களைத் தரக் குறைவாகவும் நோக்குகின்ற இனவாத சிந்தனையுள்ள மேட்டுக்குடி அரசியல்வாதிகளுக்கும், ஏழைகளின் பசியையும் நோயாளிகளின் வலியையும் உணராத ‘போலித் தேசப்பற்றாளர்’களுக்கும், இந்த உணவகங்களை மூடியதால், ஏழை நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எங்கே விளங்கப் போகின்றது?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழங்களின் ராஜா | மங்குஸ்தான் பழத்தில் இவ்ளோ பயன்களா? (வீடியோ)
Next post வருடம் 40 கோடி ரூபாய் சம்பாதிக்கும் இந்த தோசை !! (வீடியோ)