ஜனாதிபதித் தேர்தலில்களம் காண்பாரா ரணில் !! (கட்டுரை)

Read Time:16 Minute, 35 Second

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன, ஓகஸ்ட் மாதமளவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்தகாலத்தில் இடம்பெற்ற சித்திரவதைகள், கொலைகள் தொடர்பில் வழக்குகள் பல, வௌிநாடுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வேளையில், அவரது உடல்நிலையும் சவாலாகி, சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷதான் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் என்பதில், கடந்தமாதம் வரை இருந்த உறுதிநிலையில், தற்போது சில கேள்விகள் எழுந்துள்ளன.

எது எவ்வாறாயினும், கோட்டா உடல்நிலை தேறும் பட்சத்தில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, அவர் களம் காண்பதற்கான வாய்ப்பு பெருளமளவுக்கு இருக்கிறது. இது நடக்கும் பட்சத்தில், ‘மஹிந்த-கோட்டா’ என்ற பலமான இணைவை, ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

இலங்கையின் பழம்பெரும் தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் கடந்த கால் நூற்றாண்டாக, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. 1994 ஜனாதிபதித் தேர்தலின் பின்பிருந்து, இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தொடரும் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், இது தனிப்பட்ட ரீதியிலும் கூட, ஒரு மிகப்பெரும் கரும்புள்ளியாகும்.

2015இல், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்த வேட்பாளர் வெற்றிபெற்றிருந்தாலும், அவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்தவர் இல்லை என்பதும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரிய வைரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் என்பதும், அதன் பின்னர் அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையுமெல்லாம், அந்த வெற்றி ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய வெற்றியல்ல என்பதை மீண்டும், மீண்டும் பறைசாற்றுவதாகவே அமைகிறது.

இந்தச் சூழலில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வௌியிலுள்ள ஒருவரை பொதுவேட்பாளராக ஆதரிக்கக் கூடிய மனநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் இல்லை. கட்சிசார்ந்த வேட்பாளரே களமிறங்க வேண்டும் என்ற ஏக்கம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடையே பலமாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஆனால், அந்த நபர் யார் என்பது தொடர்பில் அவர்களிடையே அபிப்பிராய பேதங்கள் இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ஒரு கட்சியின் தலைவர், அக்கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்பது ஆச்சரியத்துக்கு உரியதல்ல. ஆனால், ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி, கட்சிக்குள்ளாகவே சில அதிருப்தி அலைகள் எழுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாற்றாக, வேறொருவர் களமிறங்க வேண்டும் என்பது அதிருப்தியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில், கட்சியில் சிலர், அதிருப்தி வௌியிடக் காரணம் என்ன?

தற்போதுள்ள சூழலில் ரணிலால் இலங்கையின் பெரும்பான்மை வாக்குவங்கியைத் திருப்திசெய்ய முடியாது என்பது அவர்கள் குறிப்பிடும் பல்வேறு காரணங்களுக்குள் மேலோங்கி நிற்கும் காரணமாக இருக்கிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இருக்கின்ற அளவுக்கு, ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தனிமனித ஆதரவு என்பது இல்லை என்பது, யதார்த்தமாக இருக்கலாம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி, புதியதொரு கட்சியை ஆரம்பித்து, இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதைவிட, மஹிந்தவின் வேட்பாளர் யார் என்பதே அடுத்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் முக்கியமாகி இருக்குமளவுக்கு தனிமனித மக்களாதரவு மஹிந்தவுக்கு உண்டு.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்த்துவிட்டால், தனி மனிதனாக ரணிலுக்கு, மஹிந்தவுக்கு நிகரான ஆதரவு இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், இந்தப் புள்ளி மட்டும், தேர்தல் கணக்கைச் சமன் செய்யப் போதுமானதல்ல.

அண்மைக் காலங்களில், இலங்கையில் தேர்தல் வாக்களிப்புப் பாணியை அவதானித்தோமானால், 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி, கடும் பின்னடைவைச் சந்தித்திருந்தது. ஆனால் அந்தக் கடும் பின்னடைவின் போதுகூட, 29.34 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. அதாவது, மஹிந்த ராஜபக்‌ஷ யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த, அவரது வார்த்தைகளில் ‘இந்த நாட்டை 30 வருட இருண்ட காலத்திலிருந்து மீட்டதன்’ பின், மஹிந்த ராஜபக்‌ஷ தன்னுடைய புகழின் உச்சியிலிருந்த பொழுதில் கூட, ஐக்கிய தேசியக் கட்சி 29.34 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது என்பது, அந்த 29.34 சதவீத வாக்குகள் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவு, அதாவது ‘கப்புவத் கொள; மறுவத் கொள’ (வெட்டினாலும் பச்சை; கொன்றாலும் பச்சை) என்று பொதுவில் விளிக்கப்படும் ஆதரவு என்பது, ஏறத்தாழ 29 சதவீதமாகும் என்று கொள்ளலாம்.

மஹிந்தவுக்கு எதிரான அலை மீண்டும் ஓங்கியிருந்த, மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஒரு சிறு எழுச்சி கிடைத்திருந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி 45.66 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. ‘நல்லாட்சி’ பற்றிய அதிருப்திகள் மக்கள் மத்தியில் இருந்தாலும், அந்த 45 சதவீத வாக்கு வங்கியில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்காது என்ற நம்பிக்கை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்த நிலையில்தான், 2019 ‘உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள்’ இடம்பெற்றன.

இதன் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியைக் கணிசமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக இருந்த ஊசலாடும் ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கி, மஹிந்தவை நோக்கி நகரும் பாணியை, நாம் அவதானிக்கலாம். இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு, பெரும் சவாலான சூழலாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, அதன் சார்பில் எவர் நிறுத்தப்பட்டாலும், குறைந்த பட்சம் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவு வாக்குவங்கியான ஏறத்தாழ 30 சதவீத அளவிலான வாக்குகளைப் பெறுவர். இன்றுள்ள சூழலில், சிறுபான்மை வாக்குவங்கியின் பெருமளவு மஹிந்தவுக்கு எதிரானது என்ற அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் பட்சத்தில், ஏறத்தாழ இன்னொரு 10 சதவீத வாக்குகளேனும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கும்.

ஆனால், இந்த 40 சதவீதம் என்பது, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போதுமானதல்ல. 50 சதவீதம் என்ற புள்ளியை, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தாண்ட வேண்டுமானால், ஊசலாடும் ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியிடமிருந்து குறைந்தபட்சம் 11சதவீதமான வாக்குகளேனும் தேவை.

2015 இல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுவேட்பாளரை நிறுத்தவும் மேற்சொன்ன வாக்குவங்கிக் கணக்குதான் முக்கிய காரணம். ஐக்கிய தேசியக் கட்சி, அனைத்துச் சிறுபான்மையினக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பங்கு ஆகியவை ஒன்றிணைந்த போதுதான், மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தேர்தல்களத்தின் அசகாயசூரனை வீழ்த்தக் கூடியதாக இருந்தது.

ரணில் விக்கிரமசிங்க எனும் அரசியல் தந்திரோபாயக்காரன் மீண்டும் மீண்டும் தேர்தல் கூட்டுகளை நாடவும் இதுதான் காரணம். பொதுவில் சிலர், ரணில் பலமற்றவர், தனியே களம் காணப் பயம்கொள்கிறார் என்பார்கள். ஆனால், இது வீரம், பயம் சார்ந்த பிரச்சினையல்ல. இது கணிதம். வாக்குவங்கியின் கட்டமைவு; அதன்படி ஒவ்வொரு தரப்புக்கு குறைந்தபட்ச அடிப்படை வாக்குவங்கி, அது பற்றிய கணிதம். இதனால்தான் ரணில் மிகப்பொறுமையாகத் தன்னுடைய காய்களை நகர்த்துகிறார். இந்தக் கணக்கு தனக்குச் சாதகமாக வரும் என்று அவர் உணரும் போது மட்டுமே, அவர் நேரடியாக ஜனாதிபதித் தேர்தலில் களம் காண்பார்.

‘உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களை’ தொடர்ந்து, இந்த நாட்டில் பேரினவாத சக்திகள் மீண்டும் பலமாகத் தலைதூக்கியுள்ளன. இனப்பிரச்சினையின் வடிவம் சிங்களம், தமிழ் என்பதிலிருந்து, சிங்களம், முஸ்லிம் என்பதாக மாறத்தொடங்குகிறதோ, என்ற எண்ணத்தை ஏற்படுத்துமளவுக்கு சூழ்நிலை உருவாகிக்கொண்டு வருகிறது.

ஆனாலும், தன்னுடைய மாமனார் ஜே.ஆர், 1980 களில் விட்ட பிழையை, ரணில் விடத்தயாராக இல்லாதது ஒருவகையில் பாராட்டுக்குரியதே. தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைத் திருப்தி செய்வதற்காக, இன்னோர் இனப்பிரச்சினைக்குத் தூபம் போட அவர் தயாராகவில்லை. அல்லது இதுவரை அவர் அதைச் செய்யவில்லை.

தந்திரோபாய நோக்கில் பார்த்தால், இதுவும் ரணிலின் ஒரு தந்திரோபாய நகர்வுதான். தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியானது ரணிலை ஆதரிப்பதற்கு உள்ள வாய்ப்பு என்பது மிகச் சிறியது. ஏலவே பெருமளவுக்கு மஹிந்தவுக்கு எதிரான, ரணிலுக்கு ஆதரவான முஸ்லிம் வாக்கு வங்கியின் ஆதரவோடு ஒப்பிடுகையில், இதைவிட்டுவிட்டு, தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைத் திருப்திசெய்வது, அரசியல் ரீதியில் பயனற்றது.

ரணில் இன்று திருப்தி செய்ய வேண்டியது, தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியை அல்ல. அது மஹிந்தவைத் தாண்டி, ரணிலை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை எனலாம்.
ரணில், திருப்தி செய்ய வேண்டியது ஊசலாடிக்கொண்டிருக்கின்ற, தீவிர வலதுசாரித் தன்மையற்ற, நடுநிலையான ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியையே ஆகும். அதன் மூலம், இன்னொரு 11 சதவீதமான வாக்குகளைப் பெறமுடியுமானால், அவரால் 51 சதவீதமான என்ற இலக்கை அடைய முடியும்.

ஆனால், அது இலகுவானதல்ல என்பது அவருக்கும் தெரியும். குறிப்பாக, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, பொருளாதார ஸ்திரத் தன்மையின்மை, அதிகப்படியான வரிச்சுமை, ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்கவின் மேலும் ஏற்பட்டுள்ள மத்தியவங்கி முறிகள் மோசடிக் கறை என்பனவெல்லாம், அந்த ஊசலாடும் வாக்குவங்கியைத் தன்னை நோக்கி திருப்புவதில் ரணிலுக்குள்ள மிகப்பெரும் சவால்களாகும்.

ஒரு தெரிவை விரும்பாதவனைக் கூட, அந்தத் தெரிவைத் தேர்ந்தெடுக்கச் செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, அவன் விரும்பத்தக்க வகையில் அந்தத் தெரிவை மேம்படுத்துதல். இரண்டு, மற்றைய தெரிவுகள் இதனைவிட மோசமாக அமையும் போது, வேறு வழியின்றி ‘உள்ளதற்குள் சிறந்ததாக’ இந்தத் தெரிவை அவன் மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், அதில் மைத்திரிபால என்ற நபர், வெற்றிபெற மேற்சொன்னதில் இரண்டாவது வழிதான் பயன்பட்டது. 2015இல் மைத்திரிபாலவுக்கு வாக்களித்த பெரும்பாலானவர்கள், மைத்திரிபால என்ற நபருக்காக வாக்களித்தார்கள் என்பதைவிட, மஹிந்த வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்காக வாக்களித்தார்கள் என்பதுதான் நிதர்சனம்.

ஆகவே, இதே உத்தி இம்முறை தேர்தலில் ரணிலுக்கு, பலனளிக்குமா என்ற கேள்வி இங்கு எழுகிறது. மேலும், ஒரு வேளை ரணில் போட்டியிடாது விட்டால், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், வேறு யார் களம் காண்பார்கள் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பளபளக்கும் கழிப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்!! (மகளிர் பக்கம்)
Next post சிறுநீரக கற்களை கரைக்கும் சிறுகண்பீளை!! (மருத்துவம்)