குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்!! (உலக செய்தி)

Read Time:5 Minute, 20 Second

மும்பையில் உள்ள டோங்கிரி, மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி ஆகும். இங்கு ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவை மிகவும் நெருக்கமாக குடிசை பகுதி போல் அமைந்து உள்ளன. இங்குள்ள தண்டல் தெருவில் ‘கேசர்பாக்’ என்ற 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது.

100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் அந்த கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று காலை 11.40 மணி அளவில் திடீரென அந்த கட்டிடம் ஆட்டம் கண்டது.

அடுத்த சில நொடிகளில் சீட்டு கட்டு போல் சரிந்த அந்த கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமானது. கட்டிடத்தில் வீடுகளில் இருந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். சுமார் 55 பேர் உயிருடன் புதைந்தனர்.

கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு, பூகம்பம்தான் ஏற்பட்டுவிட்டதோ என்று பதறி அடித்துக்கொண்டு அக்கம்பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். அவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வாகனங்களில் விரைந்து வந்தனர்.

கேசர்பாக் கட்டிடம் இருந்த பகுதி வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குறுகலான பகுதி என்பதால் இடிபாடுகளை அகற்றும் பணிக்கு பொக்லைன் எந்திரங்களை வரவழைக்க இயலவில்லை. இதனால் இடிபாடுகளை அகற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் வேன்களும், மீட்பு குழுவினர் வந்த வாகனங்களும் 50 மீட்டர் தூரத்துக்கு வெளியிலேயே தான் நிறுத்தப்பட்டு இருந்தன. மீட்பு படையினரும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் மண்வெட்டிகள் கொண்டும், கைகளாலேயும் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்க போராடினார்கள். அவர்களுக்கு உதவியாக ஏராளமான பொதுமக்கள் குறுகலான அந்த தெருவில் மனித சங்கிலி அமைத்து கட்டிட கழிவுகளை ஒருவரிடம் ஒருவர் கொடுத்து அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சவாலான இந்த மீட்பு பணியின் போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த 11 பேரின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. மேலும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளில் இருந்து குழந்தை ஒன்று மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் நோக்கி ஒவ்வொரு கையாக மாற்றி கொண்டு செல்லப்பட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. நெஞ்சை பதைபதைக்க செய்யும் அந்த காட்சி பார்ப்போரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது.

மும்பையில் அண்மையில் பெய்த தொடர் கன மழையின் காரணமாக கேசர்பாக் கட்டிடம் உறுதி தன்மையை இழந்து இருந்து உள்ளது. இதன் காரணமாகவே அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது தெரியவந்து உள்ளது.

கட்டிட விபத்து தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த குடியிருப்பு இடிந்து விழுந்து பெருத்த உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போது குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர் பலி வாங்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது பழுதடைந்த கட்டிடங்களில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)
Next post மோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி!! (உலக செய்தி)