By 29 July 2019 0 Comments

மருத்துவ கோமாளிகள்! (மகளிர் பக்கம்)

‘துன்பத்தையே துன்பப்படுத்த வேண்டும் என்றால் சிரிப்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தலாம்’’…

எந்த ஒரு வலியாக இருந்தாலும், அதற்கு சிறந்த மருந்து சிரிப்புதான். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்ன்னு நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னாங்க. அந்த நோயினால் ஏற்படும் வலி, வேதனை மற்றும் மனஉளைச்சலை பற்றி விவரிக்க வார்த்தைகள் கிடையாது. அந்த வலியினை தங்களின் கோமாளித்தனத்தால் போக்கி வருகிறார்கள் ‘தி லிட்டில் தியேட்டர்’ நிறுவனத்தினர். இதனை அயிஷா ராவ் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

‘‘ஒருவரின் வலியை இன்னொருவரால் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் வலியினை மறக்கடிக்க முடியும். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் மற்றவரின் மனவருத்தத்தை போக்குகிறாரோ அதேபோல்தான் மற்றவர்களை சிரிக்க வைப்பதும் மனிதன் தேடிக் கொண்ட ஒரு பிரதான கலை. அந்த கலையைதான் எங்க நாடக குழுவினர் கையில் எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை சிரிக்க வைக்கிறார்கள்’’ என்று பேசத் துவங்கினார் அயிஷா.

‘‘தி லிட்டில் தியேட்டர் ஆரம்பிச்சு 28 வருஷமாகுது. நான் பிறந்தது படிச்சது எல்லாம் இங்கிலாந்தில். பொறியியல் படிச்சாலும் எனக்கு சின்ன வயசில் இருந்தே கலை மேல் தனி ஆர்வம் இருந்தது. எனக்கு நாடகம் பார்க்க ரொம்ப பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளின் நாடகங்கள்.

1982ம் ஆண்டு வேலைக்காக சென்னைக்கு வந்தேன். வேலை ஒரு பக்கம் இருந்தாலும் எனக்குள் இருந்த நாடக பசி அடங்கவில்லை. அதனால் நாடகக்குழு பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பிச்சேன். ஆனால் குழந்தைகளுக்காக நாடகத்துறையில் எந்தவித முயற்சியும் யாரும் எடுக்கவில்லை. எல்லாமே பெரியவர்களை சார்ந்தே இயங்கி வந்தது. அது எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வேலையை ராஜினாமா செய்தேன். 1991ம் ஆண்டு ‘திலிட்டில்தியேட்டர்’ நாடககுழுவை துவங்கினேன். நான் எழுத்தாளர் என்பதால், என்னுடைய நாடகத்தை நானே வடிவமைப்பேன்.

ஆனால் அதில் பங்கேற்க ஆட்கள் வேண்டுமல்லவா? அதனால் குழந்தைகளுக்கு நாடக பயிற்சி அளிக்கும் பட்டறை ஒன்றை துவங்கினேன். பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் பயிற்சி அளித்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ‘கிறிஸ்துமஸ் ஃபாண்டம்’ என்ற நாடகம் அரங்கேறும். அதில் நடிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்தான்.

மேலும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியும் அளிக்கிறோம். வசதி அல்லாத மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான ஸ்காலர்ஷிப்பும் ஏற்பாடு செய்து தருகிறோம்’’ என்றவர் ‘ஹாஸ்பிடல் கிளவுனிங்’ பற்றி விவரித்தார்.

‘தி லிட்டில் தியேட்டர் இயக்கத்துடன் இணைந்து செயல்படுவதுதான் ‘The Centre of Creative Theraphy and Hospital Clowning’. ஆடல், பாடல், நகைச்சுவை மனிதனை என்றும் ரிலாக்சாக வைக்கக் கூடியவை. ஒரு சிலர் தங்களுக்கு வேண்டிய ரிலாக்சேஷனை தானே தேடிக் கொள்வார்கள். ஆனால் சிலருக்கு நாம் தான் அதை கொண்டு போய் சேர்க்கணும். அதிலும் குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்.

மருத்துவமனையில் ஒவ்வொருவரும் ஒருவித நோயின் தாக்குதலுக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பார்கள். சாதாரண ஜுரம் முதல் புற்றுநோய், இதய பாதிப்பு, கல்லீரல் பாதிப்புன்னு நோய்களின் பட்டியல் நீண்டுக் கொண்டு போகும். உடலில் வலி இருக்கும் போது அவர்களால் யாரிடமும் பேசவும், பழகவும் பிடிக்காது. குறிப்பாக குழந்தைகள். அந்த சமயத்தில் முகத்தில் வண்ணம் பூசிக் கொண்டு, மூக்கில் சிகப்பு சாயம் பூசி, கலர் கலர் உடை அணிந்து அவர்கள் முன் தோன்றினால்.

அவர்கள் தன்னை அறியாமல் சிரித்து விடுவார்கள். ஆட்டமும் பாட்டமும் நகைச்சுவையும் சிறந்த உளவியல் சிகிச்சையாக இருக்கும். பொதுவாக நாம் இந்த கோமாளிகளை சர்க்கசில் தான் பார்த்து இருப்போம். அவர்களை நாம் ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூடாதுன்னு தோன்றியது. அப்படித்தான் ‘ஹாஸ்பிடல் கிளவுனிங்’ எங்க தியேட்டர் குழுவினரால் உருவானது. வெளிநாடுகளில் இது பிரபலம்.

இந்தியாவில் இப்போதுதான் துவங்கி இருக்கிறோம்’’ என்றவர் இதற்காக அமெரிக்காவில் இருந்து கிளவுன் நாடக கலைஞரை கொண்டு தங்கள் குழுவிற்கு பயிற்சி அளித்துள்ளார்.‘‘மருத்துவமனை என்றாலே பதட்டமான சூழ்நிலைதான் இருக்கும். முதலில் எங்களுக்கும் தயக்கமாக தான் இருந்தது. வலியால் துடிப்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் மேலோங்கி இருந்தது. அதனால் முதலில் தனியார் மருத்துவமனை ஒன்றை அணுகினேன்.

அவர்களுக்கு எங்களின் நோக்கம் புரிந்தது. அனுமதி கொடுத்தார்கள். பிறகு எக்மோரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையிலும் இதனை அரங்கேற்றினோம். நோயாளிகள், டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சது. இன்றும் அதனை தொடர்ந்து வருகிறோம்.

‘ஹாஸ்பிடல் கிளவுனிங்’ செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. இது மேடை நாடகம் போல் ஸ்கிரிப்ட் எல்லாம் பார்த்து செய்ய முடியாது. இன்னும் சொல்லப் போனால் திட்டமிடவே முடியாது. காரணம் ஒவ்வொரு நோயாளியின் மனநிலை ஒரே மாதிரி இருக்காது. அதை புரிந்து கொண்டு அந்த நேரத்தில் அவர்களை சிரிக்க வைக்க செய்யணும்.

இது மேடை நாடகம் கிடையாது. ஆட்டம், பாட்டம், மேஜிக் ஷோன்னு வித்தியாசமா இருக்கும். சில சமயம் நோயாளிகளுடன் இருப்பவர்களையும் எங்களுடன் சேர்த்து பங்கு பெற செய்வோம்.இதற்காக நிறைய பயிற்சி எடுக்க வேண்டும். சிலர் கொஞ்சம் கடினமாக இருப்பார்கள். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களையும் சிரிக்க வைக்க வேண்டும். எல்லாவற்றையும் விட எங்களின் செயலால் இவர்கள் சீக்கிரம் குணமடைகிறார்கள் என்று நினைக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.

கிளவுனிங் நோயாளிகளுக்கு மட்டுமில்லை. டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கும் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியம். தினமும் நோயாளிகள், அறுவை சிகிச்சை என்று இவர்களும் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். கிளவுனிங் அவர்களுக்கு சிறந்த ஸ்ட்ரஸ் பஸ்டர். இதில் ஒரு சில மருத்துவரும் எங்களை போல் கோமாளி வேடம் அணிந்து நோயாளிகளை மகிழ்விக்கிறார்கள். அதில் மருத்துவர் ரோகிணி ராவும் ஒருத்தர். இவர் தன் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை ஒவ்வொரு நாளும் குதூகலமாக வைத்துள்ளார்’’ என்றார் அயிஷா ராவ்.

‘‘இவர்கள் சென்னையில் சில மருத்துவமனைகளில் தான் கிளவுனிங் செய்து வருகிறார்கள். இந்த வழிமுறை மக்களிடம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மருத்துவராக மருந்து மாத்திரை மட்டும் தராமல் நோயால் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் சந்தோஷத்தை என்னால் கொடுக்க முடிகிறது என்று நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு. ஒவ்வொரு வாரம் நாங்க எப்போது வருவோம் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எங்களுக்காக காத்து இருப்பது தான் எங்களின் வெற்றி’’ என்றார் டாக்டர் ரோகிணி ராவ்.

‘‘இவர்களின் சிரிப்பு தான் எங்களின் வெற்றி. கிளவுனிங் முறையினை இன்னும் பல இந்திய மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். அதற்காக ‘தி லிட்டில் தியேட்டர்’ நாடக குழுவினரை அதிகரிக்க முடிவு செய்து இருக்கோம். இனி மருத்துவமனைகளில் சிரிப்பு ஒலிகள் மட்டுமே கேட்கலாம்’’ என்றார் ஆயிஷா ராவ்.Post a Comment

Protected by WP Anti Spam