காய்ச்சல் நேரத்தில் என்ன சாப்பிடலாம்?! (மருத்துவம்)

Read Time:8 Minute, 31 Second

காய்ச்சல் ஏற்படும்போது உடல்ரீதியாக படுகிற அவஸ்தை ஒரு புறமும், உணவு ரீதியாக நாம் படும் அவஸ்தை மற்றோர் புறத்திலும் வாட்டி எடுக்கும். காய்ச்சல் ஏற்பட்ட காலத்தில் எந்த உணவையும் வாயில் வைக்க முடியாது.

எல்லா உணவிலும் கசப்புத்தன்மையை உணர்வதுடன், ஒன்றையும் சாப்பிடவே பிடிக்காது. காய்ச்சலின்போது அப்படி சாப்பிடாமலேயே இருப்பது சரிதானா? அப்படி சாப்பிடுவது என்றால் என்னென்ன உணவுகளை எப்படி சாப்பிடலாம் என்று பொது நல மருத்துவர் கவிதா சுந்தரவதனத்திடம் கேட்டோம்…

‘‘காய்ச்சலை நாம் அணுகும் முறையால்தான் உணவுரீதியாகவும் நாம் தடுமாற்றம் அடைகிறோம். எனவே, காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும். காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன என்பது பலரும் அறிந்ததுதான். அது சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், தீவிரமான காய்ச்சலாக இருந்தாலும் நாம் பயப்படத் தேவையில்லை.

காய்ச்சல் வந்தவுடன் நம்மில் பலர் அப்படியே படுத்துவிட்டு, சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருப்பார்கள். இதைத்தான் முதலில் தவிர்க்க வேண்டும். நமது உடலில் காய்ச்சல் ஏன், எதனால் ஏற்படுகிறது. அதை எப்படி சரிசெய்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறத்திலுள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற ஏதாவதொரு கிருமி நம் உடலுக்குள் சென்றுவிட்டால் அதை நமக்கு உணர்த்தக்கூடிய ஓர் அறிகுறிதான் காய்ச்சல்.

அப்படி உடலுக்குள் சென்ற கிருமியை எதிர்த்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படுகிறபோது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதை காய்ச்சல் என்று சொல்கிறோம். காய்ச்சலோடு தலைவலி, வாந்தி, குமட்டல், மூட்டுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம். காய்ச்சலோடு சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் அல்லது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது சிறுநீரக நோய்த் தொற்றாக இருக்கலாம்.

காய்ச்சலோடு வாந்தி, குமட்டல், பேதி போன்ற அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு கண் மஞ்சள் நிறமாக இருந்தால் கல்லீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

உடலில் அதிக களைப்பு ஏற்பட்டு, தண்ணீர் குடிக்காமல் வெயில் காலங்களில் வெளியே செல்கிறபோதும் உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் வருவதை Heat Stroke என்று சொல்கிறோம். அதேபோல அம்மை நோய்கள் ஏற்படுகிறபோது உடலில் கொப்புளங்களோடு காய்ச்சலும் வரும். எனவே, என்ன காரணத்தால் அல்லது எந்தக் கிருமியினால் காய்ச்சல் வந்துள்ளது என்பதை சரியாக கண்டறிவதற்கே இரண்டு நாட்கள் வரை ஆகும்.

காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே அதிக மருந்து, மாத்திரைகள், ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிப்பதில்லை.

மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்கன்குனியா என்று நூற்றுக்கணக்கான காய்ச்சல் இருக்கிறது. எனவே, உடல் வெப்பநிலை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை தெர்மாமீட்டர் மூலம் கண்டறிவதோடு என்ன காரணத்தினால் அந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கண்டறிந்த பிறகே அதற்குரிய சரியான மருத்துவத்தை மேற்கொள்ள முடியும்.

காய்ச்சலின்போது நீர்ச்சத்து தொடர்பான எல்லா உணவுகளையுமே நாம் புறக்கணிக்கிறோம். உடல் மேலும் குளிர்ச்சியடைந்து காய்ச்சல் அதிகமாகிவிடும் என்றும் தவறாக நம்புகிறோம். காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. இந்த நீர்வறட்சியினால் ஏற்படுகிற பாதிப்புகள்தான் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிற நிலைக்குக் கொண்டுபோய் விடுகிறது.

எனவே, அதிகளவு நீர் அருந்துவதோடு நீராகாரங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த நீராகாரங்கள் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களின்(Electrolyte) அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. தண்ணீரின் சுகாதாரம் தொடர்பாக பல சந்தேகங்கள் இருப்பதால், கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடித்துக் கொள்ளலாம்.

முக்கியமாக, காய்ச்சல் வந்த பிறகு இரண்டு நாட்கள் வரை உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் இதைத்தான் சாப்பிட வேண்டும். இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதே தவறான புரிதல். இதுபோன்ற நேரங்களில் நாம் இவற்றை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று நாமாகவே நினைத்துக்கொண்டு, சாப்பிடாமலேயே இருப்பதுதான் உடல் பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

காய்ச்சலின்போது மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிடுவதோடு தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள், சூப் போன்ற நீராகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது அவசியம். உடலுக்குள் புகுந்திருக்கிற கிருமிக்கு எதிராக செயல்படுகிறபோது, அதற்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதற்கு நாம் எப்போதும்போல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் இருக்கையில் நமது வாய்க்கு எதை சாப்பிடப் பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம். நாம் வழக்கமாக சாப்பிடுகிற எல்லா விதமான உணவுகளையும் சாப்பிடலாம். நாம் சரியாக சாப்பிட்டால்தான் காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய முடியும்.

ஆனால், நமக்குப் பிடிக்கும் என்பதற்காக குளிர்பானங்கள், துரித உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற ஆரோக்கியக் கேடான உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் அதிகக் காரமான உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம்’’ என்கிறார் மருத்துவர் கவிதா சுந்தரவதனம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு நாள் டிஜிட்டல் விரதம்!! (மருத்துவம்)
Next post தோசை தக்காளி சட்னியால் பிறவி மோட்சம் அடைந்தேன்!! (மகளிர் பக்கம்)