By 7 August 2019 0 Comments

அரிசியும் நல்லதுதான் மக்களே…!! (மருத்துவம்)

அரிசி என்றாலே ஆபத்து என்ற பிரசாரத்தின் காரணமாகவும், கோதுமை மீது ஏற்பட்ட திடீர் மோகம் காரணமாகவும் நம் பாரம்பரிய உணவுகளை பெரும்பாலும் மறந்துவிட்டோம். மேற்கத்திய உணவுகள் மீதான தாக்கம் அதிகரித்த பிறகு அரிசி உணவுகளை இன்னும் சற்று கூடுதலாகவே மறந்துவிட்டோம். எனினும், பட்டை தீட்டப்பட்ட தானியங்களே சத்துக்கள் இல்லாதவை. அது அரிசி என்பது மட்டுமே அல்ல என்ற விழிப்புணர்வும் நம்மிடையே ஏற்பட்டுள்ளது.

உணவியல் நிபுணர் ஸ்ரீதேவியிடம் நம் பாரம்பரிய அரிசிகள் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் கேட்டோம்…

‘‘நம் நாட்டில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருந்தன. அதில் 5000-க்கும் மேற்பட்ட வகைகள் தமிழ்நாட்டில் மட்டுமே, கிடைத்ததாக வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 200 வகையான அரிசி சேமிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நன்மைகள் மிகுந்திருப்பவை.

இத்தனை அருமை மிக்க அரிசிகள் பல இருந்தாலும், பொதுவாக நம் வீடுகளில் பயன்படுத்துவது வெள்ளைப் பொன்னி அரிசிதான். இதில், நார்ச்சத்து குறைவாக இருப்பதால் கிளைசிமிக் இன்டெக்ஸ் எனப்படும் ரத்தத்தில் சர்க்கரையை அதிகப் படுத்தும் காரணிகள் அதிகமாக இருக்கின்றன. இதனால் உணவு எளிதாக செரிமானம் அடைந்துவிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஆனால், பாரம்பரிய அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் அடைய தாமதமடைந்து, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவினை சீராக பராமரித்து ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது.

மேலும், வெள்ளை அரிசியை பாலிஷ் செய்யும்போது அதில் உள்ள அனைத்து விதமான சத்துக்களும் நீக்கப்பட்டு விடுவதால், மீதமுள்ள மாவுச்சத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இப்படி வெள்ளை அரிசிக்கும் பாரம்பரிய அரிசிக்கும் மருத்துவ குணத்தில் நிறைய மாறுபாடுகள் இருக்கின்றன. வெள்ளை அரிசியின் விலை குறைவு, பாரம்பரிய அரிசி வகைகளின் விலை அதிகம் என்ற பரவலான எண்ணம் நம்மிடையே நிலவுகிறது. ஆனால், பாருங்கள்…

அரிசியை மலிவாக வாங்கிவிட்டு மருத்துவத்திற்காக அதிகம் செலவழிக்கிறோம். முழு தானியங்களை நாளொன்றுக்கு மூன்று சேவைகள் (Servings) உட்கொள்ளலாம். ஒரு ½ கிண்ணம் பாரம்பரிய அரிசிச் சோற்றில் தினசரி உணவின் ஊட்டச்சத்து தேவைகள் பூர்த்தியாகிறது. இதைப்போல பாரம்பரிய உணவுகளில் அரிசி வகையானது மிகவும் முதன்மையானவை. சில அரிசி வகைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

பழுப்பு அரிசி

இப்போது பிரவுன் ரைஸ் என்று கடைகளில் விற்கப்படும் கைக்குத்தல் அரிசியானது குறைவான தோல் நீக்கப்பட்டது. இவ்வகை அரிசி வெகுவாகத் தீட்டப்படாததால் மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். பிரவுன் அரிசிச்சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் தாதுச்சத்தான பாஸ்பரஸ், மாங்கனீசு, பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம் மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளது. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. புற்றுநோயைத் தடுக்கலாம்.

பிரவுன் அரிசியில் அதிக நார்ச்சத்து, செலினியம் இருப்பதால் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களை குடல் பகுதியில் தங்க விடாமல் பாதுகாக்க உதவும். கொழுப்பை குறைக்க உதவும். பிரவுன் அரிசியில் LDL எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து அரிசியில் உள்ள தவிட்டில் உள்ளதால், உடலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது.

மலச்சிக்கலை தடுக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உணவை செரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் ஆரோக்கியமான குடல் இயக்கங்களை பெறலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதில் உள்ள நார்ச்சத்து பயனுள்ளதாக இருக்கும். ஆஸ்துமா நோயை குறைக்கும். ஆஸ்துமாவைக் குறைக்க உதவும் மெக்னீசியம் பிரவுன் அரிசியில் நிறைந்து காணப்படுகிறது. பட்டை தீட்டப்பட்டு சத்துக்களை இழந்த வெள்ளை அரிசி சாப்பிடுவதற்கு பதிலாக பிரவுன் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் சந்தை விலை தோராயமாக ரூ.50.

சிவப்பு அரிசி

இதை புட்டு அரிசி என்று கடைகளில் விற்கிறார்கள். சிவப்பு அரிசியில் அதிகம் காணப்படும் நார்ச்சத்தானது, உண்ணும் உணவை சுலபமாக செரிமானப்படுத்த உதவுகிறது. இதனால் இவை செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

பால், பருப்பு, முட்டை, இறைச்சி இவற்றிற்கு அடுத்தபடியாக சிவப்பு அரிசியில் அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ளது. தினமும் சிவப்பு அரிசியால் செய்த பதார்த்தங்களை காலை உணவாகக் கொண்டால் நாள்முழுவதும் நல்ல உடல் நன்மையைத் தரும். இவை குழந்தைகள் நல்ல உடல் மற்றும் மனவளர்ச்சி பெறவும் உதவுகிறது. சிவப்பு அரிசி கொண்டு செய்யப்படும் சிவப்பரிசி கஞ்சி, இட்லி, இடியாப்பம், புட்டு போன்றவற்றை குழந்தைகளுக்கு உணவில் கொடுத்தால் அவர்களின் உடல் ஆற்றல் பெறுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

எப்போதும் நாம் சராசரியான உடல் வெப்பத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். கோடை காலங்களில் உடல் சூடு அதிகரித்து, அதிகம் வியர்க்கும். அதனால் உடலில் உள்ள சில அத்தியாவசிய சத்துக்களை உடல் இழக்க நேரிடுகிறது. இந்த கோடை காலங்களில் சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடையும்.

ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள் இப்போது இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்களை அதிகம் பாதிக்கிறது. சிவப்பு அரிசி ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கழிவை நீக்கி ரத்தத்தை தூய்மைப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

சிவப்பு அரிசியால் செய்யப்பட்ட புட்டு மற்றும் உணவுப் பண்டங்களை பிரசவம் ஆன பெண்களுக்கு கொடுப்பதால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். தாய்மார்களுக்கும் உடல்சக்தி பெருகும். இதன் சந்தை விலைதோராயமாக ரூ.58.

கருப்பு கவுனி அரிசி

கவுனி அரிசி எனப்படும் கருப்பு கவுனி அரிசி மிகவும் இருப்பதிலேயே ஆரோக்கியமான அரிசி. அரிசி எந்த அளவுக்கு அடர்நிறம் கொண்டுள்ளதோ அந்த அளவிற்கு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து அதிகம் இருக்கும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.கவுனி அரிசியில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.

அதனால் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது.இதயத்திற்கு நல்லது.கருப்பு கவுனி அரிசி, மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தின் முக்கிய காரணமான கொழுப்பை குறைக்க உதவுகிறது.

மேலும் இதய நோய்க்கான முக்கிய காரணிகளான LDL (Low Density Lipoprotein) மற்றும் ட்ரைக்ளிசரைடு (Triglyceride) அளவு, மொத்த கொலஸ்ட்ராலையும் குறைக்கவும் கருப்பு கவுனி அரிசி உதவுகிறது. இதய கோளாறுகளை நீக்கி, ஆரோக்கியமான இதயத்தை பெற கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளலாம்.

அந்தோசயனின்(Anthocyanin) எனப்படும் ஒரு வகையான ஆன்ட்டி ஆக்சிடென்ட் கருப்பு கவுனி அரிசியில் நிறைந்துள்ளன. இதை உணவில் சேர்ப்பதால் இதய நோய் மற்றும் புற்றுநோயை தடுக்கலாம்.கவுனி அரிசியிலேயே சிவப்பு கவுனி என்றொரு வகை உள்ளது. புதுமணத்தம்பதிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அரிசி என்று சொல்லப்படுகிறது. கருவுற்ற தாய்மார்கள் இதை எடுத்துக் கொள்வதால் கருவின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். இதன் சந்தை விலை தோராயமாக ரூ.150.

மாப்பிள்ளை சம்பா

பல வகை அரிசிகளில் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை உடையது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி, புரதம், நார்ச்சத்து மற்றும் தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் ஒரு சிறந்த தானியம்.இந்த அரிசி சாதத்தின் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் பலப்படும். உடல் வலுவாகும். உடலுக்கு வலுவைத் தரக்கூடிய தாதுச்சத்துக்கள் நிறைந்தது. இதன் சந்தை விலை தோராயமாக ரூ.60.

காட்டுயானம்

இவை காடுகளில் விளையக்கூடிய ஒரு வகை தானியம். சுமார் 7 அடி உயரம் வளர்ந்து யானைகளையும் மறைக்கும் தன்மையுடையதால் இவை காட்டுயானம் என அழைக்கப்படுகிறது. இந்த அரிசியில் கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து அதிகம் உள்ளதால் எலும்பு, தசையை வலுப்படுத்த உதவுகிறது.

குடல் சம்பந்தமான நோய், நீரிழிவு நோய்களை குணப்படுத்தும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல்நலத்தை காக்கும். சரும பாதிப்புகள் வராமல் தடுக்கும்.காட்டுயானம் அரிசியை உணவில் சேர்த்து வந்தால் தூக்கம் சம்பந்தமான பிரச்னைகளை தடுக்கலாம்.இதன் சந்தை விலை தோராயமாக ரூ. 82.

மூங்கில் அரிசி

மூங்கில் அரிசியில் உள்ள அதிக அளவு சுண்ணாம்புச்சத்தால் மூட்டு வலிக்கு அருமருந்தாகும். எலும்பு சம்பந்தமான நோய்க்கு மிகவும் உகந்தது. முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கும்.நார்ச்சத்து மிக்கது என்பதால் ரத்த கொழுப்பு, சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. எலும்புகளை உறுதியாக்கி நரம்புத்தளர்ச்சியை சீர் செய்யும். இதன் சந்தை விலை தோராயமாக ரூ.165.

இவற்றைத் தவிர, பூங்கார், கருத்தக்கார், அறுபதாம் குறுவை, இலுப்பைப்பூ சம்பா, தங்கச்சம்பா, கருங்குறுவை, கருடன் சம்பா, கார் அரிசி, குழியடிச்சான், சேலம் சன்னா, பிசின, தூய மல்லி, கிச்சிலி சம்பா, வாலான் சம்பா, வாடான் சம்பா மற்றும் சூரக்குறுவை என பல மருத்துவ குணங்கள் உள்ள அரிசி வகைகளை தற்போது சந்தையில் விற்கிறார்கள்.

இவற்றையெல்லாம் விட்டு விட்டு, நம் காலநிலைக்கு சற்றும் ஒத்துக் கொள்ளாத நூடுல்ஸ், பிரட், பர்கர், பீட்சா என்று சாப்பிட்டு பல நோய்களையும் வரவழைத்துக் கொள்கிறோம். இனி வரும் காலங்களிலாவது, நம் பாரம்பரிய உணவு களை உட்கொண்டு ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ள முற்படுவோம்.Post a Comment

Protected by WP Anti Spam