By 5 August 2019 0 Comments

கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை!! (மருத்துவம்)

பரந்து விரிந்த இந்தப் பூவுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஓய்வு மிக மிக அவசியம். அதே போல், மனிதனுக்கும் ஓய்வானது புத்துணர்ச்சியை அளிக்கவல்லது. பகல் முழுவதும் உழைக்கும் மனிதன் இரவு நேரத்தில் உறக்கம் கொள்வது இயற்கையே. அந்த உறக்கம் ஆரோக்கியமானதாக அமைய உதவுகின்றன கோரைப்பாய்கள்.

கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை என்று கூட சொல்லலாம். நல்ல தூக்கத்துக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் கோரைப்பாய் பற்றியும் சித்த மருத்துவர் பானுமதியிடம் கேட்டோம்… அதுதொடர்பான பல்வேறு தகவல்களையும் விரிவாகவே நம்மிடம் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

‘‘இடைவிடாமல் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புகள் அனைத்தும் களைத்து விடுகின்றன. அவைகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று இயங்க ஓய்வு அல்லது உறக்கம் இன்றியமையாதது. ஓய்வெடுத்துக் கொள்ளும்போது ஏழு உடல் தாதுக்களாலான நம் உடல் உறுப்புகள் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தத்திலிருந்து தேவையான ஊட்டத்தினைப் பெற்று தேய்வடைந்த பாகங்களை புதுப்பித்து பலப்படுத்திக் கொள்கின்றன. ஆனால், உறக்கம் கொள்ளும்போது உடல் மட்டும் அல்லாது மனமும் சேர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறது.

எனவே ஓய்வு மற்றும் உறக்கம் ஆகிய இரண்டும் மனிதனுக்கு மிகத் தேவையானது. உறக்கத்தினால் ஐம்பொறி புலன்களின் சோர்வும், சரீர வருத்தமும் போவது மட்டுமின்றி மனமும் உற்சாகமடைகிறது. இந்தக் கருத்தினை பதார்த்த குண சிந்தாமணி என்கிற சித்த மருத்துவ நூல் விளக்குகிறது. அதனால், முறை தவறாது, நித்திரை விதிப்படி, உறக்கம்கொள்வது முக்கியமானது. சித்த மருத்துவ நூற்கள், நித்திரை செய்யும் விதத்தினை மிகவும் விளக்கமாக கூறியுள்ளது.

முறையான உறக்கம் மேற்கொள்வதற்கு, அதற்கு உண்டான இடத்தினை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அந்த இடமானது குளிர் வாடை, பனி, வெயில், வெப்பம், சூடு, காற்று மற்றும் தூசி முதலியன பாதிப்பை உண்டாக்காதவாறு இருக்க வேண்டும். அதாவது உறக்கம் மேற்கொள்ளும் அறையானது மிக சுத்தமானதும், குளிர்ச்சி, ஓதம் முதலியன இல்லாததும், மேற்கூரை அமைந்ததும், அதிக காற்று வீசாததுமாக இருக்க வேண்டும். அவ்வாறு அமைந்த அறையில், சிறு பூச்சிகள், எறும்புகள் இவைகளால் தொல்லைகள் ஏற்படாதவாறும் அதிக காற்று வீசாத இடத்திலும் படுக்கை அமைய வேண்டும்.

தரையிலிலோ, கட்டிலிலோ படுக்கை அமைத்துக் கொள்ளலாம். படுக்கை எவ்வாறாயினும், விரிப்பானது பாயாகவோ, துணியாகவோ, மெத்தையாகவோ இருக்கலாம். அவரவர் வசதிக்கேற்ப எதை வேண்டுமென்றாலும் உபயோகித்து கொள்ளலாம். ஆனாலும், பெரும்பாலானவர்கள் பாய் விரிப்புகளையே பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

விரிப்பானது நாம் படுக்கும் இடத்திற்கும் அல்லது கட்டிலுக்கும், நமக்கும் இடையில் உள்ள தொடர்பினை கட்டுப்படுத்தி நமக்கு நன்மை பயப்பதாகும். அந்த விரிப்பானது பல வகைப்படும். அவை தாழம்பாய், கோரைப்பாய், பிரப்பம்பாய், ஈச்சம்பாய், மூங்கிற்பாய் என்று பலவகைகளாகும். ஒவ்வொன்றிற்கும் வேறு வேறு விதமான பயன்கள் உண்டென்றாலும், கோரைப்பாயின் பயன்கள் மிகவும் அதிகமாகும்.

கோரையானது இந்தியாவில் பல இடங்களிலும் வளரக் கூடிய புல் வகையைச் சார்ந்த ஒரு தாவரம் ஆகும். ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப்புற்கள் வளர்கின்றன. இது சிறு கோரை, பெருங்கோரை என இரு வகைப்படும். இந்தக் கோரைகள் முளைத்ததில் இருந்து நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு, சுகத்தையும், குளிர்ச்சியையும்அளிக்கிறது.

கோரைப்பாய் எப்படி தயாராகிறது என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அம்முறையினை அறிந்துகொண்டாலே ஆரோக்கியத்துக்கு எந்த அளவு கோரைப்பாய் முக்கியத்துவம் பெறும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

ஆற்றோரம் உள்ள கோரைகளை அறுத்து வந்து முதலில் இரண்டாகக் கீறுவார்கள். இப்படிக் கீறிய கோரைகளை ‘முடி’களாக அல்லது கட்டுகளாக கட்டி வெயிலில் காய வைப்பார்கள். பிறகு அம்முடிகளை ஆறு அல்லது குளத்து நீரில் ஒரு நாள் முழுமையும் ஊற வைப்பார்கள். ஊறிய கோரைகளை மீண்டும் இரண்டாக கீறுவார்கள்.

மீண்டும் அக்கோரைகளை கட்டுகளாக முடிந்து வெயிலில் காய வைப்பார்கள். கோரைகள் நன்கு காய்ந்ததும், அதனை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று அளவுப்படி பிரித்து வகைப்படுத்திக் கொள்வார்கள். அதில் சிறிது கோரையைப் பிரித்து எடுத்து, அதில் தேவையான அளவு பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற வர்ண சாயங்களைத் தனித்தனியாகச் சேர்த்து சாயம் ஏற்றிக் கொள்வார்கள்.

கற்றாழையிலிருந்து நூல் தயாரித்து கொள்வார்கள். பாய் நெய்யத் தேவையான மூலப்பொருட்களான கோரையும், நூலும் பயன்படுத்தி பாய் தயாரித்தார்கள். கோரையினால் நெய்யப்பட்ட பாயில் படுத்து உறங்கினால் உடல் சூடு, பசிமந்தம், சுரவேகம் நீங்கும். நம் உடலின் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாவதுடன், அமைதியான உறக்கமும் ஏற்படும். மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும்.

கோரைப்பாயின் சிறப்பே கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிப்பதாகும். கோரை பாயில் படுத்து உறங்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு, இடுப்பு வலிகள் குறைகிறது. கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட ஏதுவாகிறது.

குழந்தைகள் பாயில் படுத்து உறங்குவதால், அவர்களின் முதுகென்பு நேர்படுத்தப்பட்டு கூன் விழுவது தடுக்கப்படுகிறது. ஆண்களின் சுவாசத்தசைகள் வலுப்பெற்று மூச்சு சீரடைகிறது. இதனால் அவர்களின் உடல் வன்மை மேன்மை அடைகிறது. யோகப்பயிற்சி மேற்கொள்பவர்கள் பாய் விரித்து அதன் மேல் அமர்ந்து பழகினால், அவர்களின் தேகம் புவிஈர்ப்பு விசையினால் பாதிப்படையாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் யோகப் பயிற்சியினால் ஏற்படக்கூடிய உடற்சூடு கட்டுப்படுத்தப்படுகிறது.

திருமண சீர்வரிசை பொருட்களில் கோரைப்பாய் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழர்களின் கலாச்சார பண்பாட்டின் அடையாளமாகவும் அது பார்க்கப்படுகிறது. மேலும், நம் இல்லங்களுக்கு வருகை தரும் விருந்தினர்களை வரவேற்று பாயில் அமரவைத்து உபசரிப்பது,மரியாதைக்குரிய செயலாகும்.

தற்காலத்தில், கோரைப்பாயானது நம் இல்லங்களில் உள்ளரங்க அலங்கரிப்பில் பலவிதமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் வீட்டின் அழகு அதிகரிப்பதுடன், அதில் வசிக்கும் நபர்களின் உடல் நலமும் மேம்படுத்தப்படுகிறது.

தென் தமிழ்நாட்டின் குடும்பங்களில் பழக்கத்தில் இருந்துவரும் ‘நிலாச்சோறு’ சாப்பிடும் நிகழ்வில், கோரைப்பாயானது மொட்டைமாடியில் விரிப்பதற்கு விரிப்பாக பயன்படுகிறது. இதன்மூலம் குடும்ப ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்திற்கு வித்திடுகிறது.

‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ – என்ற தொடர்க்கேற்ப கோரைப் பாயில் படுத்து உறங்க உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும். மேலும் நாம் வாழும் இடமும் மனதிற்கு இதமான, மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தித் தரும்’’.Post a Comment

Protected by WP Anti Spam