By 10 August 2019 0 Comments

தோசை தக்காளி சட்னியால் பிறவி மோட்சம் அடைந்தேன்!! (மகளிர் பக்கம்)

‘‘சாப்பாடுன்னா என்னைப் பொறுத்தவரை நான் பசிக்கும் போது தான் சாப்பிடுவேன். நான் மத்தவங்க போல் மூணு வேளையும் வயிறு முட்ட முட்ட சாப்பிட மாட்டேன். கம்மியா தான் சாப்பிடவேன்.

ஆனா, அடிக்கடி சாப்பிடுவேன். நீங்க எல்லாம் மூணு வேளை சாப்பிடுவீங்க. நான் அதையே நான்கு வேளையா பிரிச்சு சாப்பிடுவேன்’’ என்று தன் உணவு பயணத்தை பற்றி பேசத் துவங்கினார் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தற்போது ஆண்தேவதை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘‘சினிமாவில் வந்ததால் மட்டும் இல்ைல எப்போதுமே நான் டயட்டில் கொஞ்சம் கான்சியசாவே இருப்பேன். பெரும்பாலும் வீட்டு சாப்பாடு தான். வெளியே சாப்பிடுவது ரொம்பவே குறைவு. வீட்டில் சாப்பிடும் போது அரிசி உணவுகளை நான் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள மாட்டேன். மாறாக சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்வேன்.

காலையில் சிறுதானிய தோசை, மதியம் அரிசி சோறுக்கு பதில் சிறுதானியத்தை சேர்த்துக் கொள்கிறேன். ஒரு சிலர் டயட் இருக்கிறேன்னு வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அல்லது பழச்சாறுகள் மட்டுமே சாப்பிடுவாங்க. என்னால் அப்படி சாப்பிட்டு உயிர் வாழ முடியாது. அப்படி ஸ்ட்ரிக்ட் டயட் இருந்தால் ஒரு கட்டத்தில் மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

டயட் எல்லாம் வேண்டாம்ன்னு நாம் பழைய உணவுகளை சாப்பிட ஆரம்பிச்சிடுவோம். அப்படி சாப்பிடுவதற்கு பதில் என்னால் எப்படி இருக்க முடியுமோ அப்படி இருக்கலாம்ன்னு முடிவு செய்தேன். முழுமையா சிறுதானிய உணவுக்கு மாறிட்டேன்’’ என்று சொல்லும் ரம்யாவிற்கு பிரியாணி என்றால் வேறு எந்த உணவும் அவர் கண்களுக்கு தென்படாதாம்.

‘‘சாப்பாட்டுல எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும். தேடிப் போய் சாப்பிடுவேன். நான் இருப்பது பல்லாவரம். இங்கு யா.மொயிதீன் பிரியாணி ரொம்ப ஃபேமஸ். அதனால் அங்க போய் சாப்பிடுவேன். என் அம்மாவின் சொந்த ஊர் குற்றாலம். ஒவ்வொரு வருடமும் அங்கு
போயிடுவோம். வருஷா வருஷம் போனாலும் அருவியில் குளிப்பது மட்டும் சளிக்கவே சளிக்காது. அதே போல் அருவியில் குளிச்சிட்டு பசியோட நேரா போய் பார்டர் கடையில் பரோட்டா சாப்பிட்டா… சொல்லவே வேணாம். அப்படி இருக்கும். எனக்கு அந்த கடையில் பரோட்டா சால்னா ெராம்ப பிடிக்கும். பரோட்டாவை பிய்ச்சு போட்டு சால்னாவை ஊற்றி நன்கு ஊறியதும் சாப்பிடும் போது… அதன் சுவையே தனிதான்.

வீட்டில் பார்சல் வாங்கிட்டு போகலாமான்னு சொல்வாங்க. ஆனால் எனக்கு அந்த கடையில் அந்த ஏம்பியன்சில் உட்கார்ந்து சாப்பிட தான் பிடிக்கும். ஒவ்வொரு வருஷமும் குற்றாலத்துக்கு போனால், பார்டர் கடைக்கும் போகாமல் வந்தது இல்லை. இங்கு சென்னையில் பல இடங்களில் அதன் கிளை இருக்கு. சுவையில் மாற்றம் இருக்காது தான். ஆனால் என்னதான் இங்கு பல இடங்களில் கிளைகள் இருந்தாலும் அதன் பூர்வீக கடையில் பாரம்பரியம் மாறாமல் சாப்பிடும் போது அதற்கு இருக்கும் சுகமே தனிதான்’’ என்று சொன்ன ரம்யா சிங்கப்பூர், தாய்லாந்ததுக்கு கப்பல் வழியாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

‘‘சிங்கப்பூரில் இருந்து மலேசியா, கோலாலம்பூர், தாய்லாந்து, பெனாங்கன்னு ஐந்து நாள் கப்பல் பயணம். சிங்கப்பூரில் துவங்கி ஐந்து நாள் ஒவ்வொரு ஊராக சென்று வந்தோம். கப்பலில் எல்லா நாட்டு உணவுகளும் இருந்தது. அதாவது அமெரிக்கன், சைனீஸ் முதல் தமிழ்நாட்டு உணவும் இருந்தது. அங்க இருந்த உணவுகளை பார்த்தாலே வயிறு நிரம்பிடும் போல. அப்படி இருந்தது. நான் தினமும் ஒவ்வொரு நாட்டு உணவினை சாப்பிட்டேன். எல்லா நாளும் எல்லா உணவுகளை சுவைக்க முடியாது. அதனால் ஒரு நாளைக்கு ஒரு உணவுன்னு திட்டமிட்டு சாப்பிட்டேன்.

எனக்கு பொதுவா வெளியே சாப்பிடும் உணவுகள் ஒத்துக் கொள்ளாது. ஆனால் அங்கிருந்த உணவுகள் எல்லாம் ஃபிரஷா இருந்தது. அதனால் எனக்கும் சாப்பிட்டதும் அதிகம் சாப்பிட்ட உணர்வு ஏற்படல. ரொம்ப என்ஜாய் செய்து சாப்பிட்டேன். வெளி சாப்பாடு சாப்பிட உணர்வே இல்லை. ஒரு நாள் நூடுல்ஸ் சாப்பிட்டேன்.

ஒரு நாம் ஸ்டேக் மட்டுமே சாப்பிட்டேன். அங்க கூட தோசை தக்காளி, தேங்காய் சட்னி இருந்தது. மலேசியாவிற்கு போன போது, அங்கு சாக்லெட் சாப்பிட்ட அனுபவம் இன்னும் என்னால் மறக்க முடியாது. அங்க தான் சாக்ெலட் கொக்கோ தயாரிக்கிறாங்க. அதனால ரொம்ப ப்யூர் சாக்லெட் கிடைக்கும். அந்த சாக்லெட் ஒரு வருஷம் ஃபிரிட்ஜில் வைக்காம இருந்தாலும் உருகாது.

கீழே போட்டாலும் உடையாது. ஆனால் வாயில் போட்டா அப்படியே கரைந்திடும். நாம மென்றும் எளிதாக சாப்பிடலாம். அது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. தாய்லாந்து போன போது அங்கு தாய் கறி மற்றும் சாதம் சாப்பிட்டேன். அவங்க கறி ரொம்ப வித்தியாச சுவையுடன் இருந்தது. அதில் காய்கறி மட்டும் இல்லாமல் சிக்கன் மற்றும் மட்டனிலும் செய்வாங்க. அப்புறம் கிரில் சிக்கன். அதுவும் அங்க ரொம்பவே நல்லா இருந்தது’’ என்றவர் தமிழகத்தில் தான் சாப்பிட்டு மெய்மறந்த உணவுகளை பற்றி விவரித்தார்.

‘‘ஜோக்கர் திரைப்படத்துக்காக தர்மபுரிக்கு சென்று இருந்தோம். அங்கு தான் 35 நாள் ஷூட்டிங். 35 நாளும் யுனிட் சாப்பாடு இருக்கும். ஆனால் அங்கு ஒரு இடத்தில் குழிப்பணியாரம் சாப்பிட்டேன். ரொம்பவே நல்லா இருந்தது. பொதுவா குழிப்பணியாரத்துக்கு கார சட்னி இல்லைன்னா தேங்காய் சட்னி தான் தருவாங்க. அங்க மீன் குழம்பு கொடுத்தாங்க. வித்தியாச சுவையில் இருந்தது.

ஒரு முறை நண்பர்களுடன் வால்பாறை சுற்றுலா சென்றேன். வரும் வழியில் ஈேராட்டில் ஒரு உணுவகம் இருப்பதாக கேள்விப்பட்டேன். ‘யு.பி.எம் நம்ம வீட்டு சாப்பாடு’ தான் அந்த உணவகத்தின் பெயர். கணவன் – மனைவி இருவரும் தலை வாழை இலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அசைவ உணவினை பரிமாறுவார்கள். அங்க கண்டிப்பா போய் சாப்பிடணும்ன்னு நானும் என் தோழிகளும் முடிவுெசய்தோம்.

உணவகத்தில் பெரிய சைஸ் தலை வாழை இலை போட்டு ஒவ்வொரு உணவா பரிமாறுவாங்க. பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறும். எனக்கோ வயறு ரொம்ப சின்னது. எல்லா உணவினையும் டேஸ்ட் செய்யாமல் இருக்க முடியல. அதனால் சாப்பாட்டை குறைவா சாப்பிட்டு அசைவ உணவு எல்லாத்தையும் ஒரு பிடி பிடிச்சேன்.

ஒரு முறை கேரளா போன போது அங்கு படகு வீட்டில் தங்கி இருந்தோம். அப்ப படகில் சமைச்சு தருவாங்க. நண்டு பெப்பர் மசாலா செய்து கொடுத்தாங்க. காரசாரமா ரொம்ப நல்லா இருந்தது. புட்டு இடியாப்பம், கடலை கறி அவங்க ஸ்டைலில் செய்து கொடுத்தாங்க. அதுவும் நல்லா இருந்தது. கேரளா எர்ணாகுளத்தில் உள்ள முல்லைப்பந்தல் இடத்திலும் போய் சாப்பிட்டோம்.

பாரம்பரிய கேரள உணவுகள் அங்கு ஒவ்வொன்றும் அவ்வளவு நல்லா இருந்தது. குறிப்பா அவங்க மீன் வறுவல். எல்லாம் தேங்காய் எண்ணையில் அதுவுமே தனி சுவையா இருந்தது. நானோ பிரியாணி பிரியை. திண்டுக்கல் போன போது அங்கு வேணு பிரியாணி கடை ரொம்ப ஃபேமஸ்ன்னு கேள்விப்பட்டு அங்கு போய் சாப்பிட்டேன். ரொம்பவே சூப்பரா இருந்தது.

திருவல்லிக்கேணியில் விடியற்காலை நான்கு மணிக்கு சுடச்சுட பிரியாணி கிடைக்கும்னு கேள்விப்பட்டு இருக்கேன். வீட்டில் சொன்னதும் அங்க போய் ஒரு முறை வாங்கி கொடுத்தாங்க. அந்த பிரியாணியின் சுவைக்கு வேறு எந்த உணவும் ஈடாகாது. அப்படி இருந்தது. நான் அங்க போய் சாப்பிட்டது இல்லை. அதனால அங்கு போய் நேரடியா கடையில் அமர்ந்து அந்த விடியற்காலையில் போய் சாப்பிடணும்.

பிரியாணிக்கு அடுத்து ஆட்டுக்கால் பாயா தோசை ரொம்ப பிடிக்கும். அப்புறம் மிளகு நண்டு மசாலா என்னோட ஃபேவரெட். ரொம்ப விரும்பி சாப்பிடுவேன். அப்புறம் மாம்பழ ஐஸ்கிரீம். எல்லா நேரமும் என்னை ரொம்ப டெம்ட் செய்யும் உணவுன்னா அது மாம்பழ ஐஸ்கிரீம் தான். ஒரு சில இடங்களில் மாம்பழத்தை துண்டுகளா போட்டு தருவாங்க. அப்படி இல்லைன்னாலும் எனக்கு பிடிக்கும்’’ என்றவருக்கு என்னதான் ெவளியே சாப்பிட்டாலும் அம்மாவின் கையால் செய்யும் உணவுக்கு என்றும் அடிமைதானாம்.

‘‘அம்மா சுத்த சைவம். ஆனா அசைவம் ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க செய்யும் உளுத்தங்களி அப்புறம் பருத்திக் கொட்டை கஞ்சி நான் கேட்டு வாங்கி சாப்பிடுவேன். இது அவங்க சிக்னேசர் டிஷ்னு சொல்லலாம். மாசம் ஒரு தடவையாவது செய்ய சொல்லி சாப்பிடுவேன். அப்புறம் அவங்க செய்யும் மீன் குழும்பு, மீன் வறுவல் பிடிக்கும். அவங்க மீன் வறுவலுக்கு சேர்க்கும் மசாலாவுடன் கொஞ்சம் சீரகமும் பொடி செய்து போட்டால் சூப்பரா இருக்கும்’’ என்றவருக்கு என்னதான் ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தால் சாதாரணமா ஒரு தோசை சாப்பிட்டாலும் அமிர்தமா இருக்குமாம்.

‘‘ஜோக்கர் பட ஷூட்டிங் 35 நாள் தர்மபுரியில இருந்தேன். நல்ல சாப்பாடு தான் கிடைக்கும். ஆனாலும் எப்ப வீட்டு சாப்பாடு சாப்பிடுவோம்ன்னு இருந்தது. ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து காலையில் தோசை, தக்காளி சட்னி சாப்பிட்டேன். பிறவி மோட்சம் அடைந்தது போல் இருந்தது. மதியம் அம்மா எனக்காக மீன் குழம்பு வச்சிருந்தாங்க. சொல்லவா வேணும்…’’ என்றவர் எல்லாரும் நமக்கான காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என்றார்.

‘‘இப்ப எல்லாத்துலேயும் கலப்படம் இருக்குன்னு சொல்றாங்க. அதுல காய்கறியும் அடங்கும். எல்லாருடைய வீட்டிலும் சின்னதா ஒரு பால்கனி இருக்கும். இல்லைன்னா மொட்டைமாடி கூட இருக்கும். அதில் ஒரு தொட்டியில் கீரை, கொத்தமல்லி போடலாம். ஒரே மாசத்தில் கீரை விளைஞ்சிடும். அதே போல் கத்தரிக்கா, வெண்டைக்காய் கூட தொட்டியில் வளர்க்க முடியும். எங்க வீட்டில் மாடித் தோட்டம் இருக்கு.

இப்ப வெயில்னால போடாம இருக்கோம். கத்தரி முடிந்ததும் ஆரம்பிச்சிடுவேன். இது நம் உடலுக்கும் நல்லது’’ என்றவர் தன் டயட் பிளான் பற்றியும் குறிப்பிட்டார். ‘‘டயட் என்னை பொறுத்தவரை நம்மள பத்தியும் நம்ம உடலை குறித்து நன்கு தெரிந்து இருக்கணும். ஒவ்வொருவரின் மெட்டபாலிசம் மாறுபடும்.

அதற்கு ஏற்ப தான் நாம டயட் இருக்கணும். என்னால பிரட், முட்டையோடு வாழ முடியாது. அதற்கு மாற்று என்னென்னு தெரிந்து சாப்பிடணும். நான் பிரட்டை சிறுதானிய தோசையாக மாற்றிக் கொண்டேன். சில சமயம் கேழ்வரகு கஞ்சி சாப்பிடுவேன்’’ என்றவர் ஆரோக்கியமா இருக்க நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதில் தவறில்லை என்றார்.

சிறுதானிய தோசை மற்றும் சிக்கன் கறி

சிறுதானிய தோசை
தேவையானவை
தினை, குதிரைவாலி, சாமை, வரகு – சம அளவு
சோளம், வெள்ளை கொண்டைக் கடலை,
கேழ்வரகு ஒரு கைப்பிடி, உப்பு – தேவைக்கு.
செய்முறை

சிறுதானியங்கள் மற்றும் கேழ்வரகினை நன்கு அலசி காயவைக்கவும். இதனை மற்ற பொருட்களுடன் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். தோசை வார்ப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேவையான அளவு மாவு எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு தோசையாக சுடும் போது வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். அடையா சாப்பிட நினைத்தால் அதில் சிறிதளவு பருப்பினை அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். கேரட் துருவி ஊத்தப்பம் போல் சப்பிடலாம். அல்லது பொடி தூவியும் சாப்பிடலாம்.

சிக்கன் கறி

தேவையானவை
கோழிக்கறி – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 1
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 1/2 மூடி
முந்திரி – 8
தயிர் – சிறிதளவு
எண்ணை – தேவையான அளவு
பட்டை, கிராம்பு – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ேமசைக்கரண்டி
உப்ப – சுவைக்கு ஏற்ப
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி.

செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவ வேண்டும். அதில் சிறிதுளவு ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, தயிர் சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். தேவைப்பட்டால் முதல் நாள் இரவே மேரினேட் செய்து வைக்கலாம். குக்கரில் எண்ணை ேசர்த்து அதில் பட்டை கிராம்பு தாளிக்கவும்.

பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன் நிறம் வரும் வரை நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி ேசர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், தேங்காய்ப்பால் மற்றும் முந்திரி விழுது சேர்த்து குக்கரில் வைத்து நான்கு விசில் வேக விடவும்.

நாட்டு கோழி என்றால் பத்து விசில் வரை வேக விடவேண்டும். அதன் பிறகு குழம்பாக ேவண்டும் என்றாலோ அல்லது கிரேவி ேபால் தேவை என்றால் அதற்கு ஏற்ப கொதிக்க விடவும். தேங்காய்ப் பால் பிடிக்கவில்ைல என்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இது சிறுதானிய ேதாசைக்கும் நன்றாக இருக்கும். சாதத்திற்கும் சுவையாக இருக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam