By 13 August 2019 0 Comments

சிறு சிறு பொருட்கள் தயாரிப்பு…சிறப்பான வருமான வாய்ப்பு!! (மகளிர் பக்கம்)

சிறு தொழில்

‘‘நான் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கேன். என் தந்தை ஹெட்மாஸ்டர். தலைமையாசிரியராக பணியாற்றினாலும் நான் பருவமடைந்த பின் எங்க வீட்டில் என்னை படிக்க பள்ளிக்கு அனுப்பவில்லை. பள்ளிக்குச் சென்று படிக்க முடியவில்லை என்றாலும், எனக்கு சிறு வயதில் இருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். அதனால், ஒரு சில கைவினைப் பொருட்கள் செய்யும் கலையை கற்றுக்
கொண்டேன்.

திருமணமாகி 45 வருடங்கள் ஆகிறது. 3 பிள்ளைகள். பிள்ளைகளுக்குத் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்ற பிறகு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தனிமையில் இருப்பதை விரும்பாமல் நான் சிறுவயதில் கற்றுக்கொண்ட கலைகளை மறுபடியும் புதுப்பிக்க ஆரம்பித்தேன். புதுச்சேரியில் இந்தியன் வங்கி நடத்திய பெண்களுக்கான சுயதொழில் பயிற்சியில் சேர்ந்து, ஆர்டிபிசியல் ஜூவல்லரி கற்றுக்கொண்டு, என் பேத்திக்கு புத்தம் புதிய டிசைனில் கிறிஸ்டல் மாலை, வளையல், பிரேஸ்லெட் செய்து தருவேன்.

இதனைப் பார்த்த அவளுடைய வகுப்பு டீச்சரும், ஃப்ரண்ட்ஸ்களும் நன்றாக இருக்கிறது என்று என்னிடம் வந்து வாங்கிச் செல்வார்கள். கிறிஸ்டல் நகைகள் செய்து கொடுப்பதின் மூலமாக நிரந்தரமாக ஒரு வருமானம் ஈட்ட ஆரம்பித்தேன். அக்கம் பக்கத்திலுள்ள பெண்கள் கற்றுக்கொடுக்கச் சொன்னதில் அவர்களுக்கும் பயிற்சி கொடுத்தேன்’’ என்றவர் கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘25-க்கும் மேற்பட்ட கலைகளை கற்றுக்கொண்டேன். கடந்த பத்தாண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளித்து இருக்கேன். கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளித்த இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனம் மற்றும் பவ்டா எனும் தொண்டு நிறுவனம் மூலம் சமூகநல வாரியத்தில் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கும் வேலை எனக்கு கிடைத்தது.

ஒரு மணி நேரம் முதல் ஒரு வாரம் என மகளிர் பயிற்சி பெற்றார்கள். மேக்ரமி ரோப்பில் கணேசா, பட்ரோஸ் ஹேண்ட்பேக், பழைய புடவையில் கால் மிதியடி போன்றவற–்றைதான் அதிகமாக பெண்கள் கற்றுக் கொண்டனர். அதுமட்டும் இல்லாமல் சமூகநல வாரியம் பெண்கள் விழிப்புணர்வு மையம் மூலம் அவ்வப்போது பயிற்சி அளித்து வந்தேன். சுயஉதவிக்குழு பெண்களுக்கும் இரண்டு நாள் பயிற்சி அளித்தேன்.

நாமக்கல், திருச்சி, சென்னை, கோயம்புத்தூர் என 15 வருடங்களாக சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறேன். குழு தலைவியாகவும் இருக்கிறேன். குழுவின் மூலமாக புதுச்சேரி, பீச் மற்றும் சென்னை தி.நகர் ஆகிய இடங்களில் 1 வாரம் நவராத்திரி ஸ்டால் போடுவேன். அதில், குறிப்பாக கீ-செயின், கிறிஸ்டல் மாலை, நெக்லஸ், ஆரம், கொலுசு, வளையல், பிரேஸ்லெட் போன்ற பொருட்களை தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவார்கள்’’ என்றவர் இதனை குறைந்த முதலீட்டில் துவங்கி நிறைய லாபம் பார்க்க முடியும் என்றார்.

‘‘ஒரு பெண் வீட்டிலிருந்து ஏதாவது ஒரு கைவினைப்பொருள் தயாரிப்பை மேற்கொண்டால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். மேலும், ஒரு பொருளை கடையில் வாங்குவதைவிட வீட்டில் தயாரித்தால் செலவும் குறைவாகும். குறிப்பாக ஃபேஷன் ஜூவல்லரி இளம் கல்லூரி பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்கள் உடுத்தும் உடைக்கு மேட்சாக விதவிதமாக தயாரிக்கலாம். புதுப்புது டிசைனில் நம்முடைய கிரியேட்டிவ்க்கு தகுந்த மாதிரி வடிவமைக்கலாம். ஃபேஷன் ஜூவல்லரி, பேப்பர் ஜூவல்லரி, டெரகொட்டா ஜூவல்லரி, சில்க் திரெட் ஜூவல்லரி, பாலிமர் க்ளே ஜூவல்லரி, பஞ்சு பொம்மை தயாரிப்பு, கார்சீட் மேட், காரில் மாட்டும் சின்னச் சின்ன பஞ்சு பொம்மை, கீ-செயின், குஷன் மேக்கிங், கால் மிதியடி.

மேக்ரமி ரோல்டில் கணேசா, ஹேஸ், ஊஞ்சல், டவல் ஹேன்கிங், வால்ஹேன்கிங் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை நாம் வீட்டில் இருந்தபடியே தயாரிக்கலாம்’’ என்றவர் 20க்கும் மேற்பட்ட கைவினை பொருள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்து வருகிறார்.‘‘கைவினை பொருட்கள் மட்டும் இல்லாமல் பாரம்பரிய பலகாரம் செய்வதிலும் நான் ஸ்பெஷல்.

அதிரசம், நெய் உருண்டை, ரவா லட்டு, பொருளங்காய் உருண்டை, கம்மர்கட் போன்ற உணவு பொருட்களை வீட்டில் இருந்து தயாரித்து கடைகள் மற்றும் பேக்கரிகளுக்கு கொடுத்து வருகிறேன். காது குத்து, வளைகாப்பு விசேஷங்களுக்கு சிறப்பு பலகாரம் ஆர்டர் முறையிலும் செய்து தருகிறேன்.

இன்றைய சூழலில் ஆண்களின் வருமானத்தை மட்டும் நம்பியிருந்தால் ஒரு குடும்பத்தை சீராக நடத்துவது கஷ்டம். எனவே, இருவரது வருமானமும் தேவைப்படுகிறது. வேலைக்குச் செல்வது என்பது எல்லா பெண்களுக்கும் சாத்தியம் இல்லை. எனவே, ஏதாவது ஒரு சிறுதொழிலைக் கற்றுக்கொண்டால், கவலையின்றி மன அமைதியோடு மகிழ்ச்சியாக வாழலாம்’’ என்றார் கைவினைக் கலைஞர் ரமணி.Post a Comment

Protected by WP Anti Spam