By 15 August 2019 0 Comments

கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன் வீசிய ‘300 குண்டு’!! (கட்டுரை)

பெரிய மனிதர்கள் கூட, அரசியலுக்காகத் தரம் தாழ்ந்து போவது கவலைக்குரியது. சாக்கடை அரசியலுக்குள் படித்த மனிதர்கள் இறங்கும் போது, அவர்கள் அதைச் சுத்தப்படுத்துவார்கள் என்றுதான் பலரும் நம்புகின்றனர்.

ஆனால், படித்தவர்களும் தங்கள் பங்குக்கு சாக்கடையைக் குழப்பி விட்டுக் கொண்டிருப்பதைக் காண்கையில் ஏமாற்றமாக உள்ளது. இனவாதத்தைக் கையில் எடுக்காமல், அரசியல் செய்ய முடியாது என்று படித்தவர்களே நினைப்பது, எத்தனை பெரிய அபத்தம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் 300 கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, ஓய்வுபெற்ற நீதியரசரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். தனது கட்சிக் காரியாலயத்தை மட்டக்களப்பில் திறந்து வைப்பதற்காக வந்திருந்த போதே, அவர் இதனைக் கூறினார்.

அத்தோடு நின்று விடாமல், கிழக்கு மாகாணத்தில் ஒன்பதாயிரம் தமிழ்ப் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்தத் தகவலை அத்துரலியே ரத்தன தேரர் தன்னிடம் கூறியதாகவும் இதன்போது, இன்னொரு குண்டையும் விக்னேஸ்வரன் தூக்கிப் போட்டிருந்தார்.

உண்மையாகவே, இவை அதிர்ச்சி தரும் விடயங்களாகும். ஒரு சமூகத்தின் வசமிருந்த 300 கிராமங்களை, இன்னொரு சமூகம் பறித்தெடுப்பதென்பது பெரும் அநீதியாகும்; அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது; அதற்கு நியாயம் பெற்றுக் கொடுத்தல் அவசியமாகும்.

ஆனால், விக்னேஸ்வரன் கூறிய அந்தக் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை தொடர்பில்தான் சிக்கல் உள்ளது. ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றவர், அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களையும் தன் கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும். அதுவும், இவ்வாறு ஒரு சமூகத்தின் மீது, இப்படியொரு பாரதுரமான குற்றச்சாட்டை எழுந்தமானமாக, வாய்க்கு வந்தபடி கூறிவிட முடியாது.

விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் அவர் வசம் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். ‘வீரகேசரி’ பத்திரிகையில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த, தொடர் கட்டுரையொன்றிலிருந்து இந்தத் தகவல்களைத் தான் பெற்றுக் கொண்டதாக, அவர் இதன்போது நம்மிடம் கூறினார். மேலும், மக்களும் தம்மிடம் இவ்வாறான குற்றச்சாட்டைக் கூறியதாகவும் அதனையே தான் வெளிப்படுத்தியதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதேவேளை, ‘ஆதாரம் தேவையாயின், நீங்கள்தான் தேடிப்பார்க்க வேண்டும்’ என்றும் அவர் விடையளித்தார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஏற்கெனவே முறுகிக் கொண்டுதான் உள்ளனர். ஆங்காங்கே முட்டி மோதுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. நல்லிணக்கத்தை விரும்பும் இரண்டு சமூகம் சார்ந்தோரும் இந்த நிலைவரம் குறித்துக் கவலை கொண்டுள்ளனர். ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’ போல் இல்லா விட்டாலும் கூட, ‘தாமரை இலையில் தண்ணீர் போல்’ ஆவது இரண்டு சமூகத்தவரும் அண்டி வாழ மாட்டார்களா என்று, சமாதானத்தை விரும்புவோர் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், புகையும் தணலில் பெற்றோல் ஊற்றிவிட்டுப் போயிருக்கிறார் விக்னேஸ்வரன்.

தமிழர்களின் 300 கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்திய விக்னேஸ்வரனின் கைகளில், அதனை நிரூபிப்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதை, அவருடன் பேசியதிலிருந்தும், அவர் ஊடகங்களுக்கு வழங்கிய பதில்களிலிருந்தும் விளங்கிக் கொள்ள முடிந்தது. ‘தமிழர்களின் 300 கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்படவில்லை என்பதை, முஸ்லிம்கள் நிரூபித்தால், அவ்வாறான குற்றச்சாட்டை என்னிடம் கூறியவர்களை அழைத்து, ஏன் இப்படி என்னிடம் தவறான தகவல்களைக் கூறினீர்கள் என்று நான் கேட்பேன்’ என்று அவர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார்.

மிகவும் பாரதுரமானதொரு குற்றச்சாட்டை வாய்க்கு வந்தபடி கூறிவிட்டு, ‘நான் சொல்வது பொய்யென்றால், அதனைப் பொய் என்று முஸ்லிம்கள்தான் நிரூபிக்க வேண்டும்’ என்று கூறுகின்றவர், ஒரு முன்னாள் நீதியரசர் என்பதை நினைக்கையில் கவலையாக உள்ளது.

விக்னேஸ்வரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தமையை அடுத்து, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அதற்குத் தனது மறுப்பை வெளியிட்டிருந்தார். விக்னேஸ்வரனின் இந்தக் குற்றச்சாட்டு தமிழர், முஸ்லிம் உறவைக் கடுமையாகப் பாதிக்கும் என்று தனது மறுப்பறிக்கையில் கவலை தெரிவித்திருந்த ஹிஸ்புல்லாஹ், ‘விக்னேஸ்வரன் கூறிய 300 கிராமங்களும் கிழக்கு மாகாணத்தில் எந்த மாவட்டங்களில் உள்ளன என்பதையும், அவர் ஊடகங்கள் வாயிலாக உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்’ எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதற்கு விக்னேஸ்வரன் இதுவரை பதிலளிக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இதுவரையில் கூறாத குற்றச்சாட்டை, வடக்கிலிருந்து விக்னேஸ்வரன் வந்து சொன்னதன் பின்னணி என்ன என்கிற கேள்வியும் இங்கு முக்கியமானதாகும். இத்தனைக்கும் நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கிழக்கு மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர் என்பதும், அவர் இதுவரை இதுபோன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கவில்லை என்பதும் இங்கு கவனத்துக்குரியதாகும்.

சரி, விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டுக் குறித்து கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ன கூறுகின்றார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம் என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுடன் பேசினோம்.

விக்னேஸ்வரனின் அந்தக் குற்றச்சாட்டை கோடீஸ்வரன் மறுத்தார். “வாய்க்கு வந்தாற் போல் இந்தக் குற்றச்சாட்டை விக்னேஸ்வரன் முன்வைத்திருக்கக் கூடும்” என்று கூறிய கோடீஸ்வரன், “கிழக்கில் சில கிராமங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன” என்றும், “யுத்த காலத்தில் அச்சுறுத்தல் உள்ளிட்ட சில காரணங்களால், அம்பாறை மாவட்டத்திலுள்ள 08 அல்லது 09 கிராமங்களில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து விட்டனர்” என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக அம்பாறை மாவட்டம், மீனோடைக்கட்டு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் இடம்பெயர்ந்தமையை இதற்கு உதாரணமாகவும் கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.

மீனோடைக்கட்டை ஒரு கிராமம் என்று கோடீஸ்வரன் கூறியிருந்த போதும், உண்மையில் அது ஒரு கிராமம் அல்ல. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவொன்றிலுள்ள ஒரு சிறு பகுதியே மீனோடைக்கட்டு என்று அழைக்கப்பட்டது. அட்டாளைச்சேனையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மீனோடைக்கட்டு பகுதியில் ஒரு காலத்தில் நூற்றுக்கு உட்பட்ட தமிழர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. ஆயினும், நாட்டில் நிலவிய இனப்பிரச்சினை மற்றும் யுத்தம் காரணமாக, 80களிலிருந்தே அங்கிருந்த தமிழ் மக்கள் தமது காணிகளையும் வீடு வளவுகளையும் முஸ்லிம்களுக்கு விற்பனை செய்துவிட்டு, வேறு ஊர்களுக்குச் சென்று விட்டனர்.

இதுபோன்றே, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஊர்களில் வசித்த முஸ்லிம்களும் இந்தக் காலப்பகுதிகளில் இவ்வாறு இடம்பெயர்ந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறமாக, கிராமம் ஒன்றின் பெயரை விரும்பியவாறு மாற்ற முடியுமா என்கிற கேள்வியும் இங்கு உள்ளது.

இது குறித்து, இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தரும் காரைதீவு பிரதேச செயலாளருமான ஜெகராஜனை தொடர்புகொண்டு பேசினோம்.“கிராமங்களுக்குப் பெயரிடுவது பொதுநிர்வாக அமைச்சின் பொறுப்பாகும்” என்று அவர் கூறினார். கிராமமொன்றுக்குச் சூட்டப்படும் பெயர், அரச வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோன்று, வீதிகளுக்குப் பெயரிடும் அதிகாரம், உள்ளூராட்சி சபைகளுக்கு உள்ளதாகவும் ஜெகராஜன் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சில இடங்களுக்கு உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பெயர் இடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக, அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் ‘இஸ்லாமாபாத்’ என்றும், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் ‘கோபாலபுரம்’ எனவும், சுனாமியின் பின்னர் சில பகுதிகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆக, எவ்வாறு பார்த்தாலும், தமிழர்களின் 300 கிராமங்களை முஸ்லிம்கள் கபளீகரம் செய்த கதையானது, எந்தவித ஆதாரங்களுமற்றதாகும் என்பதோடு, அவ்வாறு நடப்பதற்குச் சாத்தியங்களும் மிகமிகக் குறைவாகும் என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஆயினும், விக்னேஸ்வரன் போன்ற படித்த மனிதர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது, அதைப் பாமர தமிழ் மக்களில் ஏதோவொரு தொகையினராவது நிச்சயம் நம்புவார்கள். அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது கோபம் வரும். அந்தக் கோபம், இரண்டு இனங்களுக்குமிடையிலான இடைவெளிகளை இன்னும் அதிகப்படுத்தும்.

அரசியலில் மக்களை அறிவு ரீதியாகச் சிந்திக்கப்பழக்குவதற்கு நமது அரசியல்வாதிகளில் மிகப் பெரும்பான்மையானோர் தயாராக இல்லை. இனரீதியாக உணர்ச்சியூட்டி விட்டு, அதிலிருந்து கிளம்பும் தீயில், குளிர்காய்வதற்கே அதிகமான அரசியல்வாதிகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். விக்னேஸ்வரனின் மேற்சொன்ன குற்றச்சாட்டும் அந்த வகையிலானது என்றுதான் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

வடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்கு, முதலமைச்சராக இருந்தபோது விக்னேஸ்வரன்தான் முட்டுக்கட்டையாக இருந்தார் என்று, அங்குள்ள முஸ்லிம்களும், அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இன்னும் கூறுகின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள், தமது காணிகளை முஸ்லிம்களுக்கு விற்கக் கூடாது என்றும், அண்மையில் விக்னேஸ்வரன் கூறியிருந்தமையும் ஒரு புயலைக் கிளப்பி விட்டிருந்தது.

இந்த நிலையில்தான், கிணற்றைக் காணவில்லை என்று வடிவேல் அழுத கதைபோல, தமிழர்களின் 300 கிராமங்களைக் காணவில்லை என்று, விக்னேஸ்வரன் புலம்பத் தொடங்கியிருக்கின்றார்.

‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் சில நாள்களுக்கு முன்னர், அந்த நிகழ்ச்சியில் கூறிய ஒரு விடயத்தை இங்கு பதிவிடுதல் பொருத்தமாக அமையும்.
‘நாம் மற்றவர் மீது சுமத்தும் பிழையான குற்றச்சாட்டுகள், நமது நிஜமான குற்றச்சாட்டுகளை வலுவில்லாமல் செய்து விடும்’ என்று, கமல் கூறியிருந்தார்.

ஒரு முன்னாள் நீதியரசருக்கு இதனைக் கூற வேண்டிய நிலைவரத்தை, அரசியல் உருவாக்கி விட்டிருக்கிறது என்பது வேதனையளிக்கிறது.

300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை

தமிழர்களின் 300 கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளனவென முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதிச் செயலாளர் ஏ.யு.எல்.எம். ஹாரில் தனது எதிர்வினையைப் பதிவு செய்திருக்கிறார்.

ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்த ஹாரீஸ், இளைஞர் சேவை அதிகாரியாகவும் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹாரீஸ் எழுதிய வரிகளை அப்படியே வழங்குகின்றோம்.

300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு லொஜிக்காக விடையளித்து, 30இற்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களை, புலிகளின் உதவியுடன் தமிழ் இன முதலாளிகள் தின்று கொழுத்தார்கள் என்று முஸ்லிம் பெயர் தாங்கிய தலைவர்களால் நிறுவ முடியவில்லை.

ஏனெனில், பறிபோன கிராமங்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் அவர்களிடம் விரல் நுனியில் இல்லை. தோழர் ஹிஸ்புல்லாஹ் மட்டும் ஏதோ ஓர் எதிர்ப்பைத் தெரிவித்தார். அரசியல்வாதிகளிடம்தான் இல்லையென்று பார்த்தால், ஊடகவியலாளர்கள் என்று சொல்லிப் பீத்திக் கொள்ளும் செய்தியாளர்களிடமும் இல்லை.

எந்தக் காலத்தில் எந்தெந்த 300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று கொழுத்தார்கள் என்று குற்றச்சாட்டுப் பத்திரத்தில் முன்னாள் நீதியரசர் குறிப்பிடவில்லை. வழமையாகப் பொலிஸ்தான் குற்றச்சாட்டுப்பத்திரத்தைச் சமர்ப்பிக்கும். இங்கு மாறாக நீதிபதியே குற்றத்தையும் சாட்டி, தீர்ப்பையும் வழங்கியிருக்கிறார்.

சரி விடயத்தை நாம் விளங்கிக் கொள்வோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் தொன்று தொட்டு வாழும் இடங்களாக காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற பெரிய நகரங்களும், அவற்றைச் சுற்றி, சில சிறிய கிராமங்களும் காணப்படுகின்றன. இவை தவிர படுவான்கரை, செங்கலடி – பதுளை வீதியூடாகச் செல்லும் பகுதிகள், அத்துடன் புணானை போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் வேளாண்மை வயல் காணிகளை கொண்டுள்ளனர்.

1982ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலை இயக்கங்களின் மட்டக்களப்பு வருகையும் அவர்களின் பயிற்சித் தளங்களும் முஸ்லிம்களின் விவசாய நிலங்களை அண்டிய தமிழ்க் கிராமங்களில் அமைந்தமையால், சுதந்திரமான விவசாயச் செய்கையும் நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டன. படிப்படியாக விடுதலை இயக்கங்களின் செல்வாக்கின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் வந்த முஸ்லிம்களின் விவசாய நிலங்கள், 2010ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி வரை விவசாயம் பண்ணப்படாமலும் அந்தப் பகுதிக்கு சென்று தமது நிலங்களைப் பார்க்க முடியாமலுமே முஸ்லிம்கள் இருந்தனர்.

1982இல் இருந்து 2010 வரை தமிழ் விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை முஸ்லிம்கள் எப்படிப் பெயர்மாற்றியிருக்க முடியும். புலிகளின் கட்டுப்பாடு இல்லாது, அரச கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த சகல அரச தமிழ் உயர் உத்தியோகத்தர்கள் அனைவரும், தமிழ் இயக்கங்களுக்கு கிழமை தோறும் சென்று பதிலளிக்கும் நிலையிலேயே இருந்தனர். தமிழர்கள் மிகப்பலமாக இருந்த இந்தக் காலப்பகுதியில் ஒரு பலமுமற்ற முஸ்லிம் சமூகம் எவ்வாறு 300 கிராமங்களையும் தின்று செமித்திருக்க முடியும்?

2010 ஆண்டுக்கு பிறகு, புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், இருந்து இன்று வரை எல்லாப் பிரதேசங்களும் அரச கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர், சகல அரச திணைக்கள உயர் உத்தியோகத்தர்களும், குறிப்பாக காணி அதிகாரிகள் மட்டக்களப்பில் தமிழர்களாகவும் அம்பாறையில் சிங்களவர்களாகவுமே இருக்கின்றனர். இந்த நிலையில் முஸ்லிம்கள் காணிகளை அபகரிப்பதும் கிராமங்களுக்கு பெயர் மாற்றுவதும் சட்ட ரீதியாகச் சாத்தியமாகக் கூடியதா? முஸ்லிம்கள் ஓர் இனத்துவ யுத்தத்தை நடத்தி ஆக்கிரமித்த வரலாறு இலங்கையில் எங்காவது, வரலாற்றுக் காலம் தொட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதா?

அவர்கள் (தமிழர்கள்) எம்மை (முஸ்லிம்களை) தமிழர்கள் என்று சொல்வதானால், நாம் தமிழீழ நிலப்பரப்பில் குடியேறுவதிலும் வாழ்வதிலும் என்ன பிரச்சினையென்று சொல்ல வேண்டும். நாம் தமிழர்கள் இல்லை சோனிகள் என்று தெளிவாக வரையறுத்துச் சொன்னால், எங்கள் நிலப்பரப்பை நாங்கள் ஆட்சி செய்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினையென்று சொல்ல வேண்டும். இரண்டையும் சொல்லாமல், சிங்களவர்கள் தமிழர்களை அடிமையாக வைத்திருக்க நினைப்பது போன்று, முஸ்லிம்களை தமிழர்கள் அடிமையாக வைத்திருக்க நினைப்பதும் செயற்படுவதும் எல்லா காலமும் செய்ய முடியாத ஓர் அரசியல் செயற்பாடாகவே அமையும்.Post a Comment

Protected by WP Anti Spam