By 14 August 2019 0 Comments

விக்னேஸ்வரனின் தனிமையும் பேரவையின் சிதைவும்!! (கட்டுரை)

மூன்றரை வருடங்களுக்கு முன்னர், பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, இன்றைக்கு எங்கேயிருக்கின்றது என்று தேட வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், சிவில் சமூகத்தின் பங்களிப்பு, அர்த்தபூர்வமாகத் தேவைப்படுகின்ற தருணமொன்றில், தேர்தல் – வாக்கு அரசியலுக்கு அப்பாலான, அமுக்கக் குழுவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, பேரவை தோற்றம் பெற்றது.

அதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி என்று வரையறுக்கலாம்) என்கிற ஏகநிலை அதிகாரபீடத்துக்கு எதிராக, மாற்றுத் தெரிவுகள், தமிழ்த் தேசியப் பரப்பில், நிச்சயம் தேவை என்று உணரப்பட்ட காலத்தில், அரசியல் கட்சிகளையும் வைத்தியர்களையும் புலமையாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் அரசியல் ஆய்வாளர்களையும் சேர்த்துக் கொண்டு, மக்கள் முன்னால் பேரவை வந்தது.

பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் மீது, மக்களுக்கு பலவிதமான கருத்துகள் இருந்தாலும், நீண்ட காலத்துக்குப் பின், அரசியல் கட்சிகள், புலமைத்தரப்பு தலைமையிலான அணியில், தங்களை இணைத்துக் கொண்டிருந்தமை, குறிப்பிட்டளவான மக்களிடம் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது.

அத்தோடு, தமிழரசுக் கட்சியின் தலைமையோடு சி.வி. விக்னேஸ்வரன் முரண்பட ஆரம்பித்திருந்த தருணத்தில், அவர் பேரவைக்கு (இணைத்)தலைமை ஏற்றமை, பல தரப்புகளையும் குஷிப்படுத்தியது. தேர்தல்த் தோல்விகளால் தடுமாறியவர்களும், தேர்தல்க் களத்தில் ஆரோக்கியமான போட்டியொன்றுக்கான சூழல் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்த தரப்புகளும் பேரவையின் உருவாக்கத்தை, கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால் நின்று வரவேற்றன.

அரசியல் ஆய்வாளர்கள் என்று தங்களை முன்னிறுத்திய பலர், பேரவையைப் பெரும் நம்பிக்கையின் இருப்பிடமாக வர்ணித்து, எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டம் வரையில், அது மக்களிடமும் ஓர் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.

‘எழுக தமிழ்’ பேரணிகளில் திரண்ட இளைஞர்கள், அதைப் பிரதிபலிக்கவும் செய்தார்கள். ஆனால், இந்தக் காட்சிகள் எல்லாமும், சில மாதங்களுக்கு உள்ளேயே, தலைகீழாக மாறத் தொடங்கின.

பேரவைக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள், ஊடக சந்திப்புகளை நடத்தி, இன்றைக்கு ஒன்றையொன்று திட்டிக் கொண்டிருக்கின்றன. புலமைத்தரப்புகளும் வைத்தியர்களும் தங்களது அறைகளுக்குள்ளேயே தங்கிவிட்டார்கள். அரசியல் ஆய்வாளர்கள், விரக்தியின் விளிம்பில் நின்று, ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பேரவையை முன்வைத்து, புலம்பெயர் தரப்புகள் கட்டிய கற்பனைக் கோட்டை, சரித்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் நடக்கும் ‘குழாயடிச் சண்டை’களில் அவர்கள், தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழரசுக் கட்சி, தனக்கு எதிராகத் திரண்டவர்கள், தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வதைக் கண்டு, இரசித்துச் சிரிக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களிடம், ஏமாற்றமும் நம்பிக்கையீனமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அரசியல் என்பது மக்களுக்கானது; அதுவும், பௌத்த சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக எழுந்த, தமிழ்த் தேசிய அரசியலில், மக்களைப் புறக்கணித்துக் கொண்டு, எதுவுமே நிகழ முடியாது.
ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலின் ஆணிவேரான, மக்களைக் கணக்கில் எடுக்காது, கட்சிகளும் அதன் இணக்க சக்திகளும் ஒரு சூனியமான சூழலை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான கானல்வெளியை, எப்படியாவது கடக்க வேண்டும் என்று, ஒவ்வொரு தமிழ் மனமும் ஏக்கம் கொண்டிருக்கின்ற போது, அதைப் புரிந்துகொள்ளாத நடத்தை என்பது, கானல் வெளியின் தொடர்ச்சியை, மோசமான அளவு இன்னமும் நீட்சிப்படுத்தவே உதவும். அதன், முக்கிய சூத்திரதாரியாகப் பேரவையும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றது.

எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனமும் அதற்கான திட்டமிடலும் இல்லாத எந்தத் தரப்பும், சமூகத்தின் சாபக்கேடாகும். அதிலும், தோல்வி மனநிலையில் இருக்கும் ஒரு சமூகத்தின் மீளெழுச்சி என்பது, தைரியமானதும் திடமானதுமான அரசியல் சிந்தனைகளின் வழியே நிகழ முடியும்.

அவ்வாறான நிலையில், எந்த அரசியல் சித்தாந்தமும் எதிர்காலத் திட்டமிடலும், குறிப்பாக, முடிவுகளை எடுக்கும் தைரியமும் இல்லாத, பேரவை போன்ற அமைப்புகளின் வருகை, ஜீரணிக்க முடியாத கோபத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தும்.

“…தமிழ் மக்கள் பேரவை, ஒரு மக்கள் இயக்கம்; அது அரசியல் கட்சியல்ல. மாற்றுத் தலைமையை ஏற்படுத்தும் நோக்கமும் அதற்கு இல்லை…” என்று பேரவையின் (இணைத்)தலைமைப் பதவியை ஏற்றதும், விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். குறிப்பாக, தேர்தல் அரசியலில் பேரவை ஈடுபடாது என்கிற உத்தரவாதத்தை, தனக்கு வழங்கியதன் பேரிலேயே, தான் (இணைத்)தலைமைப் பதவியை ஏற்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், பேரவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள், விக்னேஸ்வரனுக்குக் கட்சியை ஆரம்பித்துக் கொடுக்கும் அளவுக்கான அடைவுகளையே அதிகபட்சம், பேரவை வெளிப்படுத்தி இருக்கின்றது. தேர்தல் அரசியலுக்கான வருகையை, மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூறுமளவுக்குப் பேரவைக்காரர்களுக்கு தைரியமில்லை. விக்னேஸ்வரனின் கட்சியை உருவாக்கி, அதற்குப் பின்னால் ஒழிந்து கொண்டிருக்கிறார்கள். அதுமாத்திரமில்லாமல், தமிழரசுக் கட்சிக்கு எதிராக, உண்மையிலேயே மாற்று அணியொன்றை அமைக்கக் கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களையும் கையாளத் தெரியாமல், கோட்டைவிட்டும் இருக்கிறார்கள்.

தமிழரசுக் கட்சியோடு முரண்பட்ட ஒரே தகுதியை வைத்துக் கொண்டு, விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாகப் பேரவைக்காரர்கள் மக்களிடம் முன்னிறுத்தினார்கள். ‘ஜனவசியம்’ என்கிற விடயத்தை முன்னிறுத்திக் கொண்டு, விக்னேஸ்வரனின் தலையைச் சுற்றி, ஒளிவட்டங்கள் வரையப்பட்டன.

ஆனால், இன்றைக்கு நிகழ்ந்திருப்பது என்ன? சம்பந்தனையோ சுமந்திரனையோ ஊடகங்களில் விமர்சிக்க முடிந்த விக்னேஸ்வரனால், அவர்களின் அரசியலுக்கு எதிரான தீர்மானங்களைத் தனக்கு இணக்கமானவர்களோடு இணைந்து, தக்க தருணத்தில் எடுக்க முடியவில்லை. அவர் தன்னுடைய முதலமைச்சர் பதவிக்காலம் முடியும் வரையில், காலத்தை ஒத்திப்போட்டார். உள்ளூராட்சித் தேர்தல் என்கிற உன்னத சந்தர்ப்பமொன்று, அவருக்கு முன்னால் வந்தது. அப்போதும், அதனைத் தவிர்த்துக் கொண்டு அவர் ஓடினார். தன் மீது, மற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை மீது, விக்னேஸ்வரனுக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான், அவரின் பெரிய பிரச்சினை.

அத்தோடு, ஊடக அறிக்கைகள், மின்னஞ்சல்கள் ஊடாக மாத்திரம், பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும்; அரசியலைச் செய்துவிட முடியும் என்று அவர் நம்பியதன் விளைவு, அவரை இன்றைக்குத் தனிமைப்படுத்தி இருக்கின்றது.

அத்தோடு, அந்தரங்கமாக எழுதப்பட்ட கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் வெளிப்படுத்தும் அரசியல் நாகரிகமும் முதிர்ச்சியும் இல்லாதவர்கள் பின்னால், தொடர்ந்தும் கெஞ்சிக் கொண்டிருக்கவும் வைத்திருக்கின்றது.

சம்பந்தனாலும், சம்பந்தனின் நம்பிக்கைத்தரப்பாலும் விக்னேஸ்வரன் என்கிற முன்னாள் நீதியரசர், அரசியலுக்கு அழைத்து வரப்பட்டது, இடைநிரப்பு தலைமையொன்றுக்கான தேவையின் போக்கிலேயே ஆகும். தனக்குப் பின்னரான காலத்தில், சில வருடங்களுக்கு விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பில் இருக்க வேண்டும். அது, அடுத்த தலைமைக்கு, (சம்பந்தனினதும், அவரின் நம்பிக்கைத்தரப்பினரதும் விரும்புக்கு அமைய) எம்.ஏ. சுமந்திரன் போன்ற ஒருவர் தயாராகும் காலத்தை, இடைநிரப்புவதன் போக்கிலானதே ஆகும்.

அத்தோடு, தென் இலங்கையோடும், சர்வதேசத்தோடும் ஆங்கிலத்தில் உரையாடல்களை நடத்தும் அளவுக்கான ஆளுமையை, விக்னேஸ்வரன் கொண்டிருக்கிறார் என்கிற மேற்றட்டு மனநிலையின் போக்கிலேயுமே ஆகும். ஆனால், விக்னேஸ்வரன் தன்னுடைய அரசியல் முதிர்ச்சியின்மையால், சம்பந்தனின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கினார்.

ஒரு கட்டத்தில், புதிய தலைமையாகத் தன்னை மீறி விக்னேஸ்வரன் எழுச்சி பெற்றுவிடுவாரோ என்கிற நிலை வந்தபோது, காலத்தைக் கடத்துவதனூடாகக் களத்தைக் கையாள முடியும் என்று சம்பந்தன் நினைத்தார். அதனை, அவர் ஒற்றை மனிதராக நிரூபித்தும் காட்டினார்.

தமிழரசுக் கட்சி எதிர்த்த போதும், முதலமைச்சர் பதவிக்காலம் முடியும் வரையில், அந்தப் பதவியில் விக்னேஸ்வரனைத் தொடர வைப்பதினூடாக எதிரணிக்குள் குழப்பங்களை ஏற்படுத்த முடியும் என்று சம்பந்தன் நம்பினார். இதனால், எதிரணியின் பலம்பெறுகைக்கான வாய்ப்புத் தடுக்கப்பட்டது. சுரேஷும் கஜேந்திரகுமாரும் முட்டிமோதத் தொடங்கினார்கள். கூட்டமைப்புக்கு எதிராக எழுந்த அணியொன்றின் சிதைவு, விக்னேஸ்வரனின் தைரியமின்மை, சம்பந்தனின் சாணக்கியத்தின் முன்னால் ஆரம்பித்தது.

கஜேந்திரகுமாரும் அவரது அணியினரும் தன்னை எவ்வளவு விமர்சித்தாலும், அவதூறுகளைப் பரப்பினாலும், மேடைகளிலும், ஊடக அறிக்கைகள் வழியிலும் கஜேந்திரகுமாரைப் புகழ்ந்து போற்றிக் கொண்டு, கூட்டணிக்கான அழைப்பை விடுக்க வேண்டிய நிலை விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான சூழலில், விக்னேஸ்வரனை நம்பிக்கையாகக் கட்டமைத்தவர்களில் முக்கியமான தரப்பான பேரவை, ஆழ் உறங்கு நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் ஊடகப் பரப்பில், கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்கள், பெற வேண்டிய இடத்தை, இன்றைக்கு விக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார் சண்டை சச்சரவுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரு வகையில் பேரவைக்காரர்களே காரண கர்த்தாக்கள்.Post a Comment

Protected by WP Anti Spam