By 6 September 2019 0 Comments

உழைப்பால் உயர்ந்தேன்!!! (மகளிர் பக்கம்)

‘வா ஆத்தா… வாங்க சார்… என்ன சாப்பிடுறீங்க… வடை சூடா இருக்கு… சாப்பிடுங்க, டீ போடவா’’ என்று அவர் பரிவுடன் கேட்கும் அந்த வார்த்தைகளே நம்மை ஒரு டீயாவது சாப்பிட வேண்டும் என்று தூண்டும். ஒரு டீ வேண்டும் என்று கேட்டாலும், முகம் சுளிக்காமல், அதே புன்னகையுடன் வாடிக்கையாளர் கேட்பதை செய்து கொடுக்கிறார் லலிதா. இவரை எல்லாரும் அக்கா.. அம்மா என்று தான் அழைக்கிறார்கள். 32 வருடமாக சென்னை பெருங்குடியில் டீ கடை ஒன்றை தன் கணவர் உதவியுடன் நிர்வகித்து வரும் லலிதா அக்காவின் வாழ்வாதாரமே அந்த டீ கடைதான்.

‘‘என்னோட சொந்த ஊர் காரைக்குடி அருகில் தூத்தக்குடி என்ற கிராமம். என்னுடன் சேர்ந்து நாங்க மூணு பேர். அப்பா அங்கு டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். பள்ளி முடிஞ்சதும் நேரா கடைக்கு போயிடுவேன். அங்கு டீ, வடை போடுவதை எல்லாம் பார்ப்பது அப்புறம் சின்னச் சின்ன வேலைகளை செய்வேன். +2 வரை தான் படிச்சேன். 17 வயசில் எனக்கு கல்யாணமாயிடுச்சு. என் கணவர் ராமநாதன் அப்பாவின் நண்பரின் மகன் என்பதால், இரு குடும்பமும் பேசி கல்யாணம் செய்து வச்சாங்க.

கல்யாணம் முடிஞ்சு எட்டே நாளில் சென்னைக்கு வந்துட்டோம். இவர் இங்கு ஒரு கம்பெனியில் கோணி தைக்கும் வேலை பார்த்திட்டு இருந்தார். வாரம் 35 ரூபாய் தான் சம்பளம். மாசத்துக்கு 1500 ரூபாய் கிடைக்கும். இப்படியே இருந்தா விக்குற விலைவாசிக்கு எப்படி குடும்பம் நடத்துறதுன்னு தோணுச்சு’’ என்றவர் தன் அப்பா போல் டீ கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். ‘‘இவர் வேலைப் பார்க்கும் நிறுவனத்திற்கு தினமும் நான் தான் மதிய சாப்பாடு கொண்டு போவேன்.

அப்போது தான் இந்த இடத்தில் டீக்கடை போட்டா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு. கடை போடலாம்ன்னு பிளான் செய்து வச்சிட முடியாது. பிழைப்பு நடத்தும் இடம். பின்னால சிக்கல் வரக்கூடாதுன்னு, எங்க ஏரியா கவுன்சிலரை நானும் என் கணவரும் நேரடியாக சென்று அனுமதி கேட்டோம். அவரும் சரின்னு சொல்ல, மறுநாளே அதற்கான வேலையில் இறங்கினேன். கையில் இருந்த காசைக் கொண்டு சின்னதா குடிசைப் போட்டு டீ கடையை ஆரம்பிச்சேன். அப்ப கரன்ட் எல்லாம் கிடையாது.

கெரசின் விளக்கு தான். நான் கடைப் போட்டு ஐந்து வருஷம் கழிச்சு தான் கரன்ட் வசதி வந்துச்சு. கரன்ட் இல்லாத போது கேஸ் அடுப்பு மட்டும் இருக்குமா என்ன? விறகு அடுப்பு அல்லது ரம்ப தூளைக் கொண்டு தான் அடுப்பு எரிய பயன்படுத்துவேன். மரம் அறுக்கும் ேபாது உதிரும் தூளை வாங்கி வருவேன். அதை ஒரு இரும்பு டப்பாவில் போட்டு இடிச்சா சின்ன கட்டை போல இருக்கும். இதையும் விறகுக்கு பதில் பயன்படுத்தலாம். ஒரு கட்டை போட்டா 50 டீ போடலாம்’’ என்றவர் படிப்படியாக கடையில் டீ, வடை, மதிய உணவுன்னு ஆரம்பித்துள்ளார்.

‘‘முதலில் டீ மட்டும் தான் போட்டேன். கடைக்கு வரவங்க வடை இல்லையான்னு கேட்க… வடை, போண்டாவும் போட ஆரம்பிச்சேன். அதுவும் காலை, மாலைன்னு குறிப்பிட்ட நேரம் தான் போடுவேன். கிரைண்டர் கிடையாது, ஆட்டுக்கல்லில் தான் ஆட்டணும். அதனால் அளவோடு தான் வடைக்கான மாவினை ஆட்டுவேன். ஃபிரிட்ஜும் இல்லை என்பதால், பாலை எடுத்து வைக்கவும் முடியாது. இருக்கிற பாலில் டீயைப் போட்டு தருவேன். அதை இவர் கொண்டு போய் வித்திட்டு வருவார்.

கடை போட்ட முதல் நாள் 85 ரூபாய்க்கு தான் வியாபாரம் நடந்துச்சு. ஆனால் நான் மனம் தளரல. தொடர்ந்து உழைச்சா வருமானம் கண்டிப்பா கிடைக்கும்னு நானும் என் கணவரும் சேர்ந்து உழைச்சோம்’’ என்றவர் டீக்கடையிலே தான் வசித்துள்ளார். ‘‘நான் டீக்கடை போட காரணம் இங்க இருந்த 20 கம்பெனிகள் தான். இப்ப 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருது. ஆரம்பத்தில் சின்னதா ஒரு குடிசை போட்டு இங்கேயே தான் தங்கி இருந்தோம். என்னோட இரண்ட பசங்களும் இங்கதான் பிறந்தாங்க, வளர்ந்தாங்க.

பெரிய பையனுக்கு 18 வயசான போது தான் ஒரு இடம் வாங்கி வீடு கட்டினோம். அதன் பிறகு தான் வீட்டில் தங்க ஆரம்பிச்சோம். காரணம் அப்பெல்லாம் திருட்டு பயம் இருந்தது. தீபாவளி பண்டிகைக்காக கடையை மூடிட்டு போயிட்டு திரும்ப வந்த போது, கடையில் முக்கால்வாசி பொருட்கள் திருட்டு போயிருந்தது. அதனாலேயே கடையில் தங்க ஆரம்பிச்சோம். தவிர்க்க முடியாத காரணத்தால் ஊருக்கு போனா, தெரிஞ்சவங்கள கடைய பார்த்துக்க சொல்லிட்டு போவோம்.

இப்ப நிறைய நிறுவனம் வந்ததால, இரவு போலீஸ் ரோந்து இருக்கு. திருட்டு பயமும் இல்லை’’ என்றவர் சில காலம் மதிய உணவுகளும் வழங்கி வந்துள்ளார். ‘‘முதல்ல கிடைச்ச வருமானத்தில் சீட்டு போட்டு இடம் வாங்கினேன். அதன் பிறகு மதிய உணவும் சேர்ந்து போட ஆரம்பிச்சேன். அதில் கொஞ்சம் காசு சேர்ந்து வீடு கட்டினேன். அதன் பிறகு தான் அந்த வீட்டில் வசிக்க ஆரம்பிச்சோம். ஊருலேயும் எங்களுக்கான இடம் இருந்தது, அதிலேயும் வீடு கட்டினேன். ஊரில் என் பெரிய மகன் மெக்கானிக் வேலைப் பார்க்கிறான்.

அவன் அந்த வீட்டில் வசித்து வருகிறான். இளையவன், இங்கு டிசைனிங் நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறான். இரண்டு பசங்களும் கஷ்டம் புரிந்துதான் வளர்ந்தாங்க. அதனால சம்பாதிக்கும் ஒரு காசைக் கூட அனாவசியமா செலவு செய்ய மாட்டாங்க. அப்படித்தான் சிறுக சிறுக சேமிச்சேன். முதல்ல கடைக்கான குடிசைப் போட்ட போது, ரொம்பவே பயந்தேன். காடு மாதிரி இருக்கும். பாம்பு எல்லாம் ராத்திரி நேரத்தில் இங்கு வலம் வரும். ஒரு பக்கம் பாம்பு மறுபக்கம் திருடன்னு ஒவ்வொரு நாளையும் கடப்பது பெரிய ரிஸ்க்காகத்தான் இருந்தது.

அதே சமயம் கடன் வாங்காம நாமும் மற்றவர் மதிக்கும் படி வாழணும்ன்னு நினைச்சேன். வாழ்ந்திட்டு இருக்கேன். இந்த டீக்கடையின் வருமானத்தில் தான் என் இரண்டு பசங்களையும் படிக்க வச்சேன். கல்யாணம் செய்து கொடுத்திருக்கேன். இரண்டு பேருக்கும் ஒரு வீடுன்னு கட்டி கொடுத்து இருக்கேன். கடையை பொறுத்தவரை நானும் என் கணவரும் தான். இவர் எல்லா பொருளும் வாங்கி வந்திடுவார். கணக்கு வழக்கு வரவு செலவு எல்லாம் என் பொறுப்பு’’ என்று வடையை தட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

‘‘என் பிடிவாதத்தில் தான் கடைய வச்சோம். ஆண்டவன் புண்ணியத்தில் கடையில் வருமானம் நல்லாவே நடக்குது. நான் பத்து நாள் கடையை மூடினாலும், கடை திறந்ததும், என்னுடைய வாடிக்கையாளர்கள் எல்லாம் வந்திடுவாங்க. அதனாலேயே நான் இல்லைன்னாலும், என் கணவரை கடையை பார்த்துக்க சொல்வேன். ஒரு வாடிக்கையாளர் டீ வேணும்ன்னு கேட்டாலும் இல்லைன்னு சொல்ல மாட்டேன். எனக்கும் வயசாகுது. எவ்வளவு காலம் தான் ஓடுவதுன்னு தெரியல. உடம்பில் பலம் இருக்கிற வரை ஓடுவேன். அதன் பிறகு கடையை வாடகைக்கோ அல்லது வித்திட்டு ஊரோட போய் செட்டிலாயிடலாம்ன்னு எண்ணம் இருக்கு. பார்க்கலாம் கடவுள் எந்த வழியை காட்டுகிறார்னு’’ சிரித்தபடியே சொன்னார் 53 வயது நிரம்பிய லலிதா அக்கா.Post a Comment

Protected by WP Anti Spam