ENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 0 Second

‘‘நவீன வாழ்க்கை காரணமாக காது மூக்கு மற்றும் தொண்டையில் புதிய புதிய பிரச்னைகள் ஏற்பட்டு வந்தாலும் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. அவற்றை குணமாக்கும் நவீன சிகிச்சைகளும் இருக்கின்றன’’ என்று நம்பிக்கை தருகிறார் காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரான சந்திரசேகர். பிறவிச்செவிடு என்ற குறை, குழந்தைகளை ஊமையாக்கி அதன் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வுதான் காக்ளியர் இம்பிளான்ட் என்ற அதிநவீன அறுவை சிகிச்சை முறை. இம்முறையில் ஒரு சிறு இம்பிளான்ட் மூலம் காதினுள் பொருத்தப்படுகிறது.

இதை ஒரு மென்பொருளால் இயக்க காதினுள் உள்ள காக்ளியா தூண்டப்பட்டு இழந்த கேட்கும் திறன் மீட்கப்படுகிறது. இக்குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல சில காலபேச்சுப் பயிற்சிக்குப் பின் நன்றாக கேட்க மற்றும் பேச முடிகிறது. இது மருத்துவ சிகிச்சை முறையில் மாபெரும் புரட்சி. தற்போது தமிழகத்தில் மட்டும் 6000-த்திற்கும் மேற்பட்ட பிறவி செவிடு, ஊமை குழந்தைகள், பேசும் திறனையும், கேட்கும் திறனையும் பெற்று மறுபிறவி எடுத்துள்ளனர். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, தொண்டை வலி, மூக்கு அடைப்பு மற்றும் டான்சில், மூக்கடி சதை (அடினாய்டு) போன்றவற்றால் காதில் அழற்சி ஏற்பட்டு காதில் சீழ் வடிதல், காதினுள் வலி, மற்றும் கேட்கும் திறன் குறைபாடு போன்றவை ஏற்படுகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளில் ஒன்றான மூக்கடி சதை(அடினாய்டு) மற்றும் தொண்டையில் ஏற்படக்கூடிய சதை (டான்சில்) போன்றவற்றை அதிநவீன லேசர் (கோபுலேஷன்) கருவிகள் கொண்டு அதிக ரத்த இழப்பு மற்றும் வலி ஏற்படாமல் அகற்றுவதன் மூலம் இந்த பிரச்னைகள் நிரந்தரமாக சரி செய்ய முடியும். பெரியவர்களுக்கு ஏற்படும் செவிட்டுத்தன்மை என்பது அவர்களுக்கு ஏற்படும் காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் விடுவதாலும், சாதாரணமாக சளி, சைனஸ் பிரச்னைகளைக் குணப்படுத்த சரியான மருத்துவ முறைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாலும் ஏற்படுகிறது.

உதாரணமான அடிக்கடி உண்டாகும் மூக்கடைப்பு, சளி, தும்மல், காது அடைப்பு போன்ற அறிகுறிகளை நாம் சரி வர கவனிக்காமல் விடுவதால் காதில் அழற்சி ஏற்பட்டு கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் காதில் ஹேர்பின், இயர்பட்ஸ் போன்றவற்றை கண்டபடி பயன்படுத்துவதால் ஏற்படும் கிருமி தொற்றுகளால் நடுக்காதில் அழற்சி ஏற்பட்டு அறுவை சிகிச்சை வரை செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆதலால் இதுபோன்ற காரியங்களை தடுப்பது நன்மை பயக்கும். சைனஸ் நோய் என்பது கபாலத்தில் உள்ள காற்று அறைகளைப் பாதிக்கும் ஒரு கொடிய நோயாகும். சைனஸில் சளி தேங்குதல், ஜவ்வு வளர்ச்சி (Polyps) மற்றும் பூஞ்சை காளான் தொற்று ஏற்படுவதால் உண்டாகும் நோயாகும்.

மூக்கில் ஏற்படும் இத்தகைய ஜவ்வு மூக்கு, கண்கள் மற்றும் மூளை வரை வளர்ந்து கொடிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவை நவீன எண்டோஸ்கோப்பி, லேசர் முறையில் (Microdebrider) முழுமையாக குணப்படுத்தப்படுகிறது. (Functional Endoscopic Sinus Surgery). மூளையின் அடிப்பாகத்தில் ஏற்படும் கட்டிகள் மூளை நீர் கசிவு ஆகியவற்றை மூக்கின் வழியே எண்டோஸ்கோப்பி மூலம் மண்டை ஓட்டை திறக்காமலே நூறு சதவீதம் சரி செய்யப்படுகிறது. குறட்டை என்பது இப்போது எல்லா ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களாலும் விவாதிக்கப்படக்கூடிய பிரச்னையாகும்.

இதை Obstructive Sleep Apnoea என்று சொல்கிறோம். இக்குறட்டைப் பிரச்னை உள்ளவர்கள் இரவில் முழுமையான உறக்கத்தை அனுபவிக்க மாட்டார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் மூச்சடைப்பு ஏற்பட்டு எழுந்து விடுவார்கள். இவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், அஜீரண கோளாறுகள், தலைவலி, ஞாபக மறதி, பகலில் தூக்கம் மற்றும் மன அழுத்த நோய் போன்றவை வரக்கூடிய வாய்ப்புகள் 90% உள்ளன. இவர்களுக்கு Sleep Endoscopy மற்றும் Sleep Study போன்ற பரிசோதனைகள் மூலம் நோயின் தீவிரத்தை ஆராய்ந்து பரிந்துரைக்கப்படுகிறது.

இதேபோல் தொண்டையில் ஏற்படும் டான்சில் அடினாய்டு கட்டிகள், நாக்கின் அடிப்பக்கத்தில் ஏற்படும் கட்டிகள், குரல்வளை கட்டிகள், கழுத்தில் ஏற்படும் கட்டிகள் மற்றும் தைராய்டு கட்டிகள், மூளையின் அடிப்பக்கத்தில் ஏற்படும் கட்டிகள் காது, மூக்கு தொண்டை மருத்துவர்களால் தற்போது மிக அதிநவீன மருத்துவ கருவிகளான Cobulator, Microdebrider, Operative Microscope, Nerve Monitor, Operative Lasers and Navigation System போன்றவற்றால் மிகத் துல்லியமாகவும் முழுமையாகவும் வேறு சில பக்கவிளைவுகள் இல்லாமலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காது, மூக்கு, தொண்டை பிரச்னைகள் உதாசீனப்படுத்தாமல் ஆரம்பத்திலேயே மருத்துவர்களை அணுகினால் 100% தீர்வு பெற்று அனைவரும் பயன் பெறலாம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காய் கனி உண்ணவும் கசக்குதா? (மருத்துவம்)
Next post ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!! (அவ்வப்போது கிளாமர்)