By 16 September 2019 0 Comments

தமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் !! (கட்டுரை)

தமிழர் அரசியல் வரலாற்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்தபின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே, விடுதலைப் புலிகளின் அரசியல் நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்தியவர்கள்; அவர்கள் பாதையில் தமிழர்களை நெறிப்படுத்தியவர்கள் என்ற விசுவாசம், தமிழ் மக்களின் இதயங்களில் உணர்வுபூர்வமாகக் கொலுவீற்றிருக்கின்றது எனலாம்.

இந்தப் பின்புலத்தில், தமிழ் மக்களின் விடுதலை உணர்வை, அதன் அடையாளமாக அவர்கள் சந்தித்த தியாகங்கள், இழப்புகள் அதன்வழி அடிநாதமாக மேற்கிளம்புகின்ற அரசியல் பிம்ப உலாவுகைகள், தேசிய, சர்வதேச மட்டங்களில் பேசுபொருளாக அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆயினும், இன்றைய அரசியல் பின்புலம், தமிழ்த் தேசிய அரசியலின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது என்பது, தமிழர் மனங்களில் ஆறாத ரணங்களாக உருவெடுத்துள்ளன.

ஏனெனில், தமிழர் சுயநிர்ணய விடுதலைப் போராட்டத்தின் ஜனநாயக சக்திகளாக, விடுதலைப் புலிகளால் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் அரசியல் அணுகுமுறைகள் என்பது, தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தமிழர்களின் அபிலாசைகள் தொடர்பாக, போராட்ட வரலாற்றின் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டியதொன்றாக மாறியுள்ளன.

இவ்வாறானதொரு காலகட்டத்தில், தமிழ்த் தேசிய அரசியலில் விடுதலையைக் காண முனையும் சக்திகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவைகளாக அமைந்துள்ளன.

2009ஆம் ஆண்டின் பின்புலத்தில், நிகழ்ந்த அரசியல் நடவடிக்கைகளும் நிகழ்வுகளும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இலங்கைத் தீவின் அரசியல் நிலைமைகளில் என்றுமில்லாத அளவுக்கு, இராஜதந்திர ரீதியில் கணிசமான அளவு தாக்கத்தைச் செலுத்தின.

இருந்தபோதிலும், இராஜதந்திர ரீதியில் சர்வதேச நலன்கள், ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டப் பாதையில், பல்வேறு தடங்கல்களையும் தடையுத்தரவுகளையும் பிறப்பித்தன. அதுவுமல்லாமல், ஆயுதவழி மூலமான தேசிய விடுதலைப் போராட்டம் மௌனிப்பதற்கும் காரணமாகி விட்டன எனலாம்.

இந்நிலைமைகளில், விடுதலைப் புலிகளின் பின், வலுவான ஓர் அமைப்பாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, தமது உட்கட்சிப் பூசல்கள், அதன் எதிர்விளைவுகள் என்பவற்றைச் சமாளிப்பதற்கு அப்பால், தேசிய இனப்பிரச்சினையில் தன்னை ஓர் இனம் சார்பான குரல் தரும் சக்தியாக நிரூபிக்க வேண்டிய தேவையையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தன.

இந்து சமுத்திரம், மேற்கத்தேய நாடுகளின் பூகோள நலன்கள், பெரும்பான்மை சிங்களப் பௌத்த இனவாத நலன்களை மேம்படுத்தும் வகையில், தமிழ் மக்களது அரசியல் உரிமைகளைத் தங்கள் இராஜாங்க நலன்களின் பேசுபொருளாகக் கருதிக் கொண்டதால், கருத்தில் கொண்டதால் அதன் பலம், பலவீனங்களை அடையாளப்படுத்திக் கொண்ட, ஸ்ரீலங்கா பேரினவாத அரசாங்கங்கள், தமது நலன்களை முன்னிறுத்தி, அதற்குரிய பேசுபொருளாக, தமிழரின் உரிமைப் பிரச்சினையைப் பயங்கரவாதமாக முன்னிறுத்தியது. இதன் பிரதிபலனாகத் தமிழர் அரசியல் வழிநிலை என்பது, இழிநிலைக்கு இட்டுச் செல்லப்பட்டது.

இதனால், எல்லோரையும் நம்பிச் சோரம் போகும், கொள்கைப் பிடிப்பற்ற சுயநல அரசியல் மேலாண்மையின் தாக்கம், இங்கு முனைப்புப் பெற்று எழுந்துள்ளது. இந்த அரசியல் வெடிப்புகள், தமிழர்களின் அரசியல் இருப்பை, இன்றைய நிலையில் கேள்விக் குறியாக்கியுள்ளன. அதோடன்றி, அரசியல் ரீதியான தீர்வு பற்றிய கருத்தாடல்கள், மும்முனைக் களத்தை வெளிக்காட்டியுள்ளன.

இந்தவகையில், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக, ஐம்பதுக்கு ஐம்பது; தனிநாடு; சமஷ்டி ஆட்சி அமைப்பு; மாவட்டசபை அதிகாரம்; வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த வடகிழக்கு மாகாணம் எனப் பல்வேறுபட்ட தீர்வுத் திட்டங்கள், காலத்துக்குக் காலம் முன்மொழியப்பட்ட போதிலும், இன்று அவை எழுதப்படாத, அதிகாரமற்ற, அர்த்த புஷ்டியற்ற கருத்தாடல்களாகவும் செவிவழிக் கதைகளாகவுமே அமைந்துள்ளன.

இதன் விளைபொருள், தமிழர் தேசிய அரசியலில், சிங்களப் பேரினவாதத்தின் அணுகுமுறைகளுக்கும் பொருள்கோடலுக்கும் நிகழ்ச்சித் திட்டங்களின் சூழ்ச்சி நிலைகளுக்கும், விலை போவதாகவே அமைந்துள்ளது. அதன்வழியாகத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது, வெறும் கானல் நீராகவே அமைந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது, அதற்கான நகர்வுகள் எவை என்பதே, தமிழ் மக்கள் மத்தியில் இன்றுள்ள கேள்விகளாகும். இருந்தாலும், இது தொடர்பான விழிப்புணர்வூட்டும் கருத்துகள் தமிழ் மக்களுக்குக் கூட்டமைப்பால் முன்வைக்கப்படவில்லை. ஆயினும், தமிழ் அரசியல் கையறுநிலை என்பது, தமிழ் மக்களின் தலைவிதியை ஆபத்தானதாக மாற்றிவிடும் சூழலின் தோற்றப்பாடு, இங்கு துலாம்பரம் ஆகின்றது.

இன்றைய அரசியல் நிலைமைகளில் சஜித், கோட்டா, ரணில், அநுர குமார போன்றவர்களின் ஆதரவு அலை என்பது, தேசிய ரீதியில் சஜித் பக்கம் அமோகமாக இருந்தாலும், அதன் பக்க விளைவுகள் சரி, பிழைகள், சாதக, பாதக நிலைமைகள் என்பவற்றையும் கணித்துப் பார்க்காமல், தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கிறார்களோ, அவர்களை நாம் ஆதரிப்போம் எனக் கூட்டமைப்புக் கூறமுனையுமாக இருந்தால், கடந்தகால அரசியல் காய் நகர்த்தல்களைப்போல் தூர சிந்தனையற்ற, பேரம்பேசும் திராணியற்ற அரசியல் போக்கிரித்தனமாகவே அமையுமேயன்றி, வேறு எதாகவும் பார்க்க முடியாது. அந்தவகையில், தமது சொந்த நலன்களுக்காகப் பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டும் இந்த அரசியல் நழுவல் என்பது, தமிழ் மக்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று எனலாம்.

இன்று ரணில் சார்பாக, ஒரு சில கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் சஜித் சார்பாக இன்னும் சில அரசியல்வாதிகளும் தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் கூட்டங்களுக்குச் சமூகமளித்து, ஆதரவு தெரிவிப்பது, கடந்த கால அரசியல் சாக்கடையில் இவர்கள், கற்றுக் கொண்ட பாடம் என்ன என்பதைப் புலப்படுத்துகின்றது. இந்தத் தமிழ் விரோத சுயநல சிந்தனை, தமிழர்களின் தியாகங்களைக் கூறுபோடுவதாக அமைந்துள்ளது என்றும் கூறலாம்.

எனவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதைச் செய்யப்போகிறது என்று பார்த்தால், மக்கள் சொல்வதை செய்வதென்றால், தமிழர்களை வழிப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் எதற்கு? கட்சி அடையாளம் எதற்கு என்ற கேள்வியே மிஞ்சும்.

அந்த ஒழுங்கில்தான், தமிழ் மக்கள் சார்பாகப் பேசித் தீர்மானித்து, தீர்க்கமான முடிவு எதையும் எடுக்காமல் இம்முறையும் கோட்டை விடுமா கூட்டமைப்பு என்பதற்கு அப்பால், மக்கள் விரும்பும் பிடிமானமற்ற ஆதரவு அலை என்பது, நிபந்தனைப் படுத்தப்படாதவிடத்து, கூட்டமைப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலில், கருத்துகளை முன்வைக்காமல் மௌனம் காப்பதே சாலப்பொருத்தம்.

ஏனெனில், கூட்டமைப்பு, கருத்துச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் போட்டியிட்டால், அவரையே ஆதரிக்கும் நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் தீர்வு விடயத்தில் மக்களின் அபிலாஷை நிறைவேறாமல் போகலாம். இது இலங்கை ஜனநாயக அரசியலின் வரலாறு.

எனவே, தீர்வை பெற்றுத் தருவோம் என, வாக்குறுதிகள் அளித்து, நல்லாட்சிக்கு முட்டுக்கொடுத்துத் தோல்வி கண்டது போல், இம்முறையும் இடியப்பச் சிக்கலுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்காமல் நின்று நிதானித்து, மௌனித்து இருப்பது சிறந்தது எனக் கருதலாம்.

மொத்தத்தில் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் முடிவு, தோல்விக்குச் சென்று விட்டதாகக் கருதுவோர் மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அப்பால் நின்று கொண்டு, பார்க்கப்படுகின்ற அரசியலுக்குப் பதில் பெற்றுக் கொள்ளலும் முக்கியமானதுதான். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ஒன்றே, தாக்கம் செலுத்துவதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மட்டுப்படுத்தப்படாத அரசியல் வேலைப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் சார்ந்து மாத்திரம் சிந்தித்துவிடாமல், அடுத்தடுத்த நிலைகளிலும் சிந்திக்கப்பட வேண்டும் என்ற வகையில், தமிழர்களின் அரசியல் நிலை என்பது, உறுதிபட அறிவிக்கப்படுவதாகவே இருக்க வேண்டும்.

மாறாக, தீர்வை முன்வைப்பவருக்கே, நமது வாக்கு என்று நிலைப்பாடில்லாத நிலைப்பாட்டில் இருந்து, முடிவெடுத்ததாகி விடக்கூடாது என்பதே, இன்றைய அரசியல் யதார்த்தமாகும்.Post a Comment

Protected by WP Anti Spam