சுழலும் ‘தூஸ்ரா’வும் கவிழும் தன்மானமும்!! (கட்டுரை)

Read Time:12 Minute, 57 Second

மேம்பட்ட மனிதன், பேச்சின் மிதமாய் இருப்பான். ஆனால், சிறப்பான செயல்களில், மிஞ்சி விடுவான். எத்தகைய உயர்வும் தாழ்வும் இன்றி, ஒவ்வொருவருடைய சிந்தனையும் பேச்சும் செயலும், சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்த வல்லனவாகும்.

இந்நிலையில், தமிழ் பேசும் நல் உள்ளங்கள், பெருமை கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரன் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ் உள்ளங்கள் மத்தியில் கவலையை, விரக்தியை ஏற்படுத்தி உள்ளன. சீ! இவர்கள் ஏன், இப்படி நடந்து கொள்கின்றார்கள் எனக் கோபத்தை உண்டாக்குகின்றது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி (தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மௌனித்த நாள்), தமிழ் மக்களின் வாழ்வின் இருண்ட நாள்; ஒட்டுமொத்தத் தமிழினமும் மனதளவில் ஒன்றாகக் கூடியிருந்து, ஒப்பாரி வைத்த நாள்; உறவுகளைப் பறிகொடுத்ததை எண்ணி, வெளிப்படையாக அழுவதற்குக் கூடப் பயந்த நாள்.

அவ்வாறானதொரு கொடூர நாள்களைக் கொண்ட 2009, தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான ஆண்டு எனத் தமிழ் மகன் ஒருவன், வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ‘வியத்மக’ அமைப்பின் வருடாந்தக் கூட்டம், கடந்த எட்டாம் திகதி, கொழும்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்து உள்ளார்.

“தலைவர் என்பவர், முன்னுதாரணமாக இருக்க வேண்டும். வெறுமனே வாய் ஜாலங்களை மாத்திரம் கூறுபவராக இருக்கக் கூடாது. வாய்ச் சொற்கள் கூறுவதற்கு நன்றாக இருக்கும். எனினும், செயலில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதே, சிறந்த தலைவரின் பண்பாகும்” எனத் தலைவர் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான நீண்ட விளக்கங்களையும் முரளி கொடுத்து உள்ளார்.

தமிழ் மக்களும் கடந்த 70 ஆண்டுகளாக (சுதந்திரம் கிடைத்த 1948ஆம் ஆண்டு தொடக்கம்) அப்படி ஒரு முன்னுதாரணமான தலைவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்றே தவம் இருக்கின்றார்கள். ஆனால், ஆட்சி அமைப்பவர்களோ, வாய்ச் சொல் வீரர்களாகவே இருக்கின்றார்கள். ஒரு விடயத்தைச் சொல்லி, பிறிதொரு விடயத்தைச் செய்கின்றார்கள்.

முரளி பிறப்பதற்கு (1972)பதினாறு ஆண்டுகளுக்கு முன்பாகவே (1956), இந்நாட்டின் மாண்புமிகு தலைவர்கள் எனப் போற்றப்படுபவர்கள், தமிழ் மக்களை எள்ளி நகையாடி, அவர்களுக்குக் ‘கொள்ளி’ வைக்கத் தொடங்கி விட்டார்கள். அன்றே, தமிழர்கள் வாழ்வு, வண்ணமிழந்து ஒளியிழந்து, வாழ்வு இழந்து விட்டது.

அதன் நீட்சியாக, மே 18 உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் சோகத்தைக் கொடுத்த நாள் ஆகும். அப்படியிருக்க, தனியாக இவருக்கு மட்டும், இவரது வாழ்வில் மட்டும் மகிழ்ச்சியைக் கொடுத்த நாளாக அமைந்திருக்க முடியும்?

முன்னொரு காலத்தில், தமிழ் மக்கள் கூடிக் கூதூகலித்து, பெருமையுடனும் மிடுக்குடனும் பார் போற்ற வாழ்ந்து, பவனி வந்தார்கள். இன்று, தங்கள் ஊர்களை இழந்து, உறவுகளை இழந்து, சொந்தங்களையும் செல்வங்களையும் பறிகொடுத்து அரையிருளில் நடைப்பிணங்களாக உலாவிக் கொண்டிருக்கின்றார்கள்.

1977ஆம் ஆண்டுக் கலவரத்தில், அப்பாவுக்கு 12 காயங்கள் ஏற்பட்டதாக அந்தக் கூட்டத்தில் முரளி கூறியிருந்தார். அவருடைய அப்பா, காயங்களோடேனும் உயிர் பிழைத்தார். அட கடவுளே! மே 18 இல், எத்தனை பிஞ்சுகளின் அப்பாக்கள் காணாமலாக்கப்பட்டார்கள். பொறுப்பு வாய்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டோரிடம், எங்கள் அம்மாக்கள் பாரம் கொடுத்த அப்பாக்களையும் காணவில்லையே!

கலவரத்தின் போது, உறவுகள் இந்தியாவுக்குப் போன நிலையிலும் ‘இலங்கையன்’ என்ற உணர்வுடன், இங்கு வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டமையும் பெருமைக்குரிய விடயம்தான். ஆனால், பல கலவரங்களின் போது, எங்கள் உறவுகள் ஐரோப்பா நாடுகளுக்கும் கனடாவுக்கும் படை எடுத்துப் போனார்கள். இவர்களுக்கும் நடுவில், ‘இலங்கையன்’ என்ற உணர்வுடன் இங்கேயே இருந்தபடியால்த்தான், இவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டார்களா, அவர்கள் முகவரியை இழந்து போக வைக்கப்பட்டார்களா?

உலகப் புகழ் பெற்ற தத்துவஞானியான அரிஸ்டோட்டில், ‘மனித வாழ்வின் முடிவான குறிக்கோளும் முயற்சியும் மகிழ்ச்சியே’ என விளக்குகின்றார்.

நாட்டில் இனி, அச்சமின்றி மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என நீங்கள் உணர்ந்த நாள் 2009 மே 18; ஆனால், என்ன நடக்கப்போகின்றதோ, எதிர்காலம் இருண்டுவிட்டது, அச்சத்துடன் வாழப் போகின்றோமே எனத் தமிழ் மக்கள் உணர்ந்த நாள் 2009 மே 18. இத்தகைய இரண்டு உணர்வுகளுக்கு இடையில் எத்தகைய வேறுபாடுகள். ஏனெனில், போர் இல்லாத கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் அனுபவித்த, அனுபவிக்கின்ற நீண்ட மரண வேதனைகளைப் பட்டியலிட்டுப் பகிரங்கப்படுத்த இந்த இடம் போதாது.

தமிழ் மக்கள் தினசரி அனுபவிக்கின்ற வேதனைகளை அந்தச் சூழலில் வாழும் மக்களினால்தான் உணர முடியும். தமிழ் மக்களின் வாழ்வாதாரம் சுரண்டப்படும் கொடுமைகளிலும் அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு நடுத்தெருவிலும் அகதி முகாம்களிலும் அந்தரிக்கும் வாழ்க்கைச் சூழலிலும் வாழும் மக்களின் நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும். தயவு கூர்ந்து, முரளி என்ற விளையாட்டு வீரனின் வாழ்க்கைச் சூழ்நிலையில் வைத்துப் பார்ப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது. பார்க்கவும் முடியாது.

இலங்கை நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது. ஆனாலும், பார்வையற்ற அறிவாளிகள், ஒரு யானையைத் தொட்டுணர்ந்து, அது பற்றி ஒவ்வொருவருக்கொருவர் தங்களுக்கு ஏற்றவகையில் விளக்குவது போன்றதே இலங்கையில் தமிழர் பிரச்சினையும் தமிழர் இன்னல்களும் தமிழர்கள் மீதான அடாவடிகளும். இந்த நிலையில் இருந்தே, சிங்கள பேரினவாத சிந்தனையிலிருந்து, பலரும் தங்களுக்கு ஏற்றவாறு, பலவித வியாக்கியங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று யாரும் எங்கும் செல்லலாம்; உண்மையில் என்ன நடந்தது என இலகுவாக அறிந்து கொள்ளலாம். ஆனாலும், பேரினவாத கடும் போக்காளர்கள், உண்மையில் நிதர்சனமாகப் பார்ப்பதை நம்புவதில்லை. மாறாக, ஏற்கெனவே நம்பிக் கொண்டிருப்பதையே, இன்னமும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

சர்வதேசமும் ஸ்ரீ லங்கா அரசாங்கங்கள் என்ன சொல்கின்றன எனக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தமிழ் மக்கள், அதே ஸ்ரீ லங்கா அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள் எனப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒருவரது தனித்தன்மைக்கு, எண்ணற்ற வடிவங்கள் உண்டு. இலங்கை நாட்டில், தமிழ் மக்களின் தனித்தன்மைக்கு தமிழ் மொழியும் தமிழ் மண்ணும் இரண்டு கண்கள் போன்றன. தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் இல்லாமல் செய்து, முழு நாட்டையும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்துக்குள் கொண்டு வருவதே பேரினவாதிகளின் உள்நோக்கம் ஆகும்.

இந்த இரண்டு நோக்கங்களுக்கும் இடையிலான போராட்டமே, இனப்பிரச்சினை ஆகும். ஆகவே, இலங்கையில் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளும் தாய்மொழிப் பற்றும் தாய் மண்பற்றும் இல்லாதவர்களும் சிங்களப் பேரினவாதிகளின் உள்நோக்கம் தெரியாமல் அல்லது தெரிந்திருந்தும் தெரியாதது போல, பொதுவெளியில் நடமாடுவதும் பிரசாரம் செய்வதும் கவலையிலும் கவலை தரும் விடயங்கள் ஆகும்.

தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை முழுமையாக விளக்குவது சற்றுக் கடினமானது. அது, மன உறுதித் தன்மை, மனநெகிழ்வுத் தன்மை போன்ற பல விடயங்களைத் தன்னகத்தே கொண்டது. உயர்ந்த தியாகமும் தன்னலத் தன்மையும் இல்லாத நிலையும் அதன் ஒப்பற்ற உயரிய பண்புகள் ஆகும்.

முரளி அவர்கள் முன்னர், கிரிக்கெட் விளையாடிய காலங்களில், மைதானத்துக்குள் பந்து வீசக் களம் இறங்கிய உடனேயே, தமிழர்களாகிய எங்களுக்குள் இனம் புரியாத இன்பம் பரவும். முரளி என்பவர், எங்கள் இனம் என்பதாலேயே அந்த இனம் புரியாத இன்பம் எங்களுக்குள் தோன்றியது.
மேலும், எங்கள் வீட்டுப் பிள்ளை போலவே, எங்கள் மனங்கள், நீங்கள் விக்கெட்டுகளைச் சரிக்க வேண்டும் என, எல்லாக் கடவுளையும் பிரார்த்தனை செய்யும். போட்டியில், இலங்கை அணி தோற்றாலும் கூட, விளையாட்டில் முரளி என்பவர் தோற்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் இறைவனை இரந்து வேண்டிய காலம் ஒன்றும் இருந்தது. அன்று, முரளி சாதிக்க வேண்டும் என உடைத்த தேங்காய்கள், என்னவாயிற்று என இன்று உணர்கின்றோம்.

எவராலும் நெருங்க முடியாத சாதனைகள் படைத்த விளையாட்டு வீரனாக விளங்கிய முரளி என்ற தனிமனிதனுக்கு, தமிழ் மக்களை இருட்டுக்குள் தள்ளிய, தள்ளிக் கொண்டிருக்கும் அரசியலும் விளையாட்டாகத் தெரிகின்றதோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை ஆச்சரியப்படுவதற்குரிய விடயமல்ல; ஆனால், செல்வாக்கும், புகழும் மிக்க ஒரு விளையாட்டு வீரனைப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் அரசியல் செய்ய எத்தனிக்கிறார்கள் என்பது முரளிக்குத் தெரியாவிட்டாலும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு அது நன்றாகவே புரிந்துள்ளது என்பது வெட்டவௌிச்சம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வருடங்களாக விமானம் வராத விமான நிலையம்!! (வீடியோ)
Next post வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)