குறைந்த காசிலும் வயிறு நிரம்பணும்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 37 Second

‘‘சின்ன வயசில் நான் நல்லா குண்டா சப்பியா இருப்பேன். சாப்பாட்டை பார்த்தா நான் ரொம்ப எமோஷனல் ஆயிடுவேன். நான் டிப்ரஷன்ல இருந்தாலும் சாப்பிட்டா போதும் என்னுடைய டிப்ரஷன் எல்லாம் மறந்திடும். சரியான சாப்பாடு இல்லைன்னா எனக்கு கோவம் வரும்’’ என்கிறார் ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் வில்லன் நடிகர் ஆதித்யா. இவர் மறைந்த முன்னாள் நடிகர் தேங்காய் நிவாசனின் பேரனுமாவார்.

‘‘நான் பிறந்ததில் இருந்து இப்ப வரைக்கும் அம்மா காலையில் ஒரு சில டயட்டை எனக்கு கொடுப்பாங்க. காலை எழுந்தவுடன் அம்மா ஒரு சின்ன டம்ளரில் தேன், எலுமிச்சையை சுடு தண்ணீரில் கலந்து கொடுப்பாங்க. அது கூட இரண்டு பாதாம் சாப்பிட தருவாங்க. அதற்கு பிறகு ஒரு பெரிய டம்ளரில் பால் தருவாங்க. ஒரு அரை மணி நேரம் இடைவேளை. அடுத்து ஒரு பழச்சாறு அல்லது சூப் வகைகள் வரும். சில சமயம் இளநீரும் இருக்கும். கடைசியா ஒரு சின்ன டம்ளர் தயிர்.

இந்த டயட்டை 14 நாட்கள் கடைப்பிடிப்பாங்க. இப்படி ஒரு நடைமுறையில் அம்மா இதெல்லாம் சாப்பிட தருவாங்க. இது எனக்கு மட்டுமல்ல எங்க வீட்டில் எல்லாரும் இதை கண்டிப்பா சாப்பிடணும். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் இப்பவரைக்கும் சாப்பிட்டு வரேன். அம்மா எந்த காரணத்தினாலும் இதை விட்டுக் கொடுக்க மாட்டாங்க. காரணம் இதில் ஒவ்வொன்றிலும் நம் உடலுக்கு தேவையான சத்து மற்றும் எதிர்ப்பு சக்தி இருக்குன்னு சொல்வாங்க. சில சமயம் நான் காலையில் தயிர் சாப்பிட மறந்துட்டா எனக்கான டம்ளர் தயிர் இரவு காத்து இருக்கும்’’ என்று சொல்லும் ஆதித்யா சாப்பாட்டு பிரியராம்.

‘‘அதற்கு காரணம் என் பாட்டி. அவங்க ரொம்ப நல்லா சமைப்பாங்க. எந்த வகையான உணவுனாலும் அதே ருசி மாறாமல் செய்வாங்க. சைனீஸ், தாய், இத்தாலியன்னு எல்லா உணவுகளையும் சமைப்பாங்க. ஒரு சின்னதா பஜ்ஜி போட்டாலும் அவ்வளவு சுவையா இருக்கும். அவங்க சுவை எனக்கு பழகிடுச்சு. அதனாலேயே ஒரு நாள் அவங்க சரியா செய்யலைன்னா எனக்கு கோவம் வரும். அதனால தான் நான் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் ரொம்ப எமோஷனல் ஆயிடுவேன். தாத்தா நடிகர் என்பதால் அவரைப் பார்க்க நிறைய பேர் வீட்டுக்கு வருவாங்க. இயக்குனர், தயாரிப்பாளர், சக நடிகர்கள்ன்னு எப்போதும் எங்க வீட்டில் ஆட்கள் இருப்பாங்க.

அவங்களுக்கு பாட்டி சமையல்ன்னா ரொம்ப பிடிக்கும். அவரும் முகம் கோணாமல் சமைத்து தருவார். சில சமயம் தாத்தாவே மீன் குழம்பு, சுறா புட்டுன்னு மெனு சொல்வார். அதனால பாட்டிக்கு சமையல் மேல் ஒரு ஈடுபாடு வந்தது. நிறைய சமையல் நிகழ்ச்சியினை பார்ப்பாங்க. அப்படித்தான் ஒவ்வொரு வகை உணவினையும் கத்துக்கிட்டாங்க. அம்மா சமையல் அறை பக்கமே போக மாட்டாங்க. அவங்களுக்கு பெரிசா சமைக்க தெரியாது. அவங்க பஞ்சாபி என்பதால் எங்க வீட்டில் வட இந்திய உணவும் இருக்கும். மதிய உணவு தென்னிந்திய உணவுன்னா, இரவுக்கு கண்டிப்பா சப்பாத்தி, ரொட்டி, ராஜ்மா, தால்ன்னு இருக்கும். என் பாட்டி சமையலில் ரசம், நண்டு மசாலான்னா ஒரு பிடி பிடிப்பேன்’’ என்றவர் சைனீஸ் உணவு பிரியராம்.

‘‘எனக்கு எல்லா உணவையும் விட சைனீஸ் உணவான ஃபிரைட் ரைஸ், மேமோஸ், டிம்சும், ஷவர்மா, கிரில்டு சிக்கன் ரொம்ப பிடிக்கும். அது மட்டுமில்ல பிரியாணிக்கு மயங்காதவர்கள் கிடையாது. நானும் அதில் விதிவிலக்கு இல்லை. ஒரு முறை ஷூட்டிங்காக டார்ஜிலிங் சென்றிருந்தேன். எனக்கு டீ, காபி சாப்பிட்டு பழக்கமே இல்லை. ஆனால் அங்கு போன பிறகு தான் டீ சாப்பிடும் பழக்கம் வந்தது. டார்ஜிலிங்கில் நான் சாப்பிட்ட டீ போல வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. அங்கு பல பிளேவர் டீ இருக்கும். மசாலா டீ, கேமோமைல் டீ, சில்வர் டி, சூப்பர் ஸ்டார் டீன்னு பல வகை டீ அங்க கிடைக்கும். ஒவ்வொன்றும் ஒரு தனி சுவையில் இருக்கும்.

அதன் சுவையை வார்த்தையால் சொல்ல முடியாது. குடிச்சா தான் அதை உணரமுடியும். டீயே குடிக்காத நானே அந்த டீக்கு ரசிகனாயிட்டேன். மேலும் அந்த குளிருக்கு சூடான டீ சாப்பிடும் போது இதமா இருக்கும். தில்லியில் தந்தூரி வகை உணவுகள் ரொம்ப நல்லா இருக்கும். பெரிய ஓட்டல்கள் எல்லாம் இல்லை. சின்ன சாலையோர கடைகள் தான். அவ்வளவு ஜுசியாகவும் சுவையாகவும் இருக்கும். அதே போல் மும்பைக்கு சாட் உணவுகள் பிரதானம். சாலை முழுக்க இருக்கும் அந்த சாட் உணவுகளை அப்படியே வாங்கி சாப்பிட்டுக் கொண்டே போகலாம். ஒரு மசாலா பொறி சாப்பிட்டா போதும், அன்றைய மதிய உணவு முடிஞ்சிடும்.

வடா பாவ் மும்பையில் ரொம்ப ஃபேமஸ். அக்கா படத்தில் நடிக்கும் போது கேரளாவில் ஷூட் இருந்தது. அப்ப நானும் கூட போயிருந்தேன். அங்க சாப்பாட்டு அரிசி குண்டு குண்டா தான் இருக்கும். அப்புறம் அங்க மீன் ரொம்ப ஃபேமஸ். ஃபிரஷ்ஷா கிடைக்கும். சுவையும் நல்லா இருக்கும். பழைய மீனாக இருந்தால் அதில் ஒரு வித நீச்ச வாசனை வரும். அந்த வாசனை அங்குள்ள மீன்களில் உணர முடியாது. ஐதராபாத்திற்கு ஃபேமஸ் பிரியாணி. அவங்க சாப்பாடு கொஞ்சம் ஸ்பைசியா தான் இருக்கும். ஆனால் சாப்பிட நல்லா இருக்கும். அவங்க ஊர் பிரியாணி பத்தி சொல்லவே வேணாம். என்னோட ஆல்டைம் ஃபேவரெட் எப்போதும் பிரியாணி தான்.

ஒரு முறை பேங்காக் போயிருந்தேன். அங்க தெருவோர உணவுக் கடைகள் ரொம்ப ஃபேமஸ். ஆனால் என்னவோ எனக்கு அங்க உணவு சாப்பிட பிடிக்கல. அந்த உணவுகளில் இருந்து வெளியாகும் ஒரு வித வாடை என்னை அந்த உணவினை சாப்பிட தூண்டவில்லை. அப்படி இருந்தும் அங்க தெருக்கடை ஃபேமஸ் என்பதால் ஒரு சில உணவினை டிரை செய்தேன். ஆனா ஒத்துக்கல. நமக்கு நம்ம சென்னை மற்றும் நம்ம ஊரு உணவு தான் செட்டாகும்ன்னு அப்ப முடிவு செய்தேன்’’ என்றவர் சென்னையில் பல விதமான உணவகங்களை சுவைத்துள்ளார். கோட்டூர்புரத்தில் சாவ்ய ரசான்னு ஒரு உணவகம்.

அங்க அசைவ உணவு ரொம்ப ஃபேமஸ். குறிப்பா அவங்களின் இறா புட்டு ரொம்பவே நல்லா இருக்கும். ஏற்கனவே சொன்னது போல் எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும். சைதாப்பேட்டையில் ‘ஹாஜீராஸ் கிட்சன்’ பிரியாணிக்கு ஃபேமஸ். அது உணவகம் கிடையாது. டேக் அவே தான். அது மட்டும் இல்லை ஆர்டர் பேரிலும் செய்து தருவாங்க. ரொம்ப நல்லா இருக்கும். எங்க வீட்டில் உணவு பொறுத்தவரை கூகில் மேப் என் மாமா தான் (அக்காவின் கணவர்). அவரும் எங்களை போல உணவு பிரியர். அவருக்கு எங்காவது புதுசா உணவகம் திறந்து இருந்தா போதும், உடனே அங்க போய் சாப்பிட்டு வந்திடுவார். நல்லா இருந்தா எங்களையும் அழைச்சிட்டு போவார்.

இவர் ஒரு பக்கம்ன்னா என் நண்பர்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் வரும் விளம்பரம் மற்றும் விமர்சனம் பார்த்தும் போய் சாப்பிடுவோம்.
எனக்கு குறிப்பா இங்க தான் போய் சாப்பிடணும்ன்னு எல்லாம் கிடையாது. நல்ல உணவகமா இருக்கணும். உணவு சுவையா இருக்கணும். அவ்வளவு தான். சில சமயம் இரவு நேரம் சாப்பிடணும்ன்னு தோணும். அப்ப இரவு நேரம் திறந்திருக்கும் ஓட்டலில் போய் சாப்பிடுவேன். இப்பதான் ஸ்விகி வந்துடுச்சே.. அதனால சாப்பிடணும்னு தோணுச்சுன்னா ஆர்டர் செய்திடுவேன்.

என்னதான் சினிமாவுக்காக டயட் இருந்தாலும், என்னால் ஐஸ்கிரீமை மட்டும் விட முடியாது. எவ்வளவு மற்றும் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன். அதுக்காக வீட்டில் எப்போதும் ஸ்டாக் எல்லாம் வச்சுக்க மாட்டேன். சாப்பிடணும்ன்னு தோணுச்சுன்னா இன்ஸ்டன்டா போய் கடையில் அப்ப வாங்கி ஃபிரஷ்ஷா சாப்பிடுவேன். என்னை பொறுத்தவரை உணவினை ரசிச்சு சாப்பிடணும். அதுக்காக ஸ்டார் ஓட்டலில்தான் சாப்பிடணும்னு இல்லை. சாதாரண வண்டிக் கடையில் குறைந்த விலையாக இருந்தாலும் தரமாகவும் சுவையாகவும் இருந்தா கண்டிப்பா சாப்பிடலாம்’’ என்று சொல்லும் ஆதித்யா ‘நெய் இட்லி’ என்ற பெயரில் டிரக் உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுக்கு பலம் தரும் பாதாம்!! (மருத்துவம்)
Next post ‘யூத்’களை கவரும் வெள்ளி! (மகளிர் பக்கம்)