By 27 September 2019 0 Comments

இராஜதந்திர நகர்வுகளின் தேவை !! (கட்டுரை)

கிழக்கு சவுதி அரேபியாவில் எண்ணெய் நிறுவல்கள் மீதான இம்மாத 14ஆம் திகதி ட்ரோன் தாக்குதல்கள், ஐக்கிய அமெரிக்க – ஈரானிய பேச்சுவார்த்தைகளை இனி இந்நிலையில் தொடரமுடியாத நிலைக்கு தள்ளியுள்ளதுடன், யேமனில் நடைபெறும் ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இலக்காகி இருக்கின்றது.

குறித்த தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பதற்றங்கள் அதிகரித்துள்ளதுடன், எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பிரான்சின் பியாரிட்ஸில் நடந்த ஜி 7 மாநாட்டின்போது பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் முன்முயற்சிகளால் உருவாக்கப்பட்ட சில நம்பிக்கைகள் உடைந்து போயுள்ளதுடன், ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டன் தனது பதவியிலிருந்து இக்காலகட்டத்தில் விலக்கப்பட்டும் உள்ளார் எனப் பல நிகழ்வுகள் குறித்த தாக்குதல் நடைபெற்ற அதே காலத்தில் நடைபெற்றுள்ளதுடன் உண்மையில் தாக்குதல்களின் நோக்கம் ஈரான் – ஐக்கிய அமெரிக்க பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை குறைப்பதாக இருக்கலாம் என்ற போதிலும், இவை எல்லாமே இம்மாதத்தில் நியூ யோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்திலும் அதன் உரையாடல்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதே இப்போதைய கேள்வியாகும்.

ட்ரோன் தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது இன்னமுமே தெரியாத நிலையில், ஹூதிகள் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் சில அரசியல் வல்லுநர்கள் யேமனில் இருந்து குறித்த தாக்குதலை சவுதி அரேபியாவில் உள்ள இலக்குகளுக்கு மேற்கொள்ள தேவையான தொழில்நுட்ப ஆற்றல் குறித்த குழுவிடம் இல்லை எனவும் அதன் காரணமாக உண்மையிலேயே குறித்த குழு தான் குறித்த தாக்குதலை மேற்கொண்டிருக்குமா என்று சந்தேகிக்கின்றனர்.

ட்ரோன்கள் தெற்கு ஈராக்கிலிருந்து அனுப்பப்பட்டதாக சிலர் ஊகிக்கின்றனர். ஈரானிய ஆதரவுடைய போராளிகளான மக்கள் அணிதிரட்டல் படைகள் அல்லது ஈராக்கில் உள்ள ஈரானிய புரட்சிகர காவலர்களின் பிரிவுகளால் குறித்த தாக்குதல் ஈரானிய ஜனாதிபதி ஹஸன் றொஹானி அல்லது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மொஹமட் ஜவாட் ஸரிஃப் உத்தரவு இல்லாமல் கூட நடந்திருக்க முடியும் என குறித்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை காலத்தில் நடைபெற இருந்த ஐக்கிய அமெரிக்கா – ஈரானிய பேச்சுவார்த்தைகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட உந்துதல்களாக இருக்கக்கூடும் என்றும் எண்ணமுடியும்.

மேலும் இத்தாக்குதல், அமெரிக்க மற்றும் ஈரானிய நாடுகள் சவூதி – யேமன் போராட்டத்தில் எதிர்ப்பு நாடுகளை ஆதரிக்கும் இந்நிலையில் தெற்கு யேமனின் எதிர்காலம் குறித்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே அதிகரித்த பதற்றங்கள் குறித்த இவ் ட்ரோன் தாக்குதல்களுடன் இணைக்கப்படலாம் என்ற ஊகங்களும் உள்ளன.

ட்ரோன்கள் ஏவப்பட்ட இடங்கள் மற்றும் அதை ஏவியவர்கள் யாராக இருந்தாலும், அதன் விளைவுகள் தெளிவாகவே தெரிகின்றது. பதற்றங்களைக் குறைப்பதற்கான சாத்தியமான பாதையைப் பற்றி அரசாங்கங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், இத்தாக்குதல் மிகப் பெரிய பிராந்திய யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான பதற்றங்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, ஜி 7 இல் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் திட்டத்துக்கு கூடுதலாக, முந்தையதாக ரஷ்ய அரசாங்க முன்மொழிவுகள் இப்போது செயலற்றவையாகி விட்டது.

இருப்பினும், இப்போதைய நிலையில், குறித்த தாக்குதலுக்கான எதிர்த்தாக்குதலை மேற்கொள்ள சவுதி அரேபியாவோ அல்லது ஐக்கிய அமெரிக்காவோ அவசரப்படவில்லை என்பதே மேலதிக இராஜதந்திர நகர்வுகளுக்கு வழிவகுக்கக்கூடிய செயலப்பாடாக இருக்கும் என கருதமுடியும். ஆயினும், ஒரு புறம் ஐக்கிய அமெரிக்கா ஏற்கெனவே தனது பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது அதிகரித்திருக்கின்ற போதிலும், மறுபுறம் ஈரானியத் தலைவர்களுக்கு நியூ யோர்க் செல்வதற்கு அனுமதி அளித்த்துள்ளமை – மறுபுறம் ஈரான், ஐக்கிய அமெரிக்காவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் இப்போதைக்கு மேற்கொள்ளாது என ஈரானின் உயர் தலைவர் அயோத்துலா காமேனி அறிவித்துள்ளமை என்பன ஒரு சிக்கலான இராஜதந்திர – அரசியல் நகர்வுகள் பிரகாரமே குறித்த போரியல் முனைப்புக்களை இருபக்கமும் தவிர்க்கமுடியும் என எண்ணலாம்.

இதன் முதல்பகுதியாகவே ஈரானைக் குறை சொல்வதை பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன இந்நிலையில் தவிர்த்துள்ளமையை பார்க்கமுடியும், அண்மைய ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில்கூட ஐக்கிய நாடுகள் சபைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் கெலி கிராஃப்ட் மற்றும் ஐக்கிய அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மைக் பொம்பயோ ஆகியோர் ஈரானை குறை சொன்ன போதிலும், இரண்டு நாடுகளும் இன்னமும் முழுமையான தகவல்கள் கிடைக்காத இந்நிலையில் தம் எவரையும் குற்றம் சாட்டுவதற்கு தயாரில்லை எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் காரணமாக ஏற்கெனவே ஐக்கிய அமெரிக்கா விலகியுள்ள போதிலும், நடைமுறையிலிருக்கும் அணுஆயுத ஒப்பந்தத்தை மீறவோ அல்லது அதிலிருந்து வெளியேறவோ மேற்கத்தைய நாடுகள் விரும்பவில்லை.

மறுபுறம் இந்நாடுகள் எல்லாமே சவுதியுடனான நேரடியான ஆயுத வர்த்தக மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியம் சார்பான பாதுகாப்பில் தொடர்ச்சியாக இணைந்து செயலாற்றும் நாடுகளாகவே இருக்கின்றன. இந்நிலையில் சிக்கலான இப்பாதுகாப்பு நெருக்கடி மீது எவ்வாறாக ஒரு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பல்வேறனான அரசியல் நிகழ்ச்சிநிரல்கள் மத்தியில் – இடைப்பட்ட நாடுகள் ஈரானுடன் போரியலைத் தடுப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam