By 23 October 2019 0 Comments

திருச்சி மருத்துவமனை!! (மருத்துவம்)

தமிழ்நாட்டில் பூகோள அமைப்பின்படி மையப்பகுதியில் உள்ள நகரம் திருச்சிராப்பள்ளி. இதனால்தான் திருச்சியை மாநிலத்தின் தலைநகரமாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கூட ஒரு கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் நிர்வாக வசதிக்காக திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதரின் ஆசியோடு, டெல்டா மாவட்டங்களுக்குக் காவிரி பாயும் அழகான நகரமாகவும் திருச்சி இருப்பதால், பலருக்கும் விருப்பமான நகரமாகவும் திருச்சி இருக்கிறது.

இங்கு பழமைக்கும் பழமையாக, புதுமைக்கும் புதுமையாக செயல்பட்டு வருகிறது மஹாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனை. ‘ரவுண்ட்ஸ்’க்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் சாரதாவை சந்தித்தோம்…

‘‘1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் திருச்சியில் ஒரு சிறிய அரசு மருத்துவமனை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டுமே, நோய் பாதிப்புக்காக இங்கு சிகிச்சை பெற்றனர். ஆண்டுகள் செல்லச் செல்ல திருச்சி அரசு மருத்துவமனை படிப்படியாக வளர்ந்தது. சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்காக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையாகவும் மாறி இருந்தது. தமிழக அரசு 1997-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தியது.

மாவட்ட மருத்துவமனையிலிருந்து 2 கி.மீ தொலைவில் சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு இடையே மத்திய பேருந்து நிலையம் அருகே 25 ஏக்கர் நிலம் மருத்துவக் கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் பெயர் சூட்டப்பட்டது’’ என்று மருத்துவமனையின் வரலாற்றை விவரித்த டீன் சாரதா, அதன் பிறகான மருத்துவமனையின் தற்போதை செயல்பாடுகள் தொடர்பாக விளக்கினார்.

‘‘எங்கள் மருத்துவமனையில் இப்போது 1,600 நோயாளிகளுக்கு படுக்கை வசதி உள்ளது. புறநோயாளிகளாக தினசரி 3000 பேர் வருகின்றனர். அவர்களில் 200-க்கும் அதிகமானோர் பரிசோதனைகளுக்கு பின் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர். நாங்கள் 190 டாக்டர்கள், 214 நர்சுகள் பணியில் இருக்கிறோம்.

எங்கள் மருத்துவமனையில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு சிகிச்சை, இதய சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, சிறுநீரகவியல் சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை, கதிரியக்கம், மனநலம் உள்பட 23 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. பொது அவசர சிகிச்சை, இதய சிகிச்சை, குழந்தை, மகப்பேறு உள்பட 7 பிரிவுகளில் தனி ஐ.சி.யு(Intensive care unit) ஆகியவை செயல்பட்டு வருகிறது.

அரசு காப்பீட்டு திட்டத்தின்கீழ் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய் அடைப்பை சரி செய்ய ஆஞ்சியோகிராம் செய்கிறோம். 3 மாதங்களில் 278 பேருக்கு சிகிச்சை அளித்திருக்கிறோம். அதேபோல் போதை மறுவாழ்வு மையம் ரூ.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பச்சிளங்குழந்தை கடத்தல் சம்பவங்களை தவிர்க்க, ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஆர்.எஃப்.ஐ.டி ரிஸ்ட் பேண்ட் ரீடருடன் கூடிய ரிஸ்ட் பேண்ட்(RFID Wrist band) பொருத்துகிறோம். குழந்தையை அறையை விட்டு வெளியே தூக்கி சென்றாலோ அல்லது ரிஸ்ட் பேண்டை கழற்ற முயன்றாலோ அலாரம் அடித்து காட்டிக் கொடுத்துவிடும். இந்த திட்டம் எங்கள் மருத்துமனையில் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்கிறது.

இது தவிர இதய வால்வு அடைப்பை, அறுவை சிகிச்சை இன்றி பலூன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. விரைவில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான பிரத்யேக மையம் ரூ.24 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.’’

அறுவை சிகிச்சைத்துறை மருத்துவர் ஏகநாதன்‘‘அந்த காலத்தில் இங்கு நோயாளிகள், டாக்டர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால், இப்போது போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் பணியில் உள்ளனர். மருத்துவக்கல்லூரி தொடங்கப் பட்டபோது, 100 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ஓபன் சர்ஜரிக்கள்தான் அதிகம் செய்தோம்.

அதனால் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய கால தாமதம் ஆகும். இப்போதெல்லாம் ‘நுண்துளை சிகிச்சை’(Key hole operation) செய்வதால், குறைவான ரத்த இழப்பால் விரைவில் நோயாளிகளும் குணமடைந்துவிடுகின்றனர். இது மாணவர்களுக்கு ஆடியோ விஷுவல் பயிற்சி அளிக்க பெரிதும் பயன்படுகிறது.’’

மூளை நரம்பியல் மருத்துவர் ராஜசேகர்‘‘மூளை நரம்பியல் பிரிவில் பக்கவாதம் பாதித்தவரை 3 முதல் 4 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டால், அவர்களுக்கு உரிய மருந்துகள் கொடுப்பக்கடுவதன் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதுபோல நரம்பியல் தொடர்பான பிரச்னைகளை நுணுக்கமாக அறிய முடியாத நிலை முன்பு இருந்தது. இப்போதுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதியால் நோயின் தன்மையை நுணுக்கமாக கண்டறிய முடிகிறது.

விபத்தில் சிக்கிய ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும்போது, நரம்பியல் பிரச்னை உள்ளதா என்று சந்தேகித்தால் உடனே ரத்தக்கசிவு போன்றவற்றை கண்டறிய உடனடி சிடி ஸ்கேன் எடுக்கிறோம். நரம்பு செயல் திறன் குறைவு(ஜிபிஎஸ்), சர்க்கரை நோய், சிறுநீரக செயல்பாட்டில் பிரச்னை, வலிப்பு போன்றவற்றால் வரக்கூடிய நரம்பியல் பாதிப்புகளுக்கு சிகிச்சை, தொடர் சிகிச்சை அளித்து வருகிறோம். எங்கள் துறையில் சிகிச்சைக்காக 70 சதவீதம் பேர் தலைவலி, வலிப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அதே போல் 40 வயதுக்கும் குறைவானவர்களும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவதும் அதிகரித்துள்ளது.’’

இதய சிகிச்சைத்துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன்‘‘எங்கள் துறையில் உள்ள Treadmill Scene என்ற பரிசோதனையில் மாரடைப்பு வருமா என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும். இங்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ரூ.3.50 கோடியில் அதிநவீன கேத் லேப்(Cath lab) தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் இதய அடைப்பை கண்டறிந்து ஆன்ஜியோபிளாஸ்ட் செய்கிறோம். இதுவரை 275 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டு அதில் 65 பேருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்துள்ேளாம். அதனால் மாரடைப்பால் ஏற்படக்கூடிய இறப்பு விகிதத்தில் மூன்றில் 2 பங்கைக் குறைத்துள்ளோம். இது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

முன்பெல்லாம் பணக்காரர்களுக்கு வரும் நோயாக மாரடைப்பு இருந்தது. இன்று 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. அரசு காப்பீட்டு திட்டம் இருப்பதால் இங்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரச்னை இல்லை. அரசு காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.’’

குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் மைதிலி‘‘குழந்தைகள் நலப்பிரிவை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளோம். பச்சிளங்குழந்தைகளுக்கு தனிப்பிரிவும், 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தனி பிரிவையும் செயல்படுத்தி வருகிறோம். எங்கள் பிரிவில் மட்டும், 200 படுக்கை வசதி உள்ளது. எங்கள் துறையில் கடந்த சில ஆண்டுகளுக்குள் அதிநவீன கருவிகள் வாங்கப்பட்டதால் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. செயற்கை சுவாசத்துக்கான யூனிட்களின் எண்ணிக்கையை பத்தாக அதிகரித்துள்ளோம்.

நிமோனியா, வலிப்பு, இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, விஷக்கடி போன்றவற்றிக்கும் சிகிச்சை அளிக்கிறோம். இதில் மஞ்சள் காமாலைக்கு போட்டோ தெரபி சிகிச்சை அளிக்கிறோம். நோய்த்தொற்றுக்கு முன்னரே தடுப்பூசி, தடுப்பு மருந்துகளை நாங்கள் வழங்குவதால் அம்மை நோய் உள்பட பல்வேறு நோய் பாதிப்புகள் குறைந்துள்ளது.

அதே போல் ஊட்டச்சத்து குறைபாடு இன்றைய குழந்தைகளுக்கு மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். பச்சிளங் குழந்தைகள், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான உணவு தொடர்பான பரிந்துரைகளை அவர்களின் பெற்றோரிடம் சொல்கிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.’’

மணி முத்து (உள்நோயாளி)‘‘நான் திருச்சி கல்லுக்குழியை சேர்ந்தவன். பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், வலது காலில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நான் கடந்த 25 நாட்களாக திருச்சி அரசு மருத்துவமனையில் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த மருத்துமவனையில் சிறப்பாக சிகிச்சை அளிக்கிறார்கள். சிகிச்சையை பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை. டாக்டர்கள், நர்சுகள் கனிவுடன் கவனித்துக் கொள்கிறார்கள். குடிநீர் தட்டுப்பாடு இங்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

அடுக்குமாடி கட்டிடத்தில் மேல் தளங்களில் குடிநீர் வசதி கிடையாது. குடிநீர் வேண்டுமானால் தரைத்தளத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கழிப்பறைகளை சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். ஆனால், அங்கும் தண்ணீர் பல மணி நேரம் விநியோகம் செய்யப்படுவதில்லை.’’Post a Comment

Protected by WP Anti Spam