ஜிகா…எபோலா…நிபா…!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 9 Second

‘‘நிபா போன்ற வைரஸ்கள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எந்தவொரு நோயும் இல்லை என்ற நிலைமை என்றைக்கும் வராது. ஒரு நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டால், புதிதாக வேறொரு நோய் உருவாகத்தான் செய்யும். அதுதான் இயல்பு. அதுவும் இன்றைய சூழலில் கிருமிகளே இல்லாத உலகம் என்பதை எதிர்பார்க்க முடியாது.

பல வருடங்களுக்கு முன்பு வழக்கத்தில் இருந்த போலியோ, சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை(Measles) போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. எனவே, அவற்றின் தாக்கம் குறைந்து விட்டது. ஆனால், அவற்றின் வேறு வடிவங்களாக மற்ற நோய்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையே இப்போது பார்த்து வருகிறோம்.

முன்னர் இருந்த நோய்கள் பெரிதாக தெரிந்ததால், பிற நோய்கள் நம்முடைய கண்களுக்குத் தெரியவில்லை. காலத்தால் முந்திய நோய்களை ஒழித்துவிட்டதால், அந்த இடத்தைப் பிடிக்க தற்போதுள்ள நோய்கள் முன்வரும். இரண்டாவதாக, மக்கள்தொகை பெருகபெருக அனைத்து இடங்களுக்கும் நாம் சென்று வர ஆரம்பித்து விட்டோம். முன்பெல்லாம், அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் வழக்கம் கிடையாது. மனித எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க போகாத இடங்களுக்கு எல்லாம் போகத் தொடங்கி விட்டோம். அந்த மாதிரியான நேரங்களில் விலங்குகளிடம் உள்ள மற்ற வைரஸ்கள் எல்லாம் நமக்குப் பரவ வாய்ப்பு உள்ளது.

விலங்குகளிடம் காணப்படுகிற நோய்கள் பரிணாம வளர்ச்சி காரணமாக, மனிதர்களுக்கும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தன. இந்த நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நமக்குப் போதுமானதாக இல்லாத காரணத்தால், அவற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

வைரஸ்களால் நமக்கு ஏற்படக்கூடிய நோய்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு நோயும் வேவ்வேறு தன்மை கொண்டதாக இருக்கும். இந்த நோய்களால் நமக்கு நிறைய பாதிப்புகள் வரும். இத்தகைய பாதிப்புகள் அந்தந்த நோய்களைப் பொறுத்து அமையும். உதாரணத்துக்கு, ஒருவர் நிபா வைரஸால் தாக்கப்பட்டு இருந்தால், அவருடைய நரம்பு மண்டலம் பாதிப்புக்கு உள்ளாகும். நுரையீரல் செயல் இழத்தல், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகள் எபோலா வைரஸால் வரக்கூடும்.

இத்தகைய பாதிப்புகள் உடனடியாக வெளியே தெரியாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கேரளாவில் தற்போது அடர்ந்த காட்டுக்குள் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 50 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் நிபா வைரஸால் உயிர்சேதம் ஏற்பட்டு இருந்தால் வெளியே யாருக்கும் தெரிந்து இருக்காது. உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில், நிபா காய்ச்சல் ஆரம்பித்தாலும் மற்ற நாடுகளுக்குப் பரவுவது மிகவும் எளிதாகி விட்டது. ஏனென்றால், உலகத்தின் எந்த கோடியில் இருந்தும் வேறோர் இடத்துக்கு 48 மணிநேரத்தில் சென்று விடலாம். அந்தளவிற்கு விமான போக்குவரத்து வசதி பெருகி விட்டது. இதனால், நிபா காய்ச்சலும் 48 மணி நேரத்துக்குள், உலகத்தின் எந்த இடத்துக்கும் பரவி விடலாம்.

15 வருடங்களுக்கு முன்பு சார்ஸ் நோய் விஸ்வரூபம் எடுத்தபோது, நிறைய நாடுகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. ஒரு பகுதியில் இருந்து, வேறொரு பகுதிக்கு மக்கள் பெருமளவில் நகர ஆரம்பித்ததுதான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இது மாதிரி நிறைய பிரச்னைகள் உள்ளன. நிபா காய்ச்சல் மட்டும்தான் பிரச்னை என்று சொல்ல முடியாது. இந்நோய் பற்றி நாம் அறிவியல் மூலமாக கற்றுகொள்ள வேண்டும். அதற்கு விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை. இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளாக எவைஎவையெல்லாம் உள்ளன? என்பதைக் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.

விலங்குகள் மூலமாக இதுமாதிரியான நோய்கள் பரவுவதால், விலங்குகளுக்கு அந்த நோய்களின் பாதிப்பு உள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும். பிளேக் நோய் சாதாரணமாக எலிகளிடம் காணப்படுகிற வியாதி. திடீரென நிறைய எலிகள் செத்துப்போக ஆரம்பித்தால், அதனைப் பிளேக் வருவதற்கான அறிகுறி என புரிந்து கொள்ளலாம். இந்த மாதிரி சரியான கண்காணிப்புகளை(Surveillance) முறையாக செய்து வந்தோமேயானால், மறைந்திருக்கும் நிபா, ப்ளேக், சார்ஸ் போன்ற நோய்கள் வெளியே வருவதற்கான வாய்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை சரியாக கண்டுபிடித்து விடலாம்.

பொதுமக்களிடத்தில் நம்மைச் சுற்றி என்னென்ன விஷயங்கள் நடைபெறுகின்றன என்பதை பற்றி சரியான கண்காணிப்பு இருக்க வேண்டும். அதாவது, பொது கண்காணிப்பும் இருக்க வேண்டும். சிறப்பு கண்காணிப்பும் இருக்க வேண்டும். முன்னர் சூரத்தில் பிளேக் நோய் வந்தது என்பதால், அந்த ஊரில் எலி செத்து விழுவது பற்றி விழிப்பாக இருப்பார்கள்.

வெளவாலில் இருந்து நிபா வைரஸ் வருவதால், அந்தப் பறவையின் உடலில், இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறதா? என்பதில் கவனமாக இருப்பார்கள். எனவே, அந்தந்த இடத்துக்குரிய பிரச்னைக்குத் தொடர்பான விழிப்புணர்வும் தேவை. பொதுவான விழிப்புணர்வும் ரொம்பரொம்ப முக்கியம். எனவே, பொதுமக்களுக்கு இந்த இரண்டுமே அவசியம் தேவை.

புதுப்புது வைரஸ்களால் ஏற்படுகின்ற நோய்களுக்குப் பொதுவான சிகிச்சை முறைகள்தான் உள்ளன. தனிப்பட்ட சிறப்பு சிகிச்சை என்று எதுவும் கிடையாது. ஏனென்றால், இந்த நோய்கள் பற்றி போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. நமக்குத் தெரிந்து புதிதாக தோன்றிய நோய் என்பதால், இது என்ன வகையான கிருமி? இது எங்கிருந்து வருகிறது? இதனால் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் உருவாகும்? என்பதையெல்லாம் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். என்னென்ன மருந்துகள் வேலை செய்யும்? என்பதையும் பார்க்க வேண்டும். 75 சதவீதம் வைரஸ் கிருமி என்பதால் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

நம்மிடம் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கான மெடிசன்கள் மிகமிக குறைவு. பாக்டீரியா கிருமிகள் ஏராளமாக இருப்பதால், அதைப்பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால், நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அதனால் மருந்துகள் நம்மிடம் அதிகம் உள்ளன. ஃபங்கஸ் நோய்களுக்கும் ஓரளவு மருந்து, மாத்திரைகள் வர ஆரம்பித்துவிட்டன.

சிக்கன் ஃபாக்ஸ் போன்ற நோய்களுக்கும் மருந்துகள் உள்ளன. எபோலா, சார்ஸ், நிபா போன்ற அபூர்வமான நோய்களால் பாதிக்கப்படுவர் எண்ணிக்கை குறைவான அளவில்தான் உள்ளது. அவர்களுக்காக, பல லட்சம் ரூபாய் செலவில் மருந்து
கண்டுபிடிப்பதால் எந்த லாபமும் இல்லை என்று மருந்து நிறுவனங்கள் நினைக்கவும் வாய்ப்பு உண்டு.

இந்த நோய்களுக்காக, தனியாக ஆராய்ச்சி பண்ணி மருந்து கண்டுபிடிப்பதும் கஷ்டம். எனவே, தற்போது இவற்றிற்குப் பொதுவான சிகிச்சை முறைகள்தான் உள்ளன. ஆனாலும், மருத்துவ துறையினர் என்ன மாதிரியான மருந்துகளைக் கண்டுபிடித்தால், இத்தகைய நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என புதிய தொழில்நுட்பத்துடன் முயற்சி செய்து வருகின்றனர். அதன் பலனாக, ஓரளவிற்கு மருந்துகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. ஆனால், இதில் நிறைய வேலைகள் இன்னும் உள்ளன.

இதற்கு சர்வதேச அளவில் பலரது ஒத்துழைப்பும் தேவை. புதிய வைரஸ் காய்ச்சல்கள் பற்றி நிறைய ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அதுவரையிலும் நம்மிடம் இருக்கும் பொதுவான சிகிச்சைகளே போதுமானவை. இவர்களுக்குத் திரவ உணவுகளை நிறைய கொடுத்தல், போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்க செய்தல்.

தேவைப்படும் சூழலில் ஆக்சிஜன் கொடுத்தல் போன்ற பொதுவான சிகிச்சைகளைத்தான் தர முடியும். திரவ உணவுகளில், உப்பு கலந்த தண்ணீர்(Saline Water) முக்கிய இடம் பெறும். நிபா போன்ற வைரஸ் காய்ச்சலைக் குணப்படுத்த சிறப்பான மருந்துகள் எதுவும் இல்லை. உரிய நேரத்தில் நோய் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை எடுப்பதே முக்கியமானது.

சார்ஸ், நிபா போன்ற நோய்களைப் பற்றி அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வு இருப்பது அவசியம். டாக்டர், நர்ஸ் மட்டுமில்லாமல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஏனென்றால், முதல் தடவையாக சமூகத்தை அச்சுறுத்தும் விஷயங்கள் தலைதூக்கும்போது கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம். நிபா போன்ற நோய்கள் ஒரு தடவை வந்த பிறகு, அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது? கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தேவையில்லாமல் பீதி அடையக் கூடாது. தங்களுடைய இடத்தில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்லக் கூடாது. அவ்வாறு செல்லும்போது, அந்தக் கிருமிகளைத் தங்களுடன் கொண்டு செல்கின்றனர். இதனால் மற்ற இடங்களுக்கும் இந்நோய்கள் பரவக்கூடும். நோய் பாதிப்பு உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

கடல் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, டாக்டரின் அறிவுரைப்படி, மாத்திரைகள் எடுத்துச் செல்வது பாதுகாப்பானது. அடர்ந்த வனப்பகுதிக்குச் செல்லும்போது, விஷப்பூச்சிகளின் கடியில் இருந்து தப்பிக்க, உடல் முழுவதையும் மறைக்கும் வகையில், ஆடை உடுத்த வேண்டும். சில சுற்றுலா இடங்களில் கவர்மென்ட் அட்வைஸர் இருப்பார். அவர் சொல்கிற அறிவுரைகளைப்
பின்பற்ற வேண்டும்.

இதுபோன்ற மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே, இந்த மாதிரியான நோய்கள் உருவாவதையும், பரவுவதையும் தடுக்க முடியும். முக்கியமாக, எந்த உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதும், சிகிச்சை பெறுவதும் அவசியம்!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கரீனாவின் ஃபிட்னெஸ் ரகசியம்!! (மகளிர் பக்கம்)
Next post மாதவிலக்கு!! (அவ்வப்போது கிளாமர்)