By 9 October 2019 0 Comments

‘கிங் மேக்கர்’ !! (கட்டுரை)

ஏகப்பட்ட ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளோடு, ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் ஆரம்பித்திருக்கின்றன.

* பதவியில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர், அடுத்துப் போட்டியிடாத தேர்தலாக இது அமைந்துள்ளது.

* அதிகமானோர் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாகவும் இது உள்ளது.

* அதிக சிறுபான்மையினத்தவர் போட்டியிடும் தேர்தல் இது.

* இந்திய வம்சாவழித் தமிழர் ஒருவர் முதன்முதலாகப் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தல் எனும் அடையாளத்தையும் இந்தத் தேர்தல் பெற்றுள்ளது.

* இந்த நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாமல் போன ஒரு தேர்தலாகவும் இது உள்ளது.

இப்படி அடுக்கிக் கொண்டு செல்லலாம்…

‘கிங் மேக்கர்’

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன, “ஒரு தடவை மாத்திரமே நான் ஜனாதிபதி பதவியை வகிப்பேன்” என்றும், “அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்” எனவும் கூறியிருந்தார். அவர் சொன்னபடிதான் நடந்திருக்கிறது.

ஆனால், அது அவரின் விருப்பத்துடன்தான் நடந்துள்ளதா? அல்லது அவ்வாறானதொரு நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளாரா என்கிற கேள்வி முக்கியமானதாகும்.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை” என்று மைத்திரி கூறியிருந்த போதிலும் இடையில், இரண்டாவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆசை, அவருக்குள் எட்டிப் பார்த்ததை, அவருடைய பேச்சுகளிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால், களநிலைவரம் அதற்குச் சாதகமாக இல்லை. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நாடு முழுவதும் பெற்ற மொத்த வாக்குகள் அண்ணளவாக 14 இலட்சம்தான். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுன, கிட்டத்தட்ட 50 இலட்சம் வாக்குகளையும் ஐ.தே.க 36 இலட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தது.

இந்த நிலையில், 14 இலட்சம் வாக்குகளை நம்பி, ஜனாதிபதித் தேர்தலொன்றில் களமிறங்குவது புத்திசாலித்தனமான முடிவல்ல. அதனால், தேர்தலில் போட்டியிடாமல் விடுவதே நல்லது என்று மைத்திரி தீர்மானித்திருக்கக் கூடும்.

ஆனாலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சியொன்றின் வேட்பாளருக்கு, சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவதன் மூலம், அவரை வெற்றியாளராக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. அந்த வகையில், ‘கிங் மேக்கர்’ எனும் தகுதி, சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தத் தரப்புக்கு, சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவது என்கிற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை, கட்சித் தலைவர் மைத்திரிக்கு, சுதந்திரக் கட்சியின் செயற்குழு வழங்கியுள்ளது. அதனால், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ‘கிங் மேக்கர்’ எனும் தகுதி, மைத்திரிக்குக் கிடைத்துள்ளது.

இந்தப் பின்னணியில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கே சுதந்திரக் கட்சியின் ஆதரவை, மைத்திரி அறிவிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக, அரசியலரங்கில் பேசப்படுகிறது. அப்படி நடந்து விட்டால், மிக இலகுவாகவே வெற்றிக்கு மிக அருகில் கோட்டா சென்று விடுவார்.

கசப்பு

மைத்திரியின் கணக்கில், ஐ.தே.கவை விடவும் மஹிந்த தரப்புப் பரவாயில்லை என்பதாகவே தெரிகிறது. 52 நாள்கள் அரசியல் குழப்பத்தின் போது, ரணிலிடமிருந்த பிரதமர் பதவியைப் பிடுங்கி, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மைத்திரி வழங்கிய போதே, இதனை விளங்கிக் கொள்ள முடிந்தது. சஜித் பிரேமதாஸவுடன் ஒரு வகையான நெருக்கத்தை, மைத்திரி காட்டி வந்தார். இதைவைத்து, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் போட்டியிட்டால், மைத்திரி ஆதரவு வழங்குவார் என்கிற பேச்சுகளை அதிகம் காண முடிந்தது.

ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஓரம் கட்டுவதற்காகவே சஜித் பிரேமதாஸவை, மைத்திரி அரவணைத்திருக்கக் கூடும். அது ஒருவகை, அரசியல் தந்திரோபாயமாகவும் இருந்திருக்கலாம். அல்லது, அது உண்மையான நெருக்கமாகவும் இருக்கலாம்.

ஆனால், சஜித் ஜனாதிபதியானால் ரணில் விக்கிரமசிங்கவின் கைகள் ஓங்குவதைத் தவிர்க்க முடியாது போகலாம். அந்தநிலை ஏற்படுவதை, மைத்திரி விரும்ப மாட்டார். ரணிலுடன் கடுமையான கசப்பில், மைத்திரி உள்ளார். ஜனாதிபதியின் கடந்த கால உரைகளில், ரணில் குறி வைத்துத் தாக்கப்பட்டமை, அதனை ஊர்ஜிதம் செய்திருந்தது.

இணக்கத்துக்கான முயற்சி

மறுபுறம், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் பிளவு ஏற்படுவதற்கு காரணம், தீர்க்கவே முடியாத பகைமைகளில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், பிரதமர் பதவியை மைத்திரி எதிர்பார்த்திருந்தார்; அது அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான், மஹிந்தவுக்கு மைத்திரி ‘காய்’ வெட்ட நேர்ந்தது.

எனவே, மஹிந்த தரப்புடன் ஏற்பட்ட கசப்பைச் சரி செய்து கொள்வதற்கும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கட்சிக்கு குழி பறிப்பதற்குமான தக்க தருணமாக, இந்த ஜனாதிபதித் தேர்தலை மைத்திரி பயன்படுத்திக் கொள்வார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதேவேளை, சுதந்திரக் கட்சி கோட்டாவுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று, அந்தக் கட்சிக்குள் சில முக்கியஸ்தர்கள் கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதையும் மீறி, கோட்டாவுக்கு மைத்திரி ஆதரவு தெரிவித்தால், சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படலாம். அல்லது சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க முன்வரலாம் என்றும் நம்பப்படுகிறது.

இதேவேளை, இந்தத் தேர்தலின் பிறகு, பதவியிருந்து ஜனாதிபதி நீங்கிய பிறகும், அரசியலில் தொடர்ந்தும் செயற்படப் போவதாக, மைத்திரி கூறியிருக்கின்றார். இது கவனிப்புக்குரியது. அப்படியென்றால், அவர் வைத்திருக்கும் அடுத்த திட்டம் என்ன என்கிற கேள்வியொன்றும் உள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்குக் கிடைத்திருக்கும் ‘கிங் மேக்கர்’ என்கிற தகுதி போன்று, அடுத்த கட்ட அரசியலில் அவருக்குக் கிடைப்பதற்குச் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களின் மனமாற்றம்

இவை இவ்வாறிருக்க, தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அரசியல் முக்கியஸ்தர்களும் எந்த வேட்பாளருக்குத் தமது ஆதரவு என்பதைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டனர்.

அந்த வகையில், ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும் ரிஷாட் பதியுதீன் தலைமை தாங்கும் மக்கள் காங்கிரஸும் சஜித் பிரேமதாஸவுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றன. மறுபுறம், கோட்டாபயவுக்கு முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் ஆதரவை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அதேவேளை, பஷீர் சேகுதாவூத் – ஹசனலி ஆகியோர் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் கோட்டாவுக்குத் தமது ஆதரவை வழங்கும் சாத்தியம் உள்ளது.

மஹிந்த தரப்பு மீது, முஸ்லிம் மக்கள் கொண்டிருந்த கோபமும் கசப்பும் இம்முறை குறைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. மஹிந்தவுக்கு ஆதரவளிக்கின்றவர், ‘சமூகத் துரோகி’ என்கிற பார்வை, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சாதாரண முஸ்லிம் மக்களிடம் இருந்தது.
ஆனால், இப்போது அப்படியில்லை. மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளை விடவும், ரணில் தலைமையிலான ஆட்சியில் அதிகம் நடந்துள்ளமையால் ‘மஹிந்த தரப்பு பரவாயில்லை’ என்கிற மனநிலைக்கு, முஸ்லிம் மக்களில் ஒரு தொகையினர் வந்துள்ளனர்.

அதன் விளைவுதான், முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில், சஜித் பிரேமதாஸவுக்கான தேர்தல் அலுவலகம் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே, கோட்டாவுக்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

சஜித் ஆரவு

வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களிடத்தில் அதிகளவு ஆதரவைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இம்முறை, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகச் செயற்படும். அதேபோன்று, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சஜித் பிரேமதாஸவுக்குத் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகக் கடுமையாக உழைக்கும்.

அதனால், வடக்கு, கிழக்கில் சஜித் பிரேமதாஸவுக்குச் சிறுபான்மையின மக்களின் அதிக வாக்குகள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. ஆனாலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்றுக் கொண்ட சிறுபான்மையின வாக்குகளை விடவும், இந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகளவு வாக்குகளைப் பெறுவார் என்கிற கணிப்பீடுகளும் உள்ளன.

அதேவேளை, அரசியலில் தமது ‘எல்லா முட்டை’களையும் முஸ்லிம்கள் ஒரே ‘கூடை’யில் போடாமல், பல கூடைகளிலும் பிரித்துப் போடுவது நல்லது என்கிற கருத்து, நீண்ட காலமாகவே இருக்கிறது. அந்தத் தந்திரோபாயம் குறித்தும் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு தரப்பைத் தொடர்ந்தும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் அதேபோன்று, இன்னொரு தரப்பைத் தொடர்ந்தும் எதிர்த்து வருவதும் “எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களுடன் கூட்டில்லை” என்று சொல்லி விலகியிருப்பதெல்லாம் அரசியலில் சாதுரியமற்ற செயற்பாடுகளாகும். ‘சாத்தியமானபோது, சாத்தியமானவற்றைச் சாதித்துக் கொள்ளும் கலை’தான் அரசியலாகும்.

ஆனாலும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கட்சியினரும் தத்தமது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி, மேற்சொன்னவற்றைச் செய்தே வருகின்றனர். இதனால், இறுதியில் பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகம்தான்.

தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம் மக்கள், யாரை ஆதரிக்க வேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்களை, முதலில் கண்டறிய வேண்டும். நமது உள்விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய, பலவீனமான காரணங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கக் கூடாது.

உதாரணமாக, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதற்குச் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது பக்க காரணத்தை அண்மையில் பகிர்ந்து கொண்டார். “கோட்டா இராணுவத்தில் இருந்தவர்; அவரிடம் இராணுவ முகமும் குணமும் உள்ளன. அதனால், அவர் ஜனாதிபதியாக வரக் கூடாது. அவ்வாறான ஒருவர் ஜனாதிபதிப் பதவிக்கு வருவது, குறிப்பாகச் சிறுபான்மையினருக்கு ஆபத்தானது. அதனால், கோட்டாவுக்கு நான் வாக்களிக்க மாட்டேன்” என்றார் அந்த ஒருவர்.

அவர் கூறிய அந்தக் காரணம், மிகவும் பலவீனமானதாகும். 2010ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷ எனும் அரசியல்வாதியைத் தோற்கடிப்பதற்காக, இலங்கையில் யுத்தத்தை வென்று முடித்த கையோடு, தேர்தலில் களமிறங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கே, தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகபட்சமாக இணைந்து வாக்களித்தார்கள்.

அப்படியென்றால், இராணுவ குணம் உள்ள ஒருவருக்குச் சிறுபான்மைச் சமூகத்தவர்கள், ஏன் 2010ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தனர் என்கிற கேள்விக்கு, முதலில் விடையளிக்க வேண்டும்.

எனவே, இந்தத் தேர்தலில் முஸ்லிம் மக்களும் அதன் தலைவர்களும் ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்தித்துச் செயற்படுதல் அவசியமாகும். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்காமல், அறிவு ரீதியாக, ஆற, அமரச் சிந்தித்து, தமது சமூக நலன் சார்ந்த முடிவுகளை எடுத்தல் வேண்டும்.

‘அந்த வேட்பாளர், 10 ரூபாய் பேனாவை பாவிக்கின்றார்; இந்த வேட்பாளர் தேய்ந்த செருப்பை அணிந்திருக்கின்றார்; அதனால், அவர் சிக்கனமானவர்; ஆடம்பரமற்றவர்; எனவே மக்களுக்கு அவர் நன்மைதான் செய்வார்” என்கிற கணக்குகளின் அடிப்படையில், ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை வழங்கினால், இன்னும் ஐந்து வருடங்களுக்கு மூலையில் குந்தி, மூக்குச் சிந்த வேண்டிய நிலையே, முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படும்.

கட்டுப் பணம் செலுத்திய சிறுபான்மையினர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முஸ்லிம், தமிழர் சமூகங்களைச் சேர்ந்த ஆறு பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, மொத்தமாக 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்த போதும், அவர்களில் 35 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வகையில், முஸ்லிம்கள் மூவரும், தமிழர்கள் இருவரும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்தினர். இவர்களில், நால்வர் சுயேட்சைகளாகவும் ஒருவர் அரசியல் கட்சியொன்று சார்பாகவும் கட்டுப்பணம் செலுத்தினார்கள்.

முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இல்யால் ஐதுரூஸ் முஹம்மட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அலவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், ஊடகவியலாளர் எஸ். குணரத்னம் ஆகியோரே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்திய சிறுபான்மை இனத்தவர்களாவர்.

ஜனாதிபதித் தேர்தலொன்றில் நபரொருவர் போட்டியிடுவதாயின், அவர் கட்சியொன்று சார்பில், வேட்புமனுவைத் தாக்கல் செய்தல் வேண்டும். அல்லது, சுயேட்சையாகப் போட்டியிடுவதாயின் குறித்த நபர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்திருத்தல் அவசியமாகும்.

கட்சி சார்பில் போட்டியிடும் ஒருவர் 50 ஆயிரம் ரூபாயும் சுயேட்சையாகப் போட்டியிடும் ஒருவர் 75 ஆயிரம் ரூபாயும் கட்டுப்பணமாகச் செலுத்த வேண்டும்.

அந்த வகையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தமிழர், முஸ்லிம் சமூகங்களிலிருந்து கட்டுப்பணம் செலுத்திய மேற்படி நபர்கள் பற்றிய விவரங்களை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாணம் காத்தான்கு டியைச் சொந்த இடமாகக் கொண்ட ஹிஸ்புல்லாஹ், 25ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்.

பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் வகித்துள்ள இவர், தற்போது இலங்கை ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்துள்ள இவர், கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் இறுதியாக, கிழக்கு மாகாண ஆளுநராகவும் பதவி வகித்திருந்தார். 1963ஆம் ஆண்டு பிறந்த இவர், கல்வித்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.

இல்யால் ஐதுரூஸ் முஹம்மட்

இவர் சுயேட்சையாகப் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

2010, 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியி
ட்டுள்ள இல்லியாஸ், யுனானி மற்றும் ஆங்கிலத்துறை வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கான தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட இவர், அந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை.
ஆயினும், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1988ஆம் ஆண்டு, வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர், 1994ஆம் ஆண்டு, நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1945ஆம் ஆண்டு பிறந்த இவர், புத்தளம் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்.
இவர், சுயேட்சையாகப் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஏ.எச்.எம். அலவி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம் அலவி, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். குருநாகல் மாவட்டம், பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கு 67 வயதாகிறது.

எம்.கே. சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 2001ஆம் ஆண்டு, முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம், அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
டெலோ இயக்கத்தின் மூத்த உறுப்பினரான இவருக்கு 62 வயதாகிறது.
நகர சபை உறுப்பினராகவும் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு மாகாணத்துக்கு வெளியிலுள்ள குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழ் சுயாட்சிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவியுமான அனந்தி சசிதரன், சுயேட்சையாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்துக்காகக் கட்டுப்பணம் செலுத்தினார்.

ஊடகவியலாளர் எஸ். குணரத்னம்

ஊடகவியலாளரான எஸ். குணரத்னம் கொழும்பைச் சொந்த இடமாகக் கொண்டவர்.
இவரின் பாட்டனார் (தந்தையின் தந்தை) இந்திய வம்சாவழித் தமிழராவார்.

46 வயதுடைய இவர், தற்போது அரச தொலைக்காட்சி நிறுவனமொன்றில் நீதிமன்றச் செய்தியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

‘அபே ஜாதிக பெரமுன’ (எமது தேசிய முன்னணி) எனும் கட்சி சார்பில் இவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.Post a Comment

Protected by WP Anti Spam